ஓட்டுரிமையின் மகத்துவம் அறியா மட ஜனங்களா நாம்?!

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்றார் பாரதி; அதைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். என்பதை மிக எளிமையாக உணர்த்துகிறது இந்தச் சிறுகதை.
ஓட்டுரிமையின் மகத்துவம் அறியா மட ஜனங்களா நாம்?!

2019 பாராளுமன்றத் தேர்தல் வெகு நெருக்கத்தில் இருக்கிறது. 18 எம் எல் ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அதற்கான இடைத்தேர்தலும் தற்போது நடைபெறுவதால் தமிழகம் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளைத் தீர்மானிக்கவிருக்கும் இரட்டைத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில் கீழ்க்காணும் சிறுகதையை வாசித்துப் பார்த்தீர்களென்றால் 2008 அல்ல அதற்கும் முன்பே இந்தியத் தேர்தல்களை இன்னும் நேரடியாகச் சொல்லவேண்டுமானால் தமிழகத் தேர்தல்களை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.

சுதந்திரத்துக்குப் பிறகு மக்களால் மக்களுக்காக மக்களாகிய நாமே சுயமாக ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த ஆளும் அரசாங்கத்தை குற்றம் சொல்கி்றோம், அவர்கள் ஆட்சியென்ற பெயரில் சர்வாதிகாரத் தனத்துடனும், சுயநலத்துடனும் நம்மைக் கசக்கிப் பிழிந்தால் தேர்தல் காலங்களில் ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களைக் குற்றம் சொல்கிறோம், எதிர்க்கட்சிகளை குற்றம் சொல்கிறோம். எப்போதும் குற்றம் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர, எந்த வேட்பாளர் நல்லாட்சி தரக்கூடியவர்? எந்தத் தலைவரைத் தேர்ந்தெடுத்தால் அவரால் நமக்கு நல்லாட்சி கிடைக்கக் கூடும் என்பதைப் பற்றியெல்லாம் எப்போதாவது யோசித்து நமது வாக்கை அவர்களுக்கு அளித்திருக்கிறோமா என்றால் அது எப்போதும் சந்தேகத்துக்குரியதே.

ஏனெனில் தலைமை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?

யாரைத் தலைவர்களாக ஆக்க வேண்டும் என்பதையே அறியாத மட ஜனங்கள் நாம். இந்த உண்மையை நாம் உணர்ந்தால் மட்டுமே நல்ல தலைமைகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.

இல்லையேல் வறண்டு வெடித்த பூமி ஒரு சொட்டு மழைக்காக தவம் இருப்பதைப் போல காலமெல்லாம் நம்மை ரட்சிக்கக் கூடியதொரு தலைமைக்காக தேர்தல்கள் தோறும் நாம் காத்திருக்க வேண்டியது தான். அதற்காக ஆட்சிபீடம் வெற்றிடமாகி விடப்போகிறதா என்ன? நல்லதோர் வீணையைத் தாங்கும் வரை ஆட்சிக் கட்டிலானது போனால் போகட்டுமென்று வல்லூறுகளும், பிணந்தின்னிக் கழுகுகளும், ஆட்கொல்லிப் புலிகளும், நயவஞ்சக நரிகளுமாக மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பலரது உறைவிடமாக  எப்போதும் நிரம்பியே இருக்கட்டும்.

அதிலிருந்து விடிவு காண விரும்புவோர் இனியாகிலும் தங்களது ஓட்டுரிமையின் மகத்துவத்தை உணர்ந்தால் சரி.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்றார் பாரதி; அதைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். என்பதை மிக எளிமையாக உணர்த்துகிறது இந்தச் சிறுகதை.

இந்தத் தேர்தலில் நல்ல தலைமையைத் தீர்மானிக்க விரும்புகிறவர்கள் உங்கள் வாக்குரிமையின் மகத்துவம் உணர்ந்து அதை செயல்படுத்துங்கள். எந்தத் தலைமையின் பாலும் நம்பிக்கை இல்லை என்றால் 49 ஒ பிரிவைப் பயன்படுத்தி ஓட்டளியுங்கள்.

மக்களுக்காகத் தான் ஆட்சியாளர்களே தவிர ஆட்சியாளர்களுக்காக மக்கள் அல்ல எனப்தை இனி வரும் தேர்தல்கள் புரிய வைத்தால் மட்டுமே ஜனநாயகத்தின், மக்களாட்சியின் மாண்பு காக்கப்படும். கதையை வாசித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல மறவாதீர்!

யாருக்கும் வெட்கமில்லை!

(தேர்தல் சிறப்புச் சிறுகதை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com