ஃபேஸ்புக் புகழ் போலி ஐபிஎஸ் ஆஃபீஸர் கைது! 

மூன்று நட்சத்திரங்கள் பொரித்த அரசு வாகனம் என்பது காவல்துறையில் DG மற்றும் ADG ரேங்க் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து அடையாளம். 20 வயதுக்குள் எந்த காவல்துறை அதிகாரிக்கும் இத்தகைய 
ஃபேஸ்புக் புகழ் போலி ஐபிஎஸ் ஆஃபீஸர் கைது! 

இந்த இளைஞனின் புகைப்படத்தைப் பாருங்கள்.

பெயர் அபய் மீனா. வயது 20. அதற்குள் ஊருக்குள் எங்கு செல்வதாக இருந்தாலும் ஐ பி எஸ் என்று சொல்லி மூன்று நட்சத்திரங்கள் பொறித்த காவல்துறை போலி வாகனத்தில் சென்று மிடுக்காக இறங்கி பல்வேறு விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊரை ஏமாற்றி இருக்கிறான்.

எப்போதிருந்து இவன் இந்த வேலையைத் தொடங்கி இருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது வகையாக மாட்டிக் கொண்டான். சில விழாக்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட இவனுடன் கலந்து கொண்டு சம இருக்கையில் அமர்ந்து சிரித்துப் பேசி, இவனது பாராட்டுகளில் திளைத்துக் கை தட்டிக் களைந்திருக்கிறார்கள். ஏன் யாருக்குமே சந்தேகம் வரவில்லை என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது மட்டுமல்ல, பலவேறு தனியார் கல்லூரிகள் மற்றும் போட்டித் தேர்வு மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் இவன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறான். அங்கெல்லாம் ஐ ஐ டி தேர்வுகளுக்கும், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் வெற்றிகரமாகத் தயாராவது எப்படி? என்று  டிப்ஸ் அளித்திருக்கிறான். இத்தனைக்கும் இவன் பள்ளி இறுதி வகுப்பைக் கூடத் தாண்டவில்லை என்கின்றன இவனது பள்ளிச் சான்றிதழ்கள்.

எப்படி சாத்தியமானது இத்தனை பெரிய ஏமாற்று வேலை?

மொத்த ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகளும் திகைத்துப் போய் இவனைப் பற்றிய வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையின் சிறப்புச் செயல்பாடுகள் பிரிவைச் சார்ந்த SOG (ஸ்பெஷல் ஆபரேசன்ஸ் க்ரூப்) காவலர்கள் அபய் மீனாவை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுற்றி வளைத்துப் பிடித்த பின்னர் தெரிய வந்திருக்கிறது அவனது வண்டவாளங்கள்.

மூன்று நட்சத்திரங்கள் பொரித்த அரசு வாகனம் என்பது காவல்துறையில் DG மற்றும் ADG ரேங் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து அடையாளம். 20 வயதுக்குள் எந்த காவல்துறை அதிகாரிக்கும் இத்தகைய சிறப்புச் சலுகை வழங்கப்படுவது இல்லை. அபய் மீனா மீது சந்தேகம் எழ முதல் காரணம் இதுவே, அடுத்தபடியாக SOG பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு அபயின் அடையாள அட்டையிலும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவனது அடையாள அட்டையில் காணப்பட்ட முக்கியமான ஸ்பெல்லிங் மிஸ்டேக். அவனது அடையாள அட்டையில் Crime  Branch என்பதில் branch என்பதற்கு பதிலாக branche என்றும் capitol என்பதற்கு பதிலாக Capitol என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு சந்தேகம் கொண்ட காவலர், அதைத் தனது உயரதிகாரிக்குத் தெரியப்படுத்தவே, அதன் பின்னரே அபய் மீனா மீதான சந்தேகம் வலுத்து அவனைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் முழு வேகத்தில் ஆராயப்பட்டிருக்கின்றன. 

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த இளைஞன், டெல்லியில் ACP யாகப் பணிபுரிவதாக தன்னைப் பற்றி பிறரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில், தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொருத்தமான எழுச்சி வாசகங்களுடன் பகிர்வது இவனது வழக்கமாக இருந்திருக்கிறது. கடைசியாக கடந்த மே 11 ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததோடு சரி, அதன்பின் அபய் மீனாவின் அட்டகாச ஒளி பொருந்திய போலிப் பெருமித வாழ்வில் கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டன.

காவல்துறை அதிகாரி என்று எண்ணி, தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள இவனை அணுகிய பல்வேறு நபர்களிடம் ஏமாற்றிப்  பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் பணத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்கு அபய் மீனா பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, அபய் மீனாவும் அவனுடைய லைஃப் பார்ட்னரும் இணைந்து டெல்லி, ராஜஸ்தானில் இருக்கும் ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று பார்ட்டி செய்திருப்பதும், பல முறை உணவருந்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. எங்கும் இவர்கள் கட்டணம் செலுத்தியிருக்கவில்லை. தான் ஒரு ACP என்று சொல்லியே பல்வேறு விதமான சலுகைகளை இலவசமாக அனுபவித்திருக்கிறான். இத்தனையும் காவல்துறை விசாரணையில் தற்போது தெரிய வந்திருக்கிறது.

வழக்குகளை தீர்த்துக் கொள்ள தனிப்பட்ட முறையில் அபய் மீனாவை யாரெல்லாம் அணுகியிருக்கிறார்கள். அவர்களிடம் இவன் பெற்ற தொகை குறித்த விவரங்கள். மற்றும் இவனால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது என ராஜஸ்தான் SOG பிரிவு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மக்களின் கற்றல் சதவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க இதுபோன்ற நூதன ஏமாற்றுக்காரர்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். காரணம், என்ன தான் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்த போதிலும் மக்கள் இம்மாதிரியான போலிகளைக் கண்டு ஏமாறுவதற்கான காரணம், எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பாராமல், மேம்போக்காக மனிதர்களை அவர்களின் பகட்டின் அடிப்படையில் நம்புவது தான்.

ஒரு 20 வயது இளைஞன், தன்னை காவல்துறை உயரதிகாரி எனச் சொல்லி பல நிஜ காவல்துறை அதிகாரிகளை ஏமாற்ற முடியும் என்றால் இந்த நாட்டில் சாமான்ய மக்களை எதைச் சொல்லி வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும் எனப் பல நூதனத் திருடர்கள் நம்புவது அப்பட்டமாகத் தெரிகிறது. 

20 வயதில் ஒருவன், ஐ பி எஸ் பரீட்சையையையும், ஐ ஐ டி சிவில் இஞ்சினியரிங் தேர்வையும் வெற்றிகரமாக கடந்து விட்டதாகச் சொன்னால், உடனே அவனது பின்னணியை ஆராயாமல், அவனது பகட்டு வார்த்தைகளை நம்பி, அவன் சமூக ஊடகங்களில் பகிரும் அட்டகாசமான புகைப்படங்களை நம்பி உடனே அவனை தனியார் விழாக்களுக்கும், அரசு அதிகாரிகளிடையே உரையாற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் அங்கீகரித்து வரவேற்று பெருமைப்படுத்தினால் அவன் என்ன செய்வான்? அடடா... கிடைத்த வரை லாபம் என்று மொத்த பேரையும் இதுநாள் வரை முட்டாளடித்து வந்திருக்கிறான்.

அபய் மீனா விவகாரத்தில், கடந்த வெள்ளியன்று அவனை அவன் தங்கியிருந்த ஜகத்புரா அபார்ட்மெண்ட் வளாகத்தில் காவல்துறை SOG  சுற்றி வளைத்து கையும், களவுமாகக் கைது செய்த பின்னரும் கூட அவன் அசந்ததாகத் தெரியவில்லை. உடனடியாகத் தன்னுடன் தொடர்பில் இருக்கும் நிஜ காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக புகார் அளித்திருக்கிறான். ஆனால், அவன் மீதான குற்றத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கிறபடியால் அவனால் இம்முறை தப்ப முடியாமலாகி விட்டது.

மக்கள் உஷாராக இல்லாவிட்டால் இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

திருடர்களை அல்ல இனிமேல் நல்லவர்கள், திறமைசாலிகள் என வேடம் போட்டுக் கொண்டு வருபவர்களையும் கண்டுபிடித்து இனம் காணும் அளவுக்கு மக்களின் உள்ளுணர்வின் திறன் அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் தற்காலத்தில் அதிகரித்திருப்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு உதாரணம்.

இவர்களை அடையாளம் காணாமல் விட்டால், அபய் மீனா செய்த குற்றத்தின் வீரியம் எந்த அளவுக்கு கெடுதல் விளைவிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்படிப்பட்டவர்கள், தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்து ஏமாற்றத் தயாராக இருப்பார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்களிலும் கூட ஈடுபடுவார்கள். 

இந்த இளைஞன் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தனது புகைப்படங்களைப் பதிவேற்று ஆக்டிவாக இருந்திருக்கிறான், அங்கே இவனுக்கு ரசிகர்கள் வேறு அனேகம் பேர் இருந்திருக்கிறார்கள். இவன் ஒவ்வொருமுறை தனது போலி அரசு வாகனத்தில் டிராஃபிக் சிக்னல்களைக் கடக்கும் போது ஒரு டிராஃபிக் காவலருக்குக் கூடவா இவன் மீது சந்தேகம் வரவில்லை? என்று நெட்டிஸன்கள் தற்போது கொதிக்கிறார்கள். அதுசரி!

தற்போது கைதாகி ஜெய்பூர், பிரதாப் நகர் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அபய் மீனா மீது போலி காவல்துறை அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றியதாக வழக்குப் பதியப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக SOG காவல்துறை அதிகாரி சஞ்சய் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X