Enable Javscript for better performance
Pollachi sexual assault case... what should we do now?!- Dinamani

சுடச்சுட

  

  ‘பொள்ளாச்சி’ இனியாவது விழித்துக் கொள்ள வேண்டாமா? சொல்லுங்கள்... இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 12th March 2019 05:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pollachi sexual assault case

  Pollachi sexual assault case gang abuse

   


  கடந்த ஒரு வாரகாலமாகவே இணையத்தில் பொங்கிப் பிரவகித்து சதா கொதித்துக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிரான கண்டனங்கள். #arrestpollachirapists எனும் டிவிட்டர் ஹேஸ்டேக்கில் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வரும்  இவ்வேளையில் நாம் நிச்சயம் யோசிக்கத்தான் வேண்டும். இத்தனைக்கும் காரணம் அந்த ரேப்பிஸ்ட்டுகள் மட்டும் தானா? அவர்களுக்கு அத்தகைய கேடு கெட்ட சுதந்திரத்தையும், அராஜகம் இழைக்கும் தைரியத்தையும் தந்தது யார்? பணபலமும், அதிகாரத் திமிரும் தானே? அதை ஒடுக்க இந்த சமூகமும் நம்மை ஆளும் அரசாங்கமும் என்ன செய்யவிருக்கிறது? வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கும் அவலத்தில் இந்தக் கேள்வி அனாவசியமானதே!

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஷயத்தில் அரசியல்வாதிகளுக்குப் பங்கில்லை என்று காவல்துறை அதிகாரி சொன்னால் அதை நம்புவதற்கு பொதுமக்கள் இன்னும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர வேண்டிய காலமிது. நாட்டில் எங்கும், எப்போதும் அரசியல் மாய்மால அதிகாரங்களின் அசிங்கப் பின்னணியின்றி இத்தகைய அராஜகங்கள் அரங்கேற்றப்பட வாய்ப்பே இல்லை. சமூக ஊடகங்களில் இந்த ரேப்பிஸ்டுகளுக்கு எதிராகப் பொங்குபவர்கள் அவர்களை என்னென்னவோ வார்த்தைகளில் அர்ச்சித்து தங்களது மனவேதனையை, பதட்டத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். சிலர் அந்த ரேப்பிஸ்ட்டுகளின் முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அடையாளம் கண்டு அங்கு சென்று அவர்களது குடும்பப் புகைப்படங்களை தரவிறக்கி எல்லோருக்கும் பொதுவில் வைத்து அந்தக் கயவர்களது வீட்டுப் பெண்களின் மானத்தையும் சந்திக்கு இழுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒருபக்கம் இது தவறு என்றாலும் அப்படியாகிலும் இந்த அராஜகத்தின் தாக்கத்தை தங்களால் ஜீரணிக்க முடியுமா எனும் அவர்களது முயற்சியைக் கண்டு அயர்ச்சியாக இருக்கிறது. உண்மையில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன?

  கடந்தாண்டு இந்தியா முழுவதுமே ‘மீடூ’ அலையில் சிக்கித் தவித்தது.

  அப்போது சிலர் போகிற போக்கில் சொல்லிக் கடந்தார்கள்... இதெல்லாம் எதற்கு இப்போது? பாலியல் வன்முறை குற்றங்களில் தவறு நடக்கும் போதே அதை அம்பலப் படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு பிரபலங்களின் மீதும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் மீதும் பாலியல் குற்றம் சுமத்தி பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கக் கூடாது என. இதோ பொள்ளாச்சி விவகாரம் இப்போது தான் சுடச்சுட சூடாக வெடித்திருக்கிறது. இன்னின்னார் தான் குற்றவாளிகள் என சிலர் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். பிடிபட்ட குற்றவாளிகள்... தங்களுக்கு மட்டுமே குற்றத்தில் பங்கில்லை, இதில் ஆளும் அரசாங்கத்தின் அதிகார மையங்களில் சிலருக்கும் அடர்த்தியான பங்கிருக்கிறது. அதை ஆதாரத்துடன் தங்களால் நிரூபிக்க முடியும் எனவும் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். இப்போது காவல்துறை என்ன செய்ய வேண்டும்? அதிகார மையங்களுக்கு குடை பிடிக்கச் சென்று விடாமல் நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களை மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவ வேண்டும். அது நடக்குமா? இதெல்லாம் இந்த வழக்கின் வெளிக்காரணிகள்.

