இந்தியர்களுக்கு டைம் மேனேஜ்மெண்ட் முக்கியமில்லையா?

நம் நாட்டை எடுத்துக்கொள்வோம். ஒரு அரசுத்துறை நிகழ்ச்சிக்கு - மந்திரியின் வருகைக்காக மணிக்கணக்கில் பள்ளி மாணவர்கள் காக்க வைக்கப்படுவதும், பொதுக்கூட்டங்களுக்கு பேச்சாளர்களுக்காக மணிக்கணக்கில் காத்திரு..
இந்தியர்களுக்கு டைம் மேனேஜ்மெண்ட் முக்கியமில்லையா?
Published on
Updated on
2 min read

ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட ரயில் பத்து நிமிடம் தாமதமானதற்கு ஒரு உயர் அதிகாரி அரசின் சார்பாக மன்னிப்பு கோரியிருந்தார் என்ற செய்தி அண்மையில் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. எந்த காரியத்தையும் தாமதமின்றி - குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஜப்பானியர்களைப் பற்றிய மதிப்பினை உயர்த்தும் நிகழ்வு இது.
நம் நாட்டை எடுத்துக்கொள்வோம். ஒரு அரசுத்துறை நிகழ்ச்சிக்கு - மந்திரியின் வருகைக்காக மணிக்கணக்கில் பள்ளி மாணவர்கள் காக்க வைக்கப்படுவதும், பொதுக்கூட்டங்களுக்கு பேச்சாளர்களுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பதும் வழக்கமான ஒன்று. நம்மில் பெரும்பாலானோர் நேரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை.
தொழிற்கூடங்களில், உற்பத்தியைப் பெருக்க உற்பத்தி சுழற்சி நேரத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவர். நேரம் சிறிது வீணடிக்கப்படாது இருக்க எல்லா முனைப்பும் காட்டப்படும். இது தொழிற் கூடங்களுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனிதர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமான ஒரு விஷயமாகும்.
உதாரணத்துக்கு ஒரு நிகழ்வினை பார்ப்போம்:
ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் உட்கார்ந்து உபயோகமற்ற தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் அவர்கள் ஒன்றாக, ஒரே அறையில் இருந்தும், அரிய நேரத்தை வீணடித்திருக்கிறார்கள் என்பது கண்கூடு.
ஆனால், இன்னொரு குடும்பத்தில் உறுப்பினர்கள், ஒரு சிறு வட்டமாக உட்கார்ந்து ஒரு சில மணித்துளிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் குடும்பத்தின் பழைய விஷயங்கள் - தாண்டி வந்த சிக்கல்கள் இடர்ப்பாடுகள் - அப்போது உதவியவர்கள் - எதிர்காலத் திட்டங்கள் - குடும்ப உறுப்பினர்களின் திறமை - பலம் பலவீனங்கள் - பிள்ளைகளின் சாதுர்யங்கள் - போன்ற விஷயங்கள் பேசப்படுகின்றன.
அவர்களுக்கிடையில் புரிதல் அதிகமாவதும் - நெருக்கம் கூடுவதும் புரியவரும். நேரமும் வெகு உபயோகமாக செலவிடப்படுவதைக் காணலாம்.
கவனியுங்கள் - இரண்டு குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம், அவரவர் குடும்பத்தினரோடு ஒன்றாகவே இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் அந்த நேரத்தை செலவு செய்வது, எந்த விதமான பலனை தருகிறது? இதில் எவர் தமது நேரத்தை செம்மையாகப் பயன்படுத்துகின்றனர்?
ஒரு குடும்பத்தில், கணவன் - மனைவி இருவரும் தினசரி சுமார் பனிரெண்டு மணி நேரம் சேர்ந்திருந்தாலும், அவர்களுக்குள் பரஸ்பர அக்கறையும் புரிதலும் இருக்காது. அக்கறையோடு செலவு செய்யப்படாத பனிரெண்டு மணி நேரத்தை விட, அன்போடும் - புரிதலோடும் செலவு செய்யப்படும் நான்கு மணி நேரம் விலை மதிப்பற்றது.
சிலர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வர், ஆனால் பலன் இருக்காது. வேறு சிலர், குறைந்த நேரம், அக்கறையோடு - கவனப் பிசகின்றி, அதே வேலையைக் குறுகிய நேரத்தில் செய்து முடிப்பர்.
இத்தகைய பலனளிக்கக்கூடிய - செம்மையாக செலவிடப்படும் நேரம் ஆங்கிலத்தில் Quality time - என்று சொல்லப்படும் மனிதன், தனக்குப் பணத்தை - பொருளை ஈட்டுகின்றான். சேமிக்கின்றான், முதலீடாக மாற்றுகிறான் நேரம் என்பதுகூட அந்த வகையில் சேமிக்கப்பட்ட வேண்டிய - சிக்கனம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஏனெனில் காலத்தை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், அதனை மலினப்படுத்துவதோ அல்லது அதற்கு மதிப்புக்கு கூட்டுவதோ ஒவ்வொரு தனிமனிதன் கையிலும் இருக்கிறது. சற்று சிந்தித்தால், நேரம் என்பது முதலீடாக மாற்றப்பட வேண்டிய ஒன்று என்பது தெளிவாகும்.
நேரம் எப்படி முதலீடு செய்யும் பொருளாக இருக்க முடியும்.
ஒரு பேராசிரியர், தனது கல்லூரி நேரம் தவிர்த்து, மீதமுள்ள நேரத்தில், சுமார் இரண்டு மணி நேரம், நூல் நிலையத்தில் புத்தகங்களை படிப்பது - அல்லது ஆரய்ச்சிக் கட்டுரைகளை படிப்பது என்ற பழக்கத்தில் இருக்கிறார்.
ஒரு பொறியாளர், தனது வேலை நேரம் போக ஒரு குறிப்பிட்ட நேரம், அவரதுதுறையில் நிகழும் சமீபத்திய வளர்ச்சிகளைப் பற்றியும் - கண்டுபிடிப்புகள் - மாற்றங்கள் பற்றியும் கவனம் செலுத்தி - விற்பன்னர் ஆகிறார்.
இவர்களது உழைப்பின் பலன் - தங்களது நேரத்தை நல்வழியில் முதலீடு செய்ததின் பலன் உடனடியாக தெரியாமல்கூட இருக்கக் கூடும். ஆனால், இப்பழக்கம் தொடரும் பொழுது, சுமார், பத்து அல்லது இருபது வருடங்கள் கழித்து, அவர்கள், பிறரை விடவும் நல்ல மதிப்பான நிலையையும் - அவர்களது துறையில் மிகவும் நாடப் பட்டவர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது.
அதே சமயம், ஒவ்வொருவரும், தனது நேரத்தை, பணம் சேர்ப்பதனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. குறிப்பாக, குடும்பத்தினரின் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் விலையாகக் கொடுத்து பொருள் சேர்க்க வேண்டும் என்பது நிச்சயமாக தேவை இல்லை.
ஒரு சிலர், பணத்தைக்கூட எண்ணாது செலவு செய்வர், ஆனால் நேரத்தினை, ஒரு முறைக்கு பலமுறை எண்ணி எண்ணி, செலவு செய்வர். வேறு சிலர், ஏதோ பொழுதை ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்று அவலம் நிறைந்தக் குரலில் புலம்பி, கிடைத்தற்கரிய நேரத்தை வீணடிப்பர்.
இவர்களில் வயதில் மூத்தவர்கள் இலக்கியம் படிக்கத் தொடங்கலாம் - இசை கேட்கலாம். இளைஞர்கள் ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, இசைக் கருவிகள் - வாய்ப்பட்டு - வேற்று மொழி பயிற்சி - சிறு சிறு கருவிகளை செப்பனிடுவது - தோட்டவேலை - எனவும் ஈடுபடலாம். இளைஞர் - முதியோர் என எல்லாத்தரப்பினரும்,
சமூகநல அமைப்புகளில் பங்கு கொள்ளலாம். இவை, அனைவருக்கும் நன்மையையும் நிம்மதியையும் சேர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com