சுடச்சுட

  

  ஒரு மாடலிங் கேர்ள் இந்த சமூகத்தை நோக்கி வீசியெறிந்த அணுகுண்டு கேள்வி!

  By RKV  |   Published on : 23rd May 2019 03:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  000_modeling_girl

   

  கலாட்டா.காமில் சமீபத்தில் ஒரு குறும்படம் பார்க்க வாய்த்தது. படம் மாடலிங் உலகின் இருட்டுப் பக்கங்களைப் பற்றியது. அனாதை ஆசிரமத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு (ஏஞ்சலினா) மாடல் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை வரக் காரணம், அதே ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்து சூப்பர் மாடலான மற்றொரு பெண் குழந்தையின் வளர்ச்சியே! மதுபாலா எனும் அந்த மாடலைப் பற்றி அறிய நேர்ந்த நொடியில் இருந்து இந்தப் பெண்குழந்தைக்கு தானும் ஒரு மாடலாக வேண்டும் என்ற ஆசை உந்தப்பட்டு மதுபாலா குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்தித் துணுக்குகளை சேகரிக்கத் தொடங்குகிறாள். ஒருமுறை தான் பிறந்து வளர்ந்த ஆசிரமத்தைப் பார்வையிட வரும் மதுபாலாவின் கண்களில் இவளது சேகரிப்புகள் படுகின்றன. மதுபாலா, தன் மீது இந்த இளம்பெண்ணுக்கு இத்தனை ஆர்வமா என்று அவளைப் பாராட்ட, இருவரும் இணைந்து நிற்க புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அந்தப் புகைப்படத்தை எடுத்த கேமிராமேனுக்கு ஏஞ்சலினா போன்ற ஒரு புதுமுகம் லட்டு மாதிரி மாடலிங் துறைக்கு பொருத்த முகவெட்டுடன் கிடைத்ததும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். 

  மதுபாலாவுடனான புகைப்படம் தவிர, ஏஞ்சலினாவை மட்டுமே தனியாக ஃபோகஸ் செய்து தான் எடுத்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை அவர் பெண்கள் பத்திரிகைகளுக்கு அனுப்ப மாடலிங் வாய்ப்புகள் ஏஞ்சலினாவைத் தேடி வரத் துவங்குகின்றன. தனக்கு வாய்ப்புகளைத் தேடித் தந்த கேமிராமேனை வழிகாட்டியாகக் கொண்டு ஏஞ்சலினா மாடலிங்கில் முன்னேறத் துவங்குகிறார். மாடலில் இருந்து சூப்பர் மாடல் நிலைக்கு முன்னேற வேண்டுமென்றால் வாய்ப்புகளை அடைய தயாரிப்பாளர்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும் எனும் வற்புறுத்தல் ஏஞ்சலினாவைத் துரத்த அவள் கேமிராமேன் அபிநவ்விடம் ஆலோசனை கேட்கிறாள். சுயநலத்திற்காக அந்தப் பெண்ணை மாடலிங் துறைக்குள் அழைத்து வந்த மனிதன் தானே அவன், அவனும் அவளை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில் தவறொன்றும் இல்லை, இங்கே இது சகஜம் தான் என்று சொல்லி ஒத்துப்பாட, ஏஞ்சலினா தன்னுடைய சூப்பர் மாடல் கனவுகளை அடைய சர்வதேச விளம்பர வாய்ப்புகளைப் பெற பல ஆண்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறாள். 

  சூப்பர் மாடல் எனும் புகழேணியின் உச்சியில் அமர்ந்து அவள் விளம்பரப் படம் ஒன்றுக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், தோழியிடம் இருந்து அவளுக்கொரு மொபைல் அழைப்பு வருகிறது. ’எனக்குத் திருமணம், நீ எத்தனை பிஸியாக இருந்தாலும் என் திருமணத்திற்கு வந்து சேர்’ என்று; தோழி அழைப்புடன் நிறுத்திக் கொண்டிருந்தால் ஏஞ்சலினா தனக்குத்தானே குற்ற உணர்வில் மூழ்காமல் இருந்திருப்பாளோ என்னவோ?! ஆனால், தோழி, நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், உனக்கும் வயதாகவில்லையா? நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று ஏஞ்சலினாவின் அகத்தைக். கிளறி விட, அவளுக்குள் திருமண வேட்கை மூள்கிறது. ஆனாலும், வாய்ப்புகளுக்காகப் பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்ற நிலையில் தன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற அவநம்பிக்கை துரத்தவே, அவள் சற்றும் யோசிக்காமல் ஷாட்டுக்குத் தயாரா என்ற கேள்வியுடன் தன்னை அணுகும் அபிநவ்வைப் பார்க்கிறாள்.

  தன்னுடன் இத்தனை நாள் இருந்த, தன்னுடைய வழிகாட்டியாகத் தான் நம்பிய கேமிராமேன் அபிநவ்வையே கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றவே, அவள், ‘அபிநவ், என்னைத் திருமணம் செய்து கொள்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று சட்டெனக் கேட்டு விடுகிறாள்; அந்தக் கேள்வியின் கனம் தாளாமல் வாய்மூடி மெளனம் சாதிக்கும் அபிநவ்வைக் கண்டு ஏஞ்சலினாவுக்கு கோபம் தலைக்கேறுகிறது. அவன் அடுத்த ஷாட்டுக்கு அவளை துரிதப்படுத்துவதில் தான் சிரத்தையுடன் இருக்கிறானே தவிர ஏஞ்சலினாவை மணந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குத் துளியும் இல்லை. அப்போது அவள் மீண்டும் மீண்டும் அவனை திருமணத்திற்கு வற்புறுத்தத் தொடங்கவே, அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... அவன் சாடாரெனச் சொல்லி விடுகிறான், உன்னைப் போன்ற (Bitch) பெண்நாயை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என? 

  இந்த வார்த்தை அவளைச் சுட்டெரிக்கிறது.

  ஆம், நான் அப்படிப்பட்டவள் தான், அது தெரிந்து தானே இத்தனை நாட்கள் நீ என்னுடன் இருந்தாய், அப்படியென்றால் நீ ஆண்நாயா? என்ற கேள்வியை மனதுக்குள் விழுங்கி அவள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். தனிமை அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்த தற்கொலைக்கு முயல்கிறாள். எந்த அழகு தன்னை இந்த நிலைக்கு இட்டு வந்ததோ, அந்த அழகைச் சிதைக்கத் தொடங்குகிறாள். இறுதியில் விஷம் அருந்தப் போகையில், யாரை முன்னுதாரணமாகக் கொண்டு ஏஞ்சலினா மாடலிங் துறைக்குள் நுழைந்தாளோ அந்த மதுபாலாவே வந்து அவளை தற்கொலையில் இருந்து மீட்பதாகக் கதை முடிகிறது.

  இந்தக் குறும்படத்தில் ஏஞ்சலினா கிளைமாக்ஸில் லிப்ஸ்டிக் கொண்டு கண்ணாடியில் எழுதும் வாசகம் ஒன்று;

  YES, I'M A BITCH BUT WHO ELSE NOT?

  என்று பார்வையாளர்களைக் கேள்வி கேட்பதாக முடிகிறது.

  அவள் பெண்நாய் என்றால் அவளை இவ்விதமாக ஆக்கி வைத்த ஆண்களை என்னவென்பது? இப்படி ஒரு சூழலை அவளாக வலியப்போய் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவளுக்கு சூப்பர் மாடலாவது வாழ்நாள் கனவு. அந்தக் கனவை அடைய அவள் இப்படியாகிறாள். அதற்காக அவள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவள் சார்ந்திருக்கும் துறை அவளை அதற்காக வற்புறுத்தி இந்த எல்லைக்குத் துரத்தியதை நிச்சயம் கண்டித்தே ஆக வேண்டும். கனவுகளை அடைய நினைக்கும் பெண்கள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டே ஆக வேண்டும் என்பது மாடலிங் மற்றும் சினிமாத்துறைக்கு எத்தனை பெரிய அவமானம்?! இந்த அவமானத்தைக் களைய வேண்டும் என்ற முயற்சி அங்கிருக்கும் ஒருவருக்கும் இல்லையெனும் போது பிறகு காலத்திற்கும் அவர்களை கூத்தாடிகள் என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்? வீடு வாடகைக்கு விடுவது முதல், திருமணத்திற்கு மணமகன், மணமகள் தேடுவது வரை எல்லா விஷயங்களிலும் அவர்களை இந்தச் சமூகம் இரண்டாம் நிலையில் வைத்துப்பார்க்க அங்கு நிலவும் ‘காம்ப்ரமைஸ்’ வற்புறுத்தல் தானே முதலிடம் வகிக்கிறது. அங்கு எல்லாமும் கட்டமைக்கப்படுவது பெண்களின் சதையைக் கொண்டே என்றால் அவளை நாய் என்று சொல்லக் கூச வேண்டாமோ!

  அதனால் தான் ஏஞ்சலினா கேட்கிறாள்...

  YES, I'M A BITCH BUT WHO ELSE NOT?

  இதற்காக அவள் தற்கொலை செய்து கொண்டால், அவளை இந்த உலகம் BITCH இல்லை புனிதவதி என்று கொண்டாடி விடப்போகிறதா என்ன?

  ஆகவே, அவள், தன்னை விமர்சிக்கும் இந்த சமூகத்தை நோக்கி ஒரு கனமான கேள்வியை வீசியெறிந்து விட்டு அவளறிந்த அவளாகவே மீண்டும் தன் வாழ்வில் எட்டி நடை போடத் துவங்குகிறாள்.

  ஏஞ்சலினாக்கள் தற்கொலை செய்து கொள்ளப் படைக்கப்பட்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் வாழ்வின் உன்னதங்கள் இப்படிப் பட்டவர்கள் அடையும் மனமுதிர்வின் அனுபவ நீட்சியாகவே வெளிப்படுகின்றன.

  அவார்ட் வின்னிங் ஷார்ட் ஃபிலிம் என்று அடையாளத்துடன் குறும்படம் தொடங்குகிறது. கமெண்ட் பகுதியில் ‘2008’ ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபேஷன் திரைப்படத்தின் சாயல் இதிலிருக்கிறது என்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்தக் குறும்படத்தைப் பார்க்க வாய்த்தவர்கள் நிச்சயம் ப்ரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் நடித்த ஃபேஷன் திரைப்படத்தையும் ஒருமுறை பார்த்து விடுங்கள்.

  இரண்டிலுமே சொல்லப்பட்டுள்ள, வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ள உண்மைகள் அப்படியப்படியே தான் இருக்கின்றன இன்றளவும். இப்போதும் இந்தத் துறையில் சாதிக்கும் முனைப்பில் நுழைந்து காமுகக் கழுகுகளின் பிடியில் சிக்கி வாழ்விழந்த உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

  திடீர், திடீரென நடிகைகள், குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் தற்கொலை என்று செய்தி வந்தால் இனிமேல் கண்டதையும் இட்டுக்கட்டி கமெண்ட் அடிக்காமல் அவர்களின் வலி புரிந்து ஒரு நொடியேனும் அனுதாபப்படுங்கள்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai