எது எகனாமிக்கலி குட் மென்சுரல் கப்பா? மென்சுரல் பேடா? வாங்க வரலாற்றைச் தெரிஞ்சுக்குவோம்!

இத்தகைய சிலிக்கான் மென்சுரல் கப்களின் காலம் 2005 முதல் தொடங்குகிறது. இதை ஸ்தாபித்தவர்கள் ஹெலி குர்ஜனென் & லுன்னெட் ஃபவுண்டர். இவர்களது மென்சுரல் கப்களின் ஸ்பெஷல் என்னவென்றால் இவற்றைக் கழுவி மீண்டும் ர
எது எகனாமிக்கலி குட் மென்சுரல் கப்பா? மென்சுரல் பேடா? வாங்க வரலாற்றைச் தெரிஞ்சுக்குவோம்!

மாசமானால் இதற்காக மட்டுமே 300 ரூபாய்களுக்கு குறைவில்லாமல் எடுத்து வைக்க வேண்டியதாய் இருக்கிறது. 

‘சாதாரண பேட் எல்லாம் யூஸ் பண்ண முடியாது. எனக்கு 88 ரூ பேட் தான் வேணும்... வேற வாங்கி வச்சீங்கன்னா நான் அதை யூஸ் பண்ண மாட்டேன், டஸ்ட் பின்ல வீசிடுவேன்... காலங்காலையில் பொரிந்து கொட்டி விட்டு பள்ளிக்குச் சென்று விட்ட 14 வயது மகளை எண்ணியவாறு ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் சுலோசனா. ஈவினிங் வீட்டுக்குப் போகும் போது மெடிக்கல் ஷாப்ல அவ கேட்கற மென்சுரல் பேடையே வாங்கிக் கொடுத்துட வேண்டியது தான், இதுல எல்லாம் சிக்கனம் பார்த்து குழந்தையை ஏன் சங்கடப் படுத்தனும்?... என்ற கதியில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. நேரம் பார்த்து ஸ்மார்ட் ஃபோனை தூக்கிக் கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் ஆமினி. 23 வயது சின்னப் பெண். சுலோசனாவை விட 12 வயது சின்னவள். சுலோசனாவின் ஆஃபீஸில் தான் அவளுக்கும் வேலை. இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் ஒரே ஏரியாவில் இருந்து இந்த ஆஃபீஸுக்கு வந்து செல்வதால் வாகனங்களை பகிர்ந்து கொண்ட வகையில் நெருக்கமான நட்பாகி விட்டார்கள். ஆமினிக்கு, தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத சில சங்கடமான சந்தேகங்களை எல்லாம் ஒரு சகோதரியைப் போல சுலோசனாவிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு இருவரும் உடன்பிறவா சகோதரிகள் போல நட்பாகி விட்டனர்.

ஸ்மார்ட் ஃபோனைத் தூக்கிக் கொண்டு வருகிறாள் என்றால், ஏதோ புடவை, சல்வார் கமீஸ் மெட்டீரியல், இல்லை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏதேனும் ஆர்ட்டிஃபீஷியல் ஜூவல்லரி என ஏதாவது செலவிழுத்து வைக்கப் போகிறாளோ? என்று சுலோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்த ஆமினி, 

‘அக்கா, இந்த விடியோ பாருங்களேன். ஒரு லேடி டாக்டர் மென்சுரல் கப் பத்தி விலாவாரியா பேசறாங்க, நானும் இவ்ளோ நாளா, இதைப் பத்தி என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கிட்டக்கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கேன். ஆனா, ஒருத்தியும் ஒழுங்கா பதில் சொன்னதே இல்லை. யூஸ் பண்ணிப் பாருடீ.. .உனக்கே தெரியும்னு மழுப்பிடுவாளுங்க. ஆனா, இவங்க ரொம்பத் தெளிவா சொல்றாங்க, நீங்களும் பாருங்க, என்று ஃபோனை நீட்டினாள்.

சுலோவுக்கு அந்த நேரத்தில் அதைப் பார்க்க விருப்பமில்லை, இருந்தாலும், சின்னப்பெண் காரணமில்லாமல் இதை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்துப்பார்க்கச் சொல்ல மாட்டாள், முடிவில் ஏதாவது சந்தேகம் இருக்கும். அதைக் கேட்கத் தான் இப்படி வந்து நீட்டுகிறாள் என்றெண்ணி ஃபோனை வாங்கிப் பார்க்கத் தொடங்கினாள்.

அதில் மகப்பேறு மருத்துவர்  ஒருவர், மென்சுரல் கப் பற்றி பேசத் தொடங்கியிருந்தார்.

மென்சுரல் கப்பின் வரலாறு... 

1930 களில் உலகின் முதல் மென்சுரல் கப் இப்படித்தான் இருந்தது...

மென்சுரல் கப் என்னவோ இப்போ தான் புதுசா கண்டுபிடிக்கப் பட்ட மாதிரி நாம நினைச்சுக்கறோம். அப்படி இல்லை. இது 1860 - 70 களிலேயே அமெரிக்காவில் புழக்கத்தில் வந்து விட்டது. ஆரம்பகாலங்களில் இடுப்பைச் சுற்றி ஒரு பெல்ட் போன்ற வளையமிருக்கும் அந்த வளையைத்தில் இந்த மென்சுரல்கப்பை இணைத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் கப்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே சுத்தம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இந்த மாடலை ‘கேட்டமினியல் சாக்ஸ்’ என்ற பெயரில் பதிவு செய்து அதற்கு அந்தக் காலத்தில் காப்புரிமையும் பெறப்பட்டிருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இவை அந்தக் காலத்தில் பெரிய அளவில் மார்க்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவில்லை.

பின்னர் 1937 ஆம் ஆண்டு அமெரிக்க நடிகை லியோனா சால்மர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான் கிட்டத்தட்ட இன்று நாம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோமே அது போன்றதொரு தோற்றம் கொண்ட மென்சுரல் கப்.

சால்மர் கண்டுபிடித்த மென்சுரல் கப்கள் லேட்டக்ஸ் ரப்பரால் தயாரிக்கப்பட்டவை. அதற்கென அவர் காப்புரிமையும் பெற்றிருந்தார்.  ‘இதை அணிந்து கொள்வதால் பெண்கள் மிக செளகர்யமாக உணர்வார்கள். இப்படி ஒரு வஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைப்போ, அசெளகர்ய நினைப்பு அவர்களுக்கு கொஞ்சமும் இருக்காது. அத்துடன், முந்தைய கண்டுபிடிப்புகளைப் போல இவற்றின் இருப்பை உணர்த்தும் வகையிலான பெல்ட் அல்லது முடிச்சுகள் போன்ற எந்த ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இதில் இல்லை என்பதே இதன் கூடுதல் சிறப்பம்சம்’ என அதன் காப்புரிமையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது லேட்டக்ஸ் ரப்பருக்கு டிமாண்ட் அதிகரித்தது. அதன் உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. எனவே சால்மரின் கம்பெனி, தனது தயாரிப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தபின் 1950 ல் மிஸஸ். சால்மர் தனது தயாரிப்பில் மேலும் கூடுதல் வசதிகளைப் புகுத்தி நவீனப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். 

1930 ஆம் ஆண்டு வாக்கில் Tass-ette என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்த மென்சுரல் கப்கள் Tassette என்ற ஒரே பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் மிகப்பெரிய விளம்பர அறிமுகத்துடன் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது இந்த மென்சுரல் கப்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 1000 கணக்கான சாம்பிள்கள் அமெரிக்காவில் மருத்துவமனைகள் தோறும் இருந்த நர்ஸ்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. ஆனால், 30 களில் வாழ்ந்த பெண்களைக் காட்டிலும் 50 களில் வாழும் பெண்களிடம் மனதளவில் மென்சுரல் கப்கள் பயன்படுத்துவதில் மாற்றம் இருந்த போதிலும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலான ரீயூஸபில் மென்சுரல் கப்கள் இழிவானவை என்ற கண்ணோட்டமே விஞ்சி நின்றது. 

பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை எதிர்நோக்கியிருந்த Tassette க்கு எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்காத காரணத்தால் 1963 வாக்கில் அது காணாமல் போனது.
 
Tassette ஐப் பொறுத்தவரை அதன் தோல்விக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டவை 2. அவை;
1. பெண்கள், அந்த வகை நாப்கின்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு மீண்டும் அதைக் கழுவிப் பயன்படுத்த அசூயைப் பட்டது அதற்கான அசெளகர்யங்களில் ஒன்றாக இருந்தது.
2. செளகர்யமாக உணர்ந்த பெண்களும் கூட ஏன் மறுபடியும் மென்சுரல் கப்கள் வாங்கவில்லை என்றால். ஒருமுறை வாங்கியதே நெடுநாட்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்த காரணத்தால் மீண்டும் மென்சுரல் கப் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வந்தது. 

இதன் காரணமாகவே 1970 ஆம் ஆண்டு வாக்கில் மகளிரின் இருவகையான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் Tassaway என்றொரு டிஸ்போஸபிள் மென்சுரல் கப் அறிமுகமானது.

இதற்கான டிமாண்டில் எந்தக் குழப்பமும் பிறகு வரவில்லை. அந்தக் காலத்தில் ஐரோப்பாவிலும், ஃபின்லாந்திலும் கிடைத்த ஒரே டிஸ்போஸபிள் மென்சுரல் கப் என்ற பெயரும், பெருமையும் இதற்கு கிடைத்தது.

பின்னர், 1980 ஆம் ஆண்டு வாக்கில் மென்சுரல் கப்கள் ‘ The Keeper' என்ற பெயரில் உலகம் முழுவதும் மீள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்று வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பவை இத்தகைய மாடல்களையே. இவை லேட்டக்ஸ் ரப்பரால் செய்யப்பட்டவை.
21 ஆம் நூற்றாண்டு வாக்கில் மென்சுரல் கப் தயாரிப்பில் மெடிகல் கிரேட் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டது. இது தான் இன்றைய நவீன யுக பல்வேறு டிஸைன் மென்சுரல் கப்களின் தோற்றத்துக்கான மூலவிதை. இன்று லேட்டக்ஸ் ரப்பர் மென்சுரல் கப் அலர்ஜி என்பவர்கள் தாராளமாக சிலிக்கான் மென்சுரல் கப்களுக்கு மாறிக் கொள்ளலாம். இதில் அலர்ஜி பயமோ, பக்க விளைவுகளோ கிடையாது.

இத்தகைய சிலிக்கான் மென்சுரல் கப்களின் காலம் 2005 முதல் தொடங்குகிறது. இதை ஸ்தாபித்தவர்கள் ஹெலி குர்ஜனென் & லுன்னெட் ஃபவுண்டர். இவர்களது மென்சுரல் கப்களின் ஸ்பெஷல் என்னவென்றால் இவற்றைக் கழுவி மீண்டும் ரீயூஸ் செய்வதால் அலர்ஜி எதுவும் வர வாய்ப்பில்லை. காரணம் இவற்றின் ஃப்ளாட் வடிவமைப்பு. அது மட்டுமல்ல மிக மெல்லியவை என்பதால் பயன்படுத்துப் போது வலி இருப்பதில்லை. ஒருமுறை அணிந்து கொண்டால் பிறகு அதை அணிந்திருக்கிறோம் என்ற உணர்வே எழாத அளவுக்கு அத்தனை செளகர்யமான உணர்வைத் தரும் என்பது இதற்கான கூடுதல் பிளஸ்கள்.

அதனால் தான் இத்தகைய மென்சுரல் கப்கள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படி மென்சுரல் கப்பின் வரலாற்றைச் சொல்லி முடித்து விட்டு அடுத்தபடியாக மென்சுரல் கப்களுக்கான அவசியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் மருத்துவர்;

மென்சுரல் கப்களின் அவசியம் என்ன?

மென்சுரல் பேட்களே ஏகப்பட்ட பிராண்டுகளில் நிறைய வெரைட்டிகள் வரத் தொடங்கியுள்ள இந்த நாட்களில் மென்சுரல் கப்களின் அவசியம் என்ன என்று நிறைய பேர் யோசிக்கலாம். நியாயமான யோசனை தான் அது. ஆனால், இப்போது வரக்கூடிய மென்சுரல் ஃபேடுகளில் நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக சந்தேகம் உண்டு. அத்துடன் பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பைப் பை மற்றும் செர்விக்கல் கேன்சருக்கு இந்த பேடுகள் கூடக் காரணமாகக் கூடிய வாய்ப்புகள் அனேகம், அப்படி இருக்கும் போது முற்றிலும் பாதகம் அற்ற சிலிக்கான் பேஸ்டு மென்சுரல் கப்களைப் பயன்படுத்திப் பழகிக் கொள்வது நல்லது தானே!

விலை மலிவானவை! 

அது மட்டுமல்ல, இன்றைக்கு மார்கெட்டில் ஆர்கானிக் மென்சுரல் பேடுகள் கிடைத்தாலும் அவற்றின் விலையோடு ஒப்பிடுகையில் மென்சுரல் கப்கள் மிக மலிவானவை. அத்துடன் ஒருமுறை வாங்கி சுகாதாரமான முறையில் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து விட்டால் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பயமே இல்லை. அந்தளவுக்கு அதன் விலை ஓரிரு ஆயிரங்களுக்குள் தான். என்றார்.

மென்சுரல் கப்களைப் பயன்படுத்துவது எப்படி?

இதைப் பயன்படுத்துவதும் வெகு எளிது. இந்தியன் டாய்லட்டுகளில் உட்காரும் போஸில் கால்களை அகட்டி அமர்ந்து கொண்டு, மென்சுரல் கப்பை நீளவாக்கில் இரண்டாக மடித்து பெண்ணுறுப்பின் உள்ளே பொருத்திக் கொண்டால் சக்ஸன் ஃபார்முலாவில் இயங்கக் கூடிய இந்த கப்கள் உள்ளே சென்றதும் விரிந்து அதன் பழைய கூம்பு வடிவ நிலைக்குத் திரும்பி விடும். அவ்வளவு தான். குறைந்த பட்சம் 8 மணி நேரம் தாங்கும். பிறகு மீண்டும் வெளியில் எடுத்து வாஷ்பேஸின் அல்லது பாத்ரூம் டாய்லெட்டில் கொட்டி சுத்தம் செய்து விட்டு ஸ்டெரிலைஸ் செய்து மறுமுறை பயன்படுத்தலாம்.

ஸ்டெரிலைஸ் செய்யும் முறை...

குழந்தைகளுக்கு பால் பாட்டில் ஸ்டெரிலைஸ் செய்து பழக்கமுள்ளவர்களுக்கு இது மிக எளிது. அதே விதத்தில் ஒரு பாத்திரத்தில் 20 நிமிடங்கள் நீரைக் கொதிக்க விட்டு அதில் மென்சுரல் கப்களைப் போட்டு 5 நிமிடங்களின் பின் வெளியில் எடுத்தால் முடிந்தது.

மென்சுரல் கப்பை வெளியில் எடுக்கும் முறை...

மென்சுரல் கப் பயன்படுத்தும் போது, அதை வெளியில் எடுக்க வேண்டுமென்றால், முன்னதாகச் சொன்னவாறு அது சக்ஸன் ஃபார்முலாவில் இயங்கக் கூடியது என்பது தெரியுமில்லையா? அதனால் அப்படியே அதன் காம்புப் பகுதியைப் பிடித்து இழுக்காமல். கையை உள்ளே விட்டு கப்பை உட்புறமாக மிருதுவாக அழுத்தி மடித்துப் பின் வெளியில் இழுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தோலுடன் ஒட்டிக் கொண்டு எரிச்சலை ஏற்படுத்தி விடக்கூடும். அதில்லாமல் காப்பர் டி கர்ப்பத்தடை சாதனம் பொருத்தி இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தி விட்டு யோசிக்காமல் அப்படியே இழுத்தீர்கள் என்றால் கப்புடன் அந்த சாதனமும் வெளியில் உருவிக் கொண்டு வந்து விடக்கூடும். எனவே அம்மாதிரி சூழலில் பொறுமையாக அதை வெளியில் எடுக்க முயல வேண்டும். ஓரிரு முறை பயன்படுத்திப் பார்த்து விட்டீர்கள் என்றால் பழகி விடும்.

விடியோவை முழுவதுமாகப் பார்த்து முடித்த சுலோசனாவுக்கு, இப்போது தன் மகளுக்கு இதை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. உடனே ஆமினியை அருகே அழைத்து, ஆமாம், இந்த டாக்டர் ரொம்பத் தெளிவாவும், விளக்கமாவும் சொல்றாங்கப்பா, உனக்கு ஓக்கே ன்னா வாங்கி யூஸ் பண்ணித்தான் பாரேன்’ என்றாள்.

நீங்களும் கூட மாறிடுங்கக்கா, நாமளும் ஃபேஷன் தான்னு இப்ப அவங்க தெரிஞ்சுக்கட்டும்’ என்று பழைய மென்சுரல் ஃபேடு விளம்பர பாணியில் ஆமினி சொல்ல’ சுலோசனாவுக்கு சிரிப்பு வந்தது.

சரி போய் வேலையைப் பார் பெண்ணே’ என்று அவளை திருப்பி விட்டு தானும் வேலைக்குள் மூழ்கிப் போனாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com