அடிக்கடி நியூஸுல சொல்லிக்கிறாங்களே இந்த லோக் பால், லோக் ஆயுக்தா அப்டீன்னா இன்னாப்பா?!

இந்தச் சட்டத்தின் படி எந்த ஒரு தனிமனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும்.
அடிக்கடி நியூஸுல சொல்லிக்கிறாங்களே இந்த லோக் பால், லோக் ஆயுக்தா அப்டீன்னா இன்னாப்பா?!
Published on
Updated on
5 min read

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா...

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா மசோதா கடந்தாண்டு 2018 ஜூலை 9 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.  சும்மா இல்லை, மக்களவையில் கடந்த 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலமும் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவில்லை. எனவே, லோக் ஆயுக்தா இல்லாத மாநிலங்களில் அதை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோரைக் கொண்ட அமர்வு, மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, தமிழகம், தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்டட பலவேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களை இம்மாதம் 10 ஆம் தேதிக்குள் அந்தந்த மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைவதற்கு ஒரு வழி பிறந்தது.

லோக் ஆயுக்தா என்றால் என்ன?

லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம்.

லோக் ஆயுக்தா மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள்...

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக இருப்பவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது பொது நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் நியமிக்கப் படும் 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித் துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது. இந்த பொறுப்புக்கு வருபவர்கள் ஆதாயம் தரும் பதவி எதிலும் இருந்தால் அந்த பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் அதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

அமைச்சராக இருக்கின்ற அல்லது அமைச்சராக இருந்துள்ள நபர் எவரும் (அமைச்சர் என்பது முதலமைச்சரும் அடங்கும்); சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள நபர் எவரும்; மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இதில் விசாரிக் கப்படுவார்கள். லோக் ஆயுக்தா சட்டமானது மேற்கண்ட நபர்கள் மட்டுமின்றி ஊழல் குற்றச்சாட்டு, ஊழலுக்கு தூண்டி விடுதல், கையூட்டு பெறுதல், ஊழல் சதிச் செயலில் ஈடுபடுபவர்கள் மீதும் விசாரணை செய்யலாம்.

மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை மத்திய அரசின் இசைவின்றி இந்த பிரிவின் படி நடவடிக்கை எடுக்ககூடாது. இதில் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக முதலமைச்சருக்கு ஆளுநர், அமைச்சர்களுக்கு முதலமைச்சர், அமைச்சரை தவிர்த்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு- சட்டமன்ற பேரவை தலைவர், அரசுத்துறை அலுவலர்களுக்கு-அரசு என்ற வகையில் அதிகார அமைப்பு அமைக்கப்படும்.

லோக் ஆயுக்தாவானது புகாரை பெற்றுக் கொண்டதின் பேரில் முதலில் அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா- இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த புகாரை உறுதிப்படுத்துவதற்கு விழிப்பு பணி ஆணையத்திற்கு புகாரை அனுப்ப வேண்டும். மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
லோக் ஆயுக்தாவானது தகவல் முதலியவற்றை தருமாறு பொது ஊழியர் அல்லது பிறநபர் யாரிடமும் கேட்கலாம். இது தொடர்பான விசாரணைக்கு முன் அனுமதி தேவையில்லை. லோக் ஆயுக்தா அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொது ஊழியரை பணி மாறுதல் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது. ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது ஊழியருக்கு எதிராக பொய்ப் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையையும் அவர் இழப்பீடாக கொடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்படும் நபர் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் சம்பவம் நடந்திருந்தாலோ அல்லது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து உரிய முயற்சிகளையும் எடுத்திருந்தாலோ அவர் தண்டிக்கப்படக் கூடாது.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தோன்றிய வரலாறு...

இந்த விசாரணை மன்றம் முதன்முதலில் 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் அமைக்கப்பட்டது. அதன் பின்பு மேலும் பல நாடுகள் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தன. இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ADMINISTRATIVE REFORMS COMMISSION (ARC) என்று சொல்லப்படும் நிர்வாக மறு ஆய்வுக் குழு, இந்தியாவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை விசாரிக்கவும், பொதுமக்களை அதன் கண்காணிப்பாளர்களாக ஆக்கவும் இரண்டு பரிந்துரைகளை அரசிடம் சமர்பித்தது. அதில் ஒன்று மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மத்திய  அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் போது அவர்களை விசாரிப்பதற்கென தனியொரு விசாரணை மன்றம் “லோக்பால்” அமைக்க வேண்டும்.

இரண்டாவதாக, மாநில அளவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை கண்காணிக்க லோக் ஆயுக்தா எனும் விசாரணை மன்றத்தை அமைக்க வேண்டும். எனும் பரிந்துரைகளை மொரார்ஜி தேசாய் தலைமையிலான குழு அரசுக்கு சமர்பித்தது. இதில் லோக்பால் இன்று வரை சட்டமாக்கப்படவில்லை. அதற்கான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை லோக் ஆயுக்தா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள்...

லோக் ஆயுக்தா தற்போது மகாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், குஜராத், கேரளா, பஞ்சாப், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

லோக் ஆயுக்தாவின் கீழ் புகார் அளித்தல் மற்றும் விசாரணை நடைமுறைகள் எப்படி இருக்கும்?

இந்தச் சட்டத்தின் படி எந்த ஒரு தனிமனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும். விசாரணையில் ஏதேனும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கீழ்காணும் முறைகளில் தண்டிக்கப்படலாம்.

அதாவது, தவறு செய்த அரசு அலுவலர்களின் அதிகாரத்தை குறைத்து பதவியிறக்கம் செய்தல், கட்டாய ஓய்வு அளித்தால், வேலையை விட்டு நீக்குதல், ஆண்டு சம்பள உயர்வு விகிதத்தை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை லோக் ஆயுக்தா நிறுவனம் அரசுக்கு அளிக்கும். மாநில அரசானது இந்தப் பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது மாற்றலாம். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மாநில உயர்நீதிமன்றம் அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகலாம். இச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுவது முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது.

உதாரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தவறிழைத்த அதிகாரிகளின் பெயர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னும் வெளியிடப்படுவதில்லை. லோக் ஆயுக்தாவின் அதிகாரிகளை மாநில கவர்னர் நியமனம் செய்கிறார். மேலும் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற  நீதிபதிகளிடம் பெற வேண்டும். லோக் ஆயுக்தாவின் நிர்வாகிகளாக பாராளுமன்ற  உறுப்பினரையோ, சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது.

லோக் ஆயுக்தா சட்டங்கள் மாநிலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. டெல்லியில் உள்ள சட்டத்தின் படி முறையான புகார் கொடுக்கப்பட்டால் மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள், மாநகர மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்கள் ஆகியோரை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது அதிகாரிகளின் ஊழல், ஒரு சார்பு நிலை, அடக்குமுறை, நெறிதவறுதல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஆகியவை குறித்து உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.

எந்த ஒரு தனிமனிதரும்... அவர் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்கள் தம்மிடம் இருந்தாலோ அவரால் லோக் ஆயுக்தா மற்றும் லோக்பாலின் கீழ் சம்மந்தப்பட்ட அதிகாரி அல்லது அரசியல்வாதியின் மீது வழக்கு தொடுக்க முடியும். அதிகார வர்க்கத்தினரின் அதிகார செறுக்கிற்கு விழுந்த சாட்டையடி போன்ற இந்த சட்டம் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்  என்பது தான் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களின் ஒருங்கிணைந்த கூக்குரலாக இருந்து வருகிறது. ஒருவேளை இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம். விருப்பம் விருப்பமாகவே நீடித்து வருகிறதே தவிர... அதை நடைமுறையில் பலிதமாக்கிக் காட்டும் முனைப்பு தான் மாநில அரசுகளுக்கு இல்லாமலிருக்கிறது. ஏனெனில் லோக் ஆயுக்தாவில் சிக்கப்போகும் குடுமிகளில் இவர்களில் எத்தனை பேருடையது என்பது தெரியாமலிருப்பதால்!

மாநில அளவில் பெயருக்குச் சட்டமாக்கப்பட்டு கிடப்பில் போடும் நடைமுறை லோக் ஆயுக்தாவிலும் உண்டா?

உண்டு. குஜராத்தில் 2003-லிருந்து 2013 வரை லோக் ஆயுக்தாவுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் தலையிட்டு நிர்வாகியை நியமித்தார், அப்போதைய குஜராத முதல்வராக இருந்த மோடி இவ்விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்று தான் சொல்வது தான் சரி என்று சாதிக்கப்பார்த்தார். ஆனால் உச்ச நீதிமன்றம்.. லோக் ஆயுக்தா நிர்வாகி நியமனம் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டது.

2013- ல் மத்திய அரசில் லோக்பால் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால் ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் வந்தவர்கள் இதுவரை லோக்பாலுக்கு தலைவரை நியமிக்கவே இல்லை. அதற்கான நடைமுறையையும் தொடங்கவே இல்லை.

கேட்டால் எதிர்க்கட்சி 10 சதவிகிதம் யாரையும் நியமிக்கவில்லை. அதனால் தான் லோக்பாலுக்கான நடைமுறையைத் தொடங்கவில்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கும் வழிமுறை உண்டு என்பதை கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். தற்போது லோக்பால் பிரச்சினையும் உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது.

கர்நாடகாவில் நடைமுறையில் உள்ள லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு 13 சொல்வதென்ன?

முதல்வர் மீதோ, அமைச்சர் மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒரு புகார் வருகிறது என்றால், அப்போதுதான் சட்டப்பிரிவு 13-ன் கீழ் லோக் ஆயுக்தாவின் பணி தொடங்கும். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் மீது புகார் வந்துள்ளது, நீங்கள் பதவியில் இருந்தால் விசாரிப்பதில் குறுக்கீடு இருக்கும். ஆகவே, நீங்கள் பதவி விலக வேண்டும் என்று கோரலாம். அவர்கள் பதவி விலகுகிறார்கள், விலகவில்லை அது பிறகு உள்ள பிரச்சினை. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு அந்தப் பிரிவில் உள்ளது.

தற்போது தமிழக அரசு இந்தப் பிரிவு இல்லாமல் சட்டம் இயற்ற வாய்ப்பு உண்டா?

உண்டு. அதனால்தான் இந்தப் பிரிவு இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலுயுறுத்தி வருகின்றனர். ஏனெனில் இந்தப் பிரிவு இருந்தால்தான் லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் இருக்கும். ஒரு அழுத்தம் இருக்கும்.

நாம் இதுவரை விளக்கமாக அறிந்து கொண்டு வரும் லோக் ஆயுக்தா & லோக் பால் விசாரணை அமைப்புகளை நியாயமான வகையில் நடைமுறைப்படுத்தும் கோரிக்கையுடன் தான் தற்போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர், தேசபக்தர் மற்றும் சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே மத்தியில் லோக் பால் அமைப்பையும், மாநில அளவில் மகாராஷ்டிரத்தில் லோக் ஆயுக்தா அமைப்பையும் நியமிக்க வலியிறுத்தி  தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதப் போராட்டதை அறிவித்து நடத்தி வருகிறார். போராட்டம் இன்று 6 நாட்களை எட்டியுள்ள நிலையில் தனது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள முடியாது என்றும் ஒருவேளை இப்போராட்டத்தில் தனது உயிருக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தாலும் அதற்கு முழு காரணமும்  மோடியாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்ல, மத்திய அரசு தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதையும் திருப்பி அளிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஹசாரேவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அப்பகுதி கிராம மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து அவர்களும் இப்போது மத்திய அரசை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் மகாராஷ்டிராவுடன் நின்று விடாமல் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பரவி மிக நெடிய மக்கள் போராட்டமாக மாறுமெனில் லோக் பால், லோக் ஆயுக்தா சட்டங்கள் ஒப்புக்குச் சப்பாணி சட்டங்களில் ஒன்றாக இல்லாமல் அதன் மூலமாக நீடித்த பலன்களும் கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.

நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களின் அத்தகைய கனவு பலிக்குமா?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.