பாரத ரத்னா விருது வரலாறும் கொறிக்க கொஞ்சம் சர்ச்சைகளும்!

ராஜிவ் காந்தி தமிழகத்தில் தம் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காகவே அப்போது கூட்டணி வைத்திருந்த கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ராமச்சந்திரனுக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் என்றொரு
பாரத ரத்னா விருது வரலாறும் கொறிக்க கொஞ்சம் சர்ச்சைகளும்!

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா இந்த ஆண்டு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்துத்வா தலைவர் நானாஜி தேஷ்முக், இயக்குனர் பூபேன் ஹஸாரிகா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

பாரத ரத்னா விருதுகளைப் பொருத்தவரை இந்தியாவில் கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் இதுவரை பலதுறை சார்ந்த 45 சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

அவர்கள் யார் யார்?

எந்த அடிப்படையில் அவர்களுக்கு பாரதரத்னா வழங்கப்பட்டிருக்கிறது என்று இப்போது தெரிந்து கொள்வோம்.

  • 1954 ஆம் வருடம் முதல்முறையாக மூன்று பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த மூவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் சர் சி வி ராமன்.
  • ராஜாஜிக்கு இந்திய விடுதலைப்போராட்ட வீரர் என்ற வகையிலும் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி தலைமை ஆளுநராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற வகையிலும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • சர் சி வி ராமனுக்கு இயற்பியல் துறையில் அவரது கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. ராமன் பாரத ரத்னா பெறுவதற்கு முன்பே 1930 ஆம் ஆண்டிலேயே இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தத்துவஞானியும், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அவரது அரசியல், சமூக சேவை மற்றும் ஆசிரியப்பணி சேவைகளைப் பாராட்டி பாரத ரத்னா வழங்கப்பட்டது.
  • 1955 ஆம் ஆண்டில் மீண்டும் மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த மூவர் இறை மெய்யியலாளரும், அரசியல்வாதியுமான  பகவான் தாஸ், இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு, பொறியாளரும் மைசூர் திவானாக இருந்தவருமான டாக்டர் விஸ்வேஸ்வரய்யா.
  • 1957 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சருமான கோவிந்த் வல்லப் பந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 1958 ஆம் ஆண்டு, டோண்டு கேசவ் கார்வே எனும் சமூக சீர்த்திருத்தவாதிக்கு பாரத ரத்னா விருதளித்து சிறப்பித்தது மத்திய அரசு.
  • அடுத்தபடியாக 1961 ஆம் ஆண்டில் மருத்துவரும், விடுதலை இயக்கப் போராளியும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமாக இருந்தவரான பிதான் சந்திர ராய் மற்றும் புருஷோத்தம் தாஸ் டாண்டன் எனும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உள்ளிட்ட இருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1962 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான ராஜேந்திரப் பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1963 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் 3 வது குடியரசுத் தலைவருமான ஜாகிர் ஹுஸைனுக்கும் சமஸ்கிருதப் பண்டிதரும் இந்திய தத்துவவியலாளருமான பாண்டுரங்க வாமன் காணேவுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
  • 1966 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியாக இருந்தவருமான லால் பகதூர் சாஸ்திரிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
  • 1971 ல் முன்னால் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்கள்.
  • 1975 ஆம் ஆண்டில் தொழிற்சங்கவாதியும், இந்தியாவில் முதல் தற்காலிக குடியரசுத் தலைவராக இருந்தவரும், நான்காவது குடியரசுத் தலைவருமான வி வி கிரிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1976 ஆம் ஆண்டில் கர்ம வீரர் காமராஜருக்கும்
  • 1980 ஆம் ஆண்டில் அன்னை தெரஸாவுக்கும் (பாரத ரத்னா பெறுவதற்கு முதல் ஆண்டில் தான் அன்னை தெரஸாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) பாரத ரத்னா வழங்கப்பட்டது.
  • அடுத்தபடியாக 1983 ஆம் ஆண்டில் இந்திய அறப்போராளியும், மனித உரிமைகள் ஆர்வலரும், 1958 ஆம் ஆண்டிலேயே ராமன் மக்சேசே விருது பெற்றவருமான பூதான இயக்கத் தந்தை வினோபா பாவேக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்தது நடுவண் அரசு.
  • 1987 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  கான் அப்துல் கபார் கானுக்கும்...
  • 1988 ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்பட நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம் ஜி ராமச்சந்திரனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுத் தலைவராகவும், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவரும், மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதியுமான டாக்டர் அம்பேத்கருக்கு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • அதே ஆண்டில் தென்னாப்பிரிக்க அதிபரான நெல்சன் மண்டேலாவுக்கும் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் போராடி 25 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் என்பதோடு தென்னாப்ரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு 1993 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
  • மீண்டும் 1991 ஆம் ஆண்டில் இந்தியாவின் 9 ஆவது பிரதம மந்தியான ராஜீவ் காந்தி, இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராய் இருந்தவரான சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் 6 வது பிரதமரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அபுல்கலாம் ஆசாத், இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களில் ஒருவரும், இந்திய விமானப் போக்குவரத்தின் முன்னோடியுமான ஜே ஆர் டி டாட்டா, திரைப்பட மேதையும் ராமன் மக்சேசே விருது பெற்றவருமான திரைப்பட இயக்குனர் சத்யத் ஜித் ரே உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொருளாதார மேதை, இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவருமான குல்சாரிலால் நந்தாவுக்கும், இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலருமான அருணா ஆசாப் அலிக்கும், இந்திய விஞ்ஞானியும், இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவருமான ஏ பி ஜே அப்துல் கலாம் உள்ளிட மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு கர்நாடக இசைப்பாடகியும், 1974 ஆம் ஆண்டில் ராமன் மக்சேசே விருது பெற்றவருமான எம் எஸ் சுப்புலட்சுமிக்கும், இந்தியாவின் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்து இந்தியாவின் உணவுத் தன்னிறைவுக்கு வழிவகுத்தவருமான சி சுப்ரமணியத்துக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக 4 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அந்த நால்வர் முறையே இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்த்திருத்தவாதியுமான ஜெயப்ரகாஷ் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞரும், சிதார் மேதையுமான  பண்டிட் ரவி ஷங்கர், பொருளாதார மேதையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அஸ்ஸாம் மாநில முதல் அமைச்சருமான கோபிநாத் பர்தோலாய் உள்ளிட்ட நால்வருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கருக்கும், இந்துஸ்தானி ஷெனாய் இசைக்கலைஞருமான பிஸ்மில்லாகானுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டு இந்துஸ்தானி குரலிசைப் பாடகரான பீம்சென் ஜோஷிக்கும், 
  • 2014 ஆம் ஆண்டு வேதியியலாளர் சி. என் ஆர் ராவுக்கும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது மத்திய அரசு.
  • 2015 ஆம் ஆண்டு கல்வியாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக நான்கு முறை பொறுப்பேற்றிருந்தவருமான மதன் மோகன் மாளவியாவுக்கும், கவிஞரும் 11 வது இந்தியப் பிரதமராக இருந்தவருமான அடல் பிகாரி வாய்பேயிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • அதையடுத்து தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கும், திரைப்படம், இலக்கியம் மற்றும் இசைப் பங்களிப்புகளுக்காக பூபேன் அசாரிகா எனும் இயக்குனருக்கும், இந்துத்வா தலைவர் நானாஜி தேஷ்முக்குக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்திருக்கிறது இந்திய அரசு.

இவர்களில் லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், வினோபா பாவே, எம் ஜி ராமச்சந்திரன், அம்பேத்கர், ராஜிவ் காந்தி, வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆஸாத், அருணா ஆஸாப் அலி, ஜெயப்ரகாஷ் நாராயண், கோபிநாத் பர்தோலாய், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட 12 பேருக்கு அவர்கள் மறைந்த பின்னரே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத் தக்கது. இவர்களில் இந்தியக் குடிமகன்கள் அல்லாத நெல்சன் மண்டேலாவுக்கும், கான் அப்துல் கபார் கானுக்கும் அவர்களது சுதந்திர போராட்ட வாழ்க்கைச் சாதனைகளின் அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறது இந்திய அரசு.

இதில் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று 1992 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்பட்ட விஷயம். இந்திய அரசின் இச்செயலுக்கு பலத்த கண்டனங்கள் அப்போது எழுந்தன. எனினும் சுபாஸ் சந்திர போஸுக்கு மீண்டும் விருது அளிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு வராமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.

1954 ஆம் ஆண்டில் இந்த விருது முதன்முறையாக உருவாக்கப்பட்ட போது அமரர்களுக்கு அதாவது மறைந்து விட்ட சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது என்ற விதி இருந்தது. ஆயினும் அந்த விதி அடுத்த ஆண்டே மாற்றப்பட்டு உயிருடன் இல்லாதவர்களுக்கும் கூட பாரத ரத்னா வழங்கும் வழக்கம் வந்தது. அதே போல இந்த விருதை வடிவமைக்கும் போது விருது பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அந்தப் பதக்கம் வட்ட வடிவில் வழங்கப்படுமென முதலில் கூறப்பட்ட போதும் பிறகு பதக்கத்தின் வடிவம் அரச இலை வடிவில் மாற்றப்பட்டது. அரச இலைப் பதக்கத்தின் நடுவில் சூரிய உருவம் பதிப்பட்டு அதன் கீழ் பாரத ரத்னா எனும் சொல் தேவநாகிரி எழுத்துருவில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தப் பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்பது இவ்விருது பெறுபவர்களுக்கான விதிகளில் ஒன்று.

பாரத ரத்னா விருதுக்கான பயன்பாட்டு விதிகள் ஏதாவது உண்டா என இப்போது தெரிந்து கொள்வோமா?

இந்திய அரசியல் சாசன விதி 18 (1) ன் படி; 

விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது, அவசியம் கருதினால் ‘பாரத ரத்னா விருதைப் பெற்றவர்; எனும் சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. 

பாரத ரத்னா விருது சர்ச்சைகள்...

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைச் சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. முதலாவது சர்ச்சை என்றால் அது 1992 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு விருது வழங்குவதாக அறிவித்து விட்டுப் பிறகு அந்த விருதின் மீதான சட்டச் சிக்கல்களைத் தீர்க்க இயலாமல் நேதாஜிக்கு அளிப்பதாக இருந்த பாரத ரத்னா விருதை 1997 ஆம் ஆண்டில் ரத்து செய்து திரும்பப் பெற்றது இந்திய அரசு.

1998 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருந்த ராஜிவ் காந்தி இங்கே தம் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காகவே அப்போது தான் கூட்டணி வைத்திருந்த கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ராமச்சந்திரனுக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் என்றொரு விமர்சனம் கடுமையாக அப்போது முன் வைக்கப்பட்டது. ஏனெனில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற தலைவர்களான அம்பேத்கர்,சர்தார் வல்லபாய் படேலுக்கு முன்பு எம் ஜி ஆருக்கு அவ்விருது ராஜிவ் காந்தியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து பலர் போர்க்குரல் உயர்த்திய போதும் கூட எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.

அதே போல பண்டிட் ரவிஷங்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போது அவர் லாபி செய்து விருது வாங்க முயற்சிக்கிறார் என்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மறைந்த காங்கிரஸ் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்தார். அப்போது, தமிழ்நாட்டு ஓட்டு வங்கியைக் குறிவைத்தே சரியான சந்தர்பத்தில் இப்படி ஒரு பரிந்துரையை இந்திரா காந்தி முன் வைத்திருக்கிறார் என்று விமர்சிக்கப் பட்டது.

இதே விதமான குற்றச்சாட்டு முன்னாள் இந்தியப் பிரதமர் விபி சிங், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனக் கமிட்டி தலைவருமான அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்த போதும், தலித்துகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்தே அவர் அவ்விதமாகப் பரிந்துரைத்தார் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதையடுத்து 2013 ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கும், சி என் ஆர் ராவுக்கும் பாரத ரத்னா வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து சிலர் கண்டனம் தெரிவித்தனர். சி என் ராவ் விஷயத்தில் அவரைக் காட்டிலும் அவரது துறையில் அதிகம் சாதித்தவர்களான ஹோமி ஜஹாங்கிர் பாபா, விக்ரம் சாராபாய் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் பாரத ரத்னா விருது வழங்காமல் சி என் ஆருக்கு வழங்குவது அரசியல் லாபங்களுக்காகத் தான் என்றும் சச்சி டெண்டுல்கருக்கு வழங்கப்படும் விருதும் கூட அவரை ராஜ்ய சபா எம் பி ஆக்கி மாநிலங்களவையில் அமர வைத்து அழகு பார்த்து ஓட்டு வேட்டை நடத்த நினைக்கும் காங்கிரஸின் ராஜதந்திரம் என்றும் பரவலாக விமரிசனங்கள் எழுந்தன.

பாரத ரத்னா விருது வழங்கும் நடைமுறையானது 1954 ஆம் ஆண்டில் தான் தொடங்கியது. ஆனால், இந்திய விடுதலைக்கு முன்பு வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் கூட பாரத ரத்னா பரிந்துரைக்கப்படுவதைக் காணும் போது இந்த விருதானது உயரிய நோக்குடன் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அந்த விருப்பத்தை ஓட்டு வங்கியாக மாற்ற விரும்பும் ஆளும் தரப்பு குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த பாரதப் பிரதமர்கள் தங்களுக்கு அனுகூலமான நபர்களுக்கு பாரத ரத்னா விருதைப் பரிந்துரைத்து தங்கள் எண்ணங்களை ஈடேற்றிக் கொண்டார்கள். நிஜமாகவே இந்தியாவிற்கு ரத்னம் போல விளங்குபவர்களுக்குத் தான் இந்த விருதுகளை பரிந்துரைப்பதென்றால்... மெளரியப் பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர், மராட்டிய மன்னர் வீர சிவாஜி, நோபல் பரிசு பெற்ற தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர், இந்துக்கள் பெரிதும் விரும்பும் ஆன்மீகத் துறவி விவேகானந்தர் உள்ளிட்டோருக்கு எல்லாம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்க வேண்டுமே? என வரலாற்று ஆசிரியர்கள் இந்த விருது குறித்து இது தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே சர்ச்சையைக் கிளப்பினர். ஆயினும் அரசு அதையெல்லாம் புறம் தள்ளி தொடர்ந்து பாரத ரத்னா விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து பதக்கங்களை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

பாரத ரத்னாவால் விளையும் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், இந்திய புரோட்டாகால் விதிகளின் படி குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர், துணைப்பிரதமர் என நீளும் முன்னுரிமை வரிசையில் இவர்களுக்கு 7 ஆம் இடம் வழங்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் அரசு விழாக்களில் அமர வைக்கப்படத் தகுதி வாய்ந்த மதிக்கத்தக்க நபர்கள் பட்டியலில் இவர்கள் 7 ஆம் இடம் பெறுகிறார்கள். கடைசியாக ஒரு விஷயம்... பாரத ரத்னா விருதில் பணப்பரிசு எதுவும் கிடையாது. பதக்கவும், சான்றிதழும் மட்டுமே வழங்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com