மனுஷன்னா இப்படி இருக்கனும்யா... ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்!

மனுஷன்னா இப்படி இருக்கனும்யா... ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்!

முதலில் சிக்கிய கழிவுகளை மட்டுமே கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்த ப்ரியேஷ் பின் கடலில் மீன்களைத் தேடி அலைவது போல பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி அலையத் தொடங்கி இருக்கிறார். மீன்களுக்காக வலை விரித்து வைத்த

 KV ப்ரியேஷ் ஒரு மீனவர்...

ஆனால் இந்த 30 வயது இளைஞரின் வலையில் இப்போது மீன்களை விட அதிகம் சிக்குவது பிளாஸ்டிக் கழிவுகளே!

இப்படி கடந்த 3 மாதங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 3.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டு வந்து கரையில் கொட்டியிருக்கிறார். பொதுவில், ஒரு மீனவருக்கு இது மிகப்பெரிய எரிச்சலூட்டக்கூடிய நிகழ்வு. மீன்கள் சிக்குமென்று வலை விரிக்கும் போது அதில் மீன்கள் சொற்பமாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் எடையுடனுடம் சிக்கினால் அந்த மீனவரின் மனநிலை எப்படி இருக்கும்? கிடைத்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பெருங்கோபத்துடன் கடலில் விசிறி அடித்து விட்டு வந்து விட மாட்டார்களா என்ன? வாஸ்தவத்தில் யாராக இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள். ஆனால் பிரியேஷ் அப்படிச் செய்யவில்லை என்பதோடு சிக்கிய கழிவுகளை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகப் பலமுறை கரைக்கு எடுத்து வந்து கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். 

அப்போ இவர் வித்யாசமான மனிதர் தான் இல்லையா?

ப்ரியேஷ் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்...
ப்ரியேஷ் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்...

ப்ரியேஷுக்கு எப்படி வந்தது இப்படி ஒரு ஐடியா?

பள்ளிக்காலங்களில் படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த ப்ரியேஷுக்கு 8 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க குடும்பத்தின் வறுமையான சூழல் இடமளிக்கவில்லை. இதனால் வலையைத் தூக்கிக் கொண்டு கடலுக்குச் சென்று பிழைக்க வேண்டியவரானார். ஆனாலும், அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையாவது படித்தே ஆக வேண்டும் என்ற ஏக்கம் குறையவே இல்லை. எனவே 30 வயதில் 10 ஆம் வகுப்புக்கு இணையான அரசுத் தேர்வு எழுத தனியார் கல்வி மையத்தில் இணைந்து படித்து வந்திருக்கிறார். இதோ வரப்போகும் டிசம்பரில் பரீட்சை வருகிறது. எழுதிப் பாஸ் ஆனால் ப்ரியேஷ் பத்தாம் வகுப்பு முடித்தவர் ஆகி விடுவார். இந்நிலையில் ப்ரியேஷுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை ஸ்ருதி என்பவர், ஒருநாள் மாணவர்களிடம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். மறுநாள் மாணவர்கள் அனைவரும் தங்களது கட்டுரைகளுடன் வகுப்பறையில் ஆஜராகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் தங்களது சுற்றுப்புறங்களை, வாழ்விடங்களை, வீடுகளை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்வது? அவற்றைப் பாதிக்கும் பெரும்பான்மையான காரணிகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்கள் நிறைந்த கட்டுரைகளே! ஆனால், ப்ரியேஷுக்கு அவற்றைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் தனது தினசரிப் பிரச்னையான கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தலையாய கடமை போல தினசரி அப்புறப்படுத்தும் ஆர்வம் தனக்கு வந்தததாகக் கூறுகிறார் ப்ரியேஷ்.

முதலில் சிக்கிய கழிவுகளை மட்டுமே கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்த ப்ரியேஷ் பின் கடலில் மீன்களைத் தேடி அலைவது போல பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி அலையத் தொடங்கி இருக்கிறார். மீன்களுக்காக வலை விரித்து வைத்து விட்டு காத்திருப்பதைப் போலவே பிளாஸ்டிக் கழிவுகள் எங்கே அதிகம் கிடைக்கின்றன என்று வலையைப் போட்டுக் கொண்டு பலமணி நேரங்கள் நடுக்கடலில் காத்திருக்கத் தொடங்கினார். அப்படி அவர் சேகரித்துக் கொண்டு வந்து கொட்டியவை தான் மேற்கூறிய பிளாஸ்டிக் குப்பைகள்.

சரி ப்ரியேஷ் படிக்காதவர், அதிலும் மீனவர், இவரென்னவோ கடலுக்குப் போய் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்தால் ஊர் மக்கள் அதை அப்படியே ஒப்புக் கொள்வார்களா என்ன? அட நீ என்னய்யா சொல்ற? கடல் எம்மாம் பெருசு, அதுல பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தா நம்மால என்ன பண்ணிட முடியும்? என்று தட்டிக் கழிக்கத்தானே செய்வார்கள். அந்த புறக்கணிப்பு நிகழ்ந்து விடகூடாது என்று தான் முன்னதாக ஊர் பஞ்சாயத்தாரை அணுகிய ப்ரியேஷ், கடலில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் தான் எடுத்த புகைப்படங்களை ஊர் மக்களுக்கு காட்டியிருக்கிறார். அத்துடன், எப்போதெல்லாம் இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சிக்குகின்றனவோ அந்த இடங்களில் எல்லாம் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்திருப்பதாகவும், கழிவுகளை நீக்கிய பின் ஓரிரு நாட்களில் அதே இடங்களுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அப்போது அங்கே கணிசமாக மீன்கள் சிக்கிய வித்யாசத்தையும் ப்ரியேஷ் தன் கிராமத்தாருக்கு ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட கிராமப் பஞ்சாயத்தார் தற்போது ப்ரியேஷுக்கு உதவிகரமாக பிளாஸ்டிக் சுத்திகரிப்புக் கூடம் ஒன்றை ஊர்ப்பொதுவில் நிர்மாணித்துத் தந்திருக்கிறார்கள். அத்துடன் அவரது சேவையை அவ்வப்போது ஊக்குவிக்கவும் தவறுவதில்லை.

ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழைக் காலம் தொடங்கி விடுகிறது. எனவே கேரள் கடல் பகுதிகள் வழக்கத்தைக் காட்டிலும் கொந்தளிப்பாக இருக்கும். எனவே அந்த இரு மாதங்களிலும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நியாயமான காரணத்திற்கான தடையே என்றாலும் இந்த 2 மாதங்களுக்குள் கடலில் சேர்ந்து விடக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் எடையைப் பற்றிய பெருங்கவலையில் தற்போது ஆழ்ந்திருக்கிறார் ப்ரியேஷ். ஏனெனில் அந்த இரு மாதங்களிலும் நாட்டுப்படகுகளுக்கு மட்டுமே கடலுக்குச் செல்லும் அனுமதி உண்டு. அப்படிச் செல்லும் மீனவர்கள் கடல் கொந்தளிப்பின் காரணமாக மிகப்பெரிய துன்பங்களில் சிக்கி உழல்வார்கள். அவர்களை கடலில் இருந்து மீட்க  அரசு மீன்வளத்துறை சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அதில் என் படகையில் சேர்த்திருப்பதால், நான் தான் படகோட்டியாகச் செல்ல வேண்டும். அந்த வேலைக்கு நடுவே கடலில் பிளாஸ்டிக் சேகரிக்க முடியாது என்பது தான் எனக்கு தற்போது வருத்தமான செய்தியாக மாறியிருக்கிறது. விரைவில் இந்த 2 மாதங்கள் முடிந்ததும் மீண்டும் நான் என் பழைய வேலையைத் தொடங்கவிருக்கிறேன் என்கிறார் ப்ரியேஷ்.

கேரள மாநிலம் ஆழியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ப்ரியேஷுக்கு தற்போது கடலை மாசு படுத்தி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டு அதைப் பற்றி கூடுதல் விவரங்கள் அறியவும், அந்த விவரங்களை அய்வுக்கட்டுரைகளாக்கி உலகின் முன் வைக்கவும் மிகப்பெரிய விருப்பம் இருக்கிறது. குறிப்பாக பள்ளிகள் தோறும் சென்று குழந்தைகளிடத்தில் பிளாஸ்டிக் மாசு குறித்த விவரங்களைப் பகிரும் ஆசை நிறைய உண்டு என்கிறார். ஏனெனில் மாற்றம் என்பது எப்போதுமே குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தால் மட்டுமே அது முழு வாழ்க்கைக்குமான நிரந்தரப் பாடங்களாக மனதில் தங்க முடியும். எனவே பிளாஸ்டிக் மாசுபாட்டைப் பற்றி பெரியவர்களிடத்தில் பேசிப் புரிய வைப்பதைக் காட்டிலும் பள்ளிக் குழந்தைகளிடத்தில் எளிதில் புரிய வைப்பதே தனது நோக்கம் என்கிறார்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ப்ரியேஷ் தனது குடும்பத் தேவைகளுக்காக பார்ப்பது மீன்பிடி தொழில். ஒரு மீனவனாக கடலன்னைக்குச் செய்து கொண்டிருப்பது அழிந்து கொண்டிருக்கும் அதன் ஜீவனை பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்துதல் மூலமாக மீட்டு எதிர்கால மீனவர்களிடம் ஒப்படைப்பது மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.

ஏனெனில், யோசித்துப் பாருங்கள், 

  • நாம் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம், தீடீரென எதிர்ப்படுகிறது மூடியின்றித் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை, நம்மில் எத்தனை பேர் அதை மூடி விட்டோ அல்லது அது குறித்து புகார் அளித்து விட்டோ நம் பணியைத் தொடர்கிறோம்.
  • தெருக் குப்பைத்தொட்டியில் குப்பைகள் சேர்ந்து அப்புறப்படுத்த முடியாமல் கிடக்கிறது... நம்மில் எத்தனை பேர் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடியிருப்பு வாசிகளை ஒருங்கிணைத்து அதை உடனடியாக அப்புறப்படுத்த முயல்கிறோம்...
  • அவ்வளவு தூரம் போவானேன்? இரவில் மனநலமற்ற வயதான பெண்மணி சாலையோரம் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றால் நம்மில் எத்தனை பேரு அவரை உரிய முறையில் விசாரித்து காவல்துறைக்கு தகவல் அளித்து குடும்பத்தாரிடம் சேர்க்க நினைப்போம்?

இப்படி நீளும் பொதுநலக் கேள்விகளில் ஒன்றில் கூட தேறாதவர்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கும் இந்த தேசத்தில் ப்ரியேஷ் போன்ற மனிதர்கள் அரிதானவர்கள் தான் இல்லையா?! அதனால் தான், 

ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com