ப்ரேக்கிங் நியூஸ்!!!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது ஊடகங்களில் நொடிக்கொரு தரம் ஃப்ளாஷ் ஆகிக் கொண்டிருக்கும் ப்ரேக்கிங் நியூஸ்களைப் பார்த்தால் பல நேரங்களில் மக்கள் கடுப்பாகிறார்கள்.
ப்ரேக்கிங் நியூஸ்!!!

முன்பெல்லாம் செய்திகளுக்காக தூர்தர்ஷனையும், ஆல் இந்தியா ரேடியோவையும் மட்டுமே மக்கள் நம்பிக் கொண்டிருந்த போது செய்திகளை ஒளிபரப்புவதில் ஒரு நெறிமுறை இருந்தது. பெருந்தலைவர்கள் உடல்நலக் குறைவுற்று இருந்தாலோ அல்லது மரணித்தாலோ அதை வெகு ஜனங்களிடம் கொண்டு செல்வதில் ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டது. எதையும் தேங்காய் உடைப்பதைப் போல சொல்லாமல் மெல்லிய சோககீதம் பின்னணியில் ஒலிக்க கனத்த மெளனம் எதிரொலிக்க அசுபச் செய்திகளை வெளியிடுவார்கள். இதை பார்க்கவோ, கேட்கவோ வாய்ப்பவர்களுக்கு விஷயத்தின் கனம் புரிந்து விடும்.

ஆனால் இன்று... பிரபலஸ்தர்கள் இறந்தால் ஒரு அதிரடியான அவல இசையை ஒலிக்க விடுகிறார்கள் பாருங்கள்... அதைக் கேட்ட மாத்திரத்தில் பலருக்கு பிபி எகிறக்கூடும். அதில் சேனலுக்கு சேனல் வித்யாசம் காண்பிக்கிறோம் என்று அவல இசையின் சதவிகிதத்தை கூட்டியோ குறைத்தோ குறைந்த பட்சம் இரண்டு முழு நாட்களுக்கேனும் பிராணனை வாங்காமல் விடமாட்டார்கள். பிரபலங்களின் மரணம் என்றில்லை நாட்டின் எந்த மூலையில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நிகந்தாலும் அதையும் உடனடியாக... சொல்லப்போனால் முழுமையான தகவல்களைக் கூட சேகரித்து அறியாமல் அப்படியே அந்தந்த நிமிடங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ப்ரேக்கிங் நியூஸ் ஆக்கி விடுகிறார்கள். இந்த அவசரத்தில் செய்திகளை முந்தித் தரும் வேகம் தான் தெரிகிறதே தவிர செய்திகளின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துதல், உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னரே செய்திகள் மக்களைச் சென்றடையச் செய்தல் எனும் தார்மீகப் பொறுப்புணர்வு கடுகளவும் இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் ப்ரேக்கிங் நியூஸ் என்றால் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று இதழியலில் ஒரு வரையறை உண்டு;

அதன்படி...

  • நீங்கள் தரும் செய்திகளின் மீதான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை மக்களிடன் சென்று சேர்ப்பதற்கு முன்பு ஒன்றிற்குப் பலமுறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பிற ஊடகங்களில் இருந்து செய்திகளைத் திருடக் கூடாது.
  • உறுதியான ஆதாரம் இல்லாது வெறும் அனுமானத்தில் செய்திகளை வெளியிடக் கூடாது.
  • கற்பனைச் செய்திகளை ஒருபோதும் பரப்பக்கூடாது.

மேற்கண்ட நான்கு வரையறைகளுக்குள் இருந்தால் மட்டுமே அதற்கு அக்மார்க் ப்ரேக்கிங் நியூஸ் என்ற மரியாதை. இல்லையேல் அவை வெறும் சென்சேஷனல் நியூஸ்களாகவே கருதப்படும் அபாயம் உண்டு. 

பொதுவாக ப்ரேக்கிங் நியூஸ்கள் ஒரே ஒரு நிருபரால் மட்டுமே தரப்படக் கூடிய சாத்தியம் கொண்டவை அல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. அந்த முயற்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் செய்திகளின் மீதான உண்மையும், நம்பகமும் உறுதிப் படுத்தப்பட வேண்டும். ஒரு செய்தி நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் பிரேக்கிங் நியூஸ்கள் பல படிநிலைகளில் அமைந்த செய்தி ஆசிரியர்களால் பலமுறை சரிபார்க்கப்பட்டு அதன்பின்னரே அச்சு ஊடகங்களிலோ அல்லது தொலைக்காட்சி செய்தி ஊடகங்களிலோ வெளியிடப்பட வேண்டும் என்பதே இதழியல் நெறிமுறை. 

ஆனால் இன்று செய்தி ஊடகங்கள் அனைத்துமே கூட பொழுதுபோக்கு ஊடகங்களைப் போல டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனெனில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது ஊடகங்களில் நொடிக்கொரு தரம் ஃப்ளாஷ் ஆகிக் கொண்டிருக்கும் ப்ரேக்கிங் நியூஸ்களைப் பார்த்தால் பல நேரங்களில் மக்கள் கடுப்பாகிறார்கள்.

சமீபத்தில்... உடல்நலமின்றி அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். அவர் சென்னையில் காலடி வைத்தது முதலே ஊடகங்கள் அவரைச் சுற்றி வளைக்கத் தொடங்கி விட்டன. விஜயகாந்த் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரை தேமுதிக கூட்டணி யாருடன் என்பதை உடனடியாகப் பொதுமக்களுக்கு அறிவித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கி வருகின்றன தமிழின் அத்தனை செய்தி ஊடகங்களும். அதனால் என்ன? என்கிறீர்களா? அதனால் கேப்டன் தும்மினாலும் சரி, இருமினாலும் சரி அதுவும் கூட ப்ரேக்கிங் நியூஸ் ஆகி விடுமோ என்ற பதட்டத்தில் ஐயோவென டிவி திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நம்மைப் போன்ற அப்பாவித் தமிழர்கள்.

இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லையா பின்னே?!

விஜயகாந்தை காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசு சந்தித்தால் அது ப்ரேக்கிங் நியூஸ்;

ரஜினி சந்தித்தாலும் ப்ரேக்கிங் நியூஸ், ஸ்டாலின் சந்தித்தாலும் அது ப்ரேக்கிங் நியூஸ். நேற்று முழுதும் இந்த சந்திப்புகள் மட்டும் தான் முக்கியமாகக் கருதப்பட்டு செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சேனல் சேனலாக மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நிச்சயம் மண்டை காய்ந்திருப்பார்கள். இது மட்டும் தான் என்றில்லை. முன்னாள் முதல்வர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் சரி, அவர்கள் மரணித்தாலும் சரி நம் செய்தி ஊடகங்களுக்கு அப்போதெல்லாம் வேறு எந்தச் செய்தியுமே முக்கியமானதில்லை என்பதாக மருத்துவமனையிலும் தலைவர்களின் வீடுகளிலும் மட்டுமே பழியாய் பழி கிடப்பார்கள். நடுவில் வேறு முக்கியமான செய்திகள் வந்தாலும் அவற்றின் பரபரப்புப் தன்மை ஆராயப்பட்டு மூன்றாம் பக்கத்திற்கோ அல்லது கடைசிப்பக்கத்துக்கோ தள்ளப்பட்டு விடும். தொலைக்காட்சி செய்திகளில் சில முக்கியமானவையாக இருந்த போதிலும் அவற்றில் பரபரப்பு இல்லை என்றால் அவை வெறுமே ஸ்க்ரோல் செய்தியாக்கப்பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

சரி இந்தத் தொல்லைகள் எல்லாம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் மட்டும் தானே... நான் ஸ்மார்ட் ஃபோனில் ஆப் மூலமாகவே தினமும் செய்தி வாசித்துக் கொள்வேன். விட்டது தலைவலி என்பவர்களுக்கு’ உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் செய்திகளில் பலவும் உங்களுக்குத் தேவையற்றவை என்பது.

இன்றைக்கு செய்தி ஊடகங்கள் இப்படித்தான் மாறி விட்டன.

நம்பகமான செய்திகளை மக்கள் எங்கனம் இனம் காண்பது?

அது மக்களின் கைகளில் தான் இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோலைச் சொல்கிறேன் என்று நீங்கள் கருதினால் அதை நான் மறுக்கப்போவதில்லை.

மக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் தாம் எத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பது.

போல்வே ஊடகங்களும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் எவற்றையெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ் ஆக்கலாம்... எவற்றையெல்லாம் ஆக்கக் கூடாது என்பது.

இல்லையேல் ப்ரேக்கிங் நியூஸ்களின் மீதான மக்களின் நம்பகமும், மரியாதையும் மங்கித் தேயும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com