கெளசல்யா - சக்தி... தொடரும் திருமண சர்ச்சை... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏது நீதி?!

குற்றம் சாட்டப்படும் சக்தி தனது திறமையையும், ஆற்றலையும் தன்னை நம்பி பறைகற்றுக் கொள்ள வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதற்கு ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
கெளசல்யா - சக்தி... தொடரும் திருமண சர்ச்சை... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏது நீதி?!
Published on
Updated on
3 min read

கெளசல்யா - சக்தி திருமணம் சாதி மறுப்புத் திருமணமாக கடந்த மாதம் ஊடகங்களில் வெளிச்சப்படுத்தப்பட்டது. திராவிடர் கழகம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மற்றும் எவிடென்ஸ் கதிரின் தன்னார்வ இயக்கம் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. ஆரம்பத்தில் கெளசல்யா - சக்தி திருமணம் குறித்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த நிலையில் தொடர்ந்து சில நிமிடங்களுக்குள் மணமகனான சக்தி குறித்த எதிர்மறைச் செய்திகளும் குவியத் தொடங்கின. இதோ இன்று வரையிலும் குவிந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இவ்விஷயத்தில் திருமணம் செய்து வைத்தவர்கள் அல்லது திருமணத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் என்ற வகையில் மேற்கண்ட மூன்று இயக்கங்களுக்கும் தார்மீகப் பொறுப்பு இருந்து வந்த நிலையில் மற்ற இருவரும் அதைப் பொருட்படுத்தாத நிலையில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவரான தியாகுவும், கொளத்தூர் மணியும் சில முன்னெடுப்புகளைச் செய்து தாங்கள் உடன்பட்டு விட்ட தவறுக்கு நியாயம் செய்வதாய் நினைத்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்த நிஜம் என்னவென்றால் கெளசல்யா மறுமணம் செய்து கொண்டுள்ள சக்தியின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என இவர்களது ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் செய்வதாகக் கருதிக் கொண்டு இவர்கள் சில முடிவுகளை எடுத்து செயல்படுத்தி இருக்கிறார்கள். 

அதன் சாராம்சம் இது... சான்றுக்காக மட்டுமே இங்கே பகிரப்படுகிறது.

அவர்கள் மறுமணம் சாதி மறுப்பு மணமாக ஊடகப் பரப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் மணமகன் சக்தி கெளசல்யாவின் சொந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும் ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அவர் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்த போதும் மறுமணம் என்பது வரவேற்கத்தக்க விஷயமே! ஆயினும் நடந்திருக்கும் மறுமணமானது பாதிக்கப்பட்டவரான கெளசல்யாவுக்கு மட்டுமே நியாயம் செய்வதாக இருப்பதைத் தான் பொதுவெளியில் இவ்விஷயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலையாளர்களால் ஜீரணித்துக் கொள்ள இயலாத காரியமாகியிருக்கிறது.

ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு.... மறைந்த தனது முன்னாள் கணவர் சங்கரின் நினைவாக அவரது இல்லத்தில் அவரது பெற்றோருடன் வசித்து வந்த கெளசல்யாவுக்கு தெரியாததா காதலின் துயரம்?! அவரால் எப்படி மற்றொரு பெண்ணின் காதலுக்கு உகந்தவராக இருந்த சக்தி என்ற நபரை... அவரைப் பற்றிய உண்மைகள் பல அறிந்திருந்த போதும் பிழைகளை ஒரு பொருட்டாகக் கருதாது மறுமணம் செய்து கொள்ள முடிந்தது? இது பிழைக்கு மேலொரு பிழையே தவிர... இதில் வீர மங்கை வேலுநாச்சி பட்டம் பெறும் தகுதி எங்கிருந்து கிடைத்தது அவருக்கு?! முதலில் ஒரு நபரைக் காதலித்தார்... பெற்றோரை எதிர்த்து திருமணமும் செய்து கொண்டார். அதற்கு ஆணவக் கொலை நிகழ்த்தும் அளவு உணர்ச்சி வசப்பட்ட அவரது பெற்றோர் இன்று மரண தண்டனைக் கைதிகளாக சிறையில். அத்தனைக்கும் காரணமான கெளசல்யாவோ வீர மங்கை வேலு நாச்சியாராக இதே போல ஆணவக் கொலை கொடூரங்களுக்கு பலியாகி மீண்டிருக்கும் பெண்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்கிறேன் பேர்வழியென்று ஊடக விளம்பரம் பெற்று இப்போது மற்றொரு பெண்ணின் கருக்கலைப்புக்கு காரணமாகி மக்களின் பார்வையில் கொள்கை ஏமாற்றுப் பேர்வழியாகி நிற்கிறார்.

இந்த விஷயத்தில் கெளசல்யாவும், சக்தியும் தங்களது தவறுகளை ஒப்புக் கொண்டபோதும் அதை மன்னிக்கவோ, நிராகரிக்கவோ வேண்டியது யார்? இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் தானே?! அவர் ஏன் எந்தவிதமான புகார்களும் இன்றி அமைதி காக்க வேண்டும்? நடுவில் தியாகுவின் தமிழ் தேசிய விடுதலை இயக்கமும், கொளத்தூர் மணியும் தாமாக முன் வந்து ஒரு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

அதைத்தான் மேலே உள்ள அறிக்கை கூறுகிறது.

காதலின் பெயரால் ஒரு பெண் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவரது கரு கலைக்கப்பட்டிருக்கிறது. திருநங்கைகள் சிலரிடம் பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்படும் சக்தி தனது திறமையையும், ஆற்றலையும் தன்னை நம்பி பறைகற்றுக் கொள்ள வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதற்கு ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இருக்கிறார். இது முற்றிலும் தவறு. இப்படிப்பட்டவர்களைத் தான் நாம் சாதனைத் திலகங்களாக கொண்டாடி வருகிறோம்.

உண்மையில் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு எனில் நீதிமன்றத்துக்கு இவ்விஷயத்தை எடுத்துச் செல்வது யாருடைய பொறுப்பு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.