கூகுள் டூடுலில் இந்திரா காந்தி சாயலில் முகம் காட்டும் அந்தப் பெண்மணி யார்?

லண்டனில் வெகு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ஃபேபியன் சொஸைட்டி’ எனும் தன்னார்வப் போராட்டக் குழுவின் அறிமுகமும், தாக்கமும் அனசுயாவுக்கு உண்டானது.
கூகுள் டூடுலில் இந்திரா காந்தி சாயலில் முகம் காட்டும் அந்தப் பெண்மணி யார்?

இந்திய சரித்திரத்தின் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இந்த தேசம் என்றென்றும் மறவாமல் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய நபர்கள் பலர் இருக்கிறார்கள். சில நேரங்களில் நாம் முகப்புப் பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களைப் பற்றிப் பேசிப் பேசி மாய்கிறோம். அவர்களைத் தாண்டியும் சரித்திர ஏடுகளின் ஒவ்வொரு பக்கத்திலும் இன்றைய தலைமுறை மட்டுமல்லாது நாளைய தலைமுறையும் ஞாபகம் வைத்துக் கொண்டு பின்பற்றத்தக்க செயலாற்றியவர்கள் பலருண்டு. அந்த விஷயத்தில் கூகுளைப் பாராட்டலாம். செயற்கரிய செயல்களைச் செய்த இந்தியர்களை அவ்வப்போது கூகுள் டூடுல் வழியாக இன்றைய தலைமுறையின் நினைவுகளில் கடத்தும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இன்றைய டூடுலில் இடம்பெற்றுள்ள பெண்மணியின் பெயர் அனசுயா சாராபாய்!

இன்று அவரது 132 வது பிறந்த நாள்... எனவே அவரது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

யார் இந்த அனசுயா சாராபாய்?

ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் 1885 ஆம் வருடம் நவம்பர் 11 ஆம் நாள் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் இருவரும் ஃபார்மஷூட்டிகல் துறையில் மிகப் பிரபலமான தொழிலதிபர்கள். பெற்றோர் இருவரும் தொழிலதிபர்களாக இருந்ததால் அனசுயாவும், அவரது மூத்த சகோதரரும், இளைய சகோதரியும் தங்களது அப்பாவின் சகோதரரது பொறுப்பில் வளர்ந்தனர். அன்று சர்வ சாதாரணமாகப் பின்பற்றப்பட்ட குழந்தைத் திருமண வழக்கப்படி அனசுயாவுக்கும் அவரது 13 வயதில் பால்ய விவாகம் நடத்தப்பட்டது.

பின்பு தனது சகோதரரின் வழிகாட்டுதலின் படி அனசுயா 1912 ஆம் வருடம் இங்கிலாந்துக்கு மருத்துவம் கற்கச் சென்றார். ஏனெனில், இவர்களுடைய பாரம்பரியக் குடும்பத் தொழிலே ஃபார்மஷூட்டிகல் நிறுவனம் என்பதால். இவர் மருத்துவம் படித்தால் உதவியாக இருக்கக் கூடும் என்பதால் மருத்துவப் பட்டம் பெறும் நோக்கில் அங்கு சென்றார். ஆனால், அந்தப் படிப்பை பின்பு அவர் வெறுக்கும்படியாயிற்று. ஏனெனில், பாரம்பரிய ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த அனசுயாவால், மருத்துவப் படிப்பிற்கான செயல்முறை வகுப்புகளில் விலங்குகளைக் கூறிட்டுப் பார்க்கும் உடற்கூறியல் பாடத்தைப் பயில முடியவில்லை. தான் பின்பற்றும் மதத்தின் நம்பிக்கைகளுக்கு எதிரானதாக அந்தப் பாடம் இருப்பதாக நினைத்ததால் அனசுயா மருத்துவப் படிப்பிலிருந்து விலகி ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசிக்ஸில்’ இணைந்து இயற்பியல் கற்கத் தொடங்கி விட்டார்.

அங்கே பயிலும் போது தான் அப்போது லண்டனில் வெகு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ஃபேபியன் சொஸைட்டி’ எனும் தன்னார்வப் போராட்டக் குழுவின் அறிமுகமும், தாக்கமும் இவருக்கு உண்டானது.

ஃபேபியன் சொஸைட்டி என்பது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் நூற்பாலைகளில் கொத்தடிமைகள் போலப் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக, அவர்களது அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடங்கப்பட்டு மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு. அந்த அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பால் 1913 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அனசுயா, அதன் பின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுத்து அவர்களது நலனுக்காகப் போராடத்தொடங்கினார். அவர்களது நலனுக்காக அனசுயா ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தினார்.

ஆந்திராவிலும், குஜராத்திலும் இருக்கும் நூற்பாலைகளிலும் கணக்கற்ற பெண்களும், குழந்தைகளும்... இங்கிலாந்து தொழிலாளர்களைப் போலவே கொத்தடிமைகளாக்கப்பட்டு தொடர்ந்து 36 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டு ஆலை அதிபர்களால் கசக்கிப் பிழியப் படுவதைக் கண்ட அனசுயா அவர்களது நலனுக்காக 1914 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் ஒரு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வந்து உதவினார்.

அது ஒன்று மட்டுமல்ல, 1918 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு நீண்ட மற்றுமொரு பிரசித்தி பெற்ற வேலைநிறுத்த போராட்டத்திலும், நாடு முழுவதிலும் உள்ள நூற்பாலைத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்ததில் அனசுயாவின் பங்கு மிக அதிகம். அந்தப் போராட்டத்தில் நெசவாளர்கள் தங்களது கூலியை 50 % உயர்த்தித் தருமாறு நூற்பாலை அதிபர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், முதலாளி வர்க்கமோ 20% மட்டுமே உயர்த்தித் தரமுடியும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்குமான இந்த இழுபறி மனநிலையால் போராட்டம் ஒரு முடிவுக்கு வர வாய்ப்பின்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் அனசுயா பிறந்த சாராபாய் குடும்பத்தின் நண்பராக தேசப்பிதா காந்தி வாய்த்தார். பிறகே அவரே, அனசுயாவின் போராட்டங்களுக்கு வழிகாட்டியாகவும் ஆனார். அனசுயாவின் வழிகாட்டியாக காந்தியே நூற்பாலைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராட்ட களத்தில் இறங்கியதைக் கண்டதும். ஆலை அதிபர்கள் 35% கூலி உயர்வுக்கு இறங்கி வந்தனர். இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு 1920 ஆண்டில் ‘அகமதாபாத் டெக்ஸ்டைல் அசோஸியேசன் (மஜ்தூர் மகாஜன் சங்கம்) என்ற பெயரில் நெசவாளர்கள் மற்றும் நூற்பாலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் கூட்டமைப்பு தோன்றியது.

இந்தியாவில் நூற்பாலைத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக அனசுயா முன்னெடுத்த போராட்டங்களை நினைவில் கொண்டு பாராட்டும் விதமாக குஜராத்திகள் அவரை ‘மோத்தபென்’ (மூத்த சகோதரி) என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் ”இந்திய சுய வேலைவாய்ப்பு மகளிர் சங்கத்தை’ தோற்றுவித்த இளா பட்டுக்கு அனசுயா தான் வழிகாட்டி. இன்று அவரது 132 ஆவது பிறந்தநாளில் அவரை மீண்டும் நினைவு கூர்வதில் தினமணி பெருமையடைகிறது.

அனசுயாவைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான குறிப்பு, இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளரும், இயற்பியல் விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாயின் அத்தை தான் அனசுயா சாராபாய். விக்ரம் சாராபாயின் தந்தை அம்பாலால் சாராபாய் அனசுயாவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com