தமிழ் சினிமாக்களில் பாரதியார் வேடத்தில் ‘நச்’ செனப் பொருந்தியது யார்?

சமீபத்தில் கமல்ஹாசனும் தன்னை பாரதியாராகச் சித்தரித்து போட்டோஷாப் செய்த புகைப்படமொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது இணையத்தில் வைரலானது.
தமிழ் சினிமாக்களில் பாரதியார் வேடத்தில் ‘நச்’ செனப் பொருந்தியது யார்?
Published on
Updated on
6 min read

டிசம்பர் 11 இன்று பாரதியார் பிறந்ததினம்...

தலைப்பைப் பற்றி பேசுவதற்கு முன் இன்றைய தலைமுறைக்கு பாரதி யார்? என்ற கேள்விக்கான விடையையும் சற்று அலசி விடலாம். பாரதியாரைத் தெரியாதவர்கள் என இன்றும் கூட எவருமில்லை. ஆனால், 80, 90 களில் இருந்தவர்களைப் போல் பாரதியாரை ஒரு எழுச்சியின் அடையாளமாகக் கருதிய தலைமுறையின் சந்ததிகளா இவர்கள்? எனில்; ஆம், இல்லையென்ற பதில்களைச் சற்றுத் தயக்கத்துடன் தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்றைய தலைமுறைக்கு பாரதியார் பாடல்களாகவும், வசனங்களாகவும், புகைப்படமாகவும் மட்டுமே எளிதில் மனதில் நிற்கிறார். பள்ளி, கல்லூரிகளில் பாட்டுப் போட்டி, கட்டுரைப்போட்டியா அப்போது நிச்சயம் பாரதியை நினைவுகூர்வார்கள். அவரது பாடல்களும், கவிதைகளும், உரைநடைகளும் ஆசிரியப் பெருமக்களால் தூசி தட்டப்பட்டு மாணவர்களுக்குத் தரப்படும். ஆனால், பாரதி ஏன் அத்தனை உத்வேகமாக அந்தப் பாடல்களை அந்தச் சமயத்தில் பாடினார் என்ற உணர்வுப் பூர்வமான விஷயம் ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களால் இன்றைய மாணவர்களுக்குக் கடத்தப்படுகிறதா? என்பது ஆராய்ச்சிக்குரியது. 

பாரதி பாடல்களை எழுச்சியுடன் பாடும் ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் எத்தனை பேர் அவரது படைப்புகளின் அர்த்தம் தெரிந்து அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் கேள்விக்குரிய விஷயம்!

ஏனெனில் இன்றைக்குப் பெரும்பாலானோர் இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்வது இந்தி, சமஸ்கிருதம் அல்லது ஃப்ரெஞ்சு மொழிப்பாடங்களை.

தமிழ் தவிர வேறெந்த பாடத்தை இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்திருந்தாலும் நிச்சயம் அந்த மாணவர்களுக்கு பாரதியின் வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஏனையோர் போட்டிகள் தவிர்த்து பாரதியாரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஒரே வழி கூகுளாண்டவர் தான். கூகுளாண்டவர் பாரதியைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லும் அதே வேலையில் பாரதியே சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர் தானா? இல்லை வெள்ளை அரசின் கைதுக்குப் பயந்து புதுச்சேரிக்குத் தப்பி ஓடிய பயந்தாங்கொள்ளியா? என்ற ரீதியில் சிந்திக்க வைப்பவராக இருக்கிறார்.

எனவே இன்றைய தலைமுறையினர் பாரதியாரைப் பற்றிய எதிர்மறை விஷயங்களைத் தவிர்த்து நேர்மறையான விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒன்று ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம். அல்லது பாரதியாரைப் பற்றிய புத்தகங்களை நூலகங்களுக்குச் சென்று வாசித்துத் தெளியலாம். 

ஏனெனில், பாரதியைப் போல இந்த தேசத்தை, இந்த மனிதர்களை, நமது இயற்கையை, அதில் வாழும் லட்சோப லட்சம் சிற்றுயிர்கள், பேருயிர்களை ரசித்து, ரசித்து கவிதை எழுதியவர்கள் தமிழில் அவரது சமகாலத்தில் வேறு எவருமில்லை.

  • ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’
  • ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே கேரள நன்னாட்டிளம் பெண்களுடனே’
  • ‘வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’
  • ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’

போன்ற விடுதலை எழுச்சி மிக்க பாடல்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் நாடு சுதந்திரம் அடைந்த போது அதை பெருமகிழ்வுடனும் இசையுடனும், ஆடல், பாடல் கேளிக்கையுடனும் கொண்டாடித் தீர்க்க தமிழர்கள் நம்மிடம் வார்த்தைப் பஞ்சமாகியிருக்கக் கூடும். அந்த அளவுக்கு இத்தனை அருமையாக பாரதியைப் போல இந்த நாட்டின் விடுதலையைக் கொண்டாடித் தீர்க்க பாடல் புனைந்தவர் எவருமில்லை. 

நாட்டு விடுதலைக்காக மட்டுமில்லை, பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, தமிழன்னைக்கு பாட்டு, பாரதமாதாவுக்கு பாட்டு, என்று பாரதி பாடாத பொருளில்லை இவ்வுலகில்.

  • ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’
  • நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’
  • ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா’
  • ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே’
  • ‘தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை’ 
  • ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’ 

இப்படி எதைப் பகிர, எதை தவிர்க்க என்று ஒரு முடிவுக்கே வர முடியாத அளவுக்கு பாரதியார் கவிதைகள் என்றென்றைக்கும் தமிழர் வாழ்வுக்கு எல்லாச் சூழல்களிலும் இன்பம் சேர்க்கக் கூடியவை.

அப்படிப்பட்ட பாரதியை தமிழர்களான நாம் நினைவு கூர வேண்டுமென்றால் நம்மில் எவருமே பாரதியை நேரில் கண்டதில்லையே. பிறகெப்படி? வேறு வழியே இல்லை... நடிகர்களைக் கொண்டு தான் நினைவு கூர வேண்டியதாயிருக்கிறது. 

தமிழ் சினிமாக்களில் பாரதியார் வேடத்தில் ‘நச்’ செனப் பொருந்தியது யார்?

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டு தமிழ்த் திரையுலகில் சிவாஜி முதலாக எஸ்.வி. சுப்பையா, நாகேஷ், சாயாஜி ஷிண்டே என்று பலர் பாரதி வேடம் பூண்டிருக்கிறார்கள்.  சமீபத்தில் கமல்ஹாசனும் தன்னை பாரதியாராகச் சித்தரித்து போட்டோஷாப் செய்த புகைப்படமொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது இணையத்தில் வைரலானது.

இவர்களில் சாயாஜிக்கு முன்பு வரை நிஜ பாரதியாக நம் நெஞ்சில் நிறைந்தவர்களில் முக்கியமானவர்கள் சிவாஜியும், எஸ்.வி. சுப்பையாவும். சொல்லப்போனால்

சிவாஜியைக் காட்டிலும் ’கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தின் வாயிலாக எஸ்.வி.சுப்பையாவே அநீதியைக் கண்டால் கிளர்ந்தெழும் அசல் பாரதியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்தவர் எனலாம். இவர்களை அடுத்து சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பாரதியாரைப் போல ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட தமது புகைப்படம் மூலமாக கமலும் பாரதியாராக காண்போரின் கருத்தில் பதிந்திருந்த போதும் அவரது பாரதியார் தோற்றமென்னவோ எஸ்.வி.சுப்பையா மற்றும் சாயாஜிக்கு ஈடில்லை என்றே தோன்றுகிறது.

தமிழில் எத்தனையோ தமிழ்ப் பற்று மிகுந்த, பாரதியின் மீதும் பெருங்காதல் கொண்ட கலைஞர்கள் பலர் இருக்க பாரதி திரைப்படத்துக்காக அதன் இயக்குனர் ஞானராஜசேகரன் மராத்தி நடிகரான சாயாஜி ஷிண்டேவைப் போய் மெனக்கெட்டு அழைத்து வந்து ஏன் அந்தப் படத்தில் பாரதியாக்கினார்? என்று அந்தப் படம் வந்த சமயத்தில் ஒரு சர்ச்சை இருந்தது.

ஆனாலும் படத்தைப் பார்த்தவர்கள் சாயாஜியை அப்படியே பாரதியாக ஏற்றுக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். கீழுள்ள நிஜ பாரதியின் புகைப்படத்துக்கு அத்தனை நியாயம் செய்வதாக இருந்தது சாயாஜியின் பாரதி தோற்றம்.

பாரதியாராக நடிப்பதென்றால் வெறுமே பாரதியைப் போல காதை அடைத்து முண்டாசு கட்டிக் கொள்வதோ அல்லது முறுக்கு மீசை வைத்துக் கொள்வதோ, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு கருப்பு கோட் போட்டுக் கொள்வதோ அல்ல! பாரதி என்றால் பாரதி! நிஜ பாரதியை அப்படியே அசலாக திரையில் உயிர்ப்பித்துக் காண்பிப்பது தான் பாரதிக்கு நியாயம் செய்வதாக இருக்க முடியும். அப்படிச் செய்து காட்டியவர்கள் எனில் அவர்கள் எஸ்.வி.சுப்பையாவும், சாயாஜியும் மட்டுமே!

எஸ்.வி.சுப்பையா பாரதியாக நடித்த காட்சியைக் கண்டால் அது உங்களுக்கே புரியக்கூடும்;

நிஜத்தில் பாரதியின் தோற்றம் எப்படி இருந்தது? 

நிஜத்தில் பாரதியாரின் தோற்றம் மேற்கண்டவாறே இருந்தது. தன் வாழ்வின் கடைசிக் கட்டங்களில் மிகுந்த வறுமையை அனுபவித்த தமிழ் விடுதலைக் கலைஞர்களில் பாரதியும் ஒருவர். அந்த வறுமையில் ஒளி குன்றாத கண்கள், நெஞ்சில் உரம், நேர்மைத்திறம் என் வாழ்ந்தவர் பாரதி. அச்சூழ்நிலையிலும்  ஒருமுறை வீட்டில் சமைப்பதற்காக வைத்திருந்த தானியங்களை பேருவகையுடன் முற்றத்து குருவிகளுக்கும், காக்கைகளுக்கும் எடுத்து ஆனந்தமாக வீசி அவற்றின் பசியாற்றி;

‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ எனப் பாடல் புனைய அவரொருவரால் மட்டுமே முடியும்!

அத்தகைய மகானுபாவரின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் நினைவுகூரலாம்;

பாரதியாரைப் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்...

பாரதியார் தலைப்பாகை அணிந்த கதை...

பாரதியார் நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த வரை அவருக்குத் தலைப்பாகை கிடையாது. பின்பு காசிக்குச் சென்று அவரது அத்தையார் குப்பம்மாள் வீட்டிலிருந்தபடி சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளோடு உயர்கல்வி கற்கத் தொடங்குகையில் தலைப்பாகை அணியும் பழக்கம் அவரோடு ஒட்டிக் கொண்டது. அதன் பின்பு அவர் அந்தப் பழக்கத்தை மறந்தாரில்லை. எவரேனும் கேள்வி எழுப்பினால் தலைப்பாகை அணிவதே தமக்கு வசதியாக இருப்பதாகப் பதில் வரும்.

பாரதியாரின் குரு...

பெண் விடுதலை குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பலப்பல பாடல்கள் எழுதியவராக இருந்த போதும் வீட்டைப் பொருத்தவரை பாரதியார் தன் மனைவி செல்லம்மாளை வெளியில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், மாநாடுகள் என எதற்கும் அழைத்துச் செல்லாதவராகவே இருந்தார். ஒருமுறை பாரதியார், விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதாவைக் காணச் சென்றிருக்கையில் அவரிடம் சகோதரி நிவேதிதா, உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாரதி, ‘சமுதாய வழக்கப்படி மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வது இல்லை என்றும் அவளுக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது’ என்றும் பதிலளித்திருக்கிறார். சுதந்திர எழுச்சி மிக்க பாடல்கள் பல எழுதத் தக்க பாரதியிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பாராத சகோதரி நிவேதிதா, ’மனைவியை அடிமைக்கு மேலாக நினைக்காத மற்றுமொரு இந்திய மனிதரைக் காண்கிறேன்... உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் தரமுடியாத நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்', என்று கேட்டு விட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக அமைந்தது என பாரதியே தம் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் கூறியதோடு சகோதரி நிவேதிதாவைத் தமது குருவாகவும் ஏற்றுக் கொண்டு தமது படைப்புகளான ஸ்வதேச கீதங்கள் மற்றும் ஜென்ம பூமி இரண்டையும் அவருக்கு சமர்ப்பணமும் செய்திருக்கிறார். அது தான் பாரதியார், மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்லாக்குவது மட்டுமல்ல செயலாக்குவதிலும் அவருக்கு நிகர் அவரே!

பாரதி காந்தியைச் சந்தித்த கதை...

ஒருமுறை சென்னைக் கடற்கரையில் பாரதியார் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் தலைமை தாங்க வேண்டி அப்போது சென்னை கதீட்ரல் சாலையில் ராஜாஜி இல்லத்தில் தங்கி இருந்த காந்திஜியிடம் அழைப்பு விடுக்கச் சென்றிருந்தார். பாரதியார் காந்தியைச் சந்திக்கச் சென்றிருக்கையில், ராஜாஜி, சத்தியமூர்த்தி மற்றும் வ.ரா உள்ளிட்டோர் அவருடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், வ.ரா-வைத் தவிர வேறு யாரும் அதைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. (வ.ராமசாமி ஐயங்கார் பாரதியாரைப் பற்றி ‘மகாகவி பாரதியார்’ என ஒரு நூலே எழுதியிருக்கிறார்) அப்போது நடந்த சங்கதி என்னவென்றால்;

காந்திஜியின் பயண விவரங்களையும், நிகழ்ச்சி நிரல்களையும் கவனித்து வந்தவர்கள் பாரதியின் அழைப்பை தற்சமயம் காந்தியால் ஏற்க முடியாது எனவும், பாரதிகுறிப்பிட்ட தேதியில், அதே நேரத்தில் வேறொரு கூட்டத்தில் காந்தி பங்கேற்பதால் பாரதியாரை பிறிதொரு நாளன்று கூட்டம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பாரதிக்கு அதில் உவப்பில்லை. எனவே; அவர் எவருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல் விருட்டென உள்ளே நுழைந்து காந்தியை நேருக்கு நேராகப் பார்த்து, நீங்கள் தலைமை ஏற்கும் கூட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள், என் கூட்டம் குறித்த நாளில் நடந்தேறும். அதை ஒத்தி வைக்க முடியாது’ என அறிவித்து அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கிறார். இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காந்தியார், பாரதி அகன்ற பின் அங்கிருந்தோரிடம் இவர் யார்? என வினவியதாகவும். ராஜாஜி ‘அவர் தமிழ்நாட்டுக் கவி’ என பதிலுரைத்ததாகவும், இவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லையா?’ என காந்தி பாரதியை சிலாகித்ததாகவும் வ.ரா தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து இது நிஜமா? புனைவா? என்ற சஞ்சலம் நிலவினாலும் பாரதியார் இப்படியெல்லாம் சுயமரியாதையுடன் நடந்து கொள்ளக் கூடியவர் தான் என்பதால் பெரும்பாலான பாரதி அபிமானிகள் இதை ஒரு உதாரண சம்பவமாகப் பாரதியார் தொடர்பான உரையாடல்களில் பதிவு செய்வது வழக்கம்.

பாரதி தமது பாடல்கள், மற்றும் உரைநடை வாயிலாக நாட்டுக்குச் செய்தது அனேகம். அவரளவுக்கு ரசனையான மனம் இல்லாவிடினும் வாழ்நாளில் பாரதியை அறிந்த எவரொருவரும் ஒரே ஒரு பாரதி பாடலையாவது அர்த்தம் தெளிந்து மனனம் செய்வோம் என அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.