குடியரசு தினவிழா கொண்டாட பிரத்யேகமாக ஜனவரி 26 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டதின் சுவாரஸ்யப் பின்னணி!

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
குடியரசு தினவிழா கொண்டாட பிரத்யேகமாக ஜனவரி 26 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டதின் சுவாரஸ்யப் பின்னணி!

நமக்கு இந்திய சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி தெரிந்த அளவுக்கு குடியரசு தின விழாவைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. யாரிடம் சென்று கேட்டாலும் ஜனவரி 26 குடியரசு தினவிழா, அதற்காக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. நமக்கெல்லாம் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்பதைத் தவிர மேற்கொண்டு குடியரசு தினவிழா பற்றிப் பெரிதாக எதுவும் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளும் முனைப்பும் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை.

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாள் நள்ளிரவில் பிரிட்டிஷார் நமக்கு சுதந்திரம் வழங்கி விட்டார்களே தவிர, நாடு அப்போதும் ஜெனரல் மவுண்ட் பேட்டர்ன் ஆட்சியின் கீழ் தான் இருந்தது. ஏனெனில், ஒரு நாடு தன்னிறைவு பெற்று தனது மக்களின் பாதுகாப்பையும், பொருளாதாரத் தேவைகளையும், தனி மனித உரிமைகளையும், ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்து மக்களை சமரசத்துடன் ஆள்வதற்கான அரசியலமைப்புச் சட்டங்கள், கொள்கைகள் என தெளிவான எந்த ஒரு வரையறையும் அப்போது இந்தியாவிடம் இல்லாமலிருந்தது. முதலில் அதை உருவாக்கியாக வேண்டும். அதுவரை இந்தியா சுதந்திர நாடே தவிர ஜனநாயக நாடு இல்லை. எனவே சுதந்திர இந்தியாவின் முதல் கடமை சிதறுண்டிருக்கும் பிரதேசங்களை இணைத்து முதலில் ஒரு குடைக்கீழான ஆட்சித் தத்துவத்திற்கு ஒப்பான ஒருங்கிணைந்த இந்தியா உருவாக வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இதைத்தவிர பாண்டிச்சேரி, கோவா, கேரளாவின் சில பகுதிகள், காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் ஃப்ரெஞ்சு மற்றும் போர்த்துகீசியர்களின் காலனி ஆதிக்கமும் இருந்து வந்தது. இவை சுதந்திர பகுதிகளாகவே மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய இந்திய அரசுக்குச் சவாலாக இருந்தது. முரண்டு பிடிக்கும் சமஸ்தான அரசுகளை இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், வி.பி.மேனன் மற்றும் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த  மவுண்ட் பேட்டன் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இவர்களுடன் இணைந்து படேல் சாம, தான, தண்டம் எனும் மூவகைப் பிரயத்தனங்களைப் பயன்படுத்தி பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒன்று சேர்க்க படாத பாடுபட்டார். பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் விடாமுயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார் படேல். இப்படி துண்டு, துண்டாகக் கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்ததால் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என போற்றப்படுகிறார்.

சரி, தனித் தனியாகச் சிதறுண்டிருந்த இந்துஸ்தானத்தை இணைத்து இந்தியா எனும் ஒற்றை நாடாக்கி விட்டால் வேலை தீர்ந்ததா? அது தான் இல்லை, அடுத்தபடியாக இந்தியா குடியரசாக வேண்டும். அப்போது தான் அது ஒரு ஜனநாயக நாடாகக் கருதப்படக்கூடும். 

குடியரசு என்றால் என்ன? மக்களால், மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு மக்கள் ஆளப்பட வேண்டும். அது தான் உண்மையான குடியரசு தத்துவம். அதன்படி இந்தியா குடியரசாக வேண்டுமெனில் அதற்கென பிரத்யேக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்த மகத்தான பொறுப்பு சட்ட மேத அம்பேத்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாம் 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்று விட்டோமே தவிர, அன்றே நாம் முழு இறையாண்மை கொண்ட அரசால் ஆளப்படும் நாடாக ஆகிவிடவில்லை. நாம் முழு இறையாண்மை பெற்ற நாள்தான் ஜனவரி 26. ஏனென்றால், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியன்றுதான் நம் அரசமைப்புச் சட்டம் ‘உயிர்’ பெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உயிர் பெற வைக்க ஸ்பெஷலாக ஜனவரி 26 ஆம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

1930 ஆம் ஆண்டே, ஜனவரி 26ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

காந்தியடிகள் அப்படி அறிவிக்கக் காரணம் என்ன?

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், 'பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் கனன்று கொண்டு தான் இருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் ‘சட்ட மறுப்பு இயக்கத்தைத்’ தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார்.

ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் உறுதிமொழியை எடுத்துரைத்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் சாராம்சம் இதுதான்;

“பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்.”

சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திரதின நாள் தான் ஜனவரி 26. அன்றைய தினம் இந்திய சுதந்திரக் கொடியான மூவர்ணக் கொடியை ஜவஹர்லால் நேரு லாஹூரின் ராவி ஆற்றங்கரையில் ஏற்றிப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார். அப்போது சுமார் 170 சுதந்திரப் போராட்ட வீரர்கள் உடனிருந்தனர். சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியக் குடியரசு தினமான கதை. அதற்குப் பின் மேலே சொல்லப்பட்ட மாபெரும் கதை இருக்கிறது. அதற்காக இரவு, பகல் பாராது அயராது உழைத்த பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது. அந்தக் கதையெல்லாம் நிச்சயம் மாணவ சமுதாயமும் நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com