Enable Javscript for better performance
'Plagiarism i|கர்நாடக இசையில் ‘கருத்துத் திருட்டு’ என்ற பிரசாரமெல்லாம் வடிவமைக்கப்பட்ட தீவிரவாதம்!- Dinamani

சுடச்சுட

  

  தமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில் கலாசார பரிமாற்றத்தின் பங்கு!

  By முனைவர். பா. வில்சன் & திருமதி ஜாஸ்மின் வில்சன்  |   Published on : 12th September 2018 06:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karnatic_music

   

  கலாச்சார பரிமாற்றம் என்பது வர்த்தகம், போர், நாடு கைப்பற்றுதல் மதப்பிரச்சாரம் போன்றவைகள் வாயிலாக தொன்று தொட்டு நடைபெறுகின்ற ஒன்று என்பதற்கு வரலாறு ஒரு சான்றாக அமைந்துள்ளது. தமிழ் இசையும் வரலாற்றில் இந்த காரணிகளைக் கடந்து பயணித்துள்ளது என்பது ஆய்வின் வழி புலப்படுகின்ற உண்மை. தமிழ் இசை வளர்ச்சி என்பது தமிழ் இசை புத்துருவாக்கம், இசை நுணுக்கங்களைக் கிரமப்படுத்துதல், இசை வடிவங்களை பதிவு செய்து பத்திரப்படுத்துதல் போன்ற நிலைகளைக் கடந்து வந்துள்ளது என்று கூறுவது மட்டுமல்லாமல் இவை ஒவ்வொன்றிலும் சாதி மத பேதமின்றி அநேக இசை வல்லுநர்கள் இதைக் கலையாக மட்டுமே கருதி இதன் வளர்ச்சியில் பரந்த மனதுடன் பங்களித்துள்ளார்கள் என்று கூறினால் மிகையாகாது.

  தென் இந்திய கலாச்சார இசை, சங்க காலத்தில் சிறந்து விளங்கிய தமிழ் இசை வடிவத்தின் மறு பரிணாமம் என்பது ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பது தமிழ் இசை ஆய்வாளர்கள் அறிந்ததே. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் இதனைக் “கர்நாடக இசை” என்று அவனது புத்தகத்தில் குறிப்பிட்ட பிறகே கர்நாடக சங்கீதம் என்ற பெயர் பெற்றது என்பது வரலாற்றுக் குறிப்பாகும். சங்க காலத்தில் தேவதாசிகளால் மட்டுமே பரம்பரையாகக் கற்கப்பட்டு கோவில்களிலும், அரசவைகளிலும் பரதநாட்டிய நடனமாகவும், தமிழ் இசையாகவும் விடுதலையாக வலம்வந்த இந்த கலை, பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும், ஒரு பிரிவினருக்கும் மட்டுமே உரிமையாகக் கருதப்பட்டு சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டு இருப்பது, ஒரு வேதனைக்குரிய உண்மையாகும். ஆனால் வரலாற்று உண்மைகளை எந்தவித பாகுபாடுமின்றிக் கூர்ந்து ஆராயும் பொழுது, நம்மையே வியப்பில் ஆழ்த்தக் கூடிய உண்மைகள் வெளிவருவது திண்ணமாகிறது.

  எந்த ஒரு கலையும், உருவானது முதல் தன் வளர்ச்சியில், பிற கலைகளிடம் இருந்து அவைகளின் பண்புகளையோ அல்லது சாயல்களையோ தாக்கங்களாக உள்வாங்கிக் கொண்டு, கலாச்சார கலப்புடன் வளர்வது என்பது கலை வளர்ச்சியின் பண்புகளில் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வித வளர்ச்சியில் பிற கலாச்சார தாக்கங்களுக்கு உட்பட்டு அதனை உள்வாங்கி வளரும்போது, ஆங்காங்கே கருத்து திருட்டு (Plagiarism) அல்லது கலாச்சார பரிமாற்றம் (Cultural Exchange) நிகழ்வது என்பது வழக்கமாக வரலாற்றின் சான்றுகள் புலப்படுத்தும் உண்மையாகும். இதனை எவ்வித பார்வையுடன் பார்க்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

