அஸாம் கொடூரம்! காவல்துறையின் அரக்கத்தனமான விசாரணையில் கருவை இழந்த கர்ப்பிணி முஸ்லிம் பெண் மற்றும் சகோதரிகள்!

காவல்துறையினரின் அரக்கத்தன்மையான விசாரணைக்கு பலிகடாக்களாகிப் போன அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க தற்போது அஸாம் மாநில மகளிர் ஆணையம் களமிறங்கியிருக்கிறது.
அஸாம் கொடூரம்! காவல்துறையின் அரக்கத்தனமான விசாரணையில் கருவை இழந்த கர்ப்பிணி முஸ்லிம் பெண் மற்றும் சகோதரிகள்!

‘நாடோடிகள்’ படம் பார்த்திருக்கிறீர்களா? இயக்குனர் சசிகுமாரின் இத்திரைப்படத்தில் நண்பனின் காதலுக்காக பெண்ணைக் கடத்திய வழக்கில் மூன்று நண்பர்கள் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஒரு பக்கம் போலீஸ் விரட்ட மறுபக்கம் பெண்வீடு, பையன் வீட்டு ஆட்கள் துரத்த அவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் மூன்று நண்பர்களில் ஒருவருக்கு காலை வெட்டி எடுக்க வேண்டியதாகி விடும், இன்னொருவருக்கு காது சவ்வு கிழிந்து காதே கேட்காது ஆகி விடும். மூன்றாம் நபருக்கு காதல் கைகூடாமலாகி வாழ்க்கையே சோகத்தில் ஆழ்ந்து விடும். அத்தனை இழப்புகளும் எதற்காக என்றால் அவரவர் சொந்தக் காரணங்களுக்காக அல்ல. நண்பனின் காதலுக்கு உதவச் சென்றதால்...

சரி, இவர்கள் இத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தார்களே.. அவர்களாவது சுபமாக வாழ்ந்தார்களா? என்றால் அது தான் இல்லை. அவர்கள் இருவரும் ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் கணக்கில் சண்டையிட்டுப் பிரிந்து அவரவர் வீடுகளுக்குப் போய் சேர்ந்து விடுவார்கள். அப்படியானால் இதில் இளிச்சவாயர்கள் யார் என்றால்? அத்தனை கஷ்டங்களையும் பட்டுக் கொண்டு இவர்களது காதலை தெய்வீகக் காதலென எண்ணிக் கொண்டு சேர்த்து வைக்கப் பாடுபட்டார்களே, அவர்கள் தான்.

இப்போது எதற்காக இந்த உதாரணத்தைச் சொல்லத் தோன்றுகிறது என்றால் இதை விட கொடூரமான சம்பவம் ஒன்று கடந்த 8 ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் தரங் எனுமிடத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதற்கும் பின்னணியில் இருக்கும் மூலகாரணம் ஒரு காதல் தான். தரங் பகுதியைச் சார்ந்த ஒரு முஸ்லிம் இளைஞனும், இந்துப் பெண்ணுக்கும் காதல். அவர்களது காதலுக்கு உதவுவதற்காக மூன்று முஸ்லிம் பெண்கள் உதவியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் மூவரையும் கடந்த 8 ஆம் தேதி புறநகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்கள் மூவரும் இளம்பெண்கள் என்ற கருணை கூட இல்லாமல் இரவெல்லாம் அவர்களைக் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து அடித்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள். அடி, உதை மட்டுமல்ல அந்த மூன்று இளம்பெண்களும் அங்கிருந்த காவலர்களால் ஆடை களையப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தற்போது மீடியா தலையீட்டில் தெரிய வந்திருக்கிறது.

சம்மந்தப்பட்ட பெண்கள் மூவரும் சம்பவம் நடந்த அன்றே காவல்துறை புகார் அளிக்க முற்பட்டிருக்கிறார்கள். ஆனால், அப்போது இந்தப் புகாரை ஏற்றுக்கொள்ளாத காவலர்கள் தற்போது இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த தகவல்கள் மீடியா வெளிச்சம் பெற்றதும் நேற்று அப்பெண்களின் புகாரை ஏற்று வழக்குப் பதிந்திருக்கின்றனர்.

காவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மூன்று பெண்களில் மூத்தவர் கர்ப்பிணியாக இருந்தும் அவர் மீது எந்த விதத்திலும் காவலர்கள் கருணை காட்ட முயற்சிக்கவில்லை என்பது இச்சம்பவத்தில் அதிர்ச்சியான விஷயம். அதை விட அதிர்ச்சி அப்பெண்களைச் சித்திரவதை செய்த காவலர் குழுவில் ஒரு பெண் காவலரும் இடம்பெற்றிருந்தார் என்பது. கர்ப்பிணியான சகோதரியை அடித்துச் சித்திரவதை செய்யும் போது மற்ற இருபெண்களும் கதறித் துடித்து அவர் கர்ப்பிணி என்ற விவரத்தைச் சொன்ன போதும் கூட, சும்மா நடிக்காதீர்கள், முஸ்லிம் பையனுக்காக நீங்கள் கடத்திச் சென்ற இந்துப் பெண்ணை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என மரியாதையாகச் சொல்லி விடுங்கள்’ என்று சொல்லிச் சொல்லி அடித்து துவைத்திருக்கிறார்கள் அவர்கள் மூவரையும். இதில் அந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு கரு கலைந்திருக்கிறது.

தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் அஸாம் மாநில மகளிர் ஆணையத் தலைவர் சிக்கிமிகி தாலுக்தார், இந்த தாக்குதல் "கொடூரமான குற்றம்" என்று விவரித்திருப்பதோடு, 

“ஒரு நாகரிக சமுதாயத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கொடூரமான குற்றம்இது . நாங்கள் தாரங் எஸ்.பி.க்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ஒரு அறிவிப்பை அனுப்புவோம், ”என்றும் கூறியிருக்கிறார்.

தாரங் எஸ்பி இந்தச் சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீம் இளைஞரால் கடத்தப்பட்டார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகத்தான் அவர்கள் (மூன்று சகோதரிகள்) அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூத்த சகோதரி கடத்தப்பட்ட சிறுமியைத் தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தான் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வழக்கில் அப்பெண்களின் மருத்துவ அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்’ என்றார்.

காதல் விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விருப்பம் இல்லாத போது காதலர்களுக்கு நிகழ்த்தப்படும் இடைஞ்சல்கள், துன்பங்கள், கொடுமைகள் ஒரு வகை என்றால் காதலுக்கு உதவியவர்கள், காதலின் பேரினாலான கடத்தலுக்கு உதவியவர்கள் என்ற பெயரில் முற்றிலும் அந்த விஷயத்தில் பெரிதாகத் தொடர்பற்றவர்களுக்கு நடத்தப்படும் கொடுமைகள் அதைக்காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதில் அப்பெண்களுக்கு நடத்தப்பட்ட சித்திரவதைகள் அத்தனையுமே சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்டவையே. இந்துப் பெண்ணை இவர்கள் தான் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு நிச்சயமான ஆதாரங்கள் எதுவும் இன்னும் காவல்துறையினர் கைப்பற்றியதாகத் தெரியவில்லை. அப்படியான சூழலில் யாரோ ஒருவரின் காதலுக்கு உதவியிருக்கக் கூடும் என்ற சந்தேகச் சித்திரவதையில் இங்கு ஒரு முஸ்லிம் பெண் தன் கருவில் இருக்கும் குழந்தையையே இழந்திருக்கிறார். என்பது வேதனையான விஷயம்.

காவல்துறையினரின் அரக்கத்தன்மையான விசாரணைக்கு பலிகடாக்களாகிப் போன அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க தற்போது அஸாம் மாநில மகளிர் ஆணையம் களமிறங்கியிருக்கிறது.

நியாயம் கிடைத்தால் சரி. இல்லயேல் இவ்விவகாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபமிருக்க வாய்ப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com