Enable Javscript for better performance
abandoned ghost villages in spain- Dinamani

சுடச்சுட

  

  கைவிடப்பட்ட பேய் கிராமங்களை விற்கத் தயாராகும் ஸ்பெயின்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 02nd April 2019 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ghost_villages

   

  அடப் போங்கய்யா.. பேய் கிராமங்களை யார் துணிந்து வாங்குவாங்க என்கிறீர்களா? சும்மா ஒரு பேச்சுக்கு அப்படிச் சொல்றது தான். நம்மூர்ல கைவிடப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் அப்படிக் குறிப்பிடுவது தானே வழக்கம். யாருமே குடியிருக்காத இடத்தில் பேய்கள் நடமாட்டம் இருக்கும்கிறது நம்முடைய வழி வழி நம்பிக்கை. உண்மையில் பேய்கள் இருப்பதாக நம்பப்படும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளைக் கூட அடித்துத் தகர்த்தி நகர்த்தி விட்டு இன்றைக்கு தனியார் பில்டர்கள் வீட்டுமனை, வீட்டடிமனைகளை ஏற்படுத்திக் கொடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்து விடுகிறார்களா இல்லையா? எனவே இந்த பேய்கிராமம் என்ற பதத்தில் எல்லாம் பயந்து விடக்கூடாது என்பதே மெய்.

  இந்தியாவில் அப்படிப்பட்ட கிராமங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. இருந்தாலும் இல்லாவிட்டாலும் கைவிடப்பட்ட கிராமங்களின் கதி நாளடைவில் என்னவாகிறது என்பதற்கான சான்றாக இந்த ஸ்பெயின் குக்கிராமங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

  ஸ்பெயினில் தற்போது மக்கள் வாழாமல் புறக்கணிக்கும் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறதாம். காரணம் இந்தியாவைப் போன்றதுதான். மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான வேலைவாய்ப்பு, உணவு, உடை, மருத்துவம், கல்வி போன்ற வசதிகளுக்காக ஸ்பெயினின் அனேக குக்கிராம மக்கள் தங்களது பூர்விக கிராமங்களைக் கைவிட்டு நகரங்களைத் தேடிச் சரணடைந்து விட்டனர். அதனால், அவர்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தோ, கால்நடைகளை வளர்த்தோ, மீன்பண்ணை வைத்தோ வாழ்ந்து வந்த குக்கிராமங்கள் அனைத்தும் தற்போது மக்களால் கைவிடப்பட்டு அனாதைக் கிராமங்களாகியுள்ளன. அங்கிருக்கும் வீடுகளும், பண்ணைகளும் சிதிலமடைந்த நிலையில் பேய் கிராமங்கள் போலக் காட்சியளித்து வருகின்றன.

  ஏன் இப்படி ஆனது?

  வாருங்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முன்னதாக நாம் கஸ்டாவோ இக்லெசியாஸின் கதையைத் தெரிந்து கொண்டாக வேண்டும்.

  ஸ்பெயினில் இருக்கும் குக்கிராமங்களில் ஒன்றான கலிஸியா பிராந்தியத்தைச் சார்ந்த அக்கோரடா எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்டாவோ. இவர் தனது குடும்பத்தின் வருமானத்தை உயர்த்தக் கூடிய வேலைக்காக பெருநகரத்துக்கு குடிபெயர அவர்களது பூர்விக கிராமத்திலிருக்கும் 6 கல் வீடுகளும், தானியக்கிடங்கும் தனித்து விடப்பட்டு பசுமைப் பள்ளத்தாக்கை நோக்கித் திறந்து கிடக்கின்றன. அந்தக் கிராமத்தை கஸ்டாவோ மட்டும் கைவிடவில்லை, அவரைப்போலவே உத்யோக நிமித்தம் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களும் மேலும் பலரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களுக்கெல்லாம் விவசாயத்தின் மீது பிடிப்பில்லை. அதன் காரணமாகத் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்த வீடுகளையும், வாழ்வாதரமாகத் திகழ்ந்த வயல்களையும், பண்ணைகளையும், தானியக் கிடங்குகளையும் கைவிட்டு விட அவர்கள் தயாராகிவிட்டனர்.

  தற்போது இவர்களின் கதை என்ன தெரியுமா?

  இன்று பியூரெல்லா எனும் மீன்பிடி நகரத்தில் இருக்கும் கடற்கரை காவல்பிரிவில் உத்யோகஸ்தராக இருக்கும் கஸ்டாவோ தனது கிராமத்தைச் சேர்ந்த மேலும் பலரை ஒருங்கிணைத்து அவர்கள் கைவிட்டு விட்டு வந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுடன் மொத்த கிராமத்தையுமே தனியாருக்கு நல்ல விலைக்கு விற்று விட முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். கிராமங்களை விற்று லாபம் பார்ப்பது தான் நோக்கம் என்றாலும் அவர்கள் அதை அப்படிச் சொல்லிக் கொள்வதில்லை. ‘தனியாருக்குத் தங்களது கைவிடப்பட்ட கிராமங்களை விற்று அதன்மூலம் அனாதை நிலையிலிருக்கும் அந்தக் கிராமங்களுக்கெல்லாம் புத்துயிரூட்டப் போகிறோம்’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு கிராமத்தின் விலை என்ன தெரியுமா? ஜஸ்ட் 85,000 யூரோக்கள் அல்லது டாலரில் மதிப்பிடுவதென்றால் 96,000 $ மட்டுமே!

  இதில் அதிசயம் என்னவென்றால் ஸ்பெயின் பிரதமரான பெட்ரோ சான்செஸின் கடந்த தேர்தல் வெற்றியின் போது அவரது முதல் வாக்குறுதியே கிராமங்களைப் புனரமைத்து அங்கத்திய மக்கள் தொகையை குறையாமல் நிலைப்படுத்துவது என்பதாக இருந்தது. அவரது வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் முக்கிய காரணமாக இருந்த நிலையில் தற்போது ஸ்பெயினில் மீண்டும் தேர்தல் வரவிருக்கும் சூழலில் தொடர்ச்சியாக கிராமங்கள் தனியாருக்கு விற்கப்படும் நிலை நீடித்து வருவது அவரது வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.

  ஸ்பெயின் முனிசிபாலிட்டிகளில் பலவும் பாதிக்கு மேல் தங்களது மக்கள்தொகையை இழந்துள்ளன.

  துணிவுள்ள அயல்நாட்டுக்காரர்களும், வியாபாரத்தில் புதுமையான ஆர்வமுள்ள ஸ்பெயினியார்டுகளும் இந்தக் குக்கிராமங்களை விலைக்கு வாங்கி அதை லாபகரமானதாக எப்படி மாற்றலாம் என்று யோசிக்கலாம். சிலர் பேரம் பேசி சல்லிசாக சில கிராமங்களை வாங்கி பீச் ரிசார்ட்டுகளோ, பயணியர் கேளிக்கை விடுதிகளோ, ஹோட்டல்களோ கூட கட்டலாம். அப்படியான ஆர்வம் கொண்டவர்களை ஐடியாஸ் அபண்டோனாட்ஸ் எனும் எஸ்டேட் ஏஜென்சி நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் சுமார் 40 கிராமங்களை அந்நிய முதலீட்டாளர்களுக்கு இப்படி விற்றுக் கொடுத்திருக்கிறதாம். 

  உலகம் முழுவதுமிருந்து மக்கள் ஆர்வமாக ஸ்பெயின் குக்கிராமங்களை வாங்க முன்வருகிறார்கள் என்கிறார் அந்த ஏஜென்சியின் நிர்வாகியான பீப் ரோடில். அவர் இந்தக் கிராமங்களை வாங்கத் தூண்டும் அம்சங்களெனப் பட்டியலிடுவது அங்கத்திய பிரதான உணவு வகைகளையே... ஆக்டோபஸ், ஸ்காலப்ஸ் மற்றும் குளிர்கால பீன்ஸ் வெரைட்டிகள், பன்றி இறைச்சியில் தயாராகும் சாசேஜுகள், சாறுகள் மற்றும் சுவையான பன்றி இறைச்சி போன்றவற்றுக்குப் பெயர் போனவை இத்தகைய ஸ்பெயின் கிராமங்களும் அவற்றின் பண்ணைகளும் என்கிறார் ரோடில்.

  ஸ்பெயினில் இப்படி கைவிடப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருக்கும் கிராமங்களின் எண்ணிக்கை இதுவரை 1,500 என்கிறார் மேற்கண்ட ஏஜென்சியின் தாளாளரான எல்விரா ஃபாஃபியன். ஏனெனில் உள்ளூர் கவுன்சில்கள், சொத்துக்களுக்கு உரிமைதாரர்கள் தங்களுடைய கிராமத்து வீடுகளைப் பராமரித்தே ஆக வேண்டும் என வற்புறுத்துகிறது. பலராலும் அது முடியாத காரியம் என்பதால் இப்படிப் பட்ட ‘பேய் கிராமங்கள்’ விற்பனைக்கு எனும் விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.

  நகரமயமாதலின் விளைவாக ஐரோப்பிய கிராமங்களில் பெரும்பான்மையானவை காலியாகி விட்டன. இந்நிலையே ஸ்பெயினில் சற்று நாடகத்தனமாக்கப்பட்டிருக்கிறது.  கிராமங்களில் மக்கள்தொகை சரசரவென அதலபாதாள ரேஞ்சுக்கு குறைந்து வருவது அடுத்த பொதுத் தேர்தலில் சர்ச்சைக்குரிய விஷயமாகக் கையாளப்படலாம். புதிதாக உதயமாகி இருக்கும் பார்டிடோ எனி இவ்விஷயத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  2017 ஆம் ஆண்டு வாக்கில் ஸ்பெயின் ஃபெர்டிலிட்டி விகிதம் சராசரியாக 1.3 சதவிகிதமாக இருந்தது. ஐரோப்பிய ஐக்கிய நாடுகளைப் பொருத்தவரை இது இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகையைக் குறிக்கிறது. முதலிடத்தில் இருப்பது மால்டா. இங்கு ஏன் மக்கள் தொகை அதலபாதாளத்தில் இருக்கிறது என்றால் இங்கிருக்கும் இளைய தலைமுறையினரின் தொடர்ச்சியான இடப்பெயர்ச்சி மற்றும் அந்நிய தேசப் பெயர்ச்சியினால் தான். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் விதமான வியாபார தாராள அணுகுமுறைகளையோ, அல்லது தொழில் உத்திகளையோ ஸ்பெயின் நகராட்சி மறுமலர்ச்சித் திட்டங்களில் இல்லை என்பதும் முக்கியமான காரணமே.

  சரி கைவிடப்பட்ட குக்கிராமங்களை விற்பதின் மூலம் கிராம மக்கள் தொகையைப் பெருக்கி விட முடியுமா? அல்லது முந்தைய தலைமுறையைப் போல நிலைக்கத்தான் செய்து விட முடியுமா? என்ன தான் அரசாங்கத்தின் திட்டம் என்று மக்கள் யோசிக்கிறார்களோ இல்லையோ வியாபாரிகள் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதே உண்மை. கிராமங்களை புத்துயிர்ப்பதைக் காட்டிலும் இத்தகைய முயற்சிகளில் லாபமே பிரதானமாகக் கருதப்படுகிறது. விற்பவர்கள் பராமரிக்க முடியாத தங்களது சொத்துக்களுக்கு மீண்டும் உயிரளிக்க முடியும் என்று கருதினாலும் உண்மையான காரணம் அதுவாக கருதப்படப்போவதில்லை. நகரமயமாக்கலின் ஒரே விளைவு கிராமங்கள் கைவிடப்படுதல் மட்டுமல்ல, கிராமங்கள் அழிக்கப்பட்டு அவை நவீனமயமாக்கலின் மற்றொரு உருவான கேளிக்கை விடுதிகள் மற்றும் சூதாட்ட அரங்குகளாக மாற்றப்படும் அபாயம் தான் மிகுதியாக இருக்கின்றது என்கிறார்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai