பத்திரிகையாளராகவே விரும்பினேன், தவறுதலாக அரசியல்வாதியானேன்’: ஒன் அண்ட் ஒன்லி அடல்ஜி பற்றிய சில சுவாரஸ்யங்கள்!

அடல்ஜிக்கு தாம் ஒரு பத்திரிகையாளராக ஆக வேண்டுமென்பதே பெரு விருப்பமாக இருந்து வந்திருக்கிறது. ஆயினும் தவறுதலாக விதி வசத்தால் தானொரு அரசியல்வாதியாக ஆகி விட்டதாக அவர் பலமுறை தனக்குத்தானே மன்னிப்புக் கோரி
பத்திரிகையாளராகவே விரும்பினேன், தவறுதலாக அரசியல்வாதியானேன்’: ஒன் அண்ட் ஒன்லி அடல்ஜி பற்றிய சில சுவாரஸ்யங்கள்!

அடல்ஜிக்குத்தான் எத்தனையெத்தனை சிறப்புப் பெயர்கள். அத்தனையும் அவர் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டதோ அல்லது காசு கொடுத்து தமது அடிப்பொடிகளை வைத்து உருவாக்கிக் கொண்டதோ அல்ல... கட்சி பேதமின்றி இந்திய மக்கள் மனமுவந்து அளித்த சிறப்புப் பட்டங்கள் அவை.

கார்கில் வெற்றி நாயகன் அடல்ஜி, பொக்ரான் நாயகன் அடல்ஜி, தங்கநாற்கரச் சாலை தந்த தவப்புதல்வர் அடல்ஜி, பீஷ்ம பிதாமகன் அடல்ஜி, இந்தியாவை ஒளிரச் செய்த மாவீரர் அடல்ஜி, இப்படித் தொடரும் பட்டப் பெயர்களுடன்...

‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’

- எனும் பாடலுக்கு ஏற்ப இந்திய அரசியல் களத்தில் தனக்கே தனக்கென்றதான சீரோடும், சிறப்போடும் வாழ்ந்து மறைந்தவர் நமது முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். அவரைப் பற்றி இளையதலைமுறையினர் அறிந்து கொள்ள ஆயிரம் சுவாரஸ்யங்கள் உண்டிங்கு.

அவற்றுள் சில...

அடல்ஜி தனது தந்தையுடன் இணைந்து கல்லூரி சென்றவர்... அவரது தந்தைக்கும் கல்வி என்றால் அத்தனை இஷ்டம். அதனால் மகனுடன் சேர்ந்து பயில்வதென முடிவு செய்து... தந்தையும் தனயனும் இணைந்து கான்பூர் டிஏவி கல்லூரியில் பயிலத் தொடங்கினர். இருவரும் ஒரே வகுப்பில் பயின்றதோடு கல்லூரி விடுதியிலும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளங்கலைப் பட்டத்தை முடித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்த அடல்ஜி அதை முழுமையாக நிறைவு செய்யும் முன் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றினால் அந்த இயக்கத்தில் தீவிரமாக இயங்குவதற்காக 1950 களில் ஆர் எஸ் எஸ் பத்திரிகை ஒன்றைத் தொடங்கி அதன் பணிகளில் மூழ்கிப் போனார். இதனால் அவரது சட்டக் கல்லூரிப் படிப்பு தடைப்பட்டது. தந்தை அரசு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அச்சூழலில் அடல்ஜியின் ஆர் எஸ் எஸ் மோகத்தை அவரது குடும்பத்தினர் அத்தனை விரும்பினார்களில்லை. அப்போதெல்லாம் அடல்ஜி தினமும் ஆர் எஸ் எஸ்ஸின் சீருடையான காக்கி யூனிஃபார்ம் அணிவது வழக்கம். அதைத் துவைத்து கொடியில் காயப்போடும் போது அடல்ஜியின் அக்கா, அவரது அப்பாவுக்குப் பயந்து கொண்டு கொடியிலிருந்து அதை நீக்கி தூக்கியெறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

அடல்ஜிக்கு தாம் ஒரு பத்திரிகையாளராக ஆக வேண்டுமென்பதே பெரு விருப்பமாக இருந்து வந்திருக்கிறது. ஆயினும் தவறுதலாக விதி வசத்தால் தானொரு அரசியல்வாதியாக ஆகி விட்டதாக அவர் பலமுறை தனக்குத்தானே மன்னிப்புக் கோரிக் கொள்வதைப் போல அத்தகவலை நண்பர்களிடையேயும், செய்தியாளர்களிடையேயும் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருந்தது.

வாஜ்பாய் முதல்முறை தேர்தலில் நின்றது அவரைப் பொருத்தவரை தற்செயலானது. அப்போது பாஜகவில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி தேர்தலுக்கு முன்பு உடல்நலக் குறைபாட்டால் மரணித்து விட, வேறு வழியின்றி சியாமா பிரசாத்துக்கு மாற்றாக அவரது தொகுதியில் பாஜக வேட்பாளரானார் அடல்ஜி. இப்படித்தான் 1957 ல் தனது முதல் அரசியல் பிரவேசத்திலேயே தேர்தலில் வெற்றி வாகை சூடி இந்திய நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார் அடல் பிஹாரி வாஜ்பாய்.

தனது 47 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில், மக்களவைக்கு 10 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்தியப் பிரதமராக கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் 3 முறை பதவி வகித்துள்ளார்.  இதில் முதல்முறை பதவியேற்ற போது  வெறும் 13 நாட்களில் ராஜினாமா செய்ய வேண்டியவரானார். அதையடுத்து 1998 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமர் பதவியேற்ற அடல்ஜி 13 மாதங்கள் பிரதமர் பதவி வகித்தார். அப்போதிருந்த அரசியல் சூழலின் காரணமாக மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அவரது தலைமையிலான அரசு 1 வாக்கு வித்யாசத்தில் தோல்வியடைய அடல்ஜி பதவியிழந்தார். அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற வாஜ்பாய், முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தார். இதன் மூலமாக 5 ஆண்டு கால ஆட்சியையும் பூர்த்தி செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார்.

அடல்ஜி திருமணமாகாதவர் எனினும் அவருக்கொரு வளர்ப்பு மகள் உண்டு. அவரது பெயர் நமிதா பட்டாச்சார்யா. இந்த நமிதா பட்டாச்சார்யா, அடல்ஜியின் கல்லூரித் தோழியும், அவரது நெடுநாள் உடனுறை துணையுமான (கம்பானியன்) ராஜ்குமாரி கெளலின் மகள். ராஜ்குமாரி கெளலும், அடல்ஜியும் குவாலியர் விக்டோரியா கல்லூரியில் இணைந்து படிக்கும் போது சினேகமானார்கள். அந்த சினேகம் ராஜ்குமாரி கெளலின் கணவரும், பேராசிரியருமான பி.என் கெளல் காலமான பின் அடல்ஜியின் வீட்டிலேயே அவருக்கொரு நற்றுணையாக தனது குடும்பத்துடன் வந்து நிரந்தரமாக வசிக்கும் அளவுக்கு ஆழமாக பிணைப்பைக் கொண்டதாக மாறியது. ராஜ்குமாரி கெளல் குறித்து அடல்ஜியின் நெருக்கமான நண்பர் வட்டாரங்கள் தவிர்த்து பாஜகவின் பிற தலைவர்களுக்கும் கூட பெரிதாக ஏதும் தெரியாது என்ற நிலையே பல காலம் நீடித்தது. ஏனெனில், தன் சினேகிதியின் மகளை, தன் மகளாக அடல்ஜி தத்தெடுத்துக் கொண்ட போது அதைப்பற்றி வெளி உலகுக்கு அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் தனக்கு இல்லை என அடல்ஜி முடிவு செய்திருந்தார். 2016 ஆண்டில் ராஜ்குமாரி கெளல் மாரடைப்பின் காரணமாகக் காலமான பின் அடல்ஜி தனது இறுதி மூச்சு வரை தனது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா மற்றும் பேத்தியுடன் டெல்லியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

1977 ல் அடல்ஜி, மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் முதன்முதலில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்ற போது தனது உரையை இந்தியில் நிகழ்த்தினார். இதன் மூலமாக ஐ நா பொதுச்சபையில் முதன்முதலில் இந்தியில் பேசிய தலைவர் என்ற சிறப்பும் அடல்ஜிக்கு கிடைத்தது.

அது மட்டுமல்ல நாட்டின் பிரதம மந்திரியாக அனல் பறக்கும் அரசியல் சூழல்களைக் கடந்து வர வேண்டிய நிர்பந்தம் இருந்த போதும் அடல்ஜி தனது கவிதை மோகத்தைக் கைவிட்டாரில்லை. இவரது இந்திக் கவிதைகள் வெகுவாக ரசிக்கப் பட்டதோடு நயி திஷா, சம்வேதனா என்ற பெயரில் இசை ஆல்பங்களாகவும் உருப்பெற்றுள்ளமை விசேஷமானது.

இத்தனை சிறப்புகளுடன் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும் கருதப்படும் அடல்ஜியின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஐ நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ‘நல்ல ஆட்சி தினமாக’ அறிவித்துப் பெருமிதப் படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com