மோடி யாருங்க? மோடி குஜராத்தில் இருந்து வந்த மாடல் - பிரகாஷ்ராஜ் காட்டம்!

பிரகாஷ் ராஜ் ஒரு நடிகன் தானே? திடீரென்று ஏன் அவருக்கு அரசியல் ஆசை? என்று பலர் கேட்கிறார்கள். ஏன் ஒரு நடிகன் இந்த சமுதாயத்தின் குடிமகனில்லையா? அவனுக்கென்று சுயமான கருத்து இருக்கக் கூடாதா? எதற்காக அவனை
மோடி யாருங்க? மோடி குஜராத்தில் இருந்து வந்த மாடல் - பிரகாஷ்ராஜ் காட்டம்!

சன் தொலைக்காட்சியின் ‘நேருக்கு நேர்’ நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரகாஷ் ராஜிடம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், அதன் பிரதிநிதியாக ஆளும் மோடியின் மீதுமான கோபம் ஒவ்வொரு வார்த்தையிலும் கொப்பளித்துப் பொங்கித் தணிந்தது. 

அந்த கோபத்திற்கான அடிப்படை காரணம்... வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளத் தோழி கெளரி லங்கேஷின் கொலைக்கான நீதி கேட்கும் படலம் போலிருக்கிறது என்று புறம் தள்ள நினைத்தாலும்... அப்படியெல்லாம் என் கோபத்தை நீங்கள் எளிதில் புறக்கணித்து விட முடியாது. பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சட்டைக்காலரைப் பற்றி உலுக்குவதைப் போன்ற கோபம். காரணம் தனது கோபத்தில் நியாயமிருப்பதாகக் கருதுகிறார் பிரகாஷ் ராஜ்.

கேள்வியாளர், ஆகக் கடைசியில் மோடிக்கு நீங்கள் வில்லனாகி விட்டீர்களே என்றொரு கேள்வியைக் கேட்டார் பாருங்கள்; யாருங்க ஹீரோ? மோடியா? மோடி யார்? எங்கிருந்து வந்தார்? வரும் போது நான் இதைச் செய்வேன், அதைச்செய்வேன் என்றார். நம்பினோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்துத் தருவேன் என்றார். அடடா... நமது பிரச்னை தெரிந்த மனிதராக இருக்கிறாரே என்று ஆறுதலாக இருந்தது. நம்பினோம். விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பேன் என்றார். ஆஹா... இதைத்தானே நாங்கள் வேண்டுவது... என்றூ அதையும் நம்பினோம். ஊழலை ஒழிப்பேன், கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று சொல்லி பணமதிப்பிழப்பை அறிவித்தார். ஊழல் ஒழிந்ததா? கருப்புப் பணம் ஒழிந்ததா? இங்கே யாரும் லஞ்சம் வாங்கவில்லையா? மக்களை வைத்து பரீட்சித்துப் பார்க்கிறாரா மோடி? இங்கே பணத்திற்காக எடிஎம் வாசலில் நின்றவர்கள் எல்லாம் யார்? ஏழைகளய்யா, ஏழைகள். அப்படி என்றால் பணமதிப்பிழப்பு யாருக்காக? ஸ்வட்ச்பாரத் திட்டம் அறிவித்தார்கள். ஊரெல்லாம் டாய்லட் கட்டித் தந்தார்கள். வீட்டுப்பெண்கள் புடவை கட்டிக் கொள்ள குறைந்தபட்சம் மூன்றடி இடைவெளியாவது வேண்டும். இவர் 12,000 ரூபாயில் பாத்ரூம் கட்டித் தருகிறாராம்? எப்படி கட்ட முடியும்? அது தரமானதாக இருக்குமா? முதலில் அதை சுத்தமாக்க தண்ணீருக்கு எங்கே போவது? அதைப்பற்றியெல்லாம் யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? கேட்டால் அவர்களை ஏன் சைலண்ட் ஆக்கப் பார்க்கிறீர்கள்? 

மூவாயிரம் கோடி ரூபாயில் ஒற்றுமையின் சின்னம் என்ற பெயரில் சிலை எழுப்புகிறார்கள். யாருக்காக அந்தச் சிலை. இவர் மதவெறி பிடித்தவர். மத அரசியல் செய்கிறார். இங்கே இயர்கைப் பேரழிவுகள் வந்த போதெல்லாம் 100 கோடி 300 கோடி என்று அறிவித்து விட்டு விவசாயிகள் பிரச்னைக்கு 100 கோடி ரூபாய் என்று அறிவித்து விட்டு அங்கே 3000 கோடி ரூபாய்க்கு சிலை எடுத்தால் என்னுடைய குடிசை வீட்டைக் கடந்து வந்து கூசாமல் நான் அதைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா?

பிரகாஷ் ராஜ் ஒரு நடிகன் தானே? திடீரென்று ஏன் அவருக்கு அரசியல் ஆசை? என்று பலர் கேட்கிறார்கள். ஏன் ஒரு நடிகன் இந்த சமுதாயத்தின் குடிமகனில்லையா? அவனுக்கென்று சுயமான கருத்து இருக்கக் கூடாதா? எதற்காக அவனை ஆரம்ப நிலையிலேயே பயமுறுத்தப் பார்க்கிறீர்கள்? கெளரி லங்கேஷ் கொலை எனது அரசியல் பிரவேசத்துக்கான காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அதற்குப் பிறகாவது நாம் குரல் எழுப்பாமல் இருந்தேன் என்றால் அது தவறு. மோடி எப்போதாவது அவரிடம் கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறாரா? எப்போதும் அவருக்குப் பிடித்த கேள்விகளுக்கு மட்டுமே விரிவாக பதில் சொல்வார். இல்லாவிட்டால் பதிலே பெற முடியாது. இது நியாயமா? இதை நான் சுட்டிக் காட்டக் கூடாதா? சொல்லப்போனால் மோடி என்னை விடப் பெரிய நடிகராக இருக்கிறார். நீங்கள் தான் அவரை ஹீரோ என்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் தான் வில்லன். என் படத்தில் நான் தாங்க ஹீரோ. நானென்றால் குடிமக்களைச் சொல்கிறேன் நான். என்னிடமிருந்து வரி பெறுகிறீர்கள்... அப்படியென்றால் எனக்கு நல்லது நடக்க வேண்டுமே. குடிமக்களுக்கு நன்மை செய்யாத அரசு எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்.

பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஏன் நிற்கிறேன் என்றால், இது நான் பிறந்து வளர்ந்து ஆளான இடம். தமிழ்நாட்டுக்கு வரும் முன் எனது நடிப்பு பட்டை தீட்டப்பட்டது இங்கே தான். என் பள்ளி, கல்லூரி காலங்களும் இங்கே தான் கடந்தன. இது ஒரு மினி இந்தியா போன்ற பகுதி. இங்கே கன்னடர், தமிழ், தெலுங்கர், மலையாளி, இந்தி பேசக்கூடியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் கலந்து வசிக்கிறார்கள். என்னை அவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அதனால் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இதில் வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் எனது ஒரே குறிக்கோள். வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் நான் யோசிக்கவில்லை. மக்கள் யோசிப்பார்கள். அவர்கள் தான் இங்கே உண்மையான ஹீரோக்களே தவிர நீங்கள் நினைப்பது போல மோடி அல்ல.

அவர் என்னைப் பொறுத்தவரை குஜராத்தில் இருந்து வந்திருக்கும் மாடல். ஏனென்றால், எப்போது பார்த்தாலும் நாடு, நாடாகச் சுற்றிக் கொண்டு அங்கே கிடைக்கும் விதம் விதமான தொப்பிகளை அணிந்து கொண்டு பலவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார். அதையெல்லாம் பார்க்கும் போது அவர் என்னை விட மிகத் திறமையான நடிகராக இருப்பாரோ என்று தான் எனக்குத் தோன்றும்.

மோடி அரசில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்ப்போம். 

என்று கேள்வி எழுப்பியவரிடம் பொங்கித் தள்ளி விட்டார் பிரகாஷ் ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com