Enable Javscript for better performance
Habit of talking to plants?- Dinamani

சுடச்சுட

  

  பூச்செடிகள், காய்கறிச் செடிகளுடன் பேசும் வழக்கமிருக்கா உங்களுக்கு?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 20th August 2019 05:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TALKING_TO_PLANTS

   

  மூன்று வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு ஆர்வம் கிளர்ந்தெழுந்து மொத்தமாக நிறையப் பூச்செடிகள் வாங்கினோம். பல வண்ண ரோஜாச் செடிகள். வெள்ளை ரோஜா, கிரீம் நிறத்தில் ஒரு ரோஜா, மஞ்சளும் இளஞ்சிவப்புமாய் ஒரு ரோஜா, சிவப்பு ரோஜா, ஃபேண்டா நிறத்தில் ஒரு ரோஜா, பன்னீர் ரோஜாச்செடி ஒன்று என்று மொத்தம் 6 ரோஜாச்செடிகள். இரண்டு சிவப்பு இட்லிப்பூச்செடிகள், இரண்டு வெள்ளை இட்லிப்பூச்செடிகள், சிவப்பு நாட்டுச் செம்பருத்திச் செடி 1, அடுக்குச் செம்பருத்தி 1, வெள்ளைச் செம்பருத்தி 1, மஞ்சளும், வெள்ளையுமாய் செவ்வந்திப்பூச்செடி 1, மஞ்சளுமில்லாத, சிவப்புமில்லாத நடுவாந்திர நிறத்தில் கேந்திப்பூச்செடிகள் பல. (கேந்திப்பூச்செடிகளை மட்டும் விலைக்கு வாங்கவில்லை, கிணற்றடியில் கண்டெடுத்தேன்) ஜாதிமல்லிப்பூச்செடி ஒன்று, மரமல்லி ஒன்று என்று வாங்கிக் குவித்திருந்தோம். வாங்கிய ஜோரில் இவை அனைத்துடனும் தினமும் காலையில் முழுதாய் அரைமணி நேரம் செலவளித்துப் பேசிக்கொண்டிருக்கும் வழக்கம் எனக்கிருந்தது. 

  செடிகளுடன் பேசுவதென்பது புதிதாய் பெற்றெடுத்த குழந்தையுடன் பேசுவதைப் போன்ற அதீத ஆனந்த அனுபவம் தரத்தக்கது.

  காலையில் ஒரு கையில் ஆவி பறக்கும் சூடான காஃபியுடன் சென்று மொட்டைமாடியில் வரிசை கட்டி தொட்டியில் அணிவகுத்திருக்கும் பூச்செடிகளின் மத்தியில் அமர்ந்தேன் என்றால், அவைகளின் சின்னஞ்சிறு அசைவும் கூட எனக்குப் பேச்சுக் கச்சேரி தான். மஞ்சள் ரோஜாக்கிளையின் மீது பரவத் துடிக்கும் சிவப்பு ரோஜாக்கிளையை கண்டித்து சின்னஞ்சிறு நூல்கொண்டு அதற்கு வலிக்காது சேர்த்துக் கட்டி இனிமே ‘இந்தப்பக்கம் வந்தா இப்படித்தான்’ என்று மெலிதாகக் கண்ணை உருட்டி கள்ளப்புன்னகையுடன் மிரட்டும் போது எனக்கே என்னைப்பார்த்து, ‘ஹே பைத்தியம் முத்திடுச்சு போல இருக்கே’ என்று தான் தோன்றும். ஆனாலும் செடிகளுடன் பேசுவதில் ஒரு ஆனந்தம்.

  அடுத்து நகர்ந்தால் பன்னீர் ரோஜாச்செடி... பச்சிளங்குழந்தையின் பிஞ்சுப் பாதமொத்த வெளிர் ரோஸ் நிறத்தில் விரியத் துவங்கி இருக்கும் அதன் மொட்டுக்களைக் கண்டால் தானாய் முகம் பல்ப் போட்டது போல ஒளிரத் தொடங்கிவிடும் எனக்கு. மொத்தம் எத்தனை மொட்டுக்கள் என்று எண்ணி வைத்துக் கொண்டு கொஞ்சம் தேங்காய்நார் + மட்கிய இலைகளை மேலாகத் தொட்டியில் தூவி பூவாளித்தண்ணீரால் அதன் உடலுக்கு அபிஷேகம் செய்தால் குழந்தையை மிருதுவாக குளிப்பாட்டிய திருப்தி கிடைக்கும். ‘இன்னும் நல்லா வளரனும் சரியா! இன்னும் நிறைய மொட்டு விடனும் கேட்டியா?!’ என்று செடியைப் பட்டும் படாமலும் ஆசையாக வருடி நகர்கையில் மனதுக்கு இதமாயிருக்கும்.

  அடர்சிவப்பு ரோஜா என் சின்ன மகளுக்கு ரொம்பப் ப்ரியமானது. உச்சிக் குடுமியில் தினமொரு ரோஜாவைக் கொய்து சூடி மகிழ அத்தனை ஆசைப்படுவாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு 2 வயது கூட நிரம்பியிருக்கவில்லை. காலையில் துயில் எழும்போதே ‘ம்மா... ரோஜாப்பூ பார்க்கப் போலாமா!’ என்று தான் எழுந்து வருவாள். என் குழந்தைக்காகத் தான் என்றாலும் செடியில் இருந்து ரோஜாக்களைப் பறிக்கும் போது மனசு வலிக்கும். 

  ‘ஐயோடா... பாப்பாக்குத்தானே பறிக்கறேன், என்ன மன்னிச்சுக்கடி குட்டிப்பூவே! பாப்பா வளர்ந்ததும் உன்னைப் பறிக்க மாட்டேனாம், என் செல்லம்ல, எம்பட்டுல்ல!’ என்று கொஞ்சிக் கெஞ்சி தினம் ஒரு பூப்பறித்து பாப்பா தலையில் சூட்டி விடுவேன்.

  பூக்கள் மட்டுமல்ல, துளிர் விடும் அதன் தளிர்கள் தரும் இதம் இருக்கிறதே அது பேரானந்தம்.

  மாந்தளிர் நிறத்து துளிர்கள் என் வரையில் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர்கள்.

  மனதில் எத்தனை சுமை இருந்தாலும் இந்தத் தளிர்களை ஒருமுறை கண் நிறைக்கப் பார்த்தால் போதும் சட்டென்று சுமை இறங்கி மனம் லேசாகிப் பறக்கத் தொடங்கி விடும்.

  மனதில் என்ன கஷ்டம் இருந்தாலும் இவர்களிடம் இறக்கி வைக்கலாம். இறக்கி வைப்பதென்றால் செடிகளிடம் வந்து நின்று கொண்டு கஷ்டங்களைச் சொல்லிப் புலம்புவதென்று அர்த்தமில்லை. அப்படியெல்லாம் செய்தீர்களென்றால் பிறகு நம் கஷ்டங்களின் சுமை தாங்காது செடிகள் பட்டுப் போய்விடக்கூடும். அப்படிச் செய்யவேண்டியதில்லை. மனம் சுமையேறி பாரமாய் உணரும் போது சும்மா வந்து செடிகளின் அருகில் நின்று பாருங்கள். செடிகளுடனான உறவு இறுகும் போது பேசவேண்டிய அவசியம் கூட இல்லை. சும்மா நின்றாலே போதும் பூச்செடிகள் நம்மை உணர்ந்து நம் சோகத்தை பெருமளவு குறைத்து விடும்.

  பூச்செடிகளுடன் ஒரே ஒரு கற்பூர வல்லிச் செடியையும் வளர்த்துப் பார்க்கலாம். சர்வரோக நிவாரணி அது! இரண்டு இலைகளைத் தண்டுடன் கிள்ளி நட்டு வைத்தாலே போதும் அப்படியே அடுக்கடுக்காகக் கிளைக்கத் தொடங்கி விடும். அதன் வாசம் இருக்கிறதே... ஆஹா புத்துணர்ச்சி பொங்கிப் பிரவகிக்க ஒரே ஒரு கற்பூர வல்லியை ஜன்னல் திட்டுத் தொட்டியிலாவது வளர்த்துப் பாருங்கள் நீங்களே உணர்வீர்கள்.

  கற்பூர வல்லியுடன் ஒரே ஒரு துளசிச் செடியும் இருந்தால் போதும் சாதாரண ஜலதோஷத்திற்கெல்லாம் கூட டாக்டரிடம் செல்லக்கூடிய சிரமத்தைக் குறைக்கலாம்.

  இந்தச் செம்பருத்தி இருக்கிறாளே, அவள் நாட்டுப்புறத்தாளோ, நகரத்து அடுக்குச் செம்பாவோ எப்படி இருந்தாலும் அவள் அழகு தான். அவளைக் கொய்து பூஜைக்கு வைத்து விடுவார் அப்பா. பறிக்காமல் செடியில் வைத்தும் பூஜிக்கலாமே அப்பா என்று பலமுறை சொல்லத் தோன்றியதுண்டு. ஆனால், சொன்னதில்லை. பூக்களைக் கொய்து பூஜிப்பது அவரது நம்பிக்கை, கொய்யாமல் செடியிலேயே விட்டு பூஜிப்பது என் நம்பிக்கை :)

  இட்லிப்பூ இருக்கிறதே அது நம் வீட்டு சேட்டைக்கார குட்டி வாண்டு மாதிரி.... தொட்டியில் பாதியும், தரையில் மீதியுமாய் குட்டிக்குட்டிப் பூக்களைச் சொரிந்து வைக்கும், பார்க்கக் கொள்ளை அழகு தான். ஆனால் ஏனோ கறுப்பு எறும்பும், சிவப்பு எறும்புமாய் அதன் வாசத்துக்குப் படை எடுத்து வரும். அதை விரட்ட எனக்குக் கொஞ்சம் சலிப்பு. ஏண்டீ இப்படி பூக்களைச் சொரிந்து வைக்கிறாய்? சும்மா இருக்க மாட்டாயா? என்று மெல்லத் தலையில் குட்டி காய்ந்த சிறுமலர்களை முறத்தில் வாரிக் கொட்டி விட்டு ‘அம்மாடியோவ், இம்மாம்பூவைக் கொட்டிட்டியா இன்னைக்கு?!’ என அதற்கு திருஷ்டி வழித்துச் சொடக்குப் போட்டால் தான் எனக்குத் திருப்தி!

  இந்த ஜாதிப்பூ இருக்கிறாளே! அவளுக்குத்தான் எத்தனை குறும்பு! சாயந்திரமானால் போதும் வாசம் மயக்கி இழுத்துச் சென்று தன்னருகில் நிற்க வைத்து விடுவாள்.

  கேந்திப்பூச்செடிகளை அவர்கள் குட்டிச்செடிகளாக இருக்கையிலேயே நான் கிணற்றடியில் இருந்து காபந்து பண்ணி கொத்தாகப் பறித்து வந்து தனித்தனியே நட்டு வைத்தேன். நட்ட செடிகள் வளர்ந்தன...வளர்ந்தன... வளர்ந்தனவே தவிர பூக்கக் காணோம். பலமுறை பாட்டியும், அம்மாவும் அதைப் பறித்து தூர வீசி விட்டு அந்த இடத்தில் தக்காளியோ, கொத்தவரையோ நடலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். நான் விடவே இல்லை. இருக்கட்டும்... மலராத செடியாகவே கூட இருந்து விட்டுப்போகட்டும் அதை பறித்து வீச மட்டும் கூடவே கூடாது என்று பிடிவாதமாய் இருந்ததில்... செடி  வைத்துப் பல மாதங்கள் கடந்த நிலையில் ஒருநாள் காலை வெயிலில் முதல் மஞ்சள் மொட்டு கண் பட்டுச் சிரித்தது.

  அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என்னவோ சொந்த மகள் வயதுக்கு வந்த சேதி கேட்ட அன்னையாக மனம் முழுக்க சந்தோஷம் பரவி கேந்திச்செடிகளைச் சுற்றிச் சுற்றி வந்து தொட்டுப் பார்த்து மொட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறம் கேட்பானேன்... பூக்களாகப் பூத்துத் தள்ளி விட்டுத்தான் ஓய்ந்தது கேந்தி!

  கேந்தியோடு ஒப்பிடுகையில் செவ்வந்தி சற்று சாத்வீகி. அவளது அடர் மஞ்சள் இவளுக்கு இல்லை. இவளது வெளிர் மஞ்சள் கண்ணுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி.

  மரமல்லியை வீட்டுக்கு வெளியே தெருவில் நட்டிருந்தோம். பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு. 

  இதெல்லாம் நான் பூச்செடி வளர்த்த கதை.... இந்த ஆர்வம் எனக்குள் வந்தது என் பாட்டியால்.

  என் பாட்டிகள் அத்தனை பேருமே செடிப் ப்ரியர்கள்.  அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு காய்கறிச்செடிகளுடன் பேசும் வழக்கம் இருந்தது. காய்க்காத கத்தரி, வெண்டை, தக்காளி, பருத்தி இத்யாதி, இத்யாதி செடிகளுடன் எல்லாம் அவர் பேசிக் கொண்டிருப்பார். காய்த்துத் தள்ளிய செடியிடமும் பேசுவதற்கு அவரிடம் விஷயம் இருந்தது.

  அப்பா வழிப்பாட்டிக்கு காய்கறிச் செடிகள் மட்டுமல்ல சற்று முன்னேறி தென்னை, கொய்யா மரங்களுடனும் வீட்டில் இருக்கும் சிற்றுயிர்களான பல்லி, கரப்பான் பூச்சி தெருவோரம் காணும் நாய், பூனை, கோழிகளென எல்லா உயிர்களுடனும் பேசும் வழக்கம் இருந்தது. இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததினால் எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டிருக்கலாம்.

  எதுவானால் என்ன?

  பாரதியின் ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ பாடலைப் போலத்தான் வாழ்க்கை சகலவிதமான பைத்தியக்காரத்தனங்களுடனும் சில நேரம் இன்பங்களும் சில நேரம் துன்பங்களுமாய் கழிந்து கொண்டிருக்கிறது.

  இதில் எனக்கொரு சோகம் என்னவென்றால்?

  ஓரிரு வருடங்களுக்கு முன்பு மே விடுமுறையில் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்த போது என் பூச்செடிகள் அத்தனையும் அருங்கோடையில் பட்டுப் போய் விட்டன.

  வளர்க்கத் தெரியாதவள் பிள்ளை பெற்ற கதை தான்!  ஒரே வாரத்தில் திரும்பி வந்து பார்க்கையில் இரண்டொரு ரோஜாச் செடிகள் குற்றுயிரும், குலையுயருமாய் லேசான பசுஞ் சுவாசத்துடன் இருந்தன. அவற்றையேனும் காப்பாற்றி விடலாம் என்று பார்த்தால்...

  நோ மை லார்ட் என் ரோஜாச்செடிகள் என்னை மன்னிப்பதாய் இல்லை. ஒரேயடியாக என்னை விட்டு விட்டுப் போய் விட்டன.

  பட்டுப்போய் தொட்டியில் வேருடன் இறுகிப் போயிருந்த அந்தச் செடிகளை மனம் பதற செடியில் இருந்து பறித்து நீக்கி குப்பையில் கொட்டிய போது மனம் கனத்துப் போனது. அன்றைக்கு முழுவதும் மூட் அவுட். நார்மலாக ஓரு முழு நாள் தேவைப்பட்டது. பிறகு முடிவு செய்து கொண்டேன். இனிமேல் ரோஜாச் செடிகளை வளர்ப்பதில்லை என.

  ஆம், என்னால் மீண்டும் ஒருமுறை ஆசையாசையாகச் செடிகளை வளர்த்து விடுமுறைக் காலங்களில் பராமரிக்க முடியாமல் இழக்க முடியாது என.

  அண்டைவீட்டுக்காரம்மா சொல்கிறார். ஒரு பாட்டிலில் நீர் நிரப்பி சிறு சிறு துளையிட்டு செடிகளுக்கருகில் மாட்டி விட்டுச் சென்றிருந்தால் போதும் செடிகளைக் காப்பாற்றி இருக்கலாம் என. 

  சென்னையின் வெயில் நாட்களைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. 

  ஆனால் இதை நான் முழு மூச்சாக நம்புகிறேன்... செடிகளுடன் பேசுவதென்பது புதிதாய் பெற்றெடுத்த குழந்தையுடன் பேசுவதைப் போன்ற அதீத ஆனந்த அனுபவம் தரத்தக்கது!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai