பாலியல் துஷ்பிரயோகம், தெருக்களில் பிச்சையெடுக்க விடுதல்.. வெளிச்சத்திற்கு வந்தன நைஜீரிய உறைவிடப் பள்ளி அவலங்கள்!

அல்மாஜிரிஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பள்ளிகள் வடக்கு நைஜீரியாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் பொதுவானவை - இந்தப் பகுதியானது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தைப்  பின்பற்றுபவர்களுக்கு இடையில் சமம
பாலியல் துஷ்பிரயோகம், தெருக்களில் பிச்சையெடுக்க விடுதல்.. வெளிச்சத்திற்கு வந்தன நைஜீரிய உறைவிடப் பள்ளி அவலங்கள்!

கடுனா (நைஜீரியா): வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய பள்ளி என்று கூறப்படும் ஒரு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில் 300 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் ஆண்கள்.. அவர்களில் ஐந்து வயதுக்குட்பட்டவர்களும் அடக்கம்.. உள்ளிட்டோர் சங்கிலியால் தாக்கப்பட்ட வடுக்களோடும், மிகப்பெரிய சக்கரத்தில் பிணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலிகளில் கட்டப்பட்டவர்களாகவும கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட போது சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகளாக இருந்தது அதிர்ச்சிகரமானதாக இருந்தது.

காவல்துறை அதிகாரியின் கைகளைப் பற்றியிருந்த சிறுவன் ஒருவனின் முதுகில் ஏராளமான புண்கள் தெரிந்தன, புண்களின் இயல்பைப் பார்த்தால் சவுக்கால் அடித்தால் உண்டாகும் காயங்களுடன் ஒத்துப் போனது.

விடுவிக்கப்பட்ட சில குழந்தைகள் அண்டை நாடுகளான புர்கினா பாசோ, மாலி மற்றும் கானா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களாக இருந்தனர். மற்றவர்கள் இந்தக் கட்டடத்தில் நடத்தப்படுவது இஸ்லாமிய பள்ளி அல்லது புனர்வாழ்வு மையம் என்று நம்பியதால் சொந்தப் பெற்றோர்களாலேயே கொண்டு வந்து விடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

‘ஆனால் இந்த இடம் ஒரு மறுவாழ்வு மையமோ அல்லது இஸ்லாமிய பள்ளியாகவோ இருக்க வாய்ப்பே இல்லை, ஏனென்றால் நடத்தப்பட்டிருக்கும் கொடுமைகளைப் பார்த்தால் அதை நீங்களே உணர முடியும்" என்று கடுனா மாநில போலீஸ் கமிஷனர் அலி ஜங்கா செய்தியாளர்களிடம் கூறினார். ‘விடுவிக்கப்பட்டு இங்கு கூடியிருந்த குழந்தைகள் நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் ... அவர்களில் சிலர் தப்பி ஓடி விடமுடியாதவாறு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைத் தவறான காரியங்களுக்காக இங்குள்ளவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள், இந்தச் சிறுவர்களை இப்படியெல்லாம் செய்யும் அளவுக்கு அவர்கள் மனிதநேயமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்க்கலாம்’

- எனவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் பள்ளியில் ஆசிரியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதாக கடுனா காவல்துறை செய்தித் தொடர்பாளர் யாகுபு சபோ தெரிவித்தார்.

அத்துடன், மாநில அரசு தற்போது ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது என்றும் அவர் கூறினார். 

தற்போது விடுவிக்கப்பட்டவர்கள் அங்கு எவ்வளவு காலமாக இப்படிச் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இவ்விஷயத்தில் உறவினர்கள் சந்தேகத்திற்குரியவர்களாகக் கருத வாய்ப்புண்டு!

சிறைபிடிக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பட்டினி போடப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இச்செய்தியை இப்போதைக்கு ஆணித்தரமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கான மேலதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான இளைஞன், ஹசன் யூசுப், சில வருடங்கள் வெளிநாட்டில் படித்ததைத் தொடர்ந்து தனது வாழ்க்கை முறை குறித்த கவலைகள் காரணமாக தான் இந்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டதாக கூறினார். மேலும் அவர் பேசியதிலிருந்து

"எனது வாழ்க்கை முறை மாறிவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள் - நான் ஒரு கிறிஸ்தவனாகிவிட்டேன், இஸ்லாமிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டேன்" என்று அவர்கள் கருதியதால் என்னை அவர்கள் இந்த மையத்திற்கு அனுப்பி வைத்தார்கள்’ - என்று யூசுப் கூறினார், இவ்வளவு தான் அவரால் தகவல் அளிக்க முடிந்ததே தவிர.. தன்னை இந்த மையத்திற்கு அனுப்பிய மக்களுடனான தனது உறவின் தன்மையை அவரால் குறிப்பிட முடியவில்லை.

இந்த ரெய்டு பற்றிய செய்தி பரவியதும், சில உறவினர்கள் காம்பவுண்டுக்கு வெளியே கூடினர், அங்கு வாயிலுக்கு மேலே ஒரு அடையாளம்... முள்வேலி உருண்டைகளுடன் முதலிடம் பிடித்தது: அதில் "இஸ்லாமிய ஆய்வுகளுக்கான இமாம் அஹ்மத் பன் ஹம்பல் மையம்". என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

வாயிலில் திரண்டிருந்த உறவினர்களில் ஒருவரான ஹசன் முகமது என்பவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தந்தை இறந்தபின்னர் தங்கள் தாயால் பள்ளிக்கு அனுப்பப்பட்ட விடுவிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் மாமா தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த மையத்தைப் பொருத்தவரை, அங்கு சேர்க்கப்பட்ட பின்னர் சொந்தக் குடும்பத்தினருக்கே அக்குழந்தைகளைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட போதே தனக்கு அங்கு என்ன நடக்கிறது”? என்பது குறித்து சந்தேகம் வந்ததாக அவர் கூறினார்.

மேலும் அவர் பேசியதிலிருந்து... 

"நான் கெஞ்சினேன், அவர்கள் அனுமதி இல்லை என்று சொன்னார்கள், மூன்று மாதங்கள் வரை அப்படிப் போராடி விட்டு இந்த குழந்தைகளை எங்களால் பார்க்க முடியாது என்று தெரிந்ததும் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது இந்த மையத்தைப் பற்றி எனக்கு உண்டான சந்தேகம் வலுத்தது... நாங்கள் அப்போதே இந்தப் பிரச்சினை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதைத்தான் இப்போது செய்திருக்கிறோம் என்றார் அவர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது கடுனாவில் உள்ள ஒரு தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர், பின்னர் அவர்கள் நகரின் புறநகரில் உள்ள மற்றொரு முகாமுக்கு மாற்றப்படுவார்கள், அதே நேரத்தில் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அல்மாஜிரிஸ் பள்ளிகள் யாருக்கானவை?!

அல்மாஜிரிஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பள்ளிகள் வடக்கு நைஜீரியாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் பொதுவானவை - இந்தப் பகுதியானது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தைப்  பின்பற்றுபவர்களுக்கு இடையில் சமமாக பிளவுபட்டுள்ள ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அத்துடன் வடக்கு நைஜீரியாவில் உள்ள பெற்றோர்களில் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கக் கூடியவர்களாக இருப்பதால், பெரும்பாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை அல்மாஜிரிஸ் போன்ற உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிப்பதை அனுமதிப்பவர்களாகவும், விரும்புபவர்களாகவுமே இருக்கிறார்கள். இது அம்மக்களின் அவலநிலையாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

எனவே தான் இத்தகைய பள்ளிகள் பல ஆண்டுகளாக குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகளை வடக்கு நகரங்களின் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளால் பீடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரியின் அரசாங்கம் அல்மாஜிரிஸ் பள்ளிகளைத் தடை செய்யத் திட்டமிட்டதாகக் கூறியது, ஆனால் உடனடியாக அவ்வாறு செய்யாமல்,

"அல்மாஜிரிக்கு தேவையான எந்தவொரு தடையும் உரிய செயல்முறை மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்’ 

- என்று புஹாரியின் செய்தித் தொடர்பாளர் கர்பா ஷெஹு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

‘பள்ளி நேரத்தில் தெருக்களில் பிச்சை எடுப்பதை விட ஆரம்ப பள்ளி செல்லும் வயதுடைய ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருக்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடுனாவில் நடந்த சோதனை குறித்து ஆதரப்பூர்வமான விளக்கம் பெறுவதற்காக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது உடனடியாக அங்கிருந்து உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை, மேலும் இது போன்ற பள்ளிகளுக்குத் தடை விதிப்பதிலும், கண்டனம் தெரிவிப்பதிலும் அரசாங்கத்தின் அணுகுமுறையை மாறுமா? என்பது குறித்தும் உடனடியாக செய்தியேதும் அறியும் நிலை தற்போது அங்கில்லை.

நைஜீரிய மனித உரிமைகள் அமைப்பான முஸ்லீம் ரைட்ஸ் கன்சர்ன் (MURIC) இயக்குனர் பேராசிரியர் இஷாக் அகின்டோலா கூறுகையில், நாட்டின் வடக்கே சுமார் 10 மில்லியன் குழந்தைகள் இஸ்லாமிய பள்ளிகளில் கல்வி கற்கின்றனர்.

"துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள், குற்றவாளிகள் எனக் கருதப்பட்டால், அப்பள்ளிகளை நிர்வகிப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும், ஆனால் இந்தப் பள்ளிகள் தொடர வேண்டும், ஏனெனில் அவற்றை மூடுவதென்பது இது போன்று இல்லாது நன்றாக நடத்தப்படும் பல பள்ளிகளின் மாணவர்களை பாதிக்கும்," என்றும் அவர் கூறினார்.

கூடுதலாக இது போன்ற இஸ்லாமிய பள்ளிகளுக்கு ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கும் கட்டிடங்களை மேம்படுத்துவதற்கும் நிதி தேவை என்றும் அகிண்டோலா கூறினார்.

Image Courtesy: The Wise Gneder

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com