நான்சென்ஸ்... குழந்தைகள் என்ன செக்ஸ் டாய்ஸா? என்ன தான் வேண்டும் இந்த மனிதப் பதர்களுக்கு?!

இப்படி சங்கிலித் தொடராகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தமிழகத்தில் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி வருவதைக் கண்டு பொதுமக்கள் மத்தியில் கொதிப்பான மனநிலை நிலவுகிறது.
நான்சென்ஸ்... குழந்தைகள் என்ன செக்ஸ் டாய்ஸா? என்ன தான் வேண்டும் இந்த மனிதப் பதர்களுக்கு?!

இந்த பயங்கரத்தை என்னவென்று விவரிக்க? 6 வயதுச் சிறுமியை பாலியல் இச்சைக்காக கொல்லும் விகார மனம் படைத்த மிருகம் எது? இந்த உலகில் சைக்கோக்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. வெளித்தெரியும் தோற்றத்தைக் கொண்டு யாரையும் மதிப்பிட்டு விட முடிவதில்லை. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறைக்கான கண்டனங்களே இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் கோவையில் இன்று 6 வயதுச் சிறுமியொருத்தி அவளது வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டிருக்கிறாள். நேற்று முன் தினம் மாலை தனது அம்மாவால் கடைக்கு அனுப்பப்பட்ட சிறுமி அவள். ஒன்றாம் வகுப்புச் சிறுமியைக் கூட தங்களது பாலியல் வக்கிரங்களுக்கு விட்டு வைக்காத இந்தச் சமூகத்தில் வாழ்வது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் வெட்கக் கேடு. எப்படி மனம் வரும்? இப்படிச் செய்ய! நினைக்கும் தோறும் மனம் கொதிப்படைவதைத் தடுக்க இயலவில்லை. இந்தக் கொடூரங்களுக்கு ஒரு முடிவே இல்லையா?

சிறுமி கொலை விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை உடனடியாகக் கைது செய்யக்கோரி அந்தப்பகுதி பொதுமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த துடியலூர் கிராமத்து மக்களுக்கு குறிப்பாக அங்கு திரண்டிருந்த பெண்களுக்கு சிறுமியின் அண்டை வீட்டு இளைஞனான விஜயகுமார் மீது கடும் சந்தேகம் நிலவுகிறது, விஜயகுமாரை கைது செய்து விசாரிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குற்றவாளியை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

இப்படி சங்கிலித் தொடராகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தமிழகத்தில் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி வருவதைக் கண்டு பொதுமக்கள் மத்தியில் கொதிப்பான மனநிலை நிலவுகிறது. ஏனெனில்,  நமது சட்டங்கள், பாலியல் வன்முறை கொடூரங்களுக்கான தண்டனை பெற்றுத் தரும் வேகத்தைப் பார்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது இப்படிப்பட்ட செய்திகளை அறிய நேரும் ஒவ்வொருவர் மனமுமே நிம்மதியின்றித் தவிக்கத் தொடங்கி விடுகிறது.

தனி மனித அல்லது கூட்டு பாலியல் வக்கிரங்களுக்காக நாம் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களைத் தான் பலியிடுவது?

டெல்லி நிர்பயாவில் தொடங்கி அரியலூர் நந்தினி, போரூர் சிறுமி ஹாசினி, சேலம் வினோதினி, கத்துவா சிறுமி, சேலம் ராஜலட்சுமி கொலை, பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை வரை இன்னமும் நமது சட்டங்கள் இந்தப் பிரச்னைகளுக்கான ஒரு தீர்வையே கண்டுபிடிக்க முடியாத நிலையில் தானே இன்னுமிருக்கின்றன. ஹாசினியைக் கொன்ற தஷ்வந்தை சிறையில் பாதுகாப்பாக உட்கார வைத்து சோறு போடும் சமூகம் தானே நம்முடையது.

அதுமட்டுமல்ல, டெல்லி நிர்பயா வழக்கின் குற்றவாளிக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்து அவனது எதிர்கால வாழ்க்கைக்கு துணை நிற்கும் அளவுக்கான நீதிநெறியை அடிப்படையாகக் கொண்டு மன்னிப்பில் கரைந்துருகும் தத்துவங்களை தன்னகத்தே கொண்டதல்லவா நமது சட்டங்கள்!

இப்படியான சட்டங்களை வைத்துக் கொண்டு, நாம் என்ன தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டு பொங்கினாலும் அதற்கொரு பிரயோஜனமும் இல்லை என்பதே நிதர்சனம்.

கொல்லப்பட்ட அந்த 6 வயதுச் சிறுமியின் சடலத்தைக் கண்டு கதறும் தாயின் அவலக்குரல் இன்னும் நெஞ்சைப் பதற வைத்துக் கொண்டிருக்கிறது.

தயவு செய்து இனிமேல் யாரும் குழந்தைகளை கடைகளுக்குத் தனியாக அனுப்பாதீர்கள். கடைகளுக்கு மட்டுமல்ல வேறு எங்கு அனுப்புவதாக இருந்தாலுமே இனிமேல் தனியாக அனுப்பாதீர்கள். இந்தச் சமூகம் கேடு கெட்டது. நமது குழந்தைகள் நமக்கு மட்டுமே குழந்தைகள். பார்வையில் விகல்பம் கொண்ட புத்தியில் வக்கிரம் கொண்டவர்களுக்கு அவர்கள் வெறும் பொம்மைகள். இன்னமும் நறுக்கென சொல்வதென்றால் செக்ஸ் டாய்ஸ். அப்படி எண்ணித்தான் இப்படி கருணையின்றி அவர்களைச் சிதைத்து பிய்த்துப் போட்டு விடுகிறார்கள். பெற்ற மனதின் சாபம் அவர்களைச் சும்மா விடாது. கடவுள் என்ற சக்தியொன்று உண்டெனில் இவர்களுக்கான தண்டனை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும். அன்றியும் அவரவர் மனசாட்சியே அவர்களைத் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்.

முன்னெப்போதோ வாசித்தது...

சோமாலியாவின் கடும் பஞ்சத்தில் குழந்தைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருந்த போது அதைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆவணப்படம் எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் புகைப்படக் கலைஞர் ஒருவர் அங்கு சென்றார். உலகின் மிகப்பிரசித்தி பெற்ற புகைப்படம் அது. ஒரு குழந்தை பசியாலும், பஞ்சத்தாலும் உருக்குலைந்து உயிருக்குப் போராடி சாகும் தறுவாயில் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் கடைசி நொடி அது... குழந்தை எப்போதடா செத்து விழும், அதை தனது பசிக்கு இரையாக்கிக் கொள்ளலாம் என்று குழந்தைக்கு அருகிலேயே காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகு ஒன்று. இந்தக் காட்சியுடன் கூடிய புகைப்படத்தை நீங்களும் கண்டிருக்கலாம். அந்தப் புகைப்படத்துக்கு விருதெல்லாம் கிடைத்தது. ஆனால், புகைப்படத்தை எடுத்த கலைஞர் சில ஆண்டுகளில் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார். காரணம், ஒரு குழந்தை பசிக்கொடுமையில் துவண்டு உணவற்ற அவலத்தில் மெலிந்து உருக்குலைந்து மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மனிதாபிமானம் உள்ள எவரொருவரும் உடனடியாக அந்தச் சிறுமியை எப்படியாவது பாதுகாத்து, அவளை உயிருடன் மீட்கப் போராடியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சடலத்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் எப்போதடா அந்தக் குழந்தை செத்து விழும் என்று காத்திருந்து அதைப் புகைப்படமாக்கி அதற்காக மிகச்சிறந்த புகைப்படம் மற்றும் புகைப்படக்காரர் எனும் விருது பெற்றது மிகக்கேவலமான செயல். இந்த மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தில் கடைசியில் குற்ற உணர்ச்சியே வெல்ல அந்தப் புகைப்படக்காரர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்பது செய்தி!

உலகில் நாம் செய்யும் வேலையைத் தாண்டி, நமது சுயலாபத்தை, சுயநலத்தையும் தாண்டி மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டு. அது இல்லாத பட்சத்தில் உலகமே மிகக் கொடியதாக, மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக மாறிவிடும்.

அப்படித்தான் ஆகி விட்டது இப்போது?!

இல்லாவிட்டால் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எல்லாம் பாலியல் இச்சை கொண்டு பார்க்கும் ஒரு சமூகம் எப்படி உருவாக முடியும்?

குழந்தைகளைத் தவறான பார்வையுடன் அணுகுவதே தவறு என்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அமைப்புகள் உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்க இங்கே ஆன்மிக பூமியான நமது இந்தியாவில் அடுக்கடுக்காக பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் கொலைகள் தொடர்ந்து கணிசமான அளவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இதை யாராலும் ஜீரணிக்க முடியாது. இத்தகைய குற்றங்களுக்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

வழக்குகள் விரைந்து நடத்தப்பட்டு குற்றவாளிகள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும்.

தண்டனை என்பது மிக மிகக் கொடூரமானதாக மீண்டும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடத் துணிவோர் எண்ணியமாத்திரத்தில் கண்டு அஞ்சி நடுங்கும் வகையில் இருந்தாக வேண்டும்.

எதன்பொருட்டும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கான தண்டனைகள் புறக்கணிக்கப்படவோ, தள்ளிப்போடப்படவோ அல்லது மேம்போக்காகக் கையாளப்படவோ கூடவே கூடாது.

அதற்கு முன் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்;

குழந்தைகளைக் கூடுமான வரையில் தனித்து எங்கும் அனுப்பாதீர்கள். குறைந்த பட்சம் அவர்களாக தன்னிச்சையாக எதையும் எதிர்கொண்டு இயங்கும் தைரியம் வரும் வரை. 

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாலும் கூட பெற்றோரில் எவராவது ஒருவரது பார்வை குழந்தைகளின் மீதிருக்கட்டும்.

அறிந்தவர், தெரிந்தவர், நண்பர்கள், உறவினர்கள் எவராக இருந்தாலும் குழந்தையை சங்கடப்படுத்தும் விதத்திலான செய்கைகள் கொண்ட எவரையும் ஒரு கோட்டுக்கு வெளியே நிறுத்திப் பழக அனுமதியுங்கள். வரம்பு மீறக்கூடியவர்கள் எத்தனை நெருங்கிய உறவினர்களாக, நண்பர்களாக இருந்தாலும் சரி அவர்களது உறவைத் தாட்சண்யமின்றி துண்டியுங்கள்.

குழந்தைகள் பெற்றோரைத் தொந்திரவு செய்யாமல் அவர்களாக எங்காவது சென்று நேரம் கழித்தால் பரவாயில்லை என்று கருதி அடிக்கடி பக்கத்து வீடுகள், அல்லது உறவினர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு பெற்றோர் குறிப்பாக அம்மாக்கள் நிம்மதியாக இருந்து விடாதீர்கள். இந்த மனநிலை பலநேரங்களில் நமதுகுழந்தைகளுக்குத் தான் கேடாக முடியக்கூடும். எனவே குழந்தைகளுக்கு விவரம் தெரியக்கூடிய காலம் வரும் வரை அவர்களுக்கொரு கவசமாக இருந்து காக்க மறந்து விடாதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com