சுடச்சுட

  

  இறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்... தொடரும் IVF சிகிச்சை மோசடிகள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 15th April 2019 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  0000_mbaby_bank

   

  அயல்மொழித் திரைப்படங்களை அதிகம் கண்டதில்லை. கண்டவரையில் இந்தியத் திரைப்படங்களில், கதாநாயகி கர்ப்பமானால் உடனே அவளது வெட்கம் கலந்த தலைகுனிந்த முகத்தைக் காட்டிய அடுத்த செகண்டில் கேமரா கதாநாயகனின் முகத்துக்குத் தாவும், ஐயா சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார் அல்லது அளவிலா பெருமிதத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ரொமாண்டிக்காக கதாநாயகியைப் பார்த்துச் சிரிப்பார். இது தமிழ்சினிமாவில் நாயகி கர்ப்பம் என்றதும் நாயகன் அடைய வேண்டிய பாவமாக கருதப்படும் கிளிஷே காட்சிகளில் ஒன்றாக நெடுங்காலமாக வழங்கி வருகிறது. கர்ப்பம் என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆணும், பெண்ணும் இணைந்தால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கருமுட்டைகளும் ஆரோக்யத்துடன் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்யத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் பெருமிதம் என்பது இருவருக்கும் சரி சமமான உரிமை. 

  நாம் தான் என்றைக்கோ தந்தை வழிச் சமூக மரபுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு விட்டோமே! அதனால் தான் இப்போதும் கூட யாரோ ஒரு பெண் கருவுற்றால் உடனடியாக அவளை அழைத்துப் பாராட்டுவதைக் காட்டிலும் அவளது கணவனை அழைத்து வாழ்த்துவதையும் பாராட்டுத் தெரிவிப்பதையுமே முதன்மையானதாகக் கருதுகிறோம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் இத்தகைய நடைமுறைகளால் தான் கீழ்கண்ட அனர்த்தங்கள் எல்லாம் கூட விளைகின்றனவோ என்றொரு சந்தேகம் எழுந்தது. அதனால் தான் நீட்டி முழக்கி இத்தனை விஷயம் பேச வேண்டியதாயிற்று.

  கரு உண்டாதலையும், குழந்தை பிறப்பையும் ஆண் அணுகும் முறையும், பெண் அணுகும் முறையும் எப்போதுமே இங்கே வேறு வேறாகத்தான் இருக்கின்றது. ஆணுக்கு தனது ஆண்மையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக அந்நிகழ்வு அமைந்து போனது காலத்தின் கோலம்.

  அதனால் தான் இந்த டச்சு டாக்டர் இப்படிச் செய்து விட்டாரோ என்னவோ?

  டாக்டர் ஜேன் கர்பாத்

  டாக்டர் ஜேன் கர்பாத், 2017 ல் இறந்து விட்டார். ஆனால் இறப்புக்கு முன்பு அவர் செய்த அடப்பாவி ரகமான காரியமொன்று இன்று உலகம் முழுக்கப் பரவி பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.

  டாக்டர் ஜேன் கர்பாத், மகப்பேறு மருத்துவர். இன்னும் சொல்லப்போனால் மகப்பேற்றுத் துறையில் குழந்தையின்மை சிகிச்சைமுறைகளில் ஒன்றான IVF  சிகிச்சை அளிப்பதில் நிபுணர். IVF சிகிச்சை முறை என்பது குழந்தைப்பேறு அடைய முடியாத கணவன், மனைவி சோதனைக்குழாய் சிகிச்சை முறை மூலமாகவோ அல்லது வாடகைத்தாய் சிகிச்சை முறை மூலமாகவோ தங்களது விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் மருத்துவமனையில் சேமித்து குறிப்பிட்ட காலத்தில் அவற்றை சோதனைக்குழாய் அல்லது வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி கரு உண்டாகச் செய்யும் முறை. இந்த நடைமுறையில் சில சமயங்களில் கணவரது விந்தணுக்கள் கரு உண்டாக்கும் அளவுக்கு பலமிக்கதாக இல்லாத போது விந்தணுக்களை சிகிச்சைக்கு உட்படும் தம்பதியினரின் ஒப்புதலுடன் பிற ஆண்களிடமிருந்து (அவர்களது அடையாளம் மறைக்கப்படும்) தானமாகவும் பெறுவார்கள். 

  இங்கே தான் இந்த டச்சு டாக்டர் திட்டமிட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே விந்தணு தானமாக தனது விந்தணுக்களையே அவர்களது அனுமதியின்றி செலுத்தியிருக்கிறார். ஒன்று, இரண்டு குழந்தைகள் அப்படிப் பிறந்திருந்தால் அதை யாரும் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், இந்த டாக்டர் தான் உயிருடன் இருந்தவரையிலும் தனது விந்தணுக்களை இப்படித் தன்னிடம் மகப்பேறு சிகிச்சைக்காக வந்த அனைத்துப் பெண்களுக்கும் அவர்களுக்கே தெரியாமல் இணைத்திருக்கிறார்.  அப்படிப் பிறந்த குழந்தைகள் இதுவரை 49. அதில் ஒரு சில குழந்தைகளின் பெற்றோர் டாக்டரின் இந்த திருட்டுத் தனத்தை எதிர்த்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடிய போது தான் மரபணுச் சோதனை மூலமாக சுமார் 49 குழந்தைகளின் மரபணுக்கள் டாக்டரின் மரபணுவோடு ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. ஒத்துப் போவது என்றால் ஏதோ ஒரு சில குணநலன்களுடன் அல்ல, டாக்டரின் நேரடி வாரிசுகளாக அந்த 49 குழந்தைகளையும் கருதலாம், அந்த அளவுக்கு மரபணுக்கள் அச்சுப் பிரதி போல ஒத்துப் போகின்றன என்கிறது சோதனை முடிவுகள்.

  டாக்டர் கர்பாத், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே சிகிச்சையின் போது கரு உருவாக்கத்திற்கு தனது விந்தணுக்களையே பயன்படுத்தியிருக்கிறார். தானே  போலியான டோனர் டாக்குமெண்டுகளைத் தயாரித்து அதை சிகிச்சைக்கு வரும் தம்பதியினருக்கு அளித்து அவர்களை அடையாளம் தெரியா நபர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெற்றிருப்பதாக நம்ப வைத்து இப்படியொரு விஷயத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறார் கர்பாத். இதை முதலில் கண்டுபிடித்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக நீதிமன்றத்திற்குப் போக, அதற்கான காவல்துறை விசாரணையின் போது டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாததுடன், சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர், தங்களுக்கு சிகிச்சை அளித்து நன்மை செய்த டாக்டரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். எனவே தான் நீதிமன்றம் மரபணுச் சோதனைக்கு உத்தரவிட்டது. தற்போது மரபணுச் சோதனை முடிவு வெளிவந்த பிறகு டாக்டரின் செயல்பாடுகள் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக பாதிக்கப்பட்ட டச்சு குழந்தைகள் உரிமைக்காக இவ்விஷயத்தில் போராடி வரும் அமைப்பு கூறியுள்ளது.

  டாக்டர் கர்பாத்தின் விந்தணுக்களை அவரே பயன்படுத்திக் கொண்டதோடு அந்நாட்டின் பிற கருத்தரிப்பு மையங்களுக்கும் தனது விந்தணுக்களை அவர் தானமாக அளித்திருப்பது கொசுறுத் தகவல்.

  டாக்டர் 2017 ஆம் ஆண்டு வாக்கில் இறந்து விட்டார். ஆயினும் சேமிப்பில் இருக்கும் விந்தணுக்கள் வாயிலாக அவரது நேரடி வாரிசுகள் தொடர்ந்து பிரசவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

  இதை தானமென்று எடுத்துக் கொள்வதா? அல்லது தனது ஆண்மையை நிரூபிக்க டாக்டர் இவ்விதமாகச் செய்தார் என்று எடுத்துக் கொள்வதா? 

  புரியத்தான் இல்லை.

   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai