‘நெல்லை முதல் டெல்லி வரை’ கொள்ளையர்களை விரட்டும் பெண்களின் துணிவு! (விடியோ இணைப்பு)

இப்படி நெல்லை முதல் டெல்லி வரை மக்கள் குறிப்பாகப் பெண்கள் திருடர்களையும், கொள்ளையர்களையும் எதிர்த்துப் போராடக் கிளம்பியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றமே!
‘நெல்லை முதல் டெல்லி வரை’ கொள்ளையர்களை விரட்டும் பெண்களின் துணிவு! (விடியோ இணைப்பு)

டெல்லி சாலையொன்றில் தன் மகளுடன் சைக்கிள் ரிக்‌ஷாவில் இருந்து இறங்கிய பெண் ஒருவரிடமிருந்து கழுத்துச் செயினை பறித்துச் செல்ல முயன்றார்கள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் இருவர். ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இருவரும் ரிக்‌ஷாவில் இருந்து இறங்கிய பெண்ணின் அருகில் வந்ததும் அவரது கழுத்துச் செயினை அறுத்துக் கொண்டு சிட்டாகப் பறக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், செயினைப் பறிகொடுத்த பெண் சற்றும் தயங்காமல் தன்னிடமிருந்து செயினைப் பறித்தவனை மோட்டார் சைக்கிளில் இருந்து இழுத்துக் கீழே தள்ளி சரமாரியாக உதைக்கத் தொடங்கினார். நடந்து கொண்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்து மனிதர்கள் உடனடியாக அந்தப் பெண்ணின் உதவிக்கு வரவே மோட்டார் சைக்கிளில் இருந்து பிடிபட்ட செயின் திருடனுக்கு பலத்த உதை கிடைத்தது. அவனிடம் பறிகொடுத்த செயினையும் அப்பெண்மணி மீட்டார். பிடிப்பட்ட திருடனை அருகிலிருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். செயினை பறிகொடுத்த பெண்மணியின் வீரத்தை பாராட்டியே தீர வேண்டும். ஏனெனில், கழுத்துச் செயினைப் பறித்துச் சென்ற திருடனைக் குறித்த பயமின்றி உடனடியாக எதிர்த்துப் போராடுவது என சடுதியில் முடிவெடுத்ததால் மட்டுமே அவரால் இழந்த செயினை மீட்க முடிந்ததுடன் திருடனையும் பிடிக்க முடிந்திருக்கிறது.

அத்துடன் மோட்டார் சைக்கிள் திருடர்களில் ஒருவன் பிடிபட்டு விட்டதால் வாகனத்தில் தப்பிச் சென்ற மற்றொருவனையும் பிடித்து விடுவதற்கான சாதகமான அம்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்காகவேனும் அந்தப் பெண்மணியையும் அவரது மகளையும் பாராட்டா விட்டால் எப்படி? தற்போது டெல்லி பெண்கள் மோட்டார் சைக்கிள் திருடனைப் பிடித்து சரமாரியாக அடித்துத் துவைத்து செயினை மீட்கும் சி சி டி வி காட்சிகள் வைரலாக இணையத்தில் பரவி வருகின்றன. இதைப் பார்த்து இப்படியான சூழலில் சிக்கிக் கொள்ளும் பலரும் துணிவு கொள்ள வேண்டும் என்பதே அனைவருக்குமான பாடம்.

நெல்லையில் கடந்த மாதம் இரவு பத்து மணி அளவில் தங்கள் வீட்டைக் கொள்ளையடிக்க வந்த திருடர்களை விரட்டிப் பிடிக்க முற்பட்ட முதிய தம்பதிகள் சம்பவத்திற்கு ஒப்பாக இந்த டெல்லி பெண்களின் வீரத்தையும் நாம் புகழ்வதே சரி. நெல்லை, கடையம் கிராமத்தைச் சார்ந்த சண்முகவேல், செந்தாமரை தம்பதியினர் வீட்டில் தனியாக இருந்த போது இரவு பத்து மணிக்கு மேல் முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் வந்து சண்முகவேலைத் துண்டால் கழுத்தை இறுக்கிக் கட்டி விட்டு வீட்டைக் கொள்ளையிட முயன்றனர். அப்போது முதியவர் அலறும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த செந்தாமரை அம்மாள், முகமூடிக் கொள்ளையர்களுக்கு அஞ்சாமல் துணிந்து தனது கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு திருடர்களைத் தாக்கி கணவரை விடுவித்ததுடன் கொள்ளையரையும் ஓட ஓட விரட்டினார்.

இதில் செந்தாமரை அம்மாளின் துணிச்சல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. இச்சம்பவத்தில் செந்தாமரை அம்மாளின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருந்தாலும் கூட அவர்களுக்கு இந்திய சுதந்திர தினத்தன்று வீரதீர குடிமக்கள் விருது வழங்கி கெளரவித்தது தமிழக அரசு. முதல்வர் எடப்பாடி கையால் விருது பெற்றனர் அத்தம்பதியினர்.

இப்படி நெல்லை முதல் டெல்லி வரை மக்கள் குறிப்பாகப் பெண்கள் திருடர்களையும், கொள்ளையர்களையும் எதிர்த்துப் போராடக் கிளம்பியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றமே!

Video Courtesy: Hindustan times

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com