கலைஞர் கருணாநிதி... கரிகால சோழனின் புனர் ஜென்மம்: மாதா அன்னபூரணி ஆருடம்!

இவர் பின்பற்றும் திகம்பரக் கொள்கையால் இவரைப் பற்றிய யூ டியூப் நேர்காணல் விடியோ கூகுள் ட்ரெண்டிங்கில் தமிழ்நாட்டு அளவில் 11 வது இடத்தில் இருக்கிறது.
கலைஞர் கருணாநிதி... கரிகால சோழனின் புனர் ஜென்மம்: மாதா அன்னபூரணி ஆருடம்!

செங்கல்பட்டுக்கு அருகிலிருக்கும் சின்னாளம்பாடி கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஸ்ரீசத்குரு சதாசிவ பிரம்மேந்திரா பிரம்மபீடம் இயங்கி வருகிறது. அங்கிருக்கும் பெண் சாமியாரின் பெயர் மாதா அன்னபூரணி. அவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார். பாலா திரிபுர சுந்தரியின் தீவிர உபாசகியான இந்தப் பெண் சாமியார் தன்னை வேதம் சொல்லும் தீட்சிதர் குடும்பத்தில் பிறந்தவராக அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவர் பின்பற்றுவதெல்லாம் திகம்பர சாமியார்களுக்கான நடைமுறைகளைத் தான் என்கிறார். சூட்சுமத்தில் இவருடைய குரு இவருக்கு வைத்த பெயர் ஸ்ரீசத்குரு மாதா அன்னபூரணி என்கிறார் இவர். சென்னையில் பிறந்தவரான இவர் பிறந்த அடுத்த நாளே தனது குருவின் சூட்சும அழைப்பில் திருவண்ணாமலை சென்றதாகக் குறிப்பிடுகிறார். இவருடைய தாத்தாவின் பெயர் ராமநாத தீட்சிதர்... எனவே தாம் வேதம் சொல்லும் குடும்பத்தில் பிறந்து குருவின் குரலைக் கேட்டதும் சந்நியாசியாக மாறியதாகக் கூறுகிறார். அதெப்படி குரு அழைத்ததும் கணவர், இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண் சந்நியாசியாக முடியும் என்ற கேள்விக்கு... எந்த ஒரு ஜாதகருக்கு வாழ்வின் ஒரு பகுதியில் சந்நியாசம் வாங்கியே தீர வேண்டும் என்ற சந்நியாச யோகம் இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் தன்னைப் போல இகபர வாழ்வின் சுகங்கள் அனைத்தையும் துறந்து குருவின் குரல் கேட்ட மாத்திரத்தில் சந்நியாசம் பெற முடியும் என்றும் அன்னபூரணி குறிப்பிடுகிறார். தான் சந்நியாசியான இந்த 20 வருடங்களில் தன் குடும்பத்தார் தன்னை வந்து பார்க்க தான் அனுமதித்ததில்லை என்றும் சந்நியாசம் என்பது பந்தங்களுக்கு அப்பாற்பட்டதென்றும் அவர் கூறுகிறார்.

நமது இந்தியாவில் சந்நியாசிகளுக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை.

அந்த வரிசையில் இவரும் ஒருவர் என்று நினைக்கலாம்.

ஆனால், இவர் பின்பற்றும் திகம்பரக் கொள்கையால் இவரைப் பற்றிய யூ டியூப் நேர்காணல் விடியோ கூகுள் ட்ரெண்டிங்கில் தமிழ்நாட்டு அளவில் 11 வது இடத்தில் இருக்கிறது.

அதைக் காட்டிலும் ஆச்சர்யமான விஷயம் மறைந்த தமிழக முதல்வர்களான கலைஞர் கருணாநிதி குறித்தும், ஜெயலலிதா குறித்தும் இவர் அந்த நேர்காணலில் வெளியிட்ட கருத்துகள்.

மறுஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவரான இந்தப் பெண் சாமியார். கலைஞர் கருணாநிதி... கரிகால சோழனின் புனர் ஜென்மம் என்கிறார். அது மட்டுமல்ல ஜெயலலிதா வைணவ குருவான ராமானுஜரின் சீடர்களில் ஒருவராக இருந்தவரது மறுபிறவி என்றும் குறிப்பிட்டுள்ளது நம்மை ஆச்சர்யத்துடன் புருவம் உயர்த்த வைப்பதாக இருக்கிறது.

மேற்கண்ட கருத்துகள் மட்டுமல்லாது, வரும் ஆண்டுகளில் சென்னைக்கு சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாகவும், அதற்கு ஏற்றவாறு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றெல்லாம் தங்களது குருவான சித்தர்களால் தகவல்கள் சூக்கும நிலையில் தங்களுக்கு கடத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார். இந்த உலகமே கடலால் தான் அழியப் போகிறது என்றும் பீதி கிளப்புகிறார் இந்தப் பெண் சாமியார்.

இவர் சொல்வதெல்லாம் நம்புபடியாக இல்லை என்ற போதும் இவரை நம்பக்கூடியவர்களும் பெருமளவில் இருக்கிறார்கள் என்பதற்கு தனியார் தொலைக்காட்சியினர் இவரைத் தேடிச் சென்று நேர்காணல் செய்து வெளியிட்டமையே சிறந்த உதாரணம்.

தமிழ்நாட்டில் எத்தனை பெரியார்கள் பிறந்து வரினும் இப்படியான சுயம்பு சாமியார்களையும், சாமியாரிணிகளையும் அசைக்க முடியாது என்பதும் கண்கூடு.

தமிழ்நாட்டில் மட்டுமில்லை மொத்த இந்தியாவிலுமே சாமியார்களுக்கான டிமாண்ட் எப்போதும் தீருவதே இல்லை என்பதால் இவர்கள் மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

Content courtesy: sun tv neruku ner interview!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com