மொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்!

தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய கோபத்திற்கு வடிகால் தேடவுமே, என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணப்பன் அந்த இளைஞர்கள் மீது அமிலம் வீசியிருக்கிறார். இந்நிலையில் கண்ணப்பன் மட்டும் தண்டிக்கப்படுவது
மொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்!

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வெள்ளி வெள்ளி வேலை செய்யும் தட்டான் ஒருவர், தன்னையும் தன் மனைவி மற்றும் சகோதரனையும் குடிக்கச் சொல்லி தொந்திரவு செய்த அண்டை வீட்டுக்காரர்களான 8 கட்டடப் பணியாளர்கள் மீது அமில வீச்சு நடத்தியது நேற்றைய திடுக்கிடும் செய்தி. 

சென்னை நெற்குன்றம், முனியப்ப நகரிலிருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் மனைவி மற்றும் சகோதரரருடன் வசித்து வருகிறார் கண்ணப்பன். அடிப்படையில் வெள்ளி வேலை செய்யத் தெரிந்த தட்டானான கண்ணப்பனின் வீடு அந்த அபார்ட்மெண்டின் மூன்றாம் தளத்தில் இருக்கிறது. சம்பவத்தின் போது கண்ணப்பனுடன் அவரது மனைவி ரஞ்சனியும், பெயிண்டரான சகோதரன் பாஸ்கரும் இருந்துள்ளனர். இவர்கள் வசித்த அதே அபார்மெண்ட்டின் இரண்டாம் தளத்தில் அரியலூரிலிருந்து கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வேலை செய்து பிழைக்க வந்த 8 இளைஞர்கள் தங்கியிருந்தனர்.

ஞாயிறு அன்று இரவு, அந்த 8 இளைஞர்களும் அபார்மெண்டின் மாடியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். குடிபோதையில் அவர்களின் உரையாடல் எல்லை மீறி கூச்சலாக மாறி இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கண்ணப்பனும் அவரது சகோதரர் பாஸ்கரும் அவர்களிடம் சென்று ஆட்சேபணை தெரிவித்திருக்கின்றனர். ஆனால், குடிவெறியில் அவர்கள் கண்ணப்பனின் கோரிக்கையையோ, ஆட்சேபணையையோ ஏற்காமல் மீண்டும் கூச்சலிட்டு குடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கண்ணப்பனும் அவரது சகோதரரும் மீண்டும் மீண்டும் அவர்களது செயலை கண்டிக்கவே, குடிவெறியில் அந்த 8 இளைஞர்களும் இவர்களை கடுமையாகத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களது குடிவெறித் தாக்குதலுக்கு கண்ணப்பன் மனைவி ரஞ்சனியும் தப்பவில்லை. ரஞ்சனிக்கு கையிலும், பாஸ்கரனுக்கு தலையிலும் பலமான அடி. இதனால் கோபம் தலைக்கேறிய கண்ணப்பன் உடனடியாக வீட்டுக்குள் ஓடி, தான் வெள்ளி வேலை செய்யும் போது பயன்படுத்தவென்று வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து வந்து அந்த 8 இளைஞர்களின் மீது விசிறியடித்திருக்கிறார். அந்த 8 இளைஞர்கள் பெயர்கள் முறையே; அழகுமுத்து (38), கருப்புசாமி(32), வாஞ்சிநாதன்(18), வேல்முருகன்(23), வீராசுவாமி(23), அசோக்(19), வேல்முருகன்(25), வேல்முருகன்(23).

அமில வீச்சில் பாதிக்கப்பட்ட 8 இளைஞர்களும் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமில வீச்சில் ஈடுபட்ட கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது செய்தி! 

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இளைஞர்கள், அதிலும் பிழைப்புக்காக சென்னை வந்த இளைஞர்கள் குடித்து விட்டு மொட்டைமாடியில் கும்மாளமடித்ததும்,  அதை தட்டிக் கேட்க வந்த அண்டைவீட்டுக்காரர்களை எரிச்சலுக்குட்படுத்தி சண்டைக்கு இழுத்த விவகாரமும் தான். அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து எடுத்துச் சொல்லும் போது அதில் நம் தவறு என்ன என்பதைக் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, தவறைச் சுட்டிக்காட்டியவர்களையே எதிர்த்துத் தாக்கத் தொடங்கியது அராஜகம். அந்த அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் தட்டான் கண்ணப்பன் கோப மிகுதியில் ஆசிட் வீசியிருக்கிறார். சட்டப்படியும், மனசாட்சிப்படியும் இது முற்றிலும் தவறு. ஆனால், இந்தத் தவறு நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கித் தந்தது யார்? அந்த இளைஞர்கள் தானே! இப்போது அவர்கள் சிகிச்சையில் இருந்தாலும் உண்மையில் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! தட்டான் கண்ணப்பனை மட்டும் கைது செய்யப்படுவதில் நியாயம் இல்லை.

ஏனெனில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய கோபத்திற்கு வடிகால் தேடவுமே, என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணப்பன் அந்த இளைஞர்கள் மீது அமிலம் வீசியிருக்கிறார். இந்நிலையில் கண்ணப்பன் மட்டும் தண்டிக்கப்படுவது நியாயமா?! இது குறித்து வாசகர்கள் உங்கள் கருத்தைப் பகிரலாம்.

இந்த வழக்கில் அமில வீச்சை நடத்தியவருக்கும், பிழைக்க வந்த இளைஞர்களுக்கும் இடையே முன் பகை ஏதாவது இருந்திருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படியே முன்பகை இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்ந்து தூண்டப்படக் காரணமாக இருந்தவர்கள் இரு தரப்பினரில் யார் என்ற விசாரணையும் தேவை. தட்டான் கண்ணப்பன் கோபம் வரும் போதெல்லாம் அமில வீச்சில் ஈடுபடக்கூடியவரா? என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். ஏனெனில், எந்தவகையிலும் இந்தச் செய்தி இதே போன்று அபார்மெண்ட்களில் வசித்து மனஸ்தாபம் கொள்ளக்கூடிய எவரொருவருக்கும் முன்மாதிரியாக  அமைந்து விடக்கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com