சிம்டாங்காரன் ரசிகர்களே! உங்களுக்கு உடுமலை நாராயண கவியைத் தெரியுமா?
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 25th September 2018 04:10 PM | Last Updated : 25th September 2018 04:10 PM | அ+அ அ- |

‘உடுமலை நாராயண கவி’ க்கு இன்று பிறந்தநாள்.
உடுமலைப் பேட்டை, பூளவாடியில் பிறந்த நாராயணசாமி பின்னாட்களில் தமிழ்த்திரையுலகின் ‘கவிராயர் நாராயணகவி’ யாக எண்ணற்ற பாடல்களை எழுதிக் குவித்தார். இளமையில் வறுமையில் உழன்று ஒவ்வொரு வாழ்வில் அடுத்து எடுத்து வைக்கவிருக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் சகோதரரை நம்பி வாழ்ந்த ஒரு இளைஞர் ஆரம்பத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக செய்தது தீப்பெட்டி வியாபாரம். அதில் அவருக்குக் கிடைத்தது நாளொன்றுக்கு 25 பைசா வருமானம். வீட்டில் வசதியற்ற காரணத்தால் நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பிற்கு முழுக்குப் போட்ட நாராயண கவி எழுதிக் குவித்தார் 650 க்கும் மேற்பட்ட கருத்துச் செறிவு மிகுந்த பாடல்களை.
நாராயணசாமியால் பள்ளிப் படிப்பைத் தான் தொடர முடியாமல் போனதே தவிர கிராமியக் கலைகளில் அவருக்கு ஆர்வம் அதிகம். கொங்கு மண்ணின் பாரம்பர்யக் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு ஊரில் நடக்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவின் ராமாயண நாடகத்தில் லக்குவன் வேடம் தரித்து நடிப்பார். அப்படியோர் சமயத்தில் தான் மதுரை சங்கர தாஸ் சுவாமிகளின் ஆப்த நண்பராக இருந்த சரபம் முத்துச்சாமிக் கவிராயரின் பார்வையில் நாராயணசாமி விழுந்தார். அன்று நாராயணசாமிக்கு வயது 12. அன்று முதல் முத்துச்சாமிக் கவிராயருடன் தொடங்கிய நாராயணசாமியின் கலைப்பயணம் அவரது 25 ஆம் வயது வரை நீடித்தது. முத்துச்சாமி கவிராயர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் இணைந்து சென்று நாடகம் நடிப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என நாடகத் தொழிலின் அத்தனை நுட்பங்களையும் கற்றார்.
25 ஆம் வயதில் சொந்த ஊர் திரும்பிய நாராயணசாமி அங்கு ஒரு கதர்க்கடை துவங்கினார். அப்போது நாடு முழுவதும் சுதந்திர வேள்வித்தீ கொழுந்து விட்டுப் பற்றியெரிந்து கொண்டிருந்தது. நாராயணசாமி தமக்கே தமக்கான புரட்சிக்கனல் மிகுந்த விடுதலைக் கவிதைகளை இயற்றி அதை ஊர் ஊராகச் சென்று பாடி கதர்த்துணிகளை விற்றார். அச்சமயத்தில் அவருக்கும் பேச்சியம்மாளுக்கும் திருமணமும் ஆனது. தம்பதியினருக்கு நான்கு ஆண்மக்களும் பிறந்தனர். இச்சூழ்நிலையில் கதர்க்கடையில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டார் கவி. தனது திறமையைக் கொண்டு சம்பாதித்து எப்படியாவது கடனை எல்லாம் திருப்பிச் செலுத்தும் வரை ஊர் மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று சூளுரைத்த நாராயணகவி கையில் வெறும் 100 ரூபாயுடன் மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் ஐயம் திரிபர யாப்பிலக்கணம் முழுதும் கற்றுத் தேர்ந்த கவி மதுரையில் பற்பல நாடக சபைகளில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். நாராயண கவியின் பாடல்கள் மற்றும் நாடக வசனங்களில் தேச பக்தி சுடர் விட்டுப் பிரகாசித்தது.
கடனை அடைக்காமல் ஊர் மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்ற சபதத்தை, பின்னாட்களில் திரைப்படங்களில் பாட்டு எழுதத் தொடங்கி, கிராம போன் ரெக்கார்டுகளை வெளியிட்டுப் பொருளீட்டி அவற்றைக் கொண்டு ஊர் எல்லைக்கு வெளியில் நின்று கொண்டு கடனைச் செலுத்தி விட்டு பிறகே ஊருக்குள் கால் வைத்து தம் கடனை முடித்தார் உடுமலையார். அவரது வைராக்யம் அந்த அளவுக்கு செல்லுபடியாகக் காரணம் தாம் கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த பிடிப்பு.
மதுரையில் இருந்த போது தான் டி.கே.எஸ் நாடகக் குழுவினர் மூலமாக கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனுடன், உடுமலை நாராயண கவிக்கு பரிச்சயம் ஏற்பட்டது. கலைவாணரது தொடர்பால் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணாதுரை, கலைஞர் போன்றோரது நட்பும் பாவேந்தர் பாரதிதாசனின் அணுக்கமும் நாராயண கவிக்குக் கிட்டியது.
தம் காலத்தில் சிறந்த விளங்கிய மற்றொரு பாடலாசிரியரான பாபநாசம் சிவனைக் காட்டிலும் அதிக அளவில் பாடல்களை எழுதிக் குவித்த பெருமை நாராயணகவிக்கு உண்டு. நாராயண கவி எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.
‘கா…கா…கா…சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க -
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க.
உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க…’ (பராசக்தி திரைப்படப்பாடல்)
‘அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ...
யாருமில்லா வேலையிலே இந்த வெட்கம் ஏனோ?...’ (காவேரி திரைப்படப் பாடல்)
‘தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே. (1952 ல் வெளிவந்த பராசக்தி திரைப்படப் பாடல்)’
‘சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலே நீ தனியாய்ச் செல்லலாமா?’
‘ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், கொண்டாட்டம்!
தேதி ஒன்னுல இருந்து சம்பளத் தேதி
ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், கொண்டாட்டம்
இருபத்தொன்னுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்...
திண்டாட்டம் திண்டாட்டம்’
‘ என்று தான் திருந்துவதோ நன்றி கெட்ட ஆடவர் உலகம்...’
‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கனும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கனும்’ (விவசாயி திரைப்படப் பாடல்)
‘இன்னைக்கு காலையிலெழுந்திருச்சு கஞ்சித்தண்ணி இல்லாமே கஷ்டப்படுகுறேனே கடவுளே!
கொஞ்சம் கண்ணத் தொறந்து பாரேன் கடவுளே!
என்ன இப்பொறப்பு பொறக்க வச்சியே கடவுளே!’
‘மாலையிட்ட மங்கை யாரோ, என்ன பேரோ அந்த மானினியாள் எந்த ஊரோ!
உங்கள் மனம் நாடிய சுகமே தரும் அதி மேவிய வனிதாமணி’
‘கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி’
விடுதலை விடுதலை விடுதலை
அடிமை ஏழை என எவருமில்லை இனி விடுதலை!’
‘அன்பே கடவுளென்பது எதனாலே...
அதில் ஆன்மசக்தி இன்பம் இருப்பதாலே
சாத்திரங்கள் பொய்யென்பது எதனாலே...
ஏமாற்றுகிற வார்த்தைகளும் இருப்பதாலே
ஜாதி மதம் இல்லையென்பது எதனாலே
மனம் சமத்துவம் கொள்வதென்பது அதனாலே!
நாடு செழிக்க வேண்டும்
ஆமடி தங்கம்
நாகரீகம் ஆக வேண்டும்
ஆமடி தங்கம்
பாடிபட்டு வாழ வேண்டும்
ஆமடி தங்கம்
பசியாற உண்ண வேண்டும்
ஆமடி தங்கம்’
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது (இரத்தக் கண்ணீர் திரைப்படப் பாடல்)
இவையெல்லாம் உடுமலை நாராயண கவியின் பாடல்கள் தாம். அவரது சிறந்த 40 பாடல்களின் திரட்டு யூடியூபில் கிடைக்கிறது. அதற்கான காணொளி இணைப்பு இதோ...
முதன்முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அனைத்துப் பாடல்களிலும் ஏதோ ஒரு சமூகப் பங்களிப்பு இருக்கிறது. வெற்று வார்த்தைகளின் குட்டைகளாக அவரது எந்தப் பாடல்களுமே இல்லை என்பது தான் உடுமலை நாராயணகவி பாடல்களின் தனிச்சிறப்பு.
நாராயண கவி தனது பாடல்களில் கிராமிய மணத்தை மட்டும் கொண்டு எழுதவில்லை தீவிரமான அரசியல் விமரிசனங்களைக்கூட போகிற போக்கில் கேட்பவர் மனதில் ஆழப் பதிகிற அளவில் நறுக்கென்று நெருஞ்சி முள் குத்தினாற் போல புகுத்தி எழுதினார். அவரது பாடல்கள் அனைத்திலும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சாமானிய மக்களுக்கும் சேர்த்து ஆயிரமாயிரம் படிப்பினைகள் இருந்தன. அதனால் தான் அவரது பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
இன்றைப் போல ஒரு படத்திற்கு 7 அல்லது 8 பாடல்கள் மட்டுமே கொண்டவை அல்ல அந்தக்கால திரைப்படங்கள். 1934 ஆம் ஆண்டில் இந்தியாவில் பேசும் படங்கள் வரத் தொடங்கின. அப்போதெல்லாம் திரைப்படங்களில் பாடல்களே அதிகம் இருந்த காலகட்டம் அது. ஒரு திரைப்படத்தில் சுமார் 30 முதல் 50 பாடல்கள் வரையிலும் கூட இடம்பெறக் கூடும். அத்தனை திரைப்படங்களையும் ஒருவரே கூட எழுதுவார். அப்படிப்பட்ட திரைப்படப் பாடலாசியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் நாராயண கவி.
கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் கைவண்ணமான வேலைக்காரி, ஓர் இரவு முதல கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா முதற்கொண்டு ஆதிபராசக்தி, தேவதாஸ், தெய்வப்பிறவி வரை பல்வேறு விதமான திரைப்படங்களுக்கு உடுமலை நாராயணகவி பாடல்கள் எழுதியுள்ளார். அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் இன்றைய காலகட்டத்துக்கும் ஏற்றவை போன்றதான சமூகக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றன. அவருடைய பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி நினைவு கூர்வது ஒன்றே நாராயண கவிக்கு நாம் செய்யக் கூடிய மிகச்சிறந்த மரியாதையாக இருக்கக் கூடும்.