  அகக்காரணி என்ற ஒன்று பிரமாண்டமாக இந்த வழக்கில் நம் கண்களுக்கே தெரியாமல் நம் பெண்களை மருட்டிக் கொண்டிருக்கிறதே அதைப் பற்றியும் நாம் இப்போது பேசித்தான் ஆக வேண்டும்.

  பெண்ணுடல் என்பது சந்தர்பம் அமைந்து விட்டால் பாலியல் வன்முறை என்ற பெயரில் ஒரு ஆணிடமோ அல்லது பல ஆண்களிடமோ வதைபட்டுச் சித்திரவதைப்பட என்றே படைக்கப்பட்டதா என்ன?

  கணவனே ஆனாலும் ஒரு பெண்ணின் உடலை அவளது அனுமதியின்றி ஆள அனுமதி இல்லை என்கின்றன நம் நாட்டின் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். ஆனால் நாமோ ஒரு சின்ன குண்டூசி விளம்பரம் முதல் குடை விளம்பரம் வரை... ஏன் டூத்பேஸ்ட் விளம்பரம் முதல் கட்டடம் கட்டுவதற்கான முறுக்குக் கம்பி விளம்பரம் வரை பெண்ணுடலைத் தான் அவளது முழு அனுமதி பெற்றோ அல்லது அரைகுறை அனுமதியுடனோ விளம்பரம் என்ற பெயரில் பிரதான வியாபாரப் பொருளாகக் காட்சிப்படுத்தி வருகிறோம்.

  விளம்பரங்களை விடுங்கள் இன்றைய மெகாசீரியல்களை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணியமாகப் பெண்களைக் காட்டும் ஒரே ஒரு மெகா சீரியலைச் சொல்லுங்கள் பார்க்கலாம். அங்கேயும் பெண்ணுடல் மூடி வைத்த ஊறுகாய் ஜாடி போலத்தான் அவ்வப்போது அரைநிர்வாணப்படுத்தப்பட தயாராக இருக்க வேண்டியதாயிருக்கிறது. இதையெல்லாம் ‘நடிப்பு ஒரு தொழில்’ என்ற ஒற்றை பதிலில் அடித்து நகர்த்தி விடலாம் கனவுத் தொழிற்சாலைக்காரர்கள். ஆனால் பாருங்கள், அதைப் பார்த்து அதே விதமாக வாழ முயன்று விபரீதமாக சமூக ஊடக ஆண் நண்பர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகி இருக்கும் இந்த இளம்பெண்களுக்கு நீங்களும் ஒரு மூலகாரணமாக இருந்திருக்கிறீர்கள் எனும் குற்றச்சாட்டிலிருந்து நிச்சயம் உங்களால் தப்பிக்கவே முடியாது.

  பெண்ணுடலை ஒரு நுகர்பொருளாக ஆண்களை எண்ண வைக்கின்றன நமது பொழுதுபோக்கு ஊடகங்கள். அவை தான் நாட்டில் பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கான முழுமுதற் தூண்டுகோள்.

  பெண்ணுடல் ஏன் வியாபாரப் பொருளாக வேண்டும்?

  பொள்ளாச்சி விவகாரத்தில் சுமார் 200 க்கும் அதிகமான பெண்களை (அவர்களில் சிறுமிகளும் அடக்கம்) சமூக ஊடகங்கள் வாயிலாக காதலிப்பது போல நடித்து அவர்களைத் தங்களது மாயவலையில் விழவைத்து தனி பங்களாவுக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்திருக்கிறான் ஒரு இளைஞன். அவனுக்குத் துணையாக நாசவேலைகளில் ஈடுபட நால்வர். அந்த நால்வரையும் காப்பாற்றி ரட்சிக்க காட்ஃபாதர்களாக சில அரசியல் சக்திகள். கொஞ்சம் நுணுக்கமாக யோசித்துப் பார்த்தால் இந்த விவகாரம் இன்று தொடங்கியதில்லை என்பது எளிதில் எவருக்கும் விளங்கக் கூடும். இப்படியான கொடுமைகள் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. என்ன ஒரு வித்யாசம் எனில், அன்று சமூக ஊடகங்களின் துணை இன்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ந்துகொண்டிருந்த அநீதி இன்று சமூக ஊடகம் எனும் மாபெரும் பொய்யுலகின் துணையுடன் ஏகபோகமாக சடுதியில் அரங்கேறி வருகிறது. ஆக மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகளின் எண்ணிக்கை தான் கூடியிருக்கிறதே தவிர அந்த கொடூரத்தின் தன்மையில் எந்த மாற்றமுமில்லை.

  பெண்களைப் பாலியல் பண்டங்களாக நினைத்து உபயோகித்த பின்னும் அவர்களை வைத்து பணம் பண்ண நினைக்கும் கேடு கெட்ட சதை வியாபாரத்தின் மூலப்பொருள் என்றுமே பெண்ணுடல் மட்டுமே என்பதால் இம்மாதிரியான விபரீதங்களில் இருந்து நம் பெண்களைக் காப்பாற்றுவது சற்றுக் கடினமே! இந்த விபரீதங்களில் இருந்தெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக விடுதலை பெற வேண்டுமெனில் அவர்களது சிந்தனையில் மாற்றம் வர பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் துணை மிக மிக அவசியம்.

  நம் வீட்டுப் பெண்களுக்கு இந்த அநீதி நிகழ்ந்திருந்தால் நாம் எப்படி அதைக் கையாள வேண்டும் எனும் சிந்தனை இன்று நம் ஒவ்வொருவருக்குமே அவசியமாகிறது.

  பெண்ணுடலில் புனிதம் காக்கப்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒரு ஆண் அல்லது பல ஆண்களால் கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டால் பெண்ணின் கற்பு பறிபோய்விட்டதான எண்ணத்தை முதலில் கண்ணாடிப் பாத்திரமாய் எண்ணி சுக்குநூறாய் உடைத்துத் தள்ளுங்கள்.

  உயிராபத்தை உண்டாக்கக் கூடிய எத்தனையோ கொடூரமான விபத்துக்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. அத்தனைக்கும் சிசிச்சை உண்டு மருத்துவத்தில்.

  • ஒரு ஆணால் மிக மோசமாகப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் மீட்சிக்கு முதல் தேவை அவளுக்கான நீதி அல்ல. முதல் தேவை அவளுக்கான உளவியல் சிகிச்சை. நீ இப்படி ஒரு அவலத்துக்கு ஆளாகி விட்டாய். இங்கே வந்து சாட்சி சொல், அங்கே வந்து நின்று உனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கு... என்று அவளை அலைக்கழிக்காமல் நீதிபதிகளும், நீதிமன்றமும் அவளை நாடிச் சென்று நீதிவழங்கும் முறையிலான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரப்பட வேண்டும்.
  • ‘விதி’, ‘ப்ரியங்கா’ திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல பாதிக்கப் பட்ட பெண்களை அசிங்கமான கேள்விகள் கேட்டு வழக்கறிஞர்கள் துன்புறுத்தும் அராஜகத்தை விட்டொழித்து நீதி என்பது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடியது எனும் நம்பிக்கை பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளில் நிகழ்ந்தேயாக வேண்டும்.
  • பெண்ணுடலை நுகர்பொருளாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள், மெகாசீரியல்கள், திரைப்படங்கள் என அனைத்துமே தடை செய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் மிகச்சிறந்த முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அதைக் காண்போர் உள்ளத்தில் கேடு கெட்ட சிந்தனைகள் நுழையவொட்டா வண்ணமாவது அக்காட்சியமைப்புகள் இருக்குமாறு அதற்கொரு கடிவாளமிடப்பட வேண்டும்.
  • இன்று ஸ்மார்ட் ஃபோனும், அதில் இணையத் தொடர்பும் இருந்து விட்டால் போதும் உலகமே உங்கள் கைகளில் தான். உலகம் என்றால் உலகத்தின் அத்தனை நன்மை தீமைகளுமே முற்று முழுதாய் பிறகு உங்கள் கைகளில் தான். அதன் தொடுதிரையை அழுத்தினால் போதும் நீங்கள் கேட்பதெல்லாம் அட்சய பாத்திரமாக வந்து உங்கள் கண்முன்னால் கொட்டிக் கிடக்கும். அதில் தேவை எது? தேவை அற்றது எது? எனும் ஞானம் நம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிச்சயம் வேண்டும்.
  • முகநூல் மற்றும் டிவிட்டரில் இருந்தே தங்களை மீட்டுக் கொள்ள முடியாதவர்களுக்கு இன்ஸ்டாகிராம், டப்ஸ்மாஷ், டிக் டாக், அமேஸான் ப்ரைம் என்று பொழுதுபோக்கு ஆப்களை அள்ளி வழங்கி தணிக்கையில் தடை செய்யப்பட்ட தொடர்கள் மற்றும் திரைப்படங்களைக் கூட விளம்பர இடைவெளியின்றி கண்டுகளிக்க உதவிக் கொண்டிருக்கிறது தொழில்நுட்பம். அதற்கொரு கடிவாளமிட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதாக இதற்குப் பிறகும் நீங்கள் கருதவேண்டாமா?
  • ஆண்குழந்தைகளோ அல்லது பெண் குழந்தைகளோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் முதலில் அவர்களது ரசனைகளைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு என்பதை நம்புங்கள்...

  நேற்று செய்தி ஊடகங்களில் ஒரு விடியோ வலம் வந்தது. இரவு முழுதும் அந்த விடியோ கண்ணில் படாதிருக்கட்டும் என்ற பதட்டம் எனக்குள் இருந்தது. இன்று காலை அலுவலகத்தில் அந்த விடியோவைக் கண்டபோது உள்ளம் கொதித்தது. பார்த்த எல்லோருக்கும் கொதித்திருக்கும்.

  ஒரு இளம்பெண்ணை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி அவளைத் துன்புறுத்தி ஆபாசமாக விடியோ எடுக்க முயன்றிருக்கிறார்கள் அந்த பொள்ளாச்சி சைக்கோக்கள். அந்தப் பெண் “வேண்டாண்ணா, என்னை விட்டுடுங்க அண்ணா என்று அழுது அரற்றிக் கதறித் துடிக்கும் குரல் இப்போதும் செவியில் ஒலித்துக் கொண்டிருப்பதான பிரமையில் இருந்த் விடுபடமுடியவில்லை. இப்படியான ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச விடியோக்களை அந்த சைக்கோக்க எடுத்துள்ளனர். இப்படி சக உயிரை ஆபாசப்படுத்தி அதை விடியோ எடுத்து உலகச் சந்தையில் விற்றுப் பணமாக்க வேண்டும் என்ற ரசனை என்ன விதமான மானங்கெட்ட ரசனை?

  இப்படி ஒரு எண்ணம் அந்த ஆண்களின் மனதில் எப்படி உருவானது? அவர்களைப் பெற்றவளும் ஒரு பெண்ணாகத்தானே இருக்க முடியும். நம்மூரில் ஆண்களுக்கு பிரசவிக்கும் திறன் இல்லை. சரி அம்மா பெண் என்றால் உடன் பிறந்தாளும் பெண்ணாக இருக்க வாய்ப்பிருக்கக் கடவது கிளிஷே வாதம். என்றாலும் அவர்களது சிந்தனை பெண்ணில் உருவாகி பெண்ணுடன் வளர்ந்து பெண்ணை இழிவு படுத்த முடிகிறதென்றால் என்ன விதமான வளர்ப்பு இது?! 

  இன்னுமிருக்கிறது சொல்ல... அந்த ஆபாச விடியோக்களை தங்களுக்குள் சுற்றுக்குள் விட்டு மீண்டும் மீண்டும் கண்டு ரசித்ததுடன் அவற்றை அயல்நாட்டு ஆபாச இணையதளங்களுக்கும் விற்றிருக்கிறார்கள் அந்தப் பதர்கள். இந்த ஈனச்செயலுக்குத் தான் அரசியல் சக்திகளின் துணையும் உண்டு என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. இத்தனையும் போதாது என்று ஆபாசப் படத்தில் பகடைக்காயான பெண்ணை அதைக் காட்டியே மிரட்டி தங்களுக்குத் தேவையான போதெல்லாம் பாலியல் ரீதியாகப் பலருக்கும் பங்கு போட்டிருக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் தொடர் பாலியல் மிரட்டலுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதாக காவல்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது தற்போது. இங்கே ஒரு விஷயம்...

  ஆபாசப் படம் எடுத்தவர்கள் குற்றவாளிகளா? அல்லது மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளா?

  என்பதில் நம் மக்களுக்கு இப்போதும் ஏன் தெளிவில்லை. குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காவது இவ்விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டாமா?

  ஆபாசப் படம் எடுத்து வைத்துக் கொண்டு தங்களை மிரட்டுபவர்களைப் பற்றி காவல்துறையில் புகார் அளிக்க இப்போதும் நம் பெண்கள் அஞ்சுவதும், சஞ்சலப்படுவதும் ஏன்? பெண்களின் அச்சமும், குழப்பமும் தான் அவர்களை இவ்விஷயத்தில் பலியாடுகளாக்குகின்றன

  அந்த அச்சத்தைக் கடக்க வேண்டுமெனில் பெண்களுக்கு அதற்கான மன உறுதி அவசியம். அந்த மன உறுதியைப் பெண்கள் முதலில் வீட்டில் பெற வேண்டும். பிறகே இந்த சமூகத்திடம் இருந்தும் பெற வேண்டும். அதற்கான நம்பிக்கையை பெண்களுக்கு அளிக்க வேண்டியது நமது குடும்ப அமைப்பு முறை மற்றும் சமூகத்தின் கடமை.

  ஒரு பக்கம் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்காக உணர்ச்சி வசப்பட்டு பொங்கி நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு மறுபக்கம் உண்மை அறிதல், சட்டப்பூர்வம், வழக்கு விசாரணை மருத்துவ ஆதாரம் என்ற பெயரில் அவர்களைச் சந்தேகித்து தூண்டித் துருவி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தி தற்கொலைக்கு தூண்டும் மாய்மாலத்தை இனியாகிலும் நாம் செய்யாமலிருப்போமாக.

  பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி எத்தனை சீக்கிரம் கிட்டுமோ தெரியாது...

  ஆயினும் இந்நேரத்தில் நாம் இவர்களையும் மறந்து விடக்கூடாது... இவர்கள் விஷயத்தில் கூட நாம் இதற்கு மேலும்... முன்பு பொங்கத்தான் செய்தோம்.

  • காஷ்மீரத்துச் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு!
  • சென்னை, அயனம்பாக்கம் 11 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு!
  • சேலம் ராஜலட்சுமி கொலை வழக்கு!
  • கல்லூரி மாணவிகளை பாலியல் அடிமைகளாக மாற்ற முயன்ற கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு!

  போன்ற வழக்குகளில் எல்லாம் நாம் இதுவரை என்னவிதமான தீர்வுகளை எட்டி விட்டோம்?!

  அத்துடன் இந்தப் பொள்ளாச்சி பாலியல் கூட்டு வன்முறை விவகாரத்தின் பின்னணி என்ன என்பதும் ஆராயத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கியம் அதே வேளையில் கடந்த 7 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சாத்தியம் கொண்ட பொள்ளாச்சி விவகாரம் தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் திடீரென கட்டவிழ்க்கப்பட வேண்டிய விதத்திலான அத்யாவசியத் தேவை நமது அரசியல் கட்சிகள் எதற்கேனும் உண்டா எனும் ரீதியிலும் இதற்கான விசாரணை வளையம் நீள வேண்டும். ஏனெனில், தனி ஒருவன் திரைப்படத்தில் சுட்டிக் காட்டப்பட்டதைப் போல செய்திதாளின் அடுத்தடுத்த பக்கங்களில் வரக்கூடிய குற்றச்செய்திகளுக்குள் ஒன்றுக்கொன்று நுணுக்கமான தொடர்பு இருப்பதை மக்கள் தீவிரமாக கண்காணித்து பிரித்தறிய வேண்டிய காலம் இது.

  அத்துடன் வீட்டுப் பெண்கள் முட்டைக்கோஸ் அல்லது காலிஃபிளவர்களோ அல்லது வளர்ப்பு நாய், வளர்ப்பு மீன்களோ அல்ல அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் செலவுக்குக் கொஞ்சம் பணமும் தந்து விட்டால் போதும் பெற்றோரின் கடமை முடிந்தது என்று அக்கடாவென இருந்து விடத் தேவையில்லை.

  பெண்கள் விபரீதமான ஆபத்துக்களில் சிக்கிக் கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் நிறைந்த இக்காலத்தில் குடும்பத்தினர் அனைவருமே ஒருவருக்கொருவர் உனக்கென்ன ஆனால் எனக்கென்ன? என்று இருந்து விடாமல் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து குடும்ப உறுப்பினர்களுக்குள் சட்டென நிகழும் மாற்றங்களை அதைவிடச் சடுதியில் கிரஹித்து அவர்களைப் பாதுகாப்பு வளையத்திற்குள் இழுத்து காக்கவல்லவர்களாக இருந்து விட்டோம் என்றால் இந்த அற்பப் பதர்களால் அப்படியென்ன செய்து விட முடியும் வீட்டுப்பெண்கள?!

  ஆக, நாம் ஒவ்வொருவரும் இப்போது உடனடியாகச் செய்ய வேண்டிய முதல் காரியம்...

  நம்மைச் சார்ந்த பெண்களுக்கு இவ்விதமான பாலியல் அச்சுறுத்தல்களோ அல்லது உளவியல் ரீதியிலான வேறு ஏதேனும் அச்சுறுத்தல்களோ இருக்கிறதா? என்பதை அவ்வப்போது ஊகித்து அறிந்து கொள்ளக்கூடிய அளவில் நம் வீட்டுப் பெண்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பதே. முதலில் அதைச் செய்வோம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எல்லாக் குற்றங்களும் படிப்படியாய்த் தானே ஒழியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai