ஆர்யாவின் நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்? சேனலா? ஆர்யாவா, பெண்களா?

சமூக ஊடக கலாய்த்தல்களைப் பற்றி ஆர்யாவிடம் கேட்டால், ‘அவங்களுக்கு என்ன?! ‘இது என் வாழ்க்கைப் பிரச்னைங்க’ என்று பதில் வந்தாலும் வரலாம்.
ஆர்யாவின் நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்? சேனலா? ஆர்யாவா, பெண்களா?
Published on
Updated on
3 min read

நடிகர் ஆர்யா தனியார் சேனலொன்றின் ரியாலிட்டி ஷோ மூலமாகத் தனக்கான மணமகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 வரன்களுடன் தொடங்கிய இந்த நவீன சுயம்வரத்தில் இப்போது எஞ்சியிருப்பது 

அகாதா, சீதாலட்சுமி, ஸ்வேதா, நவீனா, தேவ சூர்யா, குஹாசினி, சுஷானா, ஸ்ரியா, அபர்னதி, எனும் 9 மணமகள்கள் மட்டுமே,

இவர்களிலும் ஒருவர் திங்களன்று எலிமினேட் செய்யப்படவிருக்கிறாராம். அது அபர்னதியா? ஸ்ரீயாவா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை வழக்கமாகப் பார்க்கும் பார்வையாளர்கள்.

சரி இந்தப்பெண்கள் எல்லாம் ஆர்யாவை எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ளத் தேடி வந்திருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டுள்ள உங்களைப் போலவே எனக்கும்  புரியத்தான் இல்லை. ஆனால், சமூக ஊடகங்களில் செமையாய்க் கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ‘பல் இருக்கிறவன் பகோடா திங்கிறான்’ கணக்கில் ஆர்யாவைப் புகழ்ந்தாலும் மறுபக்கம், கல்யாணம் பண்ணிக்கனும்னா வீட்ல அப்பா, அம்மா கிட்ட சொல்லி பண்ணிக்கலாம், இல்லைன்னா இவருக்கிருக்கிற பெர்சனலிட்டிக்கு அவர் சினிமா இண்டஸ்ட்ரியிலயோ இல்ல ஃப்ரெண்ட்ஸ் சர்க்கில்லயோ பிடிச்ச பொண்ணுக்கிட்டு ப்ரப்போஸ் பண்ணி லவ் மேரேஜ் பண்ணிக்கலாம். அதெல்லாம் வேண்டாம்னா ஏதாவது மேட்ரிமோனியல் சைட்ல ரெஜிஸ்டர் பண்ணி கல்யாணம் பண்ணலாம். இதென்ன புதுசா பப்ளிசிட்டி ஸ்டண்ட் மாதிரி சேனல்ல போட்டி வச்சு கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு கிளம்பியிருக்காங்க, இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. நீங்க வேணும்னா பாருங்க, இதுல கலந்துக்கற எந்தப் பொண்ணையுமே ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார். ஆர்யாக்கு கடைசியா நடிச்ச எந்தப் படமும் சரியாப் போகல... அதான் அவர் இப்படி இறங்கிட்டார். கடைசில எல்லாம் விளையாட்டுன்னு சொல்லப் போறாங்க. என்கிறார்கள் ரசிகர்களும், விமர்சகர்களும்.

இணையத்தில் சமூக ஊடகங்களைப் பொறுத்த அளவில் எப்போதும் அப்டேட்டாக இருக்கும் ஆர்யா இவற்றையெல்லாம் பார்க்காமலா இருந்திருப்பார். ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் செம கூலாக ஜெய்ப்பூரில் தினம் ஒரு டேட்டிங் கதையாக மீதமிருக்கும் 9 பெண்களுடனும் பேசிப் பழகி புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார். போட்டியின் முடிவில் எந்தப் பெண் அவரது மனதை வெல்கிறாரோ அந்தப் பெண்ணுக்கு அவர் மாலையிடுவாராம். சமூக ஊடக கலாய்த்தல்களைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘அவங்களுக்கு என்ன?! ‘இது என் வாழ்க்கைப் பிரச்னைங்க’ என்று பதில் வந்தாலும் வரலாம்.

எது எப்படியோ? ஆர்யாவுக்கு இந்த நிகழ்ச்சி மூலமாகத் திருமணம் ஆனால் சரிதான். கலந்து கொண்ட பெண்களில் அட்லீஸ்ட் ஒருவராவது வென்ற திருப்தியுடன் வெளியேறுவார்.

தமிழர்களான நமக்குத்தான் இது போன்ற ரியாலிட்டி ஷோ கான்செப்ட் புதுசு. ஆனால், இது 2002 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாம். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தி பேச்சிலர் எனும் ரியாலிட்டி ஷோவின் தமிழ் வெர்சன் தான் இது என்கிறார்கள். இந்தியாவில் இந்தக் காற்று பாலிவுட்டைத் தாண்டித்தான் தமிழகம் வந்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் இதே மாதிரியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனத் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கண்டடையப் போவதாகக் கூறி பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்தார். The Bachelorette - Mere Khayalonki Malika  நிகழ்ச்சி மூலமாக அவருக்குப் பொருத்தமான மனதுக்குப் பிடித்த ஒரு வரனும் அமைந்தது வாஸ்தவமே. ஆனால், ஏனோ இறுதியில் தான் கண்டடைந்த அந்த நபரை மல்லிகா திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து விட்டார்கள் என்று தகவல்.

ஆர்யா விஷயம் எப்படியென்று போட்டி முடிவுக்கு வரும்போது தான் தெரியும்.
 
இரு நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சியொன்றில் வரன்களாக வந்திருந்த பெண்கள் ஆர்யாவிடம் சில கேள்விகளை எழுப்புகையில், அவர் தனது வாழ்வில் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு நிகழ்ந்த சில வலி தருணங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். ஆர்யாவுக்கு கல்லூரிப் பருவத்தில் ஒரு பெண்ணுடன் காதல் இருந்து அது பதிவுத்திருமணம் வரை சென்றதாகவும். ஆனால், ஏனோ அந்தத் திருமணம் சட்டப்படி முழுமையாகப் பதிவாகவில்லை, அதற்குள் அவர் திருமணம் செய்ய நினைத்த பெண் 30 நாட்களுக்குப் பின் மீண்டும் பதிவுத் திருமணச் சான்றில் கையெழுத்திட வேண்டிய நேரத்தில் வராமல் போனதால் திருமணம் பதிவாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அந்தப் பெண்ணின் மீதான காதலை வெல்லுமளவுக்கு போட்டியில் கலந்து கொண்ட பெண்களில் எவர் ஆர்யாவின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறாரோ அவரே அவரது மனைவியாகப் போகிறவர் என்கிறார் உடனிருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரும் தயாரிப்பாளருமான நடிகை சங்கீதா!

இதுவரை கோலப்போட்டி, ஸ்பெஷல் டேலண்ட் போட்டி, என்று ஜாலியாகப் போய்க் கொண்டிருந்த இந்த ஷோ, கடந்த வாரம் கொஞ்சம் எமோஷனலாக இருந்தது.

ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ இது வரை எப்படியோ, ஆனால், இனி ஒரே எமோஷனல் தானாம்?!

ஏனெனில், ஆர்யாவின் மணமகளாகப் போகும் ஆசையில் வந்திருந்த இளம்பெண்களில் சிலர் இதுவரை தங்களது குடும்பத்தினரிடம், ஏன் பெற்றோரிடம் கூட இதுவரை தெரிவித்திராத ரகசியங்கள் சிலவற்றை கன்ஃபெஷன் ரூம் சீக்ரெட்ஸ் என்ற பெயரில் ஆர்யாவுடன் பகிர்ந்து கொண்டனர்.  அவை கிட்டத்தட்ட சமூக ஊடகங்களில் ஹிட்டடித்த #metoo ஹேஷ்டேக் விவகாரம் போல அவர்களது குழந்தைப் பருவத்திலோ அல்லது கல்லூரிப் பருவத்திலோ அல்லது வேலைக்காகவென்று வெளியுலகிற்கு வந்த கணத்திலோ நிகழ்ந்த முதல் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவமாக இருந்தது அந்தப் பகிர்வு. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் அவர்கள் ஆர்யாவிடம் மட்டுமே அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை ஷோ மூலமாக அந்த நேரத்தில் அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பார்வையாளர்களிடமும் அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என. அதனாலென்ன என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஏனெனில் அவ்விதமாக தங்களது ஆழ்மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பெண்களுக்குமே ஆர்யாவைக் கணவனாக அடைய வேண்டுமென்ற ஆசையும், ஆவலும், நம்பிக்கையும் நிறையவே இருந்தது. எனவே அவர்கள் பகிர்ந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்குத் தான் அது விந்தையாக இருந்தது. ஏனெனில் ஆர்யா தேர்ந்தெடுக்கப் போவது ஒரே ஒரு மணமகளைத் தான். அவரையும் அவர் மணப்பாரா? இல்லை இது ஒரு கேம் ஷோ என்று அல்வா கொடுப்பாரா? என்பது இதுவரைக்கும் புரியாத புதிர். ஏனெனில் இப்படி ஒரு ஷோ மூலமாகத் திருமணம் செய்து கொண்ட நடிகர்களை நாம் கண்டதே இல்லை என்பதால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com