  ஆங்கிலேயர் காலத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் இசைக்குழுவில் இடம் பெற்ற 'வயலின்' என்ற இத்தாலி நாட்டில் உருவான இசைக்கருவி, தற்கால கர்நாடக இசைக் கச்சேரியில் முக்கிய பங்கு வகிப்பது கலையின் மேம்பாட்டிற்கும், பிற கலாச்சார இசையின் கலப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் என்ற தீருவாரூர் மூவரில், முத்துசுவாமி தீட்சிதர், கலாச்சார கலப்புடன் இசை வளர்வதற்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார் என்றால் அது மிகையாகாது. மேலும் தஞ்சாவூர் நால்வரில் (Tanjavur Quartet) ஒருவரான வடிவேலு பிள்ளை, வயலின் என்ற இசைக்கருவியை தனது சமகாலத்தில் வாழ்ந்த கிறித்தவ புலவர் வேதநாயக சாஸ்திரிகளிடம் கற்றுக்கொண்டு, மேற்கத்திய இசைக்காக மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த இசைக்கருவியைக் கர்நாடக இசைக்கேற்ப பயன்படுத்தும் முறையை கண்டறிந்து, மனோதர்மத்தை (Improvisation) வயலின் இசைக் கருவி வழியாக இவ்வுலகிற்க்கு அறிமுகப்படுத்தியவர்களுள் முதல்வர் என்ற பெயரினை பெற்றவர். அதே காலத்தில் வாழந்த முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசுவாமி தீட்சிதர், மணலி முத்துகிருஷ்ண முதலியாரின் ஆதரவோடு தன் தந்தை ராமசாமி தீட்சிதருடன் சென்னைக்கு வந்து மூன்று வருடம் சென்னை தூய ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் இசைக்குழுவைக் காணுவதற்கும் அதில் இடம் பெற்ற வயலின் இசைக்கருவி மேல் காதல் கொண்டு அதனை கற்கவும் ஒரு வாய்ப்பு பெற்றார். முத்துசுவாமி தீட்சிதரும், பாலுசுவாமி தீட்சிதருடன் இணைந்து மூன்று வருடம் மேற்கத்திய இசையைக் கூர்ந்து கவனித்து அதன் தாக்கங்களுக்கு உட்பட்டு எழுதிய 39 பாடல்கள்தான் “நோட்டு சுவரங்கள்” (English Notes) என்று அழைக்கப்பட்டு மதுரை மணி அய்யர் அவர்களால் பின்னர் கச்சேரியில் பிரபலமாக்கப்பட்டது. அதில் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவென்றால், கலாச்சார கலப்பின் உச்சகட்டமாக “God Save the king (queen)” என்ற ஐரோப்பிய நாட்டின் புனித பாடல்களில் ஒன்றை அதன் இராகத்தைத் தழுவி தெலுங்கு மொழியில் இந்து கடவுள்களின் பெயரில் மாற்றி எழுதியுள்ளார். கலாச்சாரம் என்பது அதன் பரிணாம வளர்ச்சியின் முதற்கட்டத்தில் மேற்கத்திய இசையின் வடிவத்தை மட்டுமல்லாமல், அந்த இசையை இராகமாற்றமில்லாமல் அப்படியே வார்த்தை மாற்றம் மட்டுமே செய்து வளரவைத்துள்ளது என்பதற்கு “நோட்டு சுவரங்கள்” ஒரு சான்றாக அமைந்துள்ளது. முத்துசுவாமி தீட்சிதரை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துத் தற்போது அமெரிக்காவில் சின்சினாட்டி பல்கலைகழத்தில் தென்னிந்திய இசை பேராசிரியராக பணிபுரியும் Dr.Kanniks Kannikeswaran குறிப்பிடும் பொழுது, முத்துசுவாமி தீட்சிதரின் பன்னிரண்டு பாடல்களில் ஒன்று மேற்கத்திய இசையின் தாக்கத்தை உள்வாங்கியதாக அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட வரலாற்று உண்மைகள் ஒரு கலாச்சாரம் பிற கலாச்சார வடிவங்களை, சமுதாய கலாச்சார மாற்றங்களால் (Socio - cultural) தன்னுள் வாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், சில நேரங்களில் மொழிமாற்றம் மட்டும் அமையப்பெற்று வளர்ந்துள்ளது என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கின்றது. இவ்வித வளர்ச்சியை (Plagiarism) “கருத்து திருட்டு”, என்று கருத இயலுமோ அல்லது “கலாச்சார பரிமாற்றம்”, என்று எண்ண முடியுமோ என்பது வரலாற்றை எந்தவித சாதி, மத பார்வை இன்றி பார்க்க இயல்வோர் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.

  இசை என்பது முன்னோர்களின் இசை ஆராய்ச்சியை மூலதனமாகக் கொண்டு அதன் வடிவங்களையோ, பண்புகளையோ தாக்கங்களாக உள்வாங்கிக் கொண்டு புதுமை படைத்து வளர்கிறது என்பதற்கு தியாகராஜ சுவாமிகளின் “நிந்தாஸ்துதி” ஒரு எடுத்துக்காட்டு. தியாகராஜ சுவாமிகளுக்கு முன்பாக வாழ்ந்த பாபநாசம் முதலியார் உருவாக்கின இசை வடிவம் “நிந்தா ஸ்துதி” ஆகும். கடவுளை நிந்திப்பது போல் புகழ்வது என்பது இதன் பொருளாகும். திருவாரூர் மூவருக்கு முன்பாக வாழ்ந்த “தமிழ் மூவர்” தமிழ் இசைக்கு ஆற்றிய பங்களிப்புகள் “கிருத்தி” உருவாகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், மாரிமுத்து பிள்ளை மற்றும் அருணாச்சல கவிராயர் அவர்களது பங்களிப்புகளை பற்றிய முழுமையான தகவல்கள் இன்றும் வாய்வழி உண்மைகளாகவே வலம் வருகின்றன. எனவே ஒவ்வொரு புதிய படைப்பும் முந்தைய படைப்புகளால் உள்ளூக்கம் பெற்று உருவாகிறது என்பது திண்ணமாகிறது.

  இசை என்பது ஒரு கலை மட்டுமே. ஆயினும், ஆதரவின் நிமித்தம் அதன் பரிணாம வளர்ச்சியில் கோவில்களைச் சார்ந்தோ அல்லது அரசவையைச் சார்ந்தோ, வளர்ந்து வந்திருக்கின்றது. இவ்வித வளர்ச்சி, இசையைக் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பினை வர்ணிப்பதற்கு மட்டும் உரியதாகவே முன்னெடுத்துக் காட்டி வந்து உள்ளது. இவ்வித மனப்பான்மையை முறியடிக்கும் வகையில் சூழலுக்கு தகுந்த முறையில் மொழிமாற்றம் கொண்டோ அல்லது மனித உறவுகளை வர்ணிக்கும் ஒரு கருவியாகவோ இசையை கையாண்டு, இசையை பொதுவுடமை ஆக்கியதில் தமிழ் திரைப்படத்துறையின் பங்களிப்பு இன்றியமையாதது. திரைப்படங்களில் பாடல்களின் வரிகளை திரைப்படத்தின் தலைப்பாகவோ அல்லது திரைப்பட தலைப்பை பாடல் வரிகளாகவோ மாற்றுதல் கருத்து திருட்டாக பார்க்கப் படுவது இல்லை. கர்நாடக சங்கீத வித்வான்களும் தங்கள் முன்னோர்களுடைய பாடல்களில் ஈர்ப்புக்கொண்டு உள்ளூக்கம் அடைந்து அவர்களது பாடல் வார்த்தைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து தங்களது பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை கருத்து திருட்டு (Plagiarism) என்று கருத இயலாது.

  “வார்த்தை திருட்டு” என்பது பழங்காலந்தொட்டே இசை வளர்ச்சியில் ஒரு பகுதியாக இசையின் மேல் கொண்ட ஈர்ப்பினால் நிகழ்ந்திருக்கின்றது என்பது வரலாற்று ஆய்வில் திண்ணமாகிறது. முத்துசுவாமி தீட்சிதர் ஐரோப்பிய இசையை தனது கடவுளின் பெயரில் மொழிமாற்றம் செய்து கீர்த்தனைகளை இயற்றியது தனது சகோதரர் பாலுசாமி தீட்சிதர் மேற்கத்திய இசையை வயலினில் கற்று அதன் பின்னர் அதை தென் இந்திய இசைக்கேற்ப தகவமைக்கவே என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு முன்வைக்கிறது. இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆராய முற்பட்டால், இந்த வரலாற்று நிகழ்வு கலாச்சார வளர்ச்சிக்கான கருத்து பரிமாற்றமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே ஒழிய மேற்கத்திய இசையின் கருத்து திருட்டு (Plagiarism) என்ற பொருளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை. இந்த நிகழ்வை ஆதாரமாகக் கொண்டு கருத்து திருட்டை நியாயப்படுத்துவது இந்த கட்டுரையின் நோக்கமன்று. ஒரு கலாச்சார வளர்ச்சி கலாச்சார பரிமாற்றமாக அல்லது “கருத்து திருட்டாக” பார்க்கப்படுவது அதன் காரணமான சூழ்நிலையையோ அல்லது மனப்பான்மையையோ வைத்தே தீர்மானிக்க வேண்டும்.

  “சந்தப் புலவர்” என்று உலகமே பாராட்டும் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் அவருடைய பாடல்களில் “சலாம்” என்ற முகமதியரால் வழங்கப்படும் “வணக்கம்” என்ற பொருளை கொண்ட பதத்தை உபயோகப்படுத்தியுள்ளார். இதனையும் கருத்து திருட்டு என்று முகம்மதியர்கள் கூற இயலுமா?

  ஆனால் இசை வடிவங்களை தாக்கங்களாக உள்வாங்கிக் கொண்டு ஒரு கலாச்சாரம் வளர்வதை “கருத்து திருட்டு” என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட “தீவிரவாதம்” வழியாக மட்டுப்படுத்துவது என்பது ஒரு கலை வளர்ச்சிக்கு நாம் ஏற்படுத்தும் தடைக்கல் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முற்பட வேண்டும். கிறித்துவர்களாலும், முகமதியர்களாலும் சாதி மத வேறுபாடின்றி தமிழ் இசை வளர்க்கப்பட்டது என்ற வரலாற்று உண்மை எல்லோரும் இந்த இசையின் பங்குதாரர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கின்றது.

  மேலும் 1888 – 1973-ல் வாழ்ந்த செட்டி பானுமூர்த்தி என்பவரால் சங்கராபரண ராகத்தில் “சாமானுலவரு” என்று துவங்கும் பாடல் 1966-ல் இயற்றப்பட்டது. இந்தப் பாடல் கிறித்துவ வேதாகமத்தில் சங்கீதம் 71:19ல் தேவனே உமக்கு நிகரானவர் யார்” என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்று ஒரு குறிப்பு உணர்த்துகிறது. தியாகராஜரின் கரகரப்பிரியாவில் அமைந்த “சாமானுமெவரு” என்ற பாடலோடு இந்தப் பாடல் ஒப்பிடப்பட்டு “கருத்து திருட்டு” (Plagiarism) என்று கூறுவது இந்த புனிதக் கலையை வளரவிடாமல் பிணைய கைதியாக்கி அழிக்க முற்படும் ஒரு வடிவமைக்கப்பட்ட தீவிரவாதமாவே (Structural Violence) கருதமுடியுமே ஒழிய இக்கலையை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாக கருத முடியாது. ஒரு ஐரோப்பிய கிறித்தவ இசை வடிவத்தை அதன் ராகத்தோடு மொழிமாற்றம் செய்து, தனது கடவுளின் பெயரிட்டு பாடல்களை உருவாக்குவது கலாச்சார பரிமாற்றமாக பார்க்கப்பட இயலுமானால், “சாமானுமெவரு” என்ற பதத்தை மட்டும் உள்ளூக்கத்தினிமித்தம் பயன்படுத்தி, வேறு இராகத்தில் முற்றிலும் மாறுபட்ட வார்த்தைகளினால், 1966ல் உருவாக்கப்பட்ட பாடலை “கருத்து திருட்டு” (Plagiarism) என்று கூறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று.

  கட்டுரையாளர்கள்:

  முனைவர். பா. வில்சன்

  சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் துறை தலைவராக பணியாற்றுகிறார் மற்றும் தமிழ் இசையில் ஈடுபாடு கொண்ட இசைக் கலைஞர்

  திருமதி ஜாஸ்மின் வில்சன்

  தமிழ் இசையில் முதுகலைப் பட்டம் பெற்று (MFA) இசை ஆசிரியராகவும், இசையியல் வல்லுனராகவும் செயல்பட்டு வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai