Enable Javscript for better performance
Former defence minister George Fernandes death | A Tribute to Great Politician- Dinamani

சுடச்சுட

  

  ஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 29th January 2019 12:45 PM  |   அ+அ அ-   |    |  

  george_fernandasss

   

  ஜெர்ரி...

  ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை அவரது பெற்றோரும், உடன் பிறந்தோரும், நெருங்கிய நண்பர்களும் அழைக்கும் பெயர் ஜெர்ரி. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் குடும்பம் மங்களூரில் வசித்து வந்தது. தந்தை ஜான் ஜோசப் ஃபெர்னாண்டஸ், தாயார் ஆலிஸ் மார்த்தா ஃபெர்னாண்டஸ். குடும்பத்தின் ஆறு குழந்தைகளில் ஃபெர்னான்டஸ் தான் மூத்தவர். அவரது அம்மா மார்த்தா ஃபெர்னாண்டஸுக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மீது அளவிடற்கரிய பக்தியுண்டு. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ஃபெர்னாண்டஸ் பிறந்த அதே ஜூன் 3 ஆம் தேதி பிறந்தவரே. அந்த பக்தியின் காரணமாகவே தனது மூத்த மகனுக்கு ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபாடு...

  1930 ஆம் ஆண்டு மங்களூரில் பிறந்தவரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 1949 ஆம் ஆண்டு வாக்கில் கிறிஸ்துவத் துறவியாகப் பயிற்சி பெறுவதற்காக பெங்களூருக்குச் செல்கிறார். அங்கு அந்த வாழ்க்கையின் மீதான நம்பிக்கைகள் நசிய அங்கிருந்து மும்பைக்குச் சென்றவர் அதன்பின் துறவியாகும் மனநிலையைத் துறந்து சோஷலிசக் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு உழைக்கும் வர்க்க மக்களின் உரிமைக்காக தொழிற்சங்கப் போராட்டங்களில் பெரும் முனைப்புடன் பங்கேற்கத் தொடங்கினார். அவ்வகையில் ஒரு தொழிற்சங்கத் தலைவராக ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் மும்பையில் தலைமையேற்று நடத்திய தொழிலாளர் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும், பந்த்களும் எண்ணிலடங்காதவை.

  1950 மற்றும் 1960 களுக்கிடையில் இந்திய ரயில்வேயில் பணியிலிருக்கையில் தெற்கு மும்பை வேட்பாளராகக் களமிறங்கிய ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்  இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரான எஸ். கே பட்டீலை 1967 பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

  எமர்ஜென்ஸிக்கு எதிரான யுத்தம்...

  ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் தொழிற்சங்க வாழ்வில் 1974 ஆம் ஆண்டு அவர் முன் நின்று நடத்திய ரயில்வே ஸ்ட்ரைக் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது அவர்  அனந்திந்திய ரயில்வேமேன் ஃபெடரேஷனின் தலைவராக இயங்கி வந்தார். அதுமட்டுமல்ல 1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஆட்சியில் அவசரகால நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போதும் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுத்தப் பட்ட தலைவர்களில் ஒருவராக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமது அதிகாரக் கரத்தின் எல்லை எதுவரை செல்லுமென்பதை நிரூபிக்கும் வகையில் இந்திரா அரசு ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை 1976 ஆம் ஆண்டின் முக்கியத்துவம் மிகுந்த பரோடா டைனமைட் வழக்கு எனும் வெடிகுண்டு வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தது. இந்த வழக்கில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் மொத்தம் 24 பேர் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர்.

  கோ கோ கோலா, ஐ பி எம் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்தமை...

  நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்டதும் சிறையிலிருந்து வெளிவந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு ஜனதா தளம் சார்பில் பிகார் மாநிலம் முஸாபர்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வென்று மத்திய தொழில்துறை அமைச்சரான போது இவரெடுத்த முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று அமெரிக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோ கோ கோலா மற்றும் ஐ பி எம் இரண்டும் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் எனும் உத்தரவு.

  கொங்கன் ரயில்வே புராஜெக்ட்...

  அதுமட்டுமல்ல ஃபெர்னாண்டஸ் ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த போது அவரெடுத்த முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று தான் கொங்கன் ரயில்வே புராஜெக்ட். அடுத்தாக அவர் வாஜ்பாய் அமைச்சரவையில் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் தலைமையின் கீழ் பாதுகாப்புத்துறை அமைச்சராக அங்கம் வகிக்கையில் நடைபெற்ற கார்கில் போரில் திறம்மிக்க பல முடிவுகளை உடனடியாகச் செயல்படுத்தி போரில் இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.  ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா சார்பில் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நடத்த அனுமதி உறுதுணையாக இருந்ததிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

  மறைந்த அரசியல் தலைவரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 2010 ஆம் ஆண்டு வரை மாநிலங்கவை உறுப்பினராக இருந்தவர்.

  தொழிற்சங்கங்களுக்கு முன்னோடித் தலைவராகவும் எழுத்தாளராகவும் அடையாளம் காணப்படுவதில் பெருமைப்படுபவர்.

  ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீதான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும்...

  பிரிவினை இயக்கங்கள் மற்றும் குழுக்களுடனான நட்பு...

  தொடர்ந்து பல ஆண்டுகளாக பலவிதமான பிரிவினை இயக்கங்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருபவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் எனும் குற்றச்சாட்டு அவர் மீது அழுத்தமாகப் பதிந்திருந்தது. அவற்றுள் முக்கியமானது விடுதலைப் புலிகளுடன் அவருக்கிருந்த உறவு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பளித்தவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் எனும் குற்றச்சாட்டை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் மீது வைப்பது வழக்கம்.

  சி ஐ ஏ நிதி பெறுபவர் எனும் குற்றச்சாட்டு...

  நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது அந்நிய நாட்டு ராணுவத்துடன் இணைந்து சதிச் செயலில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் இவர் மீது வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஒரு சி ஐ ஏ ஏஜண்ட் எனும் ரீதியில் இந்திரா இவர் மீது அசைக்க முடியாத குற்றம் சுமத்தினார்.

  தெஹல்கா ஆயுத பேர வழக்கு...

  இவ்வழக்கில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவருடன் இணைந்து சமதா கட்சியை நிறுவிய ஜெயா ஜேட்லி மற்றும் அன்றைய காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பங்காரு லக்ஸ்மண்.

  பராக் ஏவுகணை வழக்கு...


  2006 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் சி பி ஐ தரப்பில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அவருடைய சகபாடியான ஜெயா ஜேட்லி கடற்படை அட்மிரல் சுஷில் குமார் உட்பட மூவர் மீது பராக் ஏவுகணை வழக்கில் குற்றம்சாட்டி பதிவு செய்து முதல் தகவலறிக்கை தாக்கல் செய்தது. ஆயினும் இவ்வழக்கில் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் வழக்கு குறித்த போதிய விளக்கங்கள் அளித்த பின் அவ்வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

  பத்திரிகையாளராக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் ஈடுபாடு...

  மறைந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு பத்திரிகைத் துறையிலும் எழுத்துத் துறையிலும் அவரது பள்ளிக்காலம் முதலே மிகுந்த ஈடுபாடு இருந்து வந்திருக்கிறது. 

  கொங்கனி மொழியில் ’கொங்கனி யுவக்’,  கன்னடத்தில் வெளிவந்த ’ரைதாவாணி’ உள்ளிட்ட இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து செயல்பட்டார் ஃபெர்னான்டஸ். அத்துடன் அரசியல் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து பல புத்தகங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன.

  அவை முறையே...

  • What Ails the Socialists (1972)
  • The Kashmir Problem,
  • Railway Strike of 1974, 
  • Dignity for All: Essays in Socialism and Democracy (1991),
  • George Fernandes Speaks (1991) (Auto biography)

  உள்ளிட்டவை.

  அதுமட்டுமல்ல,  ஆங்கிலத்தில் வெளிவந்த ஓரிரு மாத இதழ்களுக்கு ஆசிரியராகவும் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

  ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் தனிப்பட்ட வாழ்க்கை...

   

  ஒருமுறை அன்றைய யூனியன் அமைச்சராக இருந்த ஹுமாயுன் கபீரின் மகள் லீலா கபீரை தமது விமானப் பயணத்தின் போது சந்தித்தார் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். பயணத்தின் போதும் பயணத்தின் பின்னும் தொடர்ந்த உரையாடலில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. 1971 ஜூலை 22 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சீன் ