வாகன ஓட்டிகளை மிரளச் செய்யும் பைக் ரேஸ்!

சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்து சாலை விபத்துகளுக்கு இந்த பைக் ரேஸ்களும் முக்கிய காரணம் என்பதால் இப்படியான ரேஸ்கள் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Updated on
2 min read

சென்னைக்கும் பைக் ரேஸுக்கும் அப்படி ஒரு பொருத்தம்! பைக் ரேஸ் நடத்துவதும், போட்டியாளர்களாகக் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் சென்னை மக்களுக்கு பைக் ரேஸ் மீதான மிரட்சி குறைந்தபாடில்லை. சென்னை பை பாஸ் சாலையில் நேற்று வெள்ளியன்று அதிகாலை 3.30 மணிக்கு மதுரவாயல் சுங்கச்சாவடி அருகில் நடத்தப்பட இருந்த பைக் ரேஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. ரேஸ் நடக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் சென்னை  நகரப் போக்குவரத்துத் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரிகள் மூலமாக அதிகாலையில் பரபர சேஸிங் முறையில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்தச்  செய்தி வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

பைக் மெக்கானிக்குகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தான் பெரும்பாலும் பைக் ரேஸில் ஈடுபடுகிறார்கள். பழைய பைக்குகளை ரேஸ்களுக்கு ஏற்றவாறு வேகத்தை அதிகரித்து ரீமாடல் செய்து இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வயது 45 லிருந்து 50க்குள் தான்... ரேஸ் வைக்கும் தொகையும் அப்படி ஒன்றும் பெரிதல்ல. வெறும் 1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் இப்படி உயிரைப் பணயம் வைத்து ரேஸ் நடத்துகிறார்கள். (சில நேரங்களில் கல்லூரி மாணவர்களும் பாக்கெட் மணி மற்றும் திரில்லுக்காக இப்படி ரேஸில் ஈடுபடுகிறார்கள்). ஆகவே மனித உயிர் பற்றிய பயமின்றி இப்படி ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது சென்னை நகர காவல் சட்டத்தின் 75 ஆவது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள 'குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் அல்லது கிளர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகள் அல்லது கண்ணியமற்ற நடத்தையில் ஈடுபடுதல்' எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 16 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் ’நகரில் எங்கு பைக் ரேஸ் நடப்பதாக இருந்தாலும் உடனடியாக அது தடுக்கப்பட்டாக வேண்டும்’ என்று ஒரு முக்கியமான ஆணை வெளியிட்டுள்ளது. சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்து சாலை விபத்துகளுக்கு இந்த ரேஸ்களும் முக்கிய காரணம் என்பதால் இப்படியான ரேஸ்கள் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை தொடர்ந்து பைக் ரேஸ் நடத்தப்படும் இடங்கள் என்று சில உண்டு, அவற்றில் முக்கியமானவை காமராஜர் சாலை, ஜி.எஸ்.டி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை போன்றவை. இங்கு  பின்னிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் இந்த ரேஸ்கள் நடைபெறுகின்றன. இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் நகரின் பல இடங்களில் இருந்தும் இரவு ஷிஃப்ட்டில் பணிபுரியும் மென்பொறியாளர்கள், கால் சென்டர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் இந்தச் சாலைகளை பயன்படுத்துகிறார்கள். அப்படியான சூழலில் பெரும்பாலான விபத்துகள் நேர இந்த ரேஸ்கள் தான் முக்கியக் காரணம் என காவல்துரை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் ரேஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காவல்துறை மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்பதில்லை இதை பொதுமக்களாகிய நாம் உணர வேண்டும்.இப்போது வீட்டுக்கு வீடு வாகனங்கள் பெருத்து விட்டன. எல்லோரும் அவரவர் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். நகரத்தில் எங்கோ ஓரிடத்தில் எப்போதோ நடக்கும் ரேஸ் நம்மை பாதிக்காது என்று அலட்சியமாக இருப்பது பொறுப்பற்ற தன்மை. என்றோ ஒருநாள் நமக்கும் அதனால் பாதிப்பு வரலாம் எனும் விழிப்புணர்வு மிக முக்கியமானது. ஆகவே பைக் ரேஸ் எங்கே நடப்பதாக தகவல் அறிந்தாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பொறுப்புணர்வுடன் உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலைத்துக்கு தகவல் தெரிவிப்பது அவசியமானது.

பெரும்பாலும் வார இறுதி விடுமுறை நாட்களை ஒட்டித்தான் பைக் ரேஸ் திட்டமிடப்படுகிறது. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வார இறுதி விடுமுறை என்பதே இல்லை எனலாம். பல நிறுவனங்களும் அலுவலகங்களும் இங்கு ஷிப்ட் முறையில் இயங்குவதால் சென்னை சாலைகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. மேலும் வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து போவோர் எண்ணிக்கையும் வார இறுதி நாட்களில் அதிகம், சந்தர்ப்பவசத்தில் இவர்களில் யார் வேண்டுமானாலும் பைக் ரேஸ் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

ஆகவே கவனமிருக்கட்டும் நமது சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு அழகான குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் அன்பான பெற்றோர்கள் இருப்பார்கள், ஆசையும், பிரியமும் நிறைந்த  மனைவிகள் இருப்பார்கள், பாசம் மிகுந்த சகோதர சகோதரிகள் இருப்பார்கள், உயிருக்கு உயிரான குழந்தைகள் இருப்பார்கள்.விபத்தும் இழப்பும் இவர்கள் அத்தனை பேருக்கும் தான். எத்தனை முறை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தாலும் ,கடுமையான தண்டனைகுபைக் ரேஸ் போன்ற விபரீத விளையாட்டுகள் தடுக்கப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com