பிளாஸ்டிக் கழிவுகள் சுத்திகரிப்பில் ஜெர்மன் VS இந்தியா: நாம திருந்தவே மாட்டோம் பாஸ்!

இந்தியாவிலும் பிளாஸ்டிக் பொருட்களை சுத்திகரிக்கிறார்கள், ஜெர்மனியிலும் சுத்திகரிக்கிறார்கள். ஆனால் சுத்திகரிக்கும் விதத்தில் இரண்டுக்கும் உள்ள மலையளவு வித்யாசத்தைப் பாருங்கள்! 
பிளாஸ்டிக் கழிவுகள் சுத்திகரிப்பில் ஜெர்மன் VS இந்தியா: நாம திருந்தவே மாட்டோம் பாஸ்!

இந்தியாவிலும் பிளாஸ்டிக் பொருட்களை சுத்திகரிக்கிறார்கள், ஜெர்மனியிலும் சுத்திகரிக்கிறார்கள். ஆனால் சுத்திகரிக்கும் விதத்தில் இரண்டுக்கும் உள்ள மலையளவு வித்யாசத்தைப் பாருங்கள்! 

ஜெர்மனியில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டிலையும் பயன்படுத்தி முடித்ததும் அதை அப்படியே அதே கடைகளில் திருப்பித் தருவது என்பது ஒரு நித்ய நடைமுறை. தங்கள் வேலையோடு வேலையாக மக்கள் இதையும் ஒரு கடமையாக நினைத்து பாட்டில்களைத் திருப்பி அளிக்கப் பழகி இருக்கிறார்கள். அங்கே P fand என்றொரு டெபாஸிட் முறை பின்பற்றப்படுகிறது. அதற்குத்தான் அவர்கள் நன்றி சொல்லியாக வேண்டும். 

அதென்ன Pfand  டெபாஸிட் என்கிறீர்களா?

நீங்கள் ஒவ்வொரு முறை ஏதாவது பானம் வாங்கும் போதும் பிளாஸ்டிக் பாட்டிலுக்காக 9 முதல் 31 செண்ட்களை ( ஜெர்மன் பணமதிப்பு) கடைக்காரர்கள் பிடித்தம் செய்து வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பணம் திருப்பி அளிக்கத்தக்க பணம். அதாவது நீங்கள் பாட்டிலைத் திருப்பி அளிக்கும் போது இப்படிப் பிடித்தம் செய்த டெபாஸிட் பணம் உங்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு விடும். பாட்டில்களை திருப்பி அளித்தால் மட்டுமே தொகையை திரும்பப் பெற முடியும். எனவே தொகையைத் திரும்பப் பெறுவதற்காகவாவது நீங்கள் பாட்டில்களைத் திரும்ப அளித்துத் தான் தீர வேண்டும். எங்கே பானங்களை வாங்குகிறோமோ அங்கேயே பாட்டில்களைத் திருப்பி அளித்து டெபாஸிட் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஜெர்மனியில் இந்த நடைமுறை மிக நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 90 % பாட்டில்கள் இந்த நடைமுறையில் திரும்பப் பெறப்பட்டு டெபாஸிட் தொகைகள் திரும்ப அளிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அங்கு 71% அனைத்து விதமான பேக்கேஜிங் பிளாஸ்டிக்குகளும் மீண்டும் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்தியாவிலும் பாட்டில்கள் மற்றும் கண்டெயினர் பாக்ஸுகள் என 90% பிளாஸ்டிக் பொருட்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. என்ன ஒரு வித்யாசம் எனில் இந்தியாவில் பிளாஸ்டிக் சுத்திகரிப்புக்காக நாம் பின்பற்றும் முறை ஜெர்மனி போலவோ அல்லது பிற மேற்கத்திய நாடுகளைப் போலவோ இருப்பதில்லை. இந்தியாவில் முற்றிலும் முறைசாராத ஒரு பொருளாதார முறை பிளாஸ்டிக் சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

குப்பை பொறுக்குவோர், மாநகராட்சி குப்பை அள்ளும் பணியார்கள், பிச்சைக்காரர்கள், கைவிடப்பட்ட சிறார்கள், மனநலம் குன்றியவர்கள் என யார் வேண்டுமானாலும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து அதற்குரிய இடங்களில் அவற்றை அளித்து மிகக் குறைந்த அளவில் பொருளாதாரம் ஈட்டிக் கொள்கிறார்கள். இந்த வேலைக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மிகப்பரந்த குப்பைக் கிடங்குகளில் நாய்களோடும், கொசுக்களோடும், ஈக்களோடும், நோயுண்டாக்கும் கிருமிகளுடனும் போராடி அந்தப் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சுத்திகரிக்கத் தக்க பிளாஸ்டிக் பொருட்களை இந்த எளிய மனிதர்கள் சேகரிக்கிறார்கள். சேகரிக்கப்பட்ட கழிவுகள் அதிகாரப்பூர்வமான சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு சுத்திகரிக்கப் படுகின்றன. இந்த வேலையில் ஈடுபடும் மக்கள் மிக மிக வறிய நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைப்பதைப் போலானதொரு செயலில் ஈடுபட்டுத்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அதிர்ச்சியூட்டக்கூடிய விதத்திலான இந்த சொற்ப வருமானத்திற்காக சமூகத்தை சுத்தப்படுத்துவது போலான ஆரோக்யமான இத்தகைய வேலையை அந்த மக்கள் செய்து வருகிறார்கள்.

எல்லாம் எதற்காகத் தெரியுமா?

பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கத்தான்.

சரி இப்போது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?

சுத்திகரிப்பு என்ற ஒரே விஷயத்தைத் தான் இரண்டு நாடுகளுமே செய்து வருகின்றன. ஆனால், அதைச் செயல்படுத்தும் முறையில் தான் எத்தனை பெரிய வித்யாசம் என்று பாருங்கள். இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் சுத்தம் மற்றும் சுகாதார விஷயத்தில் நடுவிலிருக்கும் தாண்ட முடியாத பிரமாண்ட பள்ளம் இது. இதைத் தாண்ட வேண்டுமெனில்... இந்த விஷயங்களை எல்லாம் முறையான விதத்தில் செயல்படுத்த நம்மிடையே மனிதாபிமானமும், நேர்மையும், குறைந்தபட்ச கருணையுமாவது கொண்ட நல்ல திட்டப் பணியாளர்கள் இருக்க வேண்டும், அவர்கள் வகுத்துக் கொடுக்கும் திட்டங்களை அங்கீகரித்துச் செயல்படுத்தவும், அனுமதி பெற்றுத்தரவும் நேர்மையான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேண்டும். இதெல்லாம் தலையால் தண்ணீர் குடிக்கும் வித்தை தான் இல்லையா? இந்தியாவில் நேர்மையான அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் பார்ப்பதென்பது குதிரைக் கொம்பாயிற்றே! ஆகவே தான் பிளாஸ்டிக் சுத்திகரிப்பில் ஜெர்மன் பின்பற்றும் எளிய நடைமுறையைக் கூட நம்மால் இன்று வரை பின்பற்றப்பட முடியாமலிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com