1800 களில் சென்னப்பட்டிணம் மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை!

வங்கக் கடல் பகுதியில் சிறிய மணல்திட்டாக இருந்த சில கிராமங்களை ஒன்றிணைத்து சென்னப்பட்டிணம் உருவான போது அதற்கு குறிப்பிடத்தக்க பெயர்கள் இல்லாமல் மேட்டில் இருந்த நகரம் எனும் பொருள் கொள்ளும்படியாக ‘மேடு 
1800 களில் சென்னப்பட்டிணம் மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை!

சென்னப்பட்டிணம் உருவான கதை...

சிங்காரச் சென்னைக்கு இன்று வயது 380. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கென்று ஒரு நீண்ட தனித்துவமான வரலாறு உண்டு.  கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதலே பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் மிக முக்கியமான வியாபார கேந்திர மையமாகவும், ஆட்சி அதிகார மையமாகவும் விளங்கியிருப்பதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. அயல்நாட்டு வர்த்தகர்களின் வருகைக்கும் மத போதகர்களின் வருகைக்கும் சென்னைக் கடற்கரை ஒரு முக்கியமான கேந்திரமாக விளங்கியிருக்கிறது.

சென்னப்பட்டிணம் பெயர்க்காரணம்...

சென்னை முதலில் சென்னப்பட்டிணம் என்ற சிறிய கிராமமாக இருந்து வந்தது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22 ஆம் நாள் அந்தக் கிராமம் சென்னப்பட்டிணமாக முதல்முறை உதயமானது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோஹன் ஆகியோர் தங்களது வியாபார உதவியாளரான பெரிதிம்மப்பா மூலமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளடக்கிய கடலோர மீனவக் கிராமங்களை விலைக்கு வாங்கினர். அந்த இடத்தை தங்களுக்கு விற்ற ஐயப்பன், வேங்கடப்பன் என்போரது தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரது நினைவாக கோட்டைக்கு வடக்கே இருந்த ஊர் சென்னப்பட்டிணம் என்று அப்போது அழைக்கப்பட்டது. சென்னையின் பெயர்க்காரணத்திற்கு மற்றொரு கதையும் உண்டு. சென்னையில் தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்திருக்கிறது. அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் மருவியதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்ததின் பின்பு தான் அதையொட்டிய கிராமங்கள் அனைத்தும் வியாபார நிமித்தமாக ஒன்றுடன் ஒன்று இணைந்தும், இணைக்கப்பட்டும் இன்றைய பெருநகரச் சென்னையின் தோற்றம் அன்றே சிறிது சிறிதாகப் புலனாகத் தொடங்கியது.

சென்னப்பட்டிணம் எனும் கிராமம் நகர அந்தஸ்து பெற்ற காலம்... 

சென்னை, என்ற இன்றைய மாநகரத்தின் தோற்றம் இப்படி உருவானது தானென்றாலும்... சென்னப்பட்டிணத்தை ஒட்டியிருந்த அப்போதைய  பேரூர் அமைப்புகளான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருவான்மியூர், போன்ற இடங்கள் சென்னப்பட்டிணத்தைக் காட்டிலும் மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவையாக இருந்தன. சென்னையிலுள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கிபி 52 முதல் 70 வரை கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதற்கான சரித்திரச் சான்றுகளும் சுட்டப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் 1522 ஆம் ஆண்டு ‘சாந்தோம்’ என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவியிருந்தனர். பின்பு 1612 ஆம் ஆண்டில் சாந்தோம் பகுதி டச்சுக்காரர்களுக்குக் கைமாறியது. 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோஹன் உள்ளிட்டோரால் ஆங்கிலேயருக்கான குடியிருப்பாக சாந்தோம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ஓராண்டுக்குப் பின் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அடுத்தடுத்து பெருமளவில் வளர்ச்சி கண்டன. சென்னப்பட்டிணத்தை ஒட்டியிருந்த கிராமப்புறப் பகுதிகளான திருவல்லிக்கேணி, எழும்பூர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னப்பட்டிணத்துடன் இணைந்தன. 1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் செயிண்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போர்த்துகீசியர் வசம் வந்தது. தற்போதையை சென்னைக்கு வடக்கே 1612 ஆம் ஆண்டில் புலிக்காடு என்ற பகுதியில் போர்த்துகீசியர்களின் குடியிருப்புகள் உருவாகின. 1688 ஆம் ஆண்டில் சென்னை முதல்நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமை சென்னைக்கு வந்தது.

கிளைவின் போர்ப்பாசறையாக சென்னப்பட்டிணம்...

பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவத் தளபதியான ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக சென்னையைப் பயன்படுத்தினார். பின்னர் பிரிட்டானியக் குடியிருப்பு எல்லைக்கு உட்பட்ட நான்கு மாகாணங்களில் சென்னையும் ஒன்று என்ற அங்கீகாரம் இந்த நகருக்குக் கிடைத்தது.

மதராஸ் மாகாணத்தின் தலைநகர் ‘சென்னை’ 

1746 ஆம் ஆண்டில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் ஃப்ரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இப்பகுதிகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின் சென்னை நகரம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ரயில் மார்க்கமாக சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின் சென்னை, அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம், தமிழ்நாடு எனப் பெயர் மாறுதலுக்கு உள்ளானது. 

சென்னை என்று பெயர் மாறுதலுக்கு உள்ளாவதற்கு முன்பு சென்னையை சென்னப் பட்டிணம் என்றும், மதராஸப் பட்டிணம் என்றும் இருபெயர்களில் அதன் பூர்வ குடிமக்கள் அழைத்து வந்தனர். 

சென்னைக்கு, சென்னை எனப் பெயர் வந்ததற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்ட போதும் மதராஸப்பட்டிணம் என்ற பெயர்க்காரணம் வந்தமை குறித்த தெளிவான காரணங்கள் அறியப்படவில்லை. அதில் குழப்பங்கள் நிலவுகின்றன. சிலர் வங்கக் கடல் பகுதியில் சிறிய மணல்திட்டாக இருந்த சில கிராமங்களை ஒன்றிணைத்து சென்னப்பட்டிணம் உருவான போது அதற்கு குறிப்பிடத்தக்க பெயர்கள் இல்லாமல் மேட்டில் இருந்த நகரம் எனும் பொருள் கொள்ளும்படியாக ‘மேடு ராச பட்டிணம்’ என்ற பெயர் வழங்கி வந்து காலப்போக்கில் அது மருவி ‘முத்துராசப் பட்டிணமாகி’ பின்பு ‘மதராஸப் பட்டிணம்’ என்று மாறியதாகக் கூறுகிறார்கள்.

சென்னை எனும் அதிகாரப் பூர்வ பெயர் அறிவிப்பு!

மதராஸ் என்பதை “மெட்ராஸ்” என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை கலைஞர் கருணாநிதி தாம் முதல்வராக இருந்த காலத்தில் 17/7/1996 ஆம் ஆண்டில் ‘சென்னை’ என ஒரே அதிகாரப் பூர்வப் பெயராக மாற்றம் செய்து அறிவித்தார். அது முதல் மெட்ராஸ் என்ற பெயர் பேச்சு வழக்கில் மட்டுமே நிலைத்து அனைத்து ஆவணங்களிலும் ‘சென்னை’ என்ற பெயர் வழங்கி வருகிறது.
 

Image courtesy: 

chennaicorporation.gov.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com