வால்நட்டில் போதை மருந்து கடத்திய பெண்! கடத்தல்காரர்கள் 8 அடி பாய்ந்தால் கஸ்டம்ஸ்காரர்கள் 16 அடி பாய்ந்தாக வேண்டிய நிர்பந்தம்!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பெண்ணொருவர் 3 கிலோ போதை மருந்தை 6 வால்நட் விதைகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற போது சுங்கப் பரிசோதனையில் பிடிபட்டார்.
வால்நட்டில் போதை மருந்து கடத்திய பெண்! கடத்தல்காரர்கள் 8 அடி பாய்ந்தால் கஸ்டம்ஸ்காரர்கள் 16 அடி பாய்ந்தாக வேண்டிய நிர்பந்தம்!

ஸ்மக்லிங்... 

ரெகுலர் சினிமா ரசிகர்களுக்கு ஸ்மக்லிங் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலிருக்காது. இந்திய சினிமா மட்டுமல்ல உலகத்திரைப்படங்களிலும் கூட கணக்கிலடங்கா ஸ்மக்லர் சீரீஸ் திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. இன்னும் வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. அந்தத் திரைப்படங்களில் காட்டப்படுவதைக் காட்டிலும் புது மாதிரியான நவீன உத்திகளை இன்றைய கடத்தல் காரர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதைப் பற்றியது தான் இந்தக் கட்டுரை.

ஸ்மக்லிங் அதாவது தங்கம், வைரம், விலையுயர்ந்த இதர உலோகங்கள், போதைப் பொருட்கள், அரிய விலை உயர்ந்த கடல்வாழ் உயிரினங்கள், சந்தனக் கட்டைகள், செம்மரக் கட்டைகள், யானைத் தந்தங்கள், புலி, யானை, முதலை, மான் முதலிய விலங்குகளின் தோல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு உலகம் முழுவதுமே பலத்த டிமாண்ட் உண்டு. இத்தகையக் பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு எனக் கடத்த விரும்புபவர்கள் பல்வேறு நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்.

சமீபத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்றொரு திரைப்படம் வெளிவந்ததே, நினைவிருக்கிறதா? அந்தப் படத்தில் வரும் கடத்தல்காரன், வைரங்களைக் கடத்த ரஸ்க் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி இருப்பான். ரஸ்க் வில்லைகளில் மெல்லிய துளைகள் இட்டு அதற்குள் பொடிப்பொடியான மிகச்சிறிய விலையுயர்ந்த வைரங்களை ஒட்டி அதன் மேல் மீண்டும் ரஸ்கு தூளைப் பூசி பழையபடி ரஸ்க் பாக்கெட்டுகளில் அடைத்து அவன் கடத்தலில் ஈடுபட்டிருப்பதைப் போல காட்டியிருப்பார்கள். இது ஒரு விதமான நூதனக் கடத்தல் என்றால்;

அயன் திரைப்படத்தில் நாடு விட்டு நாடு தங்கம் மற்றும் வைரக் கடத்தலில் ஈடுபடும் சூர்யா கதாபாத்திரம், வாட்டர் பாட்டில் மேல் ஒட்டப்படும் சுய விவர, விளம்பர ஸ்டிக்கரை அகற்றி அதனுள் பொடிப்பொடியான வைரங்களை ஒட்டிக் கடத்தலில் ஈடுபடுவதைப் போலக் காட்டியிருப்பார்கள். சிலர் தலையை மழுங்க மொட்டையடித்து விட்டு விக் மாட்டிக் கொண்டு அந்த விக்குக்குள்( பொய்முடி) கடத்தல் பொருட்களை வைத்துக் கடத்துவதாக பல திரைப்படங்களில் நாம் கண்டிக்கிறோம். 

இந்த வரிசையில் பட்டிலிடத் தக்க வகையில் தற்போது துபாயில் பெண்ணொருவர் மேற்கண்ட முறைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடும்படியான  புதுமையான முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துபாய் கஸ்டம்ஸ் தலைமை  இயக்குனர் அஹமத் மஹ்பூப் முஸாபிஹ் இதைப் பற்றிப் பேசுகையில், ‘இன்றைக்கெல்லாம் கடத்தல்காரர்கள் மிக சாமர்த்தியமாக யோசிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் கடத்தலுக்கு புதுப்புது ட்ரிக்குகளைக் கையாள்கிறார்கள். அவர்களது ட்ரிக்குகளை முறியடித்து கடத்தலைக் கண்டுபிடிக்க சுங்கத்துறை கடுமையாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதுவரை 14 கிலோ போதைப்பொருட்களை கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றியிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியில் திகைக்கச் செய்யும் விதமாக புதுப்புது விதமாக கடத்தல்களை முறியடிக்க வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு இருந்தது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பெண்ணொருவர் 3 கிலோ போதை மருந்தை 6 வால்நட் விதைகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற போது சுங்கப் பரிசோதனையில் பிடிபட்டார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை துபாய் விமானநிலைய வளாகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 973 வலிப்பு நோய் மருந்துகளில் ஒருபகுதியாகும் என துபாய் ஹலீஜ் டைம்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கடத்தல் வழக்கில், ஒரு நபர் தனது செல்ஃபோனின் பேட்டரியில் போதை மருந்தைத் திணித்து கடத்த முயன்ற போது சுங்கப் பரிசோதனையில் பிடிபட்டார்.
இப்போதெல்லாம் கடத்தல்காரர்கள் கடத்த வாய்ப்பு உள்ளதெனக் கருதும், நம்பும் எந்த ஒரு பொருளையும் விட்டு வைப்பதே இல்லை. சிலர் சிவப்பு பயிர்கள், பொம்மைகள், வாழைப்பழங்கள், சாக்லேட்டுகள் ஏன் அவரவர் வயிற்றையே கூட பொருட்களை மறைத்துக் கடத்துவதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். 

எனவே இத்தகைய விபரீத முயற்சிகளைக் கண்டறிய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அனேக நேரங்களில் சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கான அதிநவீன ஸ்கேனிங் சாதனங்களைத் தற்போது நாங்கள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம் என முசாபிக்  கூறினார்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இன் மூத்த ஆய்வாளரான நசீர் மதானி இதைப் பற்றிப் பேசுகையில், விமான நிலையத்தில் கைப்பற்றப்படும் கடத்தல் பொருட்களில் பெரும்பாலும் போதை மருந்துகள், ஆயுதங்கள், அரிதான விலங்குகள் மற்றும் தாவரங்கள், போலி கரன்ஸிகள், பில்லி சூனியம் செய்யப்பயன்படுத்தும் கருவிகள் (!!!), கள்ளத்தங்கம், திருட்டு நகைகள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் இதுவரையில் பிடிபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆக மொத்தத்தில் கடத்தல்காரர்கள் 8 அடி பாய்ந்தால், கஸ்டம்ஸ்காரர்கள் 16 அடி பாய்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பது தெளிவாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com