கொலை செய்பவர்களைக் காட்டிலும் கொலையைத் தூண்டி விட்டவர்களே அதிக தண்டனைக்குரியவர்கள்!
இணையத்தில் நேற்று முழுதும் உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து தான் அனைவரும் பேசித் தீர்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சாரார் சாதிவெறியின் பெயரால் கெளசல்யாவுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு சரியான தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது என்று தீர்ப்பை வெகுவாகப் பாராட்டித் தள்ளினர். இன்னொரு சாரர், பெற்ற தகப்பானாருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அந்தப் பெண் கெளசல்யா’ கோர்ட் வாசலில் புன்னகையுடன் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறாரே? இம்மாதிரிப் பெண் குழந்தைகளை எல்லாம் பிறந்ததுமே கள்ளிப்பால் கொடுத்து கொன்றிருக்கலாம்! என்று பகீர் கமெண்ட்டுகளையும் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை. இவற்றையெல்லாம் வாசிக்கையில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமூகத்தில் கெளசல்யாவுக்கு ஆதரவானவர்கள் இருக்கும் அதே வேளையில் அவரது செயலை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இங்கே கெளசல்யா, சங்கர், ஆணவக் கொலை, விஷயத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தமிழகத்தில் நிகழும் கலப்பு திருமணங்களைப் பற்றி பேச வேண்டிய தருணமிது.
உறவில் ஒரு இளம்பெண் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோருக்கு மகளின் மீது பாசம் அதிகம். பெண் தனது காதலைச் சொன்னதும் முதலில் விடாப்பிடியாக எதிர்த்தவர்கள். பிறகு ஏதோ ஒருவகையில் பெண்ணின் நலன் தான் முக்கியம் எனக் கருதி திருமணத்திற்குச் சம்மதித்தனர். இதை வெறுமே சம்மதித்தனர் என்று ஒரு வார்த்தையில் கடப்பதை விட காத்திருந்து, காத்திருந்து தங்களது பெற்றோரிடம் பல்வேறு வகையில் சமரசமாகப் பேசிப் பேசியே கரைத்து அந்தப் பெண்ணும் அவரை விரும்பிய இளைஞரும் தங்களது திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
நடுவில் பல சிக்கல்கள் வராமல் இல்லை. பெண்ணின் தாய்வழி உறவினர்களுக்கு இந்த கலப்புத் திருமணத்தின் மீது பெரிதாக மரியாதை இல்லை. பெண்ணின் மூத்த தாய்மாமன் ஒருபடி மேலே சென்று ஆணவத்தின் உச்சத்தில், “ஒரு பெட்டைக் கழுதையைக் கேட்டா திருமணத்தை முடிவு செய்வது?! அதிலும் சாதி கெட்ட திருமணத்துக்கு பத்திரிகை அடித்து, மண்டபம் பார்த்து உறவுகளை எல்லாம் அழைத்து ஊர் மெச்ச திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் என்ன தலையெழுத்து? என் உடன்பிறந்தவளிடம் சொல்லுங்கள், காதலின் பெயரில் திமிரெடுத்து அலையும் அந்த இருவரையும் அப்படியே கண் காணாமல் எங்காவது போய் எக்கேடோ கெட்டுத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி... மாறாக அண்ணன் என்று உரிமை கொண்டாடி பத்திரிகையை தாம்பாளத்தில் வைத்து எடுத்துக் கொண்டு கல்யாணத்துக்கு அழைக்கிறேன் பேர்வழியென்று என் வீட்டுப் படி ஏறிவிட வேண்டாம். அப்புறம் மரியாதை கெட்டு விடும்! வீட்டுக்கு அடங்காமல் தனக்குத் தானே மாப்பிள்ளை தேடிக் கொண்டவளை கொத்தாகத் தலைமுடி பற்றி தெரு ஜனம் வேடிக்கை பார்க்க இழுத்து வந்து நாலு சாத்தி சாத்தி நம் சாதியில் ஒருவனைப் பார்த்து கல்யாணம் செய்து வைப்பதை விட்டு விட்டு இதென்ன அசிங்கம்!” என்றெல்லாம் மிகக் கேவலமாகப் பேசி இருக்கிறார்.
அப்பா வழி உறவினர்களோ, திருமணத்திற்கு வருகை தந்திருந்தாலும்... வார்த்தைக்கு வார்த்தை அண்ணனையும், அண்ணியையும் இத்தனை செலவு செய்து சாதி கெட்ட திருமணத்தை நடத்தி வைத்துக் கொண்டு இருக்கிறார்களே என்று பேசி ஊவாமுள்ளாகக் குத்தத் தயங்கவில்லை. இத்தனை மனச்சங்கடத்தையும் தாண்டி சரி ஒருவழியாகத் திருமணம் இனிதே நடந்து முடிந்தது என்று திருப்திப் பட வகையின்றி இன்று வரையிலும் அந்தப் பெண்ணின் பெற்றோரை எங்கு சந்தித்தாலும் இன்னும் சிலர், சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட அவர்களது பெண்ணைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது மட்டம் தட்டிக் குறைத்துப் பேசாமல் அகலுவதில்லை. அப்படிப் பேசுபவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்து அவ்விடத்தை விட்டு நீங்கினாலும் கூட ஒவ்வொருமுறையும் அறிந்தவர், தெரிந்தவர், உறவினர் முன்னிலையில் அப்படியான நிந்தனைகளுக்கு ஆளாகும் போதெல்லாம் அந்தப் பெற்றோர் மனமுடைந்து தான் போகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஒரு திருப்தி என்னவெனில் தங்கள் மகள் தான் தேர்வு செய்த வாழ்வை நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதே! அது போதும். ஊர் என்ன வேண்டுமானாலும் பேசும். கொஞ்சம் மனம் வலித்தாலும் இங்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டியது ஊராருக்கு அல்ல, தாம் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி மணமுடித்து அனுப்பிய மகளுக்குத் தான் என்பதை உணர்ந்த பெற்றோர் அவர்கள். எனவே அவர்களால் மகள் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதனால் ஏற்படும் மனச்சங்கடங்களை ஒவ்வொருமுறையும் வலித்தாலும் கூட பொருட்படுத்தாமல் எளிதாகக் கடந்து விட முடிகிறது.
ஆனால், நமது தமிழ்ச் சமுதாயத்தின் மிகப் பிரபலமான சொல்லாடல்களில் ஒன்றான ‘ஊரோடு ஒத்து வாழ்’ எனும் பழமொழியை இங்கே நாம் கண்டிப்பாக நினைவு கூர்ந்தால் நல்லது.
இங்கே பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் இப்போதும், எப்போதும் ஊர்ப்பெரியவர்களையும், வீட்டின் மூத்தவர்களையும், உற்றார், உறவினர்களையும் கேட்டுத் தீர ஆலோசித்துத் தான் முடிவெடுக்கப்படுகிறது எனும்போது சாதி மறுப்புத் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும், மத மாற்றத் திருமணங்களும் துவக்கத்தில் அத்தனை எளிதானவை அல்ல என்பது ஊரறிந்த சேதி!
துவக்கத்தில் பலத்த எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்பை எதிர்த்து நிற்கும் திடம் பெண்ணுக்கும், இளைஞனுக்கும் இருக்க வேண்டும். இத்தனை வருடங்கள் வளர்த்த கடனைச் செய்தவர்களுக்கு மரியாதை அளித்து தங்கள் காதலில் உறுதியாக நின்று காரியம் சாதித்துக் கொள்ளும் மனோதிடம் இருக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர் எதற்குமே ஒத்து வராமல் முரட்டுத் தனமாக சாதிக்காக மட்டுமே எதிர்க்கிறார்கள் எனில் திருமணத்திற்கு காவல்துறை உதவியை நாடலாம். அப்படியெல்லாம் செய்யாமல் எதிர்த்து நிற்பதெல்லாம் எங்கள் வேலையில்லை. ஊருக்கும், உலகுக்கும் பெற்றோர் பதில் சொல்லிக் கொள்ளட்டும் எங்களுக்கு எங்களது வாழ்வு மட்டுமே முக்கியம் என யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்களெனில் அவர்களை மன்னிக்கும் பக்குவம் பல பெற்றோர்களிடத்தில் இன்றளவும் இல்லை என்பதே நிஜம். சிலர் எப்படியோ ஒழியட்டும், எங்காவது சென்று நன்றாக வாழ்ந்தால் சரி என்று மொத்தமாகத் தலைமுழுகி விடுவார்கள். சிலருக்கோ கூட இருந்து தூபம் போட, சாதி வெறியைத் தூண்டி விட, கொலை செய்தாலும் அதைப் பெருமையாக வீர தீரச் செயலுடன் ஒப்பிட்டுப் பேச ஒரு கூட்டம் இருக்குமெனில் சாதிப்பற்றை மீறி சாதி வெறி ஊறிப்போன அவர்தம் மனங்களில் கொலை ஒரு வேள்விக்கு உரித்தான வகையில் உரமிட்டு வளரும். அவர்களுக்கு கொலை ஒரு பொருட்டில்லை, கொலைக்குப் பின்னான விளைவுகளும் ஒரு பொருட்டில்லை. சாதிக்காக நான் பெற்ற மகளையும் கொல்லத் தயங்கவில்லை என்ற ஒரு வித ஹீரோயிஸமே அவர்களிடத்தில் ஒருவித போதையாக மிஞ்சுகிறது. இதன் வெளிப்பாடு தான்;
‘வெட்டிட்டு ஜெயிலுக்குப் போவேனே தவிர வேத்து சாதிக்காரன நீ கல்யாணம் பண்ணிக்க விட மாட்டேன் எனும் பிடிவாதம்’ சொல்லோடு நிற்காது செயலாகி ஆணவக் கொலையாகப் பரிணமிக்கிறது.
முடிவாக ஒரு விஷயம். கலப்புத் திருமணங்கள் மாபெரும் குற்றங்களல்ல, அவையும் வெற்றிகரமான திருமணங்களே எனும் ஆதரவு வலுத்து வரும் இவ்வேளையில் அவற்றுக்கான எதிர்ப்புகளும் அவற்றைக் காட்டிலும் வலுவாகவே இருக்கின்றன என்பதற்கான உதாரணங்களே உடுமலை சங்கர், இளவரசன், சுவாதி போன்றோரது ஆணவக் கொலை வழக்குகள். சுவாதி விஷயத்தில் மர்மம் இன்னும் நீடிக்கிறது. சுவாதியின் கொலைக்கான காரணம் இதுதான் என உறுதியாகத் தெரியாவிட்டாலும் ஆணவக் கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுவது உண்மை. இம்மாதிரியான கொலைகள் தடுக்கப் பட வேண்டுமெனில் அதற்கு குற்றவாளிகளைத் தண்டித்தால் மட்டும் போதாது.
திருமண விஷயத்தில் பெற்றோரது மனம் மாற வேண்டும்.
சாதி மாறித் திருமணம் செய்து கொள்ள முற்படுவோரும் பெற்றோரை மதியாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்டு பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்த முயலாமல் பெற்றோரது மனங்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். ஒத்து வராத பட்சத்தில் திருமணம் செய்து கொள்ள உரிய வயது இருப்பின் தங்களுக்கென உறவில் சில ஆதரவாளர்களை அழைத்துச் சென்று காவல்துறை உதவியுடன் சட்ட ரீதியாகப் பதிவுத் திருமணம் செய்ய முயற்சிக்கலாம்.
பெற்ற குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாகவும் விருப்பமாகவும் இருக்கிற பட்சத்தில் ஏதோ சில காரணங்களுக்காகச் சிலவற்றை அவர்கள் மூர்க்கமாக எதிர்க்கையில் அந்த எதிர்ப்புக்கு காரணம் பயமே அன்றி வேறில்லை. இந்த மாற்றத்தால் தமது பிள்ளைகளுக்கான சமூக அங்கீகாரம் குறையுமோ? எதிர்கால வாழ்வு கேள்விக்குறி ஆகுமோ? சமுதாயத்தில் தங்களால் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமே மேலும் மேலும் அவர்களை மூர்க்கமாக மாற்றுகிறது. அந்த பயம் அர்த்தமற்றது என்ற நம்பிக்கை ஏற்படின் அவர்கள் இம்மாதிரியான கொடூரச் செயல்களை நிகழ்த்த மாட்டார்கள். அந்த நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டியது பிள்ளைகளின் கடமை!
எனவே இம்மாதிரியான பெற்றோர்களுக்குத் தேவை மனநல ஆலோசனையே! தண்டனை அவர்களைத் திருத்த வாய்ப்பில்லை. தண்டனையோடு கூடிய மனநல ஆலோசனையே மனமாற்றத்துக்கு வழிவகுக்கலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது;
சாதியைக் காரணம் காட்டி கலப்புத் திருமணத் தம்பதிகளை வன்கொலை செய்வோரை தயவு செய்து தெய்வ நிலைக்கு உயர்த்தி, மாவீரர்களாக ஆக்கும் சமுதாயக் கொடுமைகளைக் கைவிட்டு விடுங்கள். இல்லையேல் அதைக் காட்டிலும் குற்றம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையில் முதல் குற்றவாளிகள் அவர்களே! முதலில் தூக்கிலேற்றப்பட வேண்டியவர்களும் அத்தகையோரே!