Enable Javscript for better performance
The story of aRusuvai arasu natarajan!|அறுசுவை அரசு நடராஜனின் கதை!- Dinamani

சுடச்சுட

  

  ‘அறுசுவை அரசு’ நடராஜனின் சமையல் சாம்ராஜ்யக் கதை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 19th September 2018 02:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Arusuvai-Praying-to-Periyava

   

  அறுசுவை அரசு என்று போற்றப்பட்ட நடராஜ ஐயர், தமது 92 வது வயதில் சென்னையில் அவரது இல்லத்தில் உடல்நலக் குறைபாட்டால் காலமானார். ஓய்வின்றி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பதார்த்தங்களை ஆயிரக்கணக்கான திருமண விழாக்களில் சமைத்துத் தள்ளிக் கொண்டிருந்த அவரது அன்னக்கரண்டியும், ஜல்லிக் கரண்டியும் திங்கள் முதல் அவரது கைகளில் இருந்து அவரது அடுத்த தலைமுறையின் கைகளுக்கு இடம் மாறியிருக்கிறது. ஆம், அறுசுவை அரசு மறைந்ததால் அவரது கிரீடத்திற்கு வாரிசற்றுப் போய் விடவில்லை. தனது மகன் மற்றும் மகள்களை சமையல் சாம்ராஜ்யப் பிரதிநிதிகளாக நமக்காக விட்டுச் சென்றுள்ளார் அந்த சமையல் வேந்தர். நடராஜ ஐயர் பிறந்தது சமையலையே குலத் தொழிலாகவும், அன்ன தானச் சேவையாகவும் கருதி வாழ்ந்து வந்ததொரு குடும்பத்தில் தான். தமது 7 வயதிலேயே ஓர் மெச்சும் சமையற்காரனாகி விட்டார் நடராஜ ஐயர். 7 வயதில் தனது தாத்தாவுடன் இணைந்து கும்பகோணம் சங்கர மடத்துக்குச் சமைக்கச் சென்று விட்டார் அங்கே தாத்தாவுக்கு உதவியாளராகத் தங்கி நடராஜன் சமையல் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியேறிய பின் திருச்சி மாடர்ன் ஹோட்டல், அம்பி ஐயர் ஹோட்டல் மற்றும் ஆதிக்குடி ஹோட்டல் என வெவ்வேறு கோட்டல்களில் சில காலம் தமது பொருளாதாரத் தேவைகளுக்காக பரிசாரகர் (சர்வர்) வேலை பார்த்து வந்தார்.
  இப்படித் தொடர்ந்து கொண்டிருந்த நடராஜனின் சமையல் சாம்ராஜ்யப் பயணம் 1952 ஆம் ஆண்டில் சென்னையை மையம் கொண்டது. சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் எம் ஐ டி ஹாஸ்டலில் சமையல்காரராகச் சேர்ந்தார் நடராஜ ஐயர். பிரசித்தி பெற்ற சென்னை பாண்டி பஜார் கீதா கஃபேக்கு ஜெயராம் ஐயர், நடராஜ ஐயரைத் தருவிப்பதற்கு முன்பு வரை அறுசுவை அரசு எம் ஐ டி ஹாஸ்டலில் தான் சமைத்துக் கொண்டிருந்தார்.

  கீதா கஃபேயில் இருக்கும் போது முதன் முறையாக 1956 ஆண்டில் சம்ப மூர்த்தி ஐயர் வாயிலாகத் தான் திருமண விழாக்களுக்கு சமைக்கும் வாய்ப்பு நடராஜ ஐயருக்குக் கிடைக்கிறது.

  இவருக்கு ‘அறுசுவை அரசு’ என்ற பட்டப் பெயர் கிடைத்ததற்குக் காரணவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான வி வி கிரி. அறுசுவை அரசு என்றால் சமையலின் மொத்த ருசியையும் தீர்மானிக்கக் கூடிய இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம், மற்றும் கசப்பு உள்ளிட்ட ஆறுசுவைகளும் ஒரு விருந்தில் பூரணமாக இருப்பதைக் குறிக்கும். அந்த பூரணத்துவம் நடராஜ ஐயரின்  ரெஸிப்பிகளில் இருந்ததால் அவருக்கு வி வி கிரி ‘அறுசுவை அரசு ‘எனப் பட்டப்பெயரை வழங்கினார்.

  தமது கைகளில் அன்னக்கரண்டியும், ஜல்லிக்கரண்டியும் பிடிக்கத் தொடங்கிய நாள் முதல் மரணம் வரையிலும் இடைவிடாது சமைத்துக் கொண்டிருந்த நடராஜ ஐயர் இதுவரை சுமார் 75,000 திருமண விழாக்களுக்கு குறைவின்றி சமைத்துத் தள்ளியிருக்கிறார். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ஆர். வெங்கட் ராமன் மற்றும் அப்துல் கலாம் போன்றோரது பதவிக் காலத்தில் அவர் தம் மனதுக்குகந்த தலைமைச் சமையற்காரராகவும் நடராஜ ஐயர் இருந்திருக்கிறார்.

  எப்பேர்ப்பட்ட சமையல் வித்தகராக இருந்த போதும் தனக்கும் கர்வபங்கம் ஏற்பட்டு சமையலில் கர்வம் கூடாது எனும் பாடம் கற்றுக் கொள்ள ஒரு  அயனான சம்பவம் அமைந்ததாக தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் நடராஜன்.

  அந்தச் சம்பவம் குறித்து அவரது மொழியில்...

  திருவனந்த புரத்துல ஆர்.ஜிக்கு சொந்தக்கார ஆத்துல கல்யாணம். அவர் கூப்ட்டார், கோபாலகிருஷ்ணன்... நடராஜா, நான் ரிசப்ஷன் வச்சிருக்கேன், நீ அங்க வந்து உங்கையால சாம்பார் வச்சு இந்த கேபேஜ் கறி வச்சுக் கொடுத்துடு’ அப்டினுட்டார். என்னய்யா இது? அதான் கர்வம்... இதென்ன பெரிய சாம்பார், ரசம், பொரியல் பண்றதுக்கு என்னக் கூப்டறாளே அப்டீங்கற கர்வத்துல அங்க போனோம். போய்ப் படுத்தா காலம்பற எழுந்தோடனே ஸ்நானம் பண்ணிட்டு வான்னாங்க, ஸ்நானம் பண்ணிட்டு வந்தேன். கோயில்ல போய் தரிசனம் பண்ணிட்டு வான்னாங்க, பண்ணிட்டு வந்தோம். ஆத்துல வந்தோம். காப்பி சாப்பிட்டோம். 

  உடனே அவரு, நடராஜன்... போய்க்கொள், பாயசம் கூட்றானாக்கும், போ, அப்டீன்னார். நான் சிரிச்சுண்டேன்... என்னடாது சாயந்திரம் ஆறு மணிக்கு டின்னர், பாயசம் கூட்டறான் இப்பவே போய்க்கொள்ங்கிறாரே.. என்னடாது?! அப்படீன்னு எம்மனசுல ஒரு கர்வம். சரி போய்ப் பார்ப்பமே, உள்ள படியே நான் போய் நின்னேன். உள்ள ஒரு வயசான பெரியவர் பெரிய உருளியில பாயசம் கிளறிண்டே இருக்கார். காலைல 7 மணிக்கு ஆரம்பிச்சார்... சாயந்திரம் 4 1/2 மணி வரைக்கும் பாயசம் கிளறிண்டே இருக்கார். நானும் நகரல... யூரின் போகக் கூட நகரல. அங்கயே நின்னுண்டு இருக்கேன். அந்தப் பாயசம் கூட்டி, அது நிறைவடைஞ்சு அவர் மேல ஸ்டூல்ல இருந்து கீழ இறங்கி, குளிச்சுட்டு வந்து ஒரு துளசி இலையைக் கிள்ளி அந்தப் பாயசத்துல போட்டு ‘குருவாயூரப்பான்னு’ நமஸ்காரம் பண்ணிட்டு, ‘குழந்தே, பாயசம் கூட்னதப் பாத்தியோ?’ அப்டீன்னார். கொஞ்சம் போல பாயசம் எடுத்து எங்கிட்ட கொடுத்தார். நான் சாப்பிட்டுட்டு அப்டியே அவர் கால்ல போய் விழுந்தேன். என் கண்ணு ரெண்டும் அவர் கால்ல இருக்கு. கண்ல இருந்து ஜலம் அவர் காலை நனைச்சிருக்கு. அன்னையோட என் கர்வத்தை ஒழிச்சிட்டேன். இனிமேல்பட சமையல்ல போய் கர்வம் வைக்கப்படாது. கர்வம் வச்சா நாம வாழ மாட்டோம். அப்டீன்னு ஒரே தீர்மானம்.'

  - என்றார் அறுசுவை அரசு.

  தனது 90 வது வயது வரையிலும் கூட திருமண சமையல் காண்ட்ராக்டுகள் எடுத்த இடங்களில் தான் கட்டமைத்த சமையல் சாம்ராஜ்யத்துக்குள் தீடிரென்று நுழைந்து பதார்த்தங்களை ருசிப்பதும், சோதிப்பதும், அதில் கரெக்‌ஷன் சொல்வதுமாக படு பிஸியான சமையல்காரராகவே நடராஜ ஐயர் வாழ்ந்து வந்திருக்கிறார்.

  ‘அறுசுவை அரசு கேட்டரர்ஸ்’ என்ற பெயரில் அவர் துவக்கிய கேட்டரிங் யூனிட் இன்று அவரது 3 மகன்கள் மற்றும் 5 மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளால் சிறப்புற நடத்த்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இவர்களது மெனுக்களில் சுத்தமான சைவ உணவுகளும் பாரம்பரிய உணவுகளும் தாண்டி வட இந்திய உணவுகள், மெக்ஸிகன் வகை உணவுகள் மற்றும் இத்தாலியன் உணவுகளும் கூட இடம்பிடிக்கின்றன.

  அறுசுவை அரசின் வாழ்வில் மேலுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஊர் , உலகத்துக்கெல்லாம் விதம் விதமாக சமைத்துப் போட்டு சந்தோஷப் பட வைத்துக் கொண்டிருந்த நடராஜ ஐயருக்கு ரொம்பப் பிடித்த டிஷ் எது தெரியுமா? அவரது இல்லத்தரசி வைக்கும் வத்தக்குழம்பும், துவையலும் தானாம். எப்போது இரவில் தாமதமாக வந்தாலும் சரி, அல்லது அவசரமாக எங்காவது சமையல் வேலைக்காக கிளம்ப வேண்டுமானாலும் சரி உடனடியாக அறுசுவை அரசரின் மனைவி அவருக்கு செய்து பொடுவது இந்த எளிமையான சமையலைத்தானாம். அதுவே அவருக்கு இஷ்டம் என்கிறார் அறுசுவை.

  அவரது இழப்பு சமையல் சாம்ராஜ்யத்திற்கும், விதம் விதமாக ருசிக்கும் ஆர்வமுடையவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பென்றால் அது மெய்!

  Image Courtesy: periyava puranam website

  Interview courtesy: News 7

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai