அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்!

அந்த 21 நாட்களே இன்றும் அக்னி நட்சத்திரமாக அனுசரிக்கப்பட்டு வருவதாக ஒரு கதை உலவுகிறது.
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்!

வருஷா வருஷம் மே மாசம் ஆனாலே அக்னி நட்சத்திரம்னு ஒன்னு வந்துடுதே... அது ஏன்னு எப்போவாது யோசிச்சிருக்கீங்களே?

உண்மையில் வானிலை ஆய்வறிக்கைத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு வார்த்தைப் புழக்கமே அதில் இல்லை என்பதே நிஜம்.

பிறகு ஏன் அப்படி ஒரு வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கு. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

வானிலை ஆய்வு மைய அடிப்படையிலான தகவல்!

வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலத்திற்கும் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலத்துக்கும் நடுவில் நிலவும் இடைவெளியே அக்னி நட்சத்திர காலம் என வானிலை ஆய்வும் மையத் தகவல் கூறுகிறது. இது அறிவியல் பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணம். இது தவிர அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர இன்னும் அக்னி நட்சத்திர காலத்துக்கு இதிகாச உதாரணங்களுடன் கூடிய தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

வேதகாலத்தில் ஒரு சமயத்தில் சுவேதக யாகம் என்று சொல்லப்படக்கூடிய யாகம் ஒன்றை அப்போதிருந்த மன்னர்களும், முனிவர்களும் சேர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இந்த யாகம் ஓரிரு நாட்களிலோ அல்லது வாரங்களிலோ முடிவடைந்து விடுவது அல்ல, 12 ஆண்டுகள் தொடர்ந்து அக்னி வளர்த்து நெய்யூற்றி இடைவிடாது சுவேதக யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் அக்னிதேவனுக்கு மந்த நோய் ஏற்பட அந்த நோயிலிருந்து விடுபட பெரு நெருப்பை விழுங்க வேண்டும் எனத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. பெருநெருப்பை உருவாக்க, அன்றிருந்த நிலையில் அடர் வனமாக இருந்த காண்டவ வனத்தை எரித்து விழுங்கும்படி அக்னிதேவனுக்கு சொல்லப்பட அக்னியும் அதற்கு முயன்றிருக்கிறார்.

அப்போது காண்டவ வனத்தை இருப்பிடமாகக் கொண்ட வன உயிர்கள் அனைத்தும், ஐயோ! அக்னி தேவர் வனத்தை எரித்தால் நாங்கள் எல்லோரும் தீயில் வெந்து செத்து விடுவோமே! எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் பிரபு என்று வருணதேவரைச் சரணடைந்திருக்கிறார்கள். வருணனும் இடைவிடாது மழையைப் பொழிவித்து காண்டவ வனத்தை எரியிலிருந்து காக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்டு செய்வதறியாது திகைத்த அக்னி தேவர் நேராகச் சென்று உதவி கேட்டது கிருஷ்ணரை. இவ்விஷயத்தில் அக்னிக்கு உதவுவதாக வாக்களித்த கிருஷ்ணர், ஆப்த நண்பன் அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா!  காண்டவ வனத்தை வருணன் அணுக முடியாதவாறு உன் அம்புச்சரங்களால் வனத்தைச் சுற்றி ஒரு கோட்டை கட்டு. கோட்டைக்குள் அக்னி தேவரின் பசி தீரட்டும். இதில் அக்னிக்கு ஒரே ஒரு நிபந்தனை, உன் பசியை 21 நாட்களுக்குள் நீ தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எங்களால் வருணனை கட்டுப்படுத்த முடியாது’ என்று அபயமளித்திருக்கிறார். அந்த 21 நாட்களே இன்றும் அக்னி நட்சத்திரமாக அனுசரிக்கப்பட்டு வருவதாக ஒரு கதை உலவுகிறது.

இது மகாபாரத உதாரணம். அந்தக் காண்டவ வனம் தான் பின்னாட்களில் இந்திரப் பிரஸ்தமானது. அந்நாளைய இந்திர பிரஸ்தத்தின் இன்றைய பெயர் என்ன தெரியுமா? டெல்லி. ஆம், நமது இந்தியத் தலைநகரமே தான். ஸோ அக்னி நட்சத்திரத்துக்கு இப்படியும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு என்று ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் கால அவகாசமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது. இதைக் கத்தரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஞ்சாங்கப்படி அக்னி நட்சத்திர காலத்தில் விவசாயிகள் மனம் குளிர மண் வளம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கை. இதை அவர்கள் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று குறிப்பிடுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com