நீங்க இன்னும் கி.மு, கி.பி.லதான் இருக்கீங்களா? பொ.ஆ.மு, பொ.ஆ.பி.க்கு மாறலையா?

பாட நூல்களில் கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு இருந்த காலக் கணக்கு தற்போது பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டிருக்கிறது
நீங்க இன்னும் கி.மு, கி.பி.லதான் இருக்கீங்களா? பொ.ஆ.மு, பொ.ஆ.பி.க்கு மாறலையா?

கி.மு., கி.பி. மற்றும் பொ.ஆ.மு., பொ.ஆ.பி. பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்...

கி.மு., கி.பி.யின் கதை

கி.மு. கி.பி. என்று ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடும் முறையை கி.பி. 525 வாக்கில் டயோனிசியஸ் எக்ஸிகூஸ் (Dionysius Exiguus) அறிமுகப்படுத்தினாலும் உடனடியாக இம்முறை வழக்கத்துக்கு வரவில்லை. 15 ம் நூற்றாண்டுக்குப் பின்னர், உலகம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளின் காலனியாகிய பிறகு தான், ‘கி.மு –  கி.பி’ உலகம் முழுவதும் பரவலானது.
கி.மு - கி.பி. பரவலான அதே காலகட்டத்திலேயே டயோனிசியஸ் முறைக்கு மாற்றுக் கருத்துகளும் உருவாயின. அவற்றில் ஒன்று, ‘வல்கர் எரா’ என்பது ஆகும். ‘வல்கிஸ்’ (பொது மக்கள்) என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான இதன் பொருள் ‘பொதுமக்கள் ஆண்டு’ என்பதாகும். இந்தச் சொற்கள் தான் சற்றுத் திருத்தப்பட்டு, பொது ஆண்டு (Common Era) என்று அழைக்கப்பட்டது. ‘வல்கர் எரா’ என்ற சொல் 1635 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில், ‘காமன் எரா’ என்ற சொல் பயன்பாடு 1708 முதல் காணப்படுகிறது.

கி.மு. = கிறிஸ்து பிறப்பிற்கு முன் = Before Christ = BC
கி.பி. = கிறிஸ்து பிறப்பிற்கு பின் = Anna Domini = AD

கி.மு., கி.பி... அனைவருக்கும் பொருந்துமா?

உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்தவற்றைக் குறிப்பிடப் பொது ஆண்டுக்கணக்கைப் பயன்படுத்தும்போது அதைக் கிறிஸ்துவுக்குப் பின் என்று குறிப்பிடுவதில் அதிகம் பொருள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். உதாரணமாக திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராஜிதனுக்கும், இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் நிகழ்ந்த போர் தமிழக வரலாற்றின் திருப்புமுனைகளில் ஒன்று. ஏனெனில் இதன் மூலம்தான் விஜயாலய சோழனும், அவன் மகன் ஆதித்த சோழனும் சோழ நாட்டின் தன்னாட்சியை மீட்டு இரண்டாம் சோழர்களின் பரம்பரையைத் தொடங்கிவைத்தார்கள்.

இந்தப் போர் நிகழ்ந்தது பொது ஆண்டு 885 ல் என்று வைத்துக்கொள்வோம். இதைக் கிறிஸ்துவுக்குப் பின் 885 ம் ஆண்டில் நிகழ்ந்த போர் என்று சொல்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? அந்தப் போர் நடந்தபோது தமிழகத்தில் கிறிஸ்துவை அறிந்தவர்கள் அதிகம் பேர் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. மத நிறுவனமாக கிறிஸ்தவம் இங்கே கால் பதிக்கவில்லை. எனவே, கிறிஸ்துவின் பிறப்பிற்குத் தொடர்பேயில்லாத நிகழ்வை ஏன் அவர் பிறப்பிற்குப் பின்னால் என்று குறிப்பிட வேண்டும்? அதைப் பொது ஆண்டு என்று கூறும்போது அது உலக வரலாற்றினைக் காலவரிசைப்படுத்தும் பொது ஆண்டுக் கணக்கு முறை என்று புரிந்துகொள்ளலாம் அல்லவா?

பொது ஆண்டு முறை (Common Era)

உலகின் பல்வேறு பகுதிகளின் வரலாற்று நிகழ்வுகளை ஒரு குறிப்பிட்ட பொதுக் கணக்கீட்டு முறையில் பொதுவான காலக்கோடு ஒன்றை உருவாக்கி ஒப்பிடத் துவங்கியுள்ளோம். உதாரணமாக, தமிழகத்தில் வாழ்ந்த கம்பர், இத்தாலியக் கவி டாண்டே இருவரும் சமகாலத்தவர்களா என்று நான் அறிய விரும்பினால் அவர்கள் இந்த பொதுவான ஆண்டுக்கணக்கில் எப்போது வாழ்ந்தார்கள் என்று கண்டு புரிந்துகொள்ள முடியும். இது ஒப்பீட்டளவில் உலகின் பல பகுதிகளின் வரலாற்று மாற்றங்களைச் சேர்த்து நோக்கவும், மானுடப் பொதுமையான வரலாற்றுப் பார்வையை உருவாக்கிப் பார்க்கவும் வசதியானதாக இருக்கிறது.

அரசுகள், கல்வி நிறுவனங்கள், வரலாற்றாளர்கள் பெரும்பாலும் கி.மு./ கி.பி. முறையையே பயன்படுத்தி வந்தாலும் மதச்சார்பின்மையாளர்கள் பொது ஆண்டு முறையை வலியுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக 20- ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் கல்வியாளர்கள், அறிவியல் எழுத்தாளர்கள் இம்முறையை ஆதரித்துத் தங்கள் எழுத்துகளில் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறு ஒரு பக்கம் கி.மு./ கி.பி. முறை பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டாலும், நவீன கருத்தாக்கங்களின்படி பொது ஆண்டு என்று பயன்படுத்துவதே மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகவும் உலகளாவிய தன்மைக்குச் சரியான முறையாகவும் இருக்கும் என்ற கருத்தும் மறுபக்கத்தில் வலுப்பெற்று வந்தது.

பொ.ஆ. = பொது ஆண்டு = Common Era = CE
பொ.ஆ.மு. = பொது ஆண்டுக்கு முன் = Before Common Era = BCE

தமிழக அரசின் பள்ளிக் கல்வி புதிய பாடத்தில் கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்பதை பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் என்று கடந்த ஜூன் 2017 இல் மாற்றப்பட்டது. வரலாற்றில் கால வரையறையைக் குறிப்பிடும்போது சர்வதேச அளவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில், வரலாற்றில் காலக் கணக்கை கிறிஸ்துவுக்கு முன் என்றும் கிறிஸ்துவுக்குப் பின் என்றும் வரையறுக்கப்பட்டு கணக்கிடப்பட்டு வந்தது.

கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்பது சர்வதேச வரலாற்றையே கிறிஸ்தவ மதம் சார்ந்து கணக்கிடுவது சரியில்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, சில வரலாற்றாசிரியர்கள் கி.மு., கி.பி., என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக அதே ஆண்டுக் கணக்கில் வரலாற்றில் காலத்தைக் குறிப்பிடுவதற்கு பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று குறிப்பிட்டு தங்களுடைய வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர்.

இந்த முறை சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் கைக்கொண்டு தற்போது அனைவரும் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்று குறிப்பிடுவது வரலாற்று நூல்களில் வழக்கமாகிவிட்டது.

ஆனால், தமிழக அரசின் வரலாற்று பாட நூல்களில் மட்டும் இது காலம் வரை கி.மு., கி.பி. என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று நூல்களில் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டது.

பாடநூல்களில் செய்யப்பட்ட இந்த மாற்றத்துக்கு சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்தியில் இந்துத்துவ கொள்கைகளைத் உயர்த்திப் பிடிக்கும் பாஜக ஆட்சி நடப்பதாலும், பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக அரசு இருப்பதாலும், பாட நூல்களில் கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு இருந்த காலக் கணக்கு தற்போது பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டிருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் சில மேற்கத்திய நாடுகளின் அரசுகள் கூட, தமது கல்வித் திட்டங்களில் பொது ஆண்டு முறையை அறிமுகப்படுத்த அனுமதித்தன. நமது மத்திய அரசின் பாடத்திட்டத்தை வகுக்கும் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுவும் (என்.சி.இ.ஆர்.டி) பொது ஆண்டு முறையையே பின்பற்றுகிறது. மேலும், சமீபகாலமாக எழுதப்படும் வரலாற்று நூல்களும், அறிவியல் நூல்களும் பெரும்பாலும் பொது ஆண்டு முறையைப் பின்பற்றியே எழுதப்படுகின்றன.

ஐநா முன்னாள் தலைமைச் செயலரும் தன்னளவில் சீர்திருத்தக் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவருமான கோஃபி அன்னான் கூறிய கருத்து தற்போதைய தமிழகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது...

“உலகம் முழுவதும் பல்வேறு நாகரிகங்கள், பல நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள், பல பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்று ஒரே நாட்காட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, நீங்கள் விரும்புவதைப் போல மாற்றம் தேவை தான். கிறித்துவ ஆண்டு முறை பொது ஆண்டு முறையாக மாறியுள்ளது சரிதான்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com