ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!

பசுக்களிடமிருந்து பால் சேகரிக்க வைக்கோல் கன்று டெக்னிக் உதவவில்லை எனில், பசுக்களுக்கு ஆக்சிடோஸின் எனும் மருந்து இஞ்செக்‌ஷன் மூலமாகச் செலுத்தப்படுகிறது.
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
Published on
Updated on
5 min read

இந்தியாவின் மொத்தப் பால் தேவைகளையும் முக்கால்வாசிக்கு மேல் தன்னிறைவு அடையச் செய்வது பண்ணையில் வளர்க்கப் படும் கால்நடைகளே. பண்ணையில் கால்நடைகள் வளர்க்கப் படுவதன் முக்கிய காரணம் பால் மற்றும் இறைச்சிக்காக என்பது நம் அனைவருக்குமே தெரிந்த செய்தி. தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பால் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும், குழந்தைகள் தினமும் பால் அருந்தினால் அவர்களது பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான கால்சியத் தேவையை பால் ஈட்டித்தரும். என்பதெல்லாம் நமக்குத் தெரிந்தவையே. இவையெல்லாம் வீட்டில் தொழுவத்தில் குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கப் படும் கால்நடைகளில் இருந்து கிடைக்கையில் அதனாலென்ன? கன்றுக்குட்டி அருந்தியது போக மிச்சப்படும் பாலை மனிதன் அருந்தினால் என்ன தவறு? என்பது கூட நியாயமான வாதமே! ஆனால் என்றைக்கு ஒரு விஷயம் குடும்பத் தேவை என்பதிலிருந்து மாறி பணம் கொழிக்கும் தொழிலாகப் பரிணமிக்கிறதோ அப்போதே அதில் மனிதம் செத்து விடுவதற்கு கால்நடைப் பண்ணைகளைத் தவிர மிகச்சிறந்த வேறு உதாரணங்கள் கிடைத்து விட முடியாது.

நவம்பர் 26 தேசிய பால் தினத்தை ஒட்டி சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று பண்ணைகளில் கால்நடைகள் நடத்தப்படும் விதத்தின் இரக்கமற்ற தன்மையையும், அபத்தங்களையும், ஆபத்துக்களையும் கண்கூடாகப் பதிவு செய்திருக்கிறது. பண்ணையில் கால்நடைகள் வளர்க்கப் படுவதற்கு எனச் சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான பண்ணைகளில் அந்த விதிகள் நடைமுறைப்படுத்தப் படுவது இல்லை. பண்ணையில் குறுகிய இடங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் சதா சர்வ காலமும் கயிற்றால் பிணைத்துக் கட்டப்பட்டு தான் கழிக்கும் மலம் மற்றும் மூத்திர ஈரத்தில் படுத்து எழுந்து ஊறித் திளைத்து நோய் நொடிகளுடன் வாழ நிர்பந்திக்கப்படுவதாக அந்த ஆய்வுக் கட்டுரை புகைப்படம் வெளியிட்டுள்ளது. 

இப்படி வளர்க்கப் படும் மாடுகளில் பசுக்கள் மற்றும் எருமைகள் சினையாவதற்கு இயற்கையான இனப்பெருக்க முறையை நாடாமல் காளைகளிடமிருந்து செயற்கையான முறையில் விந்தணுக்கள் பெறப்பட்டு அவற்றை ஊசி மூலமாக பசுக்கள் மற்றும் எருமைகளின் கருப்பைக்குள் செலுத்துகிறார்கள். கால்நடைகளுக்கும் பாலியல் உணர்வுகள் உண்டு. அவற்றை அனுபவிக்கும் சுதந்திரம் அவற்றுக்கும் உண்டு என்பதே நமது மரபான கால்நடை வளர்ப்பு சொல்லும் நீதி. ஆனால் பண்ணைகளில் இம்முறை நிராகரிக்கப் பட்டு செயற்கையாக பசுக்களும், எருமைகளும் கருத்தரிப்புக்கு ஆளாக்கப்படுகின்றன.

சில இடங்களில் இறைச்சித் தேவையை மட்டுமே உத்தேசித்து காளைக் கன்றுகள் பிறந்த அடுத்த கணமே தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியே வளர்க்கப் படுகின்றன. இந்தக் கன்றுகளைக் காணாமல் தாய்ப்பசுக்கள் பால் தருவதில் சிக்கல் நேர்ந்தால் முன்பே இறைச்சிக்காக வெட்டப்பட்டு தோல் உறிக்கப்பட்டு சேமிப்பில் இருக்கும் கன்றுகளின் தோலுக்குள் வைக்கோலை திணித்து பொய்யாகக் காளைக் கன்றுகள் உருவாக்கப்பட்டு பண்ணைகளின் உயரமான ஓரிடத்தில் நிறுத்தப்படுகின்றன. இந்த வைக்கோல் கன்றைக் காட்டி தாய்ப்பசுக்களிடம் பால் கறக்கும் அவலமும் பண்ணைகளில் அதிகளவில் நீடிக்கிறது. பிரசவ காலத்தில் கன்றுகள் இறந்து விட்டால் தாய்ப்பசுக்களின் துயரம் தீர்க்க உருவாக்கப்பட்ட முறை இது. ஆனால், இன்றைய வியாபார தந்திர உலகில் கன்றுகள் திட்டமிட்டு இறைச்சிக்காக விற்கப்பட்டு வைக்கோல் கன்று நாடகம் நடத்தப்பட்டு தாய்ப்பசுக்களிடம் பாலை அபகரிக்கும் துஷ்பிரயோகம் இந்தியா முழுதும் பல்வேறு கால்நடைப் பண்ணைகளில் நடைமுறையில் இருப்பதாக அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

பசுக்களிடமிருந்து பால் சேகரிக்க வைக்கோல் கன்று டெக்னிக் உதவவில்லை எனில், பசுக்களுக்கு ஆக்சிடோஸின் எனும் மருந்து இஞ்செக்‌ஷன் மூலமாகச் செலுத்தப்படுகிறது. இந்த மருந்து செயற்கை முறையில் பசுக்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் என சில பண்ணை உரிமையாளர்கள் மூடத்தனமாக நம்புகிறார்கள். இந்த மருந்துக்கு அப்படியான திறன்கள் எல்லாம் இல்லை. மாறாக இந்த ஆபத்தான மருந்து பசுக்களுக்குச் செலுத்தப்படுவதால் அவற்றின் இனப்பெருக்கத் தன்மை வெகுவாகக் குறைவதோடு பசுக்களின் ஆயுளும் குறைகிறது. ஆக்சிடோஸின் மருந்து செலுத்தப்பட்டு கரக்கப்பட்ட பாலை அருந்தும் மனிதர்களுக்கும் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு தீவிர நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த உண்மைகள் தெர்ந்திருந்த போதிலும் பால் விற்பனை மூலம் ஈட்டும் பணத்துக்காக பண்ணை உரிமையாளர்கள் சர்வசாதாரணமாக இந்த ரசாயணத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

சில பண்ணைகளில் காளைகளின் விந்தணுக்கள் செயற்கையாக அவற்றுக்குப் பாலுணர்வை ஊட்டி பிற காளைகளுடன் இயற்கைக்கு மாறான வகையில் உறவில் ஈடுபடச் செய்து சேமிக்கப்பட்டு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் விந்தணுக்களின் தேவையுள்ள பிற பண்ணகளுக்கு விற்கப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஏனென்றால் பசுக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இன்று காளைகளின் எண்ணிக்கை வெகு குறைவே. எனவே தேவையை முன்னிட்டு இவ்விதமான மனிதாபிமானமற்ற போக்கு நிலவுகிறது. இப்படி சேமிக்கப்படும் விந்தணுக்களை பசுக்களின் கருப்பைகளுக்குள் செலுத்தும் முறை நெஞ்சை அதிரச் செய்வதாக இருக்கிறது. முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் கால்நடை மருத்துவரல்லாத ஒரு நபர் வெறும் கைகளை பசுக்களின் ஆசனவாய்க்குள் நுழைத்து இவற்றைச் செலுத்துகிறார்கள். இதனால் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட மிகுதியான வாய்ப்புகள் உண்டு.

எல்லாவற்றுக்கும் உச்சமாக வயதான கால்நடைகள் காயமுற்றாலோ, அல்லது அவற்றைப் பராமரிக்க முடியாத நிலை வரும் போதோ, அல்லது அவற்றின் நோய் பிற கால்நடைகளுக்குப் பரவும் என்ற நிலை வந்தாலோ சற்றும் தயவு தாட்சண்யங்களின்றி அத்தைகைய கால்நடைகள் பண்ணை உரிமையாளர்களால் கைவிடப்படுகின்றனவாம். அவை அடிமாடாகச் செல்வதற்கும் அருகதையற்றவை எனக் கருதிகிறார்கள்.

இவற்றை விடக் கொடுமையான மற்றொரு அவலம். காளைக்கன்றுகள் பிறந்து அவற்றை வளர்க்க முடியாத நிலையில் இருக்கும் பண்ணைகளில் அவை உடனடியாக இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப் படுகின்றன. முடியாத பட்சத்தில் காளைக் கன்றுகள் பட்டிணி போடப்பட்டு வன்கொலை செய்யப்படுகின்றன என்கிறது அக்கட்டுரை.

பண்ணைக் கால்நடைகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு குறு பண்ணையாளர் ஒருவர் அளித்த பதில் திகைக்கச் செய்வதாக இருக்கிறது;

இறைச்சிக்காகவும், பாலுக்காகவும் மட்டுமே கால்நடைகளை வளர்ப்பது என்று முடிவெடுத்த பின் வருமானத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமே தவிர மாடு, மனிதாபிமானம் என்றெல்லாம் தத்து பித்தென்று உளறக்கூடாது. என்றிருக்கிறார் அவர்.

இவையெல்லாம் தாண்டி, பெரும்பாலான பண்ணைகளில் அரசு விதிகளின் படி தனி கால்நடை மருத்துவம் ஒருவரை நியமிக்கும் வழக்கமெல்லாம் இல்லையாம். கால்நடை மருத்துவரோ, தொழுவத்தைச் சுத்தம் செய்யும் பணியாளரோ இல்லாமல் தான் பல பண்ணைகள் இயக்கப்படுகின்றன.

இந்தியா முழுவதிலுமுள்ள 327 கால்நடைப் பண்ணைகளில் பெரும்பாலானவற்றின் நிலவரம் இது தான் என அப்பட்டமாகப் புகைப்படங்கள் மூலமாகச் சுட்டிக் காட்டுகிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

இவை தவிர; இறைச்சிக் கூடங்களுக்காக கால்நடைகள் லாரிகள் மற்றும் வேன்களில் ஏற்றி அனுப்பப்படும் விதம் மற்றொரு விதமான குரூரம். கண்களின் மிளகாய்த்தூள் தூவுவது, மூக்கணாங்கயிற்றைப் பற்றி முரட்டுத்தனமாக இழுத்துச் செல்வது, ஆறு காளைகளைக் கூட ஏற்றிச் செல்ல முடியாத ஒரு வாகனத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளை நெருக்கியடித்து நிற்க வைத்து கொண்டு செல்வது. இப்படி பலவிதமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றன பண்ணை கால்நடைகள். சுருக்கமாகச் சொல்வதென்றால் பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை பாலியல் துன்புறுத்தல் மட்டுமல்ல ஒவ்வொரு நாளுமே பலவிதமான இன்னல்களுடன் தான் கழிகின்றன.

ஒருவகையில் அறிந்தோ, அறியாமலோ பொதுமக்களும் இந்த அராஜகத்துக்கு உடந்தையாகத் தான் மாறிப்போனார்கள். ஏனென்றால், இத்தனை சித்ரவதைகளுக்கும் கால்நடைகள் உள்ளாக்கப்படுவது மனிதர்களின் தேவைகளை முன்னிட்டுத் தானே! ஆகையால் அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடமையும் கூட அதே மனிதனுக்கே உரித்தானது. இந்த அவலங்களை அறிந்த மனிதர்களில் சிலர் மனிதாபிமானத்துடன் பால் அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டு அதற்கு மாற்றாக முந்திரிக்கொட்டை, பாதாம், சோயா, ஓட்ஸ், அரிசி, மற்றும் தேங்காயிலிருந்து தயாராகும் பால் வகைகளுக்கு மாறி விட்டார்கள் என்கிறது அக்கட்டுரை.

இந்தியர்களுக்கும் பால் அருந்தும் பழக்கத்துக்குமான பந்தம் மிகப் புராதனமானது. வேத காலம் தொட்டே ஆநிரை மேய்த்தல் ஒரு மாபெரும் செல்வம் கொழிக்கும் தொழிலாக ஆயர்களால் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டு வந்த தொழில் அதனால் பாலைப் புறக்கணிப்பது என்பது இந்தியர்களைப் பொருத்தவரை முடியாத செயல். வேண்டுமெனில் பழைய காலங்களைப் போல வீட்டுக்கொரு பசு வளர்க்கத் தொடங்கலாம். பண்ணைகளில் கால்நடைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பெரும்பாலும் வீட்டு விலங்குகளுக்கு இல்லை. குறைந்தபட்சம் கால்நடைகள் மனிதாபிமானத்துடனாவது நடத்தப்படலாம்.

Concept &Image courtesy: youthkiawaaz.com & Animal equality india

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.