Enable Javscript for better performance
OPERATION BLUE STAR 1984 RIOT!|‘ஆப்பரேசன் புளூ ஸ்டார்’ எனும் இந்தி(ரா)யாவின் துயரக் கதை!- Dinamani

சுடச்சுட

  

  ‘ஆப்பரேசன் புளூ ஸ்டார்’ எனும் இந்தி(ரா)யாவின் துயரக் கதை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 17th September 2018 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  operation_blue_star

   

  இந்திராவின் புளூஸ்டார் நடவடிக்கை என்றால் என்ன?

  புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது ஜூன் 3.6.1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுள் ஒன்று. அமிர்தசரஸ் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  சீக்கியத் தீவிரவாத இயக்கமென கருதப்பட்ட ‘காலிஸ்தான்’ இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதிகள் பெருமளவில் பயங்கரமான ஆயுதங்களை பொற்கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

   ‘இந்தியாவின் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று’

  இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் பீரங்கி டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, பொது மக்களாலும், மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ‘இந்தியா டுடே’ பத்திரிகை "புளூஸ்டார் நடவடிக்கையை" இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசின் முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருத்து தெரிவித்தது.

  அரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கையை 1500 வரை இருக்குமென கூறுகின்றன.

  சர்வதேச அளவில் சீக்கியரிடையே கிளர்ச்சியை ஏற்படுத்திய நடவடிக்கை!

  இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர்கள் தமது பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர்.

  இந்திராவின் உயிரைப் பறிக்க காரணமான ஆப்பரேசன் புளூஸ்டார்!

  ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெயக்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், "இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்", என்று இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய எதிர்ப்புக் கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.

  பிரிட்டனின் பங்கு...

  பிரிட்டனின் அரச ஆவணங்கள் 30 வருடங்களின் பின்னர் பொதுவில் வைக்கப்படும் வழக்கம் அந்நாட்டில் பின்பற்றப்படுகிறது. அதன்படி அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் அரசிடம் இந்தியா உதவி கேட்டதாகவும், அதற்கு மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டன் அரசு இராணுவத் திட்டத்தை அமைக்க சிறப்பு வான்சேவை பிரிவைச் சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரியை அனுப்பி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் சர்வதேச அளவில் கசிந்ததைத் தொடர்ந்து பிரிட்டன் பொற்கோவில் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்டது. ஆயினும் தங்கள் அறிவுரையில் இருந்து தாக்குதல் நடவடிக்கை மாறுபட்டிருந்ததாக பிரிட்டன் தெரிவித்தது.

  குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அளித்த விளக்கம்...

  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோவில் மீது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலுக்கு தாங்கள் ஆலோசனை வழங்கியதை பிரிட்டன் ஒப்புக்கொண்டாலும், அந்தப் பங்கு என்பது பொற்கோயில் மீதான நடவடிக்கை இடம்பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆலோசனை வடிவத்திலேயே இருந்தது என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  1984 ஆம் ஆண்டில் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்கவோ அல்லது உடலாக மீட்கவோ இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கையில் பிரிட்டனுக்கும் பங்கிருந்தது என்ற தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதையடுத்து பிரிட்டன் ஒரு விசாரணையை நடத்தியது. அதில் ஆலோசனை எனும் மட்டத்திலேயே, இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில் உதவிகள் வழங்கப்பட்டன என்று தெரியவந்துள்ளது.

  சீக்கியர்களின் அதி புனிதத் தலமாக பொற்கோவில் கருதப்படுகிறது.

  பொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற அந்த ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.

  எனினும் பிரிட்டன் அந்த நடவடிக்கைக்கு எந்த உபகரணங்களோ அல்லது பயிற்சியோ வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரிட்டன் ஆலோசனை வழங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு இடம்பெற்ற அந்தத் தாக்குதல் நடவடிக்கை, தமது ஆலோசனையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது என்றும் வில்லியம் ஹேக் கூறுகிறார்.

  ஆனால் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ராணுவ ஆலோசனையும் பிரிட்டன் தரப்பிலிருந்து கிடைக்கப்பெறவில்லை என்று கூறியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

  இந்திராவின் இந்த அரசியல் நடவடிக்கை வெற்றியில் முடிந்ததா?!

  பிரிவினைவாத சீக்கியத் தீவிரவாதிகளைக் களையெடுப்பதற்காக இந்தியப் பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர் என்பது வரலாறு. ஆயினும் இந்திராகாந்தி அரசின் இந்த நடவடிக்கை வெற்றியில் முடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடும் விமர்சனங்களைத் தூண்டி ஓய்ந்த இந்த ப்ளூ ஸ்டார் நடவடிக்கை நடத்தி முடிக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்திரா காந்தியின் உயிர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானது. அவரை அவரது மெய்க்காவல் படை வீரர்களான சீக்கியர்களே சுட்டுக்கொன்றனர்.

  அதையடுத்து வட இந்தியாவில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இனக்கலவரமும் கூட இந்திய வரலாற்றின் இருண்மைப் பக்கங்களில் பதியப்பட்டு சீக்கியர்களால் இன்றளவும் கடும் வஞ்சினமாக மாறிப்போனவையே என்றால் மிகையில்லை.

  இந்த ஆப்பரேசன் புளூ ஸ்டாரின் பின் இப்படியோர் துயர் மிகுந்த கதை இருப்பதை வருங்காலத் தலைமுறை அறிய வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai