‘டி.எஸ் சொக்கலிங்கம் முதல் கே. வைத்தியநாதன் வரை’ தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்கள் ஒரு பார்வை!

இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப்பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி", தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு நன்றி
‘டி.எஸ் சொக்கலிங்கம் முதல் கே. வைத்தியநாதன் வரை’ தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்கள் ஒரு பார்வை!

1934-ல் தொடங்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களின் மனசாட்சியாக இன்றுவரை செயல்பட்டு வரும் தினமணி நாளிதழ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அங்கமாக, தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன், மொத்தம் 34 பதிப்புகளைக் கொண்டதாக 10 மையங்களில் அச்சாகிறது.

''நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்'' என்பதை தார்மீக மந்திரமாகக் கொண்டு, இன்றுவரை எந்தவிதமான சமாதானங்களுக்கோ, வளைந்துகொடுத்தலுக்கோ இடம்கொடுக்காமல் நடுநிலையான உள்ளூர் முதல் உலகம் வரையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்த்துவரும் பெருமைக்குரியது தினமணி நாளிதழ். 

திரு. கே. வைத்தியநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, செய்திகளில் தரம், கண்கவர் வடிவமைப்பு, இளைஞர்மணி (செவ்வாய்), மகளிர்மணி (புதன்), வெள்ளிமணி (வெள்ளி), சிறுவர்மணி (சனி), தினமணி கதிர் (ஞாயிறு), கொண்டாட்டம் (ஞாயிறு), தமிழ்மணி (ஞாயிறு) என பலதரப்பட்ட வாசகர்களுக்கான சிறப்பு இணைப்புகள், சிந்தனையைத் தூண்டும் பத்திகள் மற்றும் கட்டுரைகளுடன் வெளியாகிறது தினமணி நாளிதழ்.

தமிழ்கூறும் நல்லுலகிற்கு தினமணியின் நன்றி! 

இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப்பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி", தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது.

தினமணி முதல் இதழ் வெளியான போது, ‘தமிழர்களால், தமிழர்களின் நலனுக்காக நடத்தும் அச்சமற்ற பத்திரிகை’ என்று தினமணி தனது விளம்பரத்தில் குறிப்பிட்டது. தமிழர்கள் என்றால் ‘பிராமணர் அல்லாத ஹிந்துக்கள்’ என்று அக்காலத்தில் குறுகிய நோக்கில் பொருள் கொள்ளப்பட்டது. இதைப் பற்றிக் கேள்வி எழுந்தபோது, ‘தினமணி’ தனது தலையங்கத்தில் அதற்கு விளக்கம் அளித்தது.

“தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்களே; விவசாயம், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் லாபம் வந்தால் சாதி, மத பேதமின்றிப் பயனடையப்போவது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயம்தான்; நஷ்டம் வந்தால் வேதனை படப்போவதும் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயம்தான். ஒரு ஜெர்மானியரைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால், தன்னை ஒரு ரோமன் கத்தோலிக்கர் என்றோ பிராடஸ்டண்ட் என்றோ கூறாமல் ஜெர்மானியர் என்றே கூறுவார். இதே போல பிரெஞ்சுக்காரரும் இத்தாலியரும் தங்கள் மதத்தைப் பற்றிக் கூறாமல் தேசியத் தன்மையையே வெளிப்படுத்துவர். இந்தியாவுக்குள் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் “தமிழர்” என்றே பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும் போது தன்னை “இந்தியன்” என்று பெருமை பொங்க அழைத்துக்கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் ஹிந்துக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் மற்ற பிரிவினரும்கூடத் தமிழர்கள்தான்”.

- என்பதே அந்த விளக்கம். இந்த விளக்கம் வாசகர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

தினமணியின் வெற்றி நடை...

சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்சகட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய "தினமணி"யின் பங்கு, சுதந்திர இந்தியாவில் அதிகரித்தது. மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப்பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக்கொடுக்காமல் "தினமணி" தொடர்கிறது என்றால் அதற்கு, அதன் முன்னோடிகளான சதானந்த், ராம்நாத் கோயங்கா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் போட்டுத் தந்த அடித்தளம் மட்டுமல்ல; தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் "தினமணி" நாளிதழைக் கருதுவதுதான் காரணம்.

"தினமணி" தொடங்கியபோது அந்நிய ஏகாதிபத்திய அரசை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை என்றால், இன்று நமது ஆட்சியாளர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும் காட்சிகள் மாறுவதில்லை என்கிற நிலைமைக்கு மாற்றத்தை யார் ஏற்படுத்துவது? சுதந்திர இந்தியாவின் சுதந்திரத்தையும், பாரத நாட்டின் பண்பாட்டையும், தமிழர்தம் தனித்துவத்தையும் யார் காப்பாற்றுவது? இதுவும் ஒருவகையில் ஒரு சுதந்திர வேள்விதான். அந்தப் பணியில் "தினமணி" தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது.

தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்கள்...

டி.எஸ். சொக்கலிங்கம்...

டி.எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - ஜனவரி 6, 1966).  ‘பேனா மன்னன்’ என்று அழைக்கப்பட்ட இவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். திருநெல்வேலி அருகே உள்ள தென்காசியில் பிறந்தவர். காந்தியத்தில் தீவிர பற்றுகொண்ட சொக்கலிங்கம், தனது 21-வது வயதில் இதழியல் துறையில் காலடி எடுத்து வைத்தார். காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜுலு நடத்திவந்த ‘தமிழ்நாடு’ இதழில் முதன்முதலில் பணியாற்றினார். இணையற்ற பத்திரிகையாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிறகு, ‘காந்தி’ என்ற வாரம் இருமுறை வெளியாகும் இதழைத் தொடங்கினார். பின்னர் வ.ரா. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து மணிக்கொடி இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

கோயங்கா குழுமத்துக்கு தினமணி கைமாறிய பிறகு, 1943-ல் தினமணியில் இருந்து வெளியேறினார். பின்னர், ‘தினசரி’ என்ற நாளிதழை தொடங்கினார். அது நின்றபோன பிறகு, ஜனயுகம், பாரதம், நவசக்தி போன்ற பத்திரிகைகளை நடத்தினார். சொக்கலிங்கம் சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சிறந்த படைப்பிலக்கியவாதியும்கூட. சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்துனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார்.

ஏ.என். சிவராமன்...

ஆம்பூர் நாணுவையர் சிவராமன் என்ற ஏ.என். சிவராமன் (மார்ச் 1, 1904 - மார்ச் 1, 2001), தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆம்பூர் இவரது சொந்த ஊர். இளம் வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொள்ள மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு, டி.எஸ். சொக்கலிங்கம் தலைமையில் ‘காந்தி’ பத்திரிகையில் சேர்ந்தார். 1934-ல் தினமணி இதழ் தொடங்கப்பட்டபோது, சொக்கலிங்கம் ஆசிரியராகவும், ஏ.என். சிவராமன் உதவி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தனர். 1943-ல், தினமணியை விட்டு சொக்கலிங்கம் வெளியேறியபோது, தினமணி ஆசிரியராக ஏ.என். சிவராமன் பொறுப்பேற்றார். அதன்பின், 1987 வரை தொடர்ந்து 44 ஆண்டுகள் தினமணி ஆசிரியராகப் பணியாற்றினார்.

கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் (அகுபா) போன்ற புனைபெயர்களில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். தீவிர காங்கிரஸ்காரர். காமராஜரின் பற்றாளர். மொழிகளைக் கற்பதிலும், புத்தக வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவராமன், தனது 93-வது வயதில் அராபிய மொழியையும் கற்றார். பத்திரிகையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்றவற்றை ஏற்க மறுத்துவிட்டார்.

ஐராவதம் மகாதேவன்...

ஐராவதன் மகாதேவன் (அக்டோபர் 2, 1930), பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர். 1930-ல், திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தவர். 1954 முதல் 1981 வரை இந்திய ஆட்சிப்பணியிலும், 1987 முதல் 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சிந்து எழுத்துகள், பிராமி எழுத்துகள் (குறிப்பாக தமிழ்ப் பிராமி எழுத்துகள்) மீதான ஆர்வம் அவரை கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

கி. கஸ்தூரிரங்கன்...

கி. கஸ்தூரிரங்கன் (ஜனவரி 10, 1933 - மே 4, 2011), தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவியவர். செங்கல்பட்டு அருகே உள்ள களத்தூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர், தில்லியில் ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் நிருபராகப் பணியாற்றினார். கஸ்தூரிரங்கனுக்குப் பிறகு தினமணி நாளிதழின் ஆசிரியராக 1992 வரை பணியாற்றினார். புதுக்கவிதையில் ஆர்வம் கொண்ட இவர், தில்லியில் இருந்தபோது, க.நா. சுப்பிரமணியம், ஆதவன், தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ். ஜெகன்னாதன் போன்றோர் உதவியுடன் கணையாழி இதழைத் தொடங்கினார்.

மாலன்...

மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் (செப்டம்பர் 16, 1950), நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், ஊடகவியலாளர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர். ‘எழுத்து’ இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகுக்கும் அறிமுகம் ஆனவர். கணையாழி ஆசிரியர் குழுவில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் இதழியல் பயின்றவர். திசைகள், சன் நியூஸ் தொலைக்காட்சி, குமுதம், குங்குமம், இந்தியா டுடே (தமிழ்) ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தினமணி ஆசிரியராக 1993 முதல் 1995 வரை பணிபுரிந்துள்ளார். பல முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்.

இராம. திரு. சம்பந்தம்...

இராம. திரு. சம்பந்தம் (இறப்பு - ஆகஸ்ட் 14, 2007), புதுக்கோட்டை மாவட்டம் ‘நெற்குப்பை’ என்ற ஊரில் பிறந்தவர். கல்லூரிக் காலம் தொடங்கி பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தனது வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளியவர். தனது 22-வது வயதில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் சேர்ந்தார். 1960-ல், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அதிபர் ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான ‘இந்தியன் நியூஸ் சர்வீஸில்’ இணைந்து ஓராண்டு பணியாற்றினார். 1961-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் நிருபராகச் சேர்ந்து படிப்படியாக முன்னேறி செய்திப் பிரிவுத் தலைவராக ஆனார். பின்னர், தினமணியில் துணை ஆசிரியராகச் சேர்ந்து, 1995 முதல் 2004-ம் ஆண்டு வரை தினமணி ஆசிரியராக பணியாற்றினார். தினமணி ஆசிரியராக இருந்தபோது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.

கே. வைத்தியநாதன்...

1952-ல் மதுரையில் பிறந்தவரான கே.வைத்யநாதன் பள்ளிப் பருவத்திலேயே இதழியல் துறையில் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்கினார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவராக இருக்கையில் ‘சேதுபதி’ என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி நடத்தினார். அன்றைய பிரபல அரசியல் தலைவர்களான சி.என். அண்ணாதுரை முதல் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், ஈவிகே சம்பத்... ஏன் லோக் நாயக் என்று புகழப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயணன் வரை பலரையும் அப்போதே நேர்காணல் செய்து, தனது சேதுபதி கையெழுத்துப் பத்திரிகையில் வெளியிட்டு மாணவப் பருவத்திலேயே நாடு போற்றும் தலைவர்களது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரானார்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆங்கிலச் சிறுபத்திரிகை உலகில் கரண்ட், எவிடென்ஸ், தி நேரேட்டர், தி வீக் எண்ட் ரெவ்யூ, தி சன் அண்ட் சூர்யா உள்ளிட்ட இதழ்களில் சில காலம் பணியாற்றி விட்டு, மறைந்த எழுத்தாளர் சாவி வாயிலாக தமிழ் இதழியல் துறையில் அடியெடுத்து வைத்தார். சாவி பத்திரிகையின் ஆசிரியரும் பழம்பெரும் எழுத்தாளருமான சாவியின் பட்டறையில் உருவான இன்றைய பிரபல இலக்கியப் பெருந்தகைகளின் வரிசையில் இவருக்கும் சிறப்பான இடமுண்டு. சாவியிலிருந்து விலகிய பின் 1989-ல் துவங்கி சுமார் 18 ஆண்டு காலம் NEWSCRIBE என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் தினமணியில் இவரது பணி 2007-ஆம் ஆண்டில் துவங்கியது. தினமணியில் தனக்கு முன்பிருந்த ஆசிரியர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்தின் பால் பதித்துச் சென்ற முத்திரையைச் சிரமேற்று தன் பாணியில் மேலும் பல சிந்தை கவர், உளங்கவர் மாற்றங்களைச் சேர்த்து இன்று வரை தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்களுள் ஒருவராக நீடித்து வருகிறார். இதழியல் பணிக்காக இவரது கால்படாத இந்திய மாநிலங்கள் இல்லை எனும் வகையில் சலிக்காது பயணங்களில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com