ஆய கலைகள் 64... என்னென்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

பண்டைய கால மன்னர்கள் பற்றி பெருமையாகக் கூற வேண்டும் என்றால் ஆய கலைகள் 64 ஐயும் பயின்றவர் என்று கூறுவார்கள். 
ஆய கலைகள் 64... என்னென்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Published on
Updated on
2 min read

ஆதிகாலத்தில் வாழ்ந்த மூத்த தமிழர்கள் கண்டறிந்த கலைகள் தான் ஆய கலைகள் அறுபத்து நான்கு. பரம்பரை, பரம்பரையாக இதை பயிற்றுவித்து, வாழ்வியலோடு கலந்து வாழ செய்தவர்கள் இவர்கள். 

பலருக்கும் ஆய கலைகள் அறுபத்துநான்கு என்று மட்டும் தெரியுமே தவிர, அவைகள் என்னென்ன கலைகள், அவற்றுக்குரிய பொருள் என்ன என்று தெரியாது. இங்கு நாம் ஆய கலைகள் எனக் கூறப்படும் அறுபத்துநான்கு கலைகள் பற்றியும், அவற்றின் பொருள் மற்றும் விளக்கம் பற்றியும் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
 
ஆய கலைகள்...

ஆயம் என்றால் மன்றம், கூடம் என்ற பொருளுண்டு. கலைகளை வளர்க்க மன்றம் வைத்திருந்தனரோ என தோன்றுகிறது. பண்டைய கால மன்னர்கள் பற்றி பெருமையாகக் கூற வேண்டும் என்றால் ஆய கலைகள் 64 ஐயும் பயின்றவர் என்று கூறுவார்கள். 

கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான,

‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என" உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்"
என்று கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார்.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில்,
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை வான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே..’

எட்டெட்டு கலைகள், அதாவது அறுபத்து நான்கு கலைகள் என்று குறிக்கின்றார். முத்தமிழின் ஒரு பிரிவான இயற்றமிழின் வழி ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும்.

அந்த அறுபத்துநான்கு கலைகளின் பட்டியலை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 
1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)..

தமிழக பாரம்பரிய இசை, கலைகள், கவின் கலைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால், தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம் (Tamil Nadu Music and Fine Arts University), 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும்

இதில் இசை, பாட்டு, வீணை, பரதநாட்டியம், நாதஸ்வரம், வயலின், பெயின்டிங், விசுவல் கம்யூனிகேஷன் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது. பகுதிநேரம், குறுகிய காலம், பட்டயம், இளநிலை பட்டம், முதுநிலை பட்ட படிப்புகள் வழங்கப்படுகிறது.

இப்பல்கலைக்கழகம் ஆய கலைகளுக்கு தனி இருக்கைகள் அமைத்து,  ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது தமிழர்ஞர்களின் நெடுநாளைய அவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com