Enable Javscript for better performance
MEMORIES OF PRABANJAN|பிரபஞ்ச(ன்) நினைவுகள்...- Dinamani

சுடச்சுட

  
  prabanjannn

   

  பிரபஞ்சனை எனக்கு என் கல்லூரி காலத்தில் தான் அறிமுகம். நேரடியாக அல்ல... அவரது ‘வானம் வசப்படும்’ புத்தகம் வாயிலாக ரொம்பப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராகிப் போனார். இத்தனைக்கும் அவரது அத்தனை படைப்புகளையும் வாசித்ததில்லை. இதுவரையிலும் எண்ணி மூன்றே மூன்று புத்தகங்கள் மட்டுமே...

  ஒன்று ‘வானம் வசப்படும்’

  இரண்டு  ‘தாழப்பறக்காத பரத்தையர் கொடி’

  மூன்று  ‘பிரபஞ்சன் கட்டுரைகள்’

  பிரபஞ்சனை அறிந்து கொள்ள அவரது வானம் வசப்படும் மட்டுமே போதும் என்றாகி விட்டது எனக்கு. 

  கல்லூரி இறுதி வருடத்தில் மேற்படிப்புக்கு என்ன தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்கு பத்திரிகையாளர் ஆனால் என்ன என்ற கேள்வி ஒலிக்கத் தொடங்கி இருந்தது. காரணம் அன்றைய எங்களது தமிழாசிரியை அருளமுதம் அவர்கள். அவருக்கு பிரபஞ்சன் ஆதர்ஷம். பிரபஞ்சனின் படைப்புகளைப் பற்றி ஆவலுடன் எங்களிடம் பகிர்ந்து கொள்வார். ஆர்வ மிகுதியால் ஒருமுறை பத்திரிகையாளராகும் முயற்சியிலும் ஈடுபட்டு பிறகு ஏனோ அது தனக்கு ஒத்து வராது என விலகி விட்டதாகவும் கூட எங்களிடம் ஒருநாள் பகிர்ந்து கொண்டார். ஒரு பத்திரிகையாளராகும் ஆசை என்னுள் உதயமான முதல் தருணம் அதுவே. பத்திரிகையாளர் ஆனால் நான் வாசித்துப் பிரமித்த படைப்பாளிகள் அனைவரையுமே நேரில் காணலாமே என்றொரு கற்பனையில் அப்போது இருந்ததால் போஸ்ட் கிராஜுவேஷனுக்கு ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷனைத் தேர்ந்தெடுத்தேன். 

  சந்திக்க வேண்டிய படைப்பாளிகள் என்று அன்று நான் நினைத்திருந்தது சுஜாதா, சிவசங்கரி, பிரபஞ்சன், கந்தர்வன், பொன்னீலன், சிவகாமி ஐ ஏ எஸ், கி.ரா இவர்களை மட்டுமே... மற்றெல்லா இலக்கியப் படைப்பாளிகளும் சென்னையில் தான் வாழ்க்கை என்றான பின் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் வலைப்பதிவர் ஐ மீன் பிலாக்கர் ஆனதன் பின் அறிமுகம் ஆனவர்களே! 

  ஜர்னலிஸம் படித்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா?  அங்கே இருந்து மீண்டும் தொடங்கலாம். படித்து முடித்ததும் உடனே ஜர்னலிஸ்ட் ஆகி விட முடியுமா என்ன? அதெல்லாம் ஆக முடியவில்லை. உடனடியாகத் திருமணமாகி ஹோம்மேக்கராகத்தான் ஆக முடிந்தது. எனக்கு ஜர்னலிஸ்ட் ஆக முடியாதது கூட அப்போது வருத்தமாக இருந்திருக்கவில்லை... சந்திக்க நினைத்த எழுத்தாளர்களை எல்லாம் சந்திக்கவே வாய்ப்பில்லாமம் போய்விடுமோ என்பது தான் மிகப்பெரிய ஆதங்கமாக இருந்தது. திருமணமாகி சென்னை வந்த பின் கணவர் அலுவலகம் சென்ற பின் மிஞ்சிய நேரத்தை நெட்டித்தள்ள விகடன் வரவேற்பறை மூலமாக நானாகவே கண்டறிந்தது தான் பிலாக்கர் (வலைத்தளம்). அன்று பிரபலமாக இருந்த ஒன்றிரண்டு பெண் பதிவர்கள் தங்களது வலைத்தள அனுபவங்களைச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருந்தார்கள். உடனே எனக்குள் இருந்த பத்திரிகையாளர் சுவாதீனமாக மீண்டும் உயிர்ந்தெழுந்தார். நீயெல்லாம் இப்படியே இருந்தா எப்போ ஜர்னலிஸ்ட் ஆவே? எப்போ ஸ்கூட்டி வாங்கி அதுல PRESS ஸ்டிக்கர் ஒட்டுவே? என்றெல்லாம் அகராதித்தனமாக  மனசாட்சி கேள்வி கேட்டது. உடனடியாக தீவிரமாக பிலாக்கில் எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது அறிமுகமான நண்பர்களில் அனேகம் பேர் இன்று வரையிலும் நல்ல நண்பர்களாகத் தொடர்வது பிலாக்கர் அளித்த கொடை. அவர்களில் முக்கியமானவர்கள் பாஸ்கர் அண்ணாவும், உமா ஷக்தியும். இருவருமே இலக்கியத்தின் மீது மட்டுமல்ல பிரபஞ்சன் மீதும் தீராப்ரியம் கொண்டவர்கள்.

  பாஸ்கர் அண்ணா சொல்லித்தான் மறைந்த பத்திரிகையாளர் ஞானி வீட்டு கேணி இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

  நான் கலந்து கொண்ட முதல் சந்திப்பே பிரபஞ்சனுடையது தான்.

  அந்தக் கூட்டத்தில் பிரபஞ்சனின் படைப்புகள் குறித்து அலசப்பட்டன. அத்துடன் கேள்விகள் எழுப்பப்பட்டு உரையாடலும் நிகழ்ந்தது. பிரபஞ்சன் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு சிகரெட் பிடித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் பதட்டத்துடன் வெளியில் வந்தார். அந்தச் சூழலில் அவருடன் பேசுவது சரியாக இருக்குமா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பாஸ்கர் அண்ணா, வாங்கப்பா நான் பிரபஞ்சனை டிராப் பண்ணப் போறேன்... அப்படியே உங்களையும் டிராப் பண்ணிடறேன் என்று லட்டு போல பிரபஞ்சனுடன் உரையாட ஒரு வாய்ப்பளித்தார்.

  கேணி இலக்கியச் சந்திப்புகளை ஞானியுடன் இணைந்து பாஸ்கர் அண்ணா அப்போது நடத்திக் கொண்டிருந்ததால் இலக்கிய ஜாம்பவன்களை அழைத்து வந்து மீண்டும் கொண்டு விடும் பொறுப்பு அவருக்கு இருந்தது.

  அந்த வாய்ப்பை அப்போது ஏன் பயன்படுத்திக் கொள்ளாமல் போனோம் என்று நான் பல சந்தர்பங்களில் வருந்தி இருக்கிறேன். அப்போது நான் ஆட்டோவை வெயிட்டிங்கில் வைத்திருந்ததால் இவர்களுடன் வீடு திரும்ப இயலாமல் போனது.

  பிரபஞ்சனுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பை தவற விட்டதில் முதல் தருணம் இது.

  அடுத்து சில ஆண்டுகளில் குமுதம் ஹெல்த் இதழில் ஹெல்த் சிறுகதை ஒன்றை வெளியிடும் விஷயத்துக்காக மீண்டும் பிரபஞ்சனுடன் உரையாட ஒரு சந்தர்பம் கிடைத்தது.

  எனக்கு பிரபஞ்சனின் ‘மரி எனும் ஆட்டுக்குட்டி’ சிறுகதை மிகப்பிடித்திருந்தது. அதை உளவியல் நோக்கில் ஹெல்த் இதழில் பிரசுரிக்க அவருடைய சம்மதம் கேட்டு தொலைபேசியில் அழைத்திருந்தேன்.

  என்னைப் பற்றிய அறிமுகம் இல்லாதபோதும் நான் உமா ஷக்தியின் சினேகிதி என்ற காரணத்தை முன்னிட்டு மிக வாஞ்சையுடன் பேசினார். தன்னுடைய கதையை ஹெல்த் இதழில் பிரசுரிப்பதற்கு ஆனந்தமாக சம்மதித்தார். அப்போது அவருடைய ‘வானம் வசப்படும்’ நாவல் குறித்து எனக்கிருந்த பிரமிப்பை அவருடன் பகிர்ந்து கொள்ள சந்தர்பம் கிடைத்தது. ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி முழுதாக வாசித்ததைக் கேட்டு சந்தோசப் பட்டார். கதையில் சுவாரஸ்யமான பல வரலாற்றுத் தரவுகள் குறித்துப்பேசும் போது மிக ஆர்வத்துடன் உரையாடினார். கட்டாயம் உமாவுடன் ஒருநாள் நேரில் சந்திக்கலாம் கார்த்திகா! என்றார்.

  பிறகு நான் அங்கிருந்து விலகி சில ஆண்டுகளின் பின் தினமணியில் இணைந்த பின் லைஃப்ஸ்டைல் பகுதியின் ‘ரசிக்க ருசிக்க’ பகுதிக்காக வித்யாசமான மீன் குழம்பு ரெஸிப்பிகளைப் பற்றித் தேடிக் கொண்டிருக்கையில் திடீரென பிரபஞ்சனைப் பற்றிய பேச்சு வந்தது. வானம் வசப்படும் நாவலில் ஓரிடத்தில் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கும் பெண்ணொருத்தி வெள்ளை வெளேரென்ற மீனை வாங்கிச் சென்று அதை நறுவிசாகச் சமைப்பது போன்ற சித்தரிப்பு ஒன்று வரும். நாவலில் அந்த இடம் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்ததால் இப்போதும் மீன் குழம்பு வைக்கும் போதெல்லாம் என் நினைவிலாடிச் செல்லும். அதைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் உமா உற்சாகமாகி உடனடியாக பிரபஞ்சனை அலைபேசியில் அழைத்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். அப்போது மீண்டும் ஒருமுறை பிரபஞ்சனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் படைப்புலகையும் அது சார்ந்த நட்புகளையும் மட்டுமே வாழ்தலுக்கான தனது பிரதான காரணங்களாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த அருமையான மனிதர் அவர் என்பதை அப்போது உணர முடிந்தது.

  அன்றும் ஒருமுறை பிரபஞ்சனை ஒருமுறை நேரில் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம்... ஏனோ அதையும் செயல்படுத்த நேரமற்றுப் போனதில் அதுவும் தடைபட்டு போனது.

  எல்லாம் கடந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் தமிழ்நதி முகநூலில் பகிர்ந்துகொண்டிருந்த ஒரு தகவலைக் கண்டதும் மனம் ஒரு நொடி திடுக்கிட்டுத் துடித்தது.

  பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தான் அந்த தகவல்.

  அப்போது நாங்கள் தினமணி யூ டியூப் சேனலுக்காக ‘நோ காம்ப்ரமைஸ்’ மற்றும் ‘சந்திப்போமா’ நேர்காணல்களுக்காக திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளை அது.

  தமிழ்ப்படைப்புலகின் மிகப்பெரிய ஜாம்பவான்... இவரது படைப்புகளின் தாக்கத்தால் கணிசமாக பத்திருபது எழுத்தாளர்களாவது உருவாகியிருக்க வாய்ப்புகளுண்டு. மனிதர் கடைசி வரை வாழ்வியல் நெருக்கடிகளுக்கு தன்னைப் பலிகொடுக்காமல் தனியொரு ஜீவனாக சென்னையில் வாழ்ந்து இலக்கியம் வளர்த்தவர். அப்படிப்பட்டவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கு அவரே சம்மதமும் தெரிவித்திருந்தார். கடந்த மாதத்தில் ஒருநாள் உமா... பிரபஞ்சனிடம் எங்களது வருகைக்கு அனுமதி கேட்டிருந்தார். அவரும் மிகச்சந்தோஷமாகச் சம்மதமும் தெரிவித்திருந்தார். புறப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால் விதி எங்களுக்காக காத்திருக்க விரும்பவில்லை என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சித் திரைகளில் ஒளிர்ந்த செய்தி உறுதி செய்த போது மனம் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்ததோடு... நேர்காணலைப் பற்றிச் சற்றுத் தெளிவாக முடிவெடுத்திருந்தால் தமிழின் ஈடு இணையற்ற படைப்பாளிகளில் ஒருவரான பிரபஞ்சனுடன் கடைசியாக ஒருமுறை உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாமே! எனும் முடிவற்ற உறுத்தலிலும் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது.

  என்றபோதும் படைப்பாளிகளுக்குத்தான் என்றும் மரணமில்லையே. வள்ளுவன் போல் கம்பன் போல்... பாரதி போல், பட்டுக்கோட்டையார் போல் இன்னும் பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகளைப் போல் தன் படைப்புகள் வழி என்றென்றைக்குமாக வாழ்ந்து தீர்ப்பார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai