Enable Javscript for better performance
bye to boring railway food, get Domino’s pizza, McDonald’s |போரடிக்கும் ரயில்வே உணவுக்கு குட்பை...- Dinamani

சுடச்சுட

  

  போரடிக்கும் ரயில்வே உணவுக்கு குட்பை... இனி டோமினோஸ் பீட்ஸா, கே.எஃப்.சி என்று களை கட்டப் போகிறது ரயில்வே கேன்டீன்!

  By RKV  |   Published on : 17th June 2017 04:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rayilve_canteen

   

  வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணிகளின் விருப்பத்துக்கேற்ற வகையில் டோமினோஸ் பீட்ஸா, கே.எஃப்.சி சிக்கன், பர்கர், உள்ளிட்ட ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே. முன்னதாக டோமினோஸ், கே.எஃப்.சி, சாகர் ரத்னா, மெக்டொனால்டு உள்ளிட்ட மல்ட்டி கஸின் ஃபாச்ட் ஃபுட் உணவு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ள இந்தியன் ரயில்வே அதற்கொரு முன்னோட்டமாக மேற்கண்ட அதி விரைவு சொகுசு ரயில்களில் அந்த வசதிகளை வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்திப் பார்க்கவிருக்கிறதாம். இனி ரயில் பயணிகளுக்கு ஒரே ஜாலி தான். போரடிக்கும் ஸ்டீரியோ டைப் ரயில்வே உணவு வகைகளிடமிருந்து அவர்களுக்கு இனி விடுதலை. தாங்கள் விரும்பும் சிக்கன், மட்டன், பீட்ஸா, பர்க்கர் வகைகளை இனி ரயில் பயணத்தின் போதும் ஒரு கை பார்ப்பார்கள்.

  வரும் ஜூன் 15 ஆம் தேதி இந்த ரயில்களில் பயணிக்கவிருப்பவர்கள் தங்களுக்கான கே.எஃப்.சி, மெக்டொனால்டு, டோமினோஸ் உணவு வகைகளை இணையத்திலோ, அலைபேசி மூலமாகவோ, அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவோ முன்பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் பயணத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக முன் பதிவு செய்து வைத்துக்கொண்டால் அவர்களது இருக்கைக்கே வந்து உணவுப் பொருட்கள் வந்து சேருமாறு சர்வீஸ் வசதிகள் செய்யப் பட்டுள்ளதாம்.

  லூதியானாவிலிருந்து, சதாப்தியில் டெல்லி பயணிக்கும் பயணிகளுக்கு டோமினோஸ் மற்றும் லூதியானாவின் ஜியான் சைவ உணவக உணவு வகைகளும் பாபி மீன் மற்றும் சிக்கன் வெரைட்டிகளும் மட்டும் தான் தற்போது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். வியாழன் முதலே இத்தகைய சேவை சதாப்தியில் தொடங்கப் பட்டு விட்டதால் முன்னதாக இப்படி ஒரு ஏற்பாடு.

  வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் வரும் ஃபெரோஸ்பூர் டிவிஷனில் சில ஸ்டேசன்களில் இன்னும் கே.எஃப்.சி மற்றும் மெக்டொனால்டு உணவகக் கிளைகள் தொடங்கப்படவில்லையாம்.

  இந்திய ரயில் பயணிகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் புதுமையான ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களை அறிமுகப் படுத்தும் நோக்கில் இது இந்திய ரயில்வேயின் ஒரு முன்னோட்ட முயற்சி மட்டும் தான். இந்திய ரயில்வே துறை நீண்ட தூர ரயில் பயணங்களின் போது தங்களது பயணிகளை மகிழ்விக்கவும், ஆச்சர்யப் படுத்தவும் உணவு விசயத்தில் மேலும் பல மாற்றங்களை முன்னெடுக்கவிருக்கிறது என்கிறார் டிவிஷனல் கமர்சியல் மேனேஜரான ரஜ்னீஷ் ஸ்ரீவத்சவா. பயணிகள் தடையில்லாமல் தங்களுக்குப் பிடித்த ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை ருசிக்க பயணத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே தங்களுக்குத் தேவையான உணவு வகைகளை முன் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

  இணையத்தில் உணவு ஆர்டர் செய்ய விரும்பும் பயணிகள் www.ecatering.irctc.co.in எனும் இணையதளத்துக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வகைகள் எந்த பிராண்டிலிருந்து வழங்கப் பட வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். அது மட்டுமல்ல எந்த ஸ்டேஷனில் இருந்து தங்களுக்குத் தேவையான உணவு வகைகளை ஃப்ரெஷ் ஆகப் பெறுவது என்பதையும் அவர்கள் அந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். உணவுக்கான கட்டணத்தை நாம் இணைய வழியாகவும் செலுத்தலாம் அல்லது உணவுப் பொருட்கள் நமக்கு சப்ளை செய்யப் பட்ட பின்னர் நேரிலும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்டேசனுக்கும் பிரத்யேகமாக ஒரு உணவு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப் படுவார். பயணிகளுக்கு அவர்கள் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் சரியான ஸ்டேஷன்களில் சப்ளை செய்யப்படுகிறதா? என்பதை சோதித்து உறுதி செய்வது அவருடைய பொறுப்பு.

  கடந்த ஜூன் மாதத்தில் பாட்னா ராஜதானி, டெல்லி  டு மும்பை ஆகஸ்டு கிரந்தி ராஜதானி, புனே- செகந்திராபாதி சதாப்தி மற்று கெளரா- பூரி சதாப்தியிலும் இதே விதமான உணவுச் சோதனை முயற்சி மேற்கொள்ளப் பட்டு அது வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே இந்த ஆண்டு இந்த முறை அமல்படுத்தப் பட உள்ளதாகக் கூறுகிறர்கள்.

  மேற்கண்ட உணவு நிறுவனங்கள் மட்டுமல்ல ஸ்விஸ் ஃபுட்ஸ், ஒன்லி அலிபாபா, ஹால்டிராம், பிகானிர் வாலா, நிருலா மற்றும் பீட்ஸா கட் உள்ளிட்ட உணவு நிறுவனங்களோடும் இந்திய ரயில்வே இவ்விசயத்தில் கைகோர்க்க உள்ளதாம். 

  ரயில் பயணத்தின் போது உங்களுக்குத் தேவையான ஃபாஸ்ட் ஃபுட் வகையறாவை,  

  இணையதளம் மூலமாக ஆர்டர் செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை;

  • முதலில் www.ecatering.irctc.co.in எனும் இணையதளத்திற்குச் செல்லவும்.
  • எந்த ஸ்டேஷனில் உங்களுக்கான உணவு சப்ளை செய்யப்பட வேண்டும் என்பதை ஸ்டேஷனைத் தேர்ந்தெடுத்தோ அல்லது உங்களது PNR எண்ணை உள்ளீடு செய்தோ குறிப்பிட வேண்டும்.
  • உங்களுக்குப் பிடித்த உணவு ஆப்பரேட்டரைத் தேர்வு செய்து, அவர்களது தளத்தில் உள்ள மெனு கார்டில் எந்தெந்த உணவு வகைகள் வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • ஆர்டர் செய்ததும் உங்களுக்கு வரும் OTP  எண்களை உணவு டெலிவரி செய்யப்படும் போது டெலிவரி செய்பவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

  தொலைபேசி மூலமாக உணவு ஆர்டர் செய்ய:

   

  • 1323 எனும் எண்களில் அழைத்து உங்களுக்குத் தேவையான உணவு வகைகளைப் பற்றி அறிவிக்கலாம்.
  • அலைபேசி எண்ணுக்கு வரும் OTP எண்ணை உணவு டெலிவரி செய்ய வருபவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
  • உணவுப்பொருள் சப்ளை செய்யப்பட்டதும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

  எஸ்.எம்.எஸ் மூலமாக உணவு ஆர்டர் செய்ய:

  •  உங்களது அலைபேசியில் ‘MEAL' என்று தட்டச்செ செய்து அதனுடன் PNR  நம்பர் 139 என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • உங்களது மெனுவை கஸ்டமர் கேர் நிர்வாகையிடம் தெரிவிக்க வேண்டும்.
  • OTP எண்ணைச் சரி பார்க்க வேண்டும்.
  • உணவுப் பொருட்கள் உங்களை வந்து அடைந்ததும் கட்டணம் செலுத்தினால் போதும்.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai