அதிர்ச்சியில் உறைய வைக்கும் சால்வடார் புகைப்படம்... புதைந்து போன அப்பா, மகளின் அமெரிக்க கனவுகள்!

அதிர்ச்சியில் உறைய வைக்கும் சால்வடார் புகைப்படம்... புதைந்து போன அப்பா, மகளின் அமெரிக்க கனவுகள்!

நேற்று முதல் ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கும் அப்பா, மகள் புகைப்படமொன்று அதைக் காண வாய்த்தோர் மனங்களை எல்லாம் ரம்பமாக அறுத்து ரணப்படுத்திக் கொண்டிருக்கிறது.  
Published on

நேற்று முதல் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அப்பா, மகள் புகைப்படமொன்று அதைக் காண வாய்த்தோர் மனங்களை எல்லாம் ரம்பமாக அறுத்து ரணப்படுத்திக் கொண்டிருக்கிறது.  

‘இப்படி எல்லாம் நடந்திருக்கக் கூடாது’ என்ற தவிப்பின் ஊடே, ஏன் நடந்தது? என்ற கேள்விக்கு விடை தேட முயன்றால், ஆம் வருடம் முழுவதுமே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற பதிலே கிடைத்தது. என்ன ஒரு வித்யாசம் என்றால், இன்று கிடைத்த சடலங்கள் உங்களை உணர்வுப் பூர்வமாக பாதித்திருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், யோசித்துப் பாருங்கள் சொந்த நாட்டில் வாழ வகையின்றி அந்நிய நாட்டில் புகலிடம் தேடும் அனைவரது வாழ்க்கையும் விதியின் கரங்களில் இப்படித்தான் பணயம் வைக்கப்படுகிறது.

அதில் மீள்வோர் உலகின் ஏதோ ஒரு மூலையில் அவரவருக்குத் தக்கபடி எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீள முடியாது விதியின் விளையாட்டில் வீழ்வோர் இப்படி அடுத்தவருக்கு பாடங்களாகி விடுகின்றனர்.

இப்போதும் நாம் என்ன செய்யவிருக்கிறோம்?

மெக்ஸிகோவின் ரியோ கிராண்டே நதிக்கரையில் உயிரிழந்த சடலங்களாக ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு புதைந்து கிடக்கும் அந்தக் குட்டிப் பெண்ணையும் அவளது அப்பாவையும் கண்டு ஒரு சொட்டுக்கண்ணீர் வடித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கை குறித்து ஒரு பாட்டம் தூற்றி விட்டு அப்படியே அமைதியாகி விடப்போகிறோமே தவிர வேறென்ன செய்து விட முடியும் நம்மால்?

யோசித்துப் பாருங்கள்;

அப்பா, மகள் மரணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா?

‘அந்த மரணங்கள் வருத்தத்திற்குரியது தான். இறந்து போன அப்பா, மகளைப் பார்க்கையில், அந்த இளைஞன் தன் மகளுக்கு மிக அற்புதமானதொரு தகப்பனாக இருந்திருப்பான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இது நிகழ்ந்ததற்கு அவர்கள் தானே காரணம், சட்டங்கள்  கடுமையாக மக்கள் மீற முடியாதவையாக இருந்தால் அவர்கள் இப்படி சட்ட விரோதமாக நதிமார்க்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்திருக்க மாட்டார்கள் அல்லவா? இன்று அவர்களது உயிரிழப்புக்கு காரணம் ஜனநாயகக் கட்சியினர் தான்’ - என்று அவர் தன் மீது வீசப்படும் விமர்சனக் கத்தியை அப்படியே எதிர்த்தாடி பூமராங் ஆக்கியிருக்கிறார்.

ட்ரம்ப் இப்படிச் சொல்லாதிருந்தால் தான் அது ஆச்சர்யம்!.

இறந்து போன சால்வடார் இளைஞர் ஆஸ்கர் அல்பெர்டோ மார்ட்டினெஸின் அம்மா, ரோஸா ரெமிரஸ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டது;

‘என் மகனிடம் நான் பலமுறை சொன்னேன், வேண்டாம் அந்த அமெரிக்க வாழ்க்கைக் கனவு என, ஆனால் அவன் கேட்கவில்லை, ஏனென்றால் இங்கிருந்த சூழல் அப்படி இருந்தது. இங்கே வறுமையில் உழன்று கொண்டிருப்பதை விட எப்படியாவது அமெரிக்க மண்ணை மிதித்து விட்டால் போதும், கடினமாக உழைத்து அங்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி விட்டால் வாழ்வில் நிம்மதியாக செட்டிலாகி விடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால், என் மகனது அமெரிக்கக் கனவு இப்படிச் சிதையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’  என்று அடக்க மாட்டாமல் கண்ணீர் விடுகிறார் ரோஸா.

ஆஸ்கருக்கு தன் மகள் வலேரியா மார்டினெஸ் மீது கொள்ளைப் ப்ரியம், அப்பா இல்லாமல் அவள் ஒரு நொடி கூட தனித்திருக்க மாட்டாள், அதனால் தான் மரணத்தால் கூட அவர்களைப் பிரிக்க முடியவில்லை போலும்’ என்று ஊடகங்களில் வெளியான தன் மகன் மற்றும் பேத்தியின் புகைப்படத்திலிருந்து கண்களை எடுக்கவொட்டாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ரோஸா.

உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் மெக்ஸிகன் செய்தி ஊடகம் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் பார்த்தால், 

ஆஸ்கர் அல்பெர்டோ மார்ட்டினெஸ் குடும்பம் கடந்த இரு மாதங்களாக தங்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் எனக் காத்திருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, குடியேற்றத்துக்கென அமெரிக்க அதிகாரிகள் கேட்ட சான்றிதழ்களைத் தங்களால் சமர்பிக்க முடியாத சூழலில் தனது அமெரிக்கக் கனவை புறக்கணிக்க முடியாமலும் குடும்பத்தின் பொருளாதாரச் சுமை காரணமாகவும் தான் ஆஸ்கர் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் நுழையும் முடிவை எடுத்திருக்கிறார். அவர்களுடன் இன்னும் சிலரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்திருக்கிறார்கள். ஆற்றைக் கடக்கும் போது முதலில் தன் மகளை அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் மீண்டும் நதியில் இறங்கியிருக்கிறார். ஆனால் குழந்தை வலேரியாவால் தன் தந்தை தன்னை தனியே விட்டு விட்டு நதியில் இறங்கிய செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தை, தந்தையைத் தேடி ஆற்றில் குதித்திருக்கிறது. இதைக் கண்டு திகைத்துப் போன ஆஸ்கர் மகளைக் காப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார். அதனால் தான் அவர்களது மரணப் புகைப்படங்களில், இறுதி நிமிடங்களிலும் கூட வலேரியா தன் தந்தையின் கழுத்தைக்கட்டிக் கொண்டிருப்பது புலனாகிறது.

எது எப்படியாயினும் இப்படியான துக்கச் சம்பவங்கள் உலகின் எந்த மூலையிலும் யாருக்கும் நடந்திருக்க கூடாது.

Image courtesy: NBC NEWS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com