‘ஒக்கி’ புயலுக்கான பெயர்க் காரணம் என்ன?

புயலடித்து ஓய்ந்தால் போதும், பெயர்கள் எதற்கு இனி நினைக்க மாட்டீர்கள் தானே!
‘ஒக்கி’ புயலுக்கான பெயர்க் காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் புயல் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் டர்னடோ, என்றும் மேற்கிந்திய தீவுகளில் ஹரிகேன் சூறாவளி என்றும் சீனாவில் கடற்கரைப் பகுதிகளில் டைபூன் எனவும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் புயல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சைக்ளோன் (cyclone) என்று அழைக்கப்படுகிறது. பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் சுழன்று அடிக்கும் காற்றும், இயற்கைச் சீற்றத்திலும் மாற்றம் இருப்பதில்லை.

ஒவ்வொரு நாடுகளிலும் புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் பிற்காலத்தில் அவற்றை கடல் மாலுமிகள் முதல் வானிலை ஆய்வாளர்கள் வரை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவது அவசியம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. புயலால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், அதைப் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகளை தருவதற்கு அதனை ஒரு பெயர் சூட்டி அழைப்பதால் சுலபமாக குறிப்பிட முடிகிறது. பேரிடர் மேலாண்மை,புயல் பாதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் இத்தகைய பெயர்கள் உதவும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். 

புயல் வேகத்தை எச்சரிக்க ஆபத்து எண்கள் அறிவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது. பெயர்களைப் பொறுத்தவரையில் அவை சுருக்கமாகவும் நினைவில் வைத்துக் கொள்ள வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி.

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் பழக்கம் 2000-ம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர்களை வழங்கி வருகின்றன. கடந்த முறை வங்கதேசத்தை புரட்டி எடுத்த புயலுக்கு தாய்லாந்து மோரா என்று பெயரிட்டது. அடுத்ததாக அந்த மண்டலத்தில் உருவாகும் புயலுக்கு பெயர் சூட்டும் உரிமையை வங்கதேசம் பெற்றது. புதிதாக உருவாகும் புயலுக்கு ‘ஒக்கி’ என பெயர் சூட்டுவதாக வங்கதேசம் அப்போதே அறிவித்திருந்தது. அவ்வாறே கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் தற்போதைய இந்தப் புயலுக்கு வங்கதேசம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஓகி என்றே வழங்கப்படுகிறது. வங்காள மொழியில் ‘ஒக்கி’ என்றால் கண் என்று அர்த்தமாம்.

இந்தப் புயல் பெயர் வரிசையில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர். இனி வரவிருக்கும் புயல்களுக்கான இந்தியா வழங்கவிருக்கும் பெயர்கள் சாகர், மேக், வாயு என்பவை ஆகும். அடுத்த புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர் ‘சாகர்’ இந்தியில் 'சாகர்' என்றால் கடல் என்று அர்த்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com