Enable Javscript for better performance
Oru Minnaminunginte Nurunguvettam malayalam movie review!- Dinamani

சுடச்சுட

  

  நடுநிசியில் துக்கம் பொங்கி பிழியப் பிழிய அழத்தோன்றினால் நிச்சயம் இந்தப் படத்தை பாருங்கள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 11th February 2019 12:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  malayalam_movie

   

  'ஒரு மின்னா மினுங்கிண்டே நுறுங்குவெட்டம்' என்றொரு மலையாளப் படம்!

  ஏசியனெட் சேனலில் கடந்த வாரம் ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அதன் பெயர் முதலில் மனதில் பதியவில்லை என்றாலும் படத்தில் காட்டப்பட்ட லொகேஷன்களும் அதில் நடித்திருந்த ஊர்வசி சாரதாவும், நெடுமுடி வேணுவும் எனக்குப் பிடித்தமான நடிகர்கள் என்பதால் தூக்கம் வரும் வரைக்குமாவது கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று உட்கார்ந்தேன். படம் தொடங்கியது முதலே படத்தின் தலைப்பிற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசனை உள்ளூற ஓடிக்கொண்டிருந்தது. ‘ஒரு மின்மினிப்பூச்சியின் துளி வெளிச்சம்’ என்பது மாதிரி ஏதாவது இருக்கலாம். என்று நானாகவே அர்த்தப்படுத்திக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

  ச்சே... என்ன ஒரு படம்! இந்தப் படத்தில் நடிக்க நெடுமுடி வேணுவைத் தேர்ந்தெடுத்த இயக்குனரைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது.

  மனிதர் ராவுன்னி நாயராகவே வாழ்ந்திருக்கிறார் படத்தில்.

  ராவுன்னி நாயரும், சரஸ்வதி டீச்சரும் ஒரே பள்ளியில் பணிபுரிந்து திருமணம் செய்து அங்கேயே பணி ஓய்வும் அடைந்தவர்கள். டீச்சரையும், மாஸ்டரையும் அறியாதவர்கள் ஊரில் எவருமில்லை.

  ஆஹா... அவர்கள் வசிக்கும் ஊரைப் பற்றியும் தனியாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

  டீச்சரும், மாஸ்டரும் வசிக்கும் வீடு மிகப்பரந்த நிலத்தில் அமைந்திருக்கும் வெகு அழகான கேரள பாணி தோட்ட வீடு. வீட்டின் இறக்கத்தில் சுழித்துக்கொண்டு ஓடும் ஆறு உண்டு. வீட்டுக்கு வர வேண்டுமானால் சிக்கனமான வழி ஓடச்சவாரி தான். காசிருக்கும் போது காரில் வரலாம். ஆனால், கதை நடக்கும் காலம் 80 கள் என்பதால் பெரும்பாலும் ஓடச்சவாரி தான் செய்கிறார்கள் அங்கத்திய மக்கள்.

  டீச்சருக்கும், மாஸ்டருக்கும் சந்தான பாக்யம் இல்லை. ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டும், பழித்துக் கொண்டும் அவ்வப்போது சிறுசிறு சண்டையிட்டுக் கொண்டும் பிறகு உருகிப்போய் அழுது சமாதானமாகிக் கொண்டும் அவர்கள் இருவரும் ‘தங்களுக்குத் தாங்களே துணை’ எனும் ரீதியில் அந்த வாழ்வை அனுபவித்துத் தீர்த்துக் கொண்டிருக்கையில் அவர்களது வாழ்க்கையில் ஒரு மின்மினிப் பூச்சி போல காலடி எடுத்து வைக்கிறாள் மாயா. அவள் அறிமுகமாகும் காட்சி அமைதியோ அமைதி என்பதோடு அழகும் கூட. ஓடத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்பிக் கொண்டே வரும் தந்தை நம்பூதிரித் திருமேனியை அவள் அசூயையாகப் பார்க்கும் போது தெரிகிறது அவளுக்கு தன் தந்தை என்ற மனிதரின் மீதிருக்கும் அச்சமும், வெறுப்பும்.

  பெண்ணை அழைத்து வந்த நம்பூதிரி நேராகச் சென்று இறங்கியது சரஸ்வதி அம்மா & ராவுன்னி நாயர் வீட்டுக்குத்தான். டீச்சர்... முதன்முதலாக டீச்சராக போஸ்டிங் ஆன ஊரின் நம்பூதிரி தான் அவர். அப்போது டீச்சருக்கு உடன்பிறந்த தமக்கை போல சேவகம் செய்து நன்கு பழகியவர் நம்பூதியிரின் மனைவி. அந்த தம்பதியினருக்கு அப்போது 2 1/2 வயதில் பெண் குழந்தையொன்றிருந்தது டீச்சருக்கு ஞாபகம் வரவே, வந்திருந்த பெண் அவள் தான் எனக்கண்டு முகம் மலரும் டீச்சர்;

  ஐயோடா... மாயாக்குட்டி இத்னை வளர்த்துட்டாளே! என்று அவளை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்கிறார்.

  மகளை... மகளாக எண்ணாமல்... ஏதோ ஆட்டுக்குட்டிக்கு கயிற்றைப் பிணைத்து இழுத்து வந்தது போல கூட்டி வரும் நம்பூதிரி... சர்வ அதிகாரத்துடன் அவளிடம் அவள் எடுத்து வந்த டிரங்குப் பெட்டியைக் காட்டி... ‘எடுத்தூண்டு உள்ளே போ... இது உன் சொந்த வீடாக்கும். நம்ம மேல அத்தனை நன்றிக்கடன் இருக்கு சரஸ்வதி டீச்சருக்கு. இனி நீ இங்கேருந்து உன் காலேஜுக்கு போய் வரலாம்’ என்று சொல்லி அந்த பிள்ளையில்லாத் தம்பதியிடம் அவளை ஒப்படைத்து விட்டு அகன்று விடுகிறார்.

  முதலில் இதேது புதுத் தொல்லை. அதுவும் சட்டமாக கொண்டு வந்து விட்டு விட்டு அதிகாரம் செய்யும் நம்பூதிரியின் மகளுக்கு நாம் எதற்கு உதவ வேண்டும்? ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவள் அங்கு தங்குவதைத் தவிர்த்திருக்கலாமே?! என்று முணுமுணுக்கிறார் ராவுன்னி நாயர். பிறகு சரஸ்வதி டீச்சர்;

  எத்தனை நாளைக்குத் தான் நாமிருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு காலம் தள்ளுவது... இன்னொரு ஜீவனும் தான் நம்முடன் இருந்து விட்டுப் போகட்டுமே! அவளுடைய அம்மா ரொம்ப நல்லவள். அவள் திருமேனி நம்பூதிரி மாதிரி கெட்டவள் இல்லை’ என்று புன்னகைத்துச் சமாளிக்கவே ராவுன்னி மாஸ்டரும்.. மாயாவின் இருப்பை ஏற்றுக் கொள்கிறார்.

  அதன் பிறகு கதையில் நவரசங்களும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சியின் வருகை போல திடுக் திடுக்கென மினுங்கி விட்டுச் செல்லும் அழகைச் சொல்லி மாளாது.

  அதைச் சொல்லி விளங்க வைக்கவும் முடியாது. அதெல்லாம் அனுபவித்து அறிய வேண்டியவை.

  அதற்கு நீங்களும் இந்தப் படத்தை ஒருமுறை பார்த்தால் தான் முடியும்.

  கதை பிள்ளையில்லா தம்பதிகளின் வாழ்வில் அனிச்சையாக அமைந்து விடும் ‘வாழ்வியல் வெறுமை’ பற்றிப் பேசாமல் பேசுவதோடு அந்தத் தம்பதிகளின் வாழ்வில் காற்றடித்த திசையில் பறந்து வந்து உள்ளங்கையில் விழும் ஒற்றை பன்னீர் ரோஜா போல திடீரென்று அவர்களின் வாழ்வில் இடையிட்டு அடடே... ரோஜாப்பூ ஆஹா என்ன ஒரு வாசம்! என்று எடுத்து முகர்ந்து பார்ப்பதற்குள் திடீரென்று மீண்டும் அடுத்த காற்றோட்டத்தில் கையில் சிக்காமல் பறந்து அந்நியமாகும் விதமிருக்கிறதே... அது தான் இந்தக் கதையின் உயிர்நாடி. அதை நிதர்சனம் என்றும் சொல்லலாம்.

  அந்த நிதர்சனத்தை மிக இயல்பான காட்சிகளினூடே... கொஞ்சமும் செயற்கை கலக்காமல். நாமும் அவர்களுடன் பக்கத்து வீடொன்றில் வாழ்ந்து கொண்டு ஓடச்சவாரி செய்து கொண்டு பாராமல் பார்த்து அறிந்து அவர்களின் சுகதுக்கங்களில் கலந்து போவது போன்றதான உணர்வுகளைத் தூண்டுவது இயக்குனர் பரதனின் வழக்கமாக இருக்கலாம்.

  படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது.

  இயக்கம்: பரதன்

  நடிகர்கள்: சாரதா, நெடுமுடி வேணி, பார்வதி ஜெயராம் ( நடிகர் ஜெயராமின் மனைவி), தேவன், மற்றும் பலர்

  கதை: ஜான் பால்

  ஒளிப்பதிவு: வசந்த் குமார்

  இன்றைக்கும் பார்க்கச் சலிக்காமல் தானிருக்கிறது.

  யாருக்காவது நடுநிசியில் துக்கம் பொங்கி பிழியப் பிழிய அழத்தோன்றினால் நிச்சயம் இந்தப் படத்தை பாருங்கள்.

  இரவுகளில் ஏதாவது எழுத்து வேலை இருந்து அதைச் செய்ய விடாமல் தூக்கம் பீறிட்டால் அப்போது பார்ப்பதற்கென்று சில திரைப்படங்களைத் தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம்.

  முன்பொருமுறை அப்படி நான் பார்க்க வாய்த்த திரைப்படம் ‘பந்தம்’ சிவாஜி, ஜெய்சங்கர், ஆனந்த் பாபு, பேபி ஷாலினி நடிப்பில் இடைவேளைக்கு முன்பிருந்தே சோகரசத்தில் நீங்கள் மாலை மாலையாகக் கண்ணீர் விடத் தொடங்கி விடுவீர்கள்.

  அப்படியாவது சில நல்ல திரைப்படங்களை நாம் காணத்தான் வேண்டும். இல்லையா?!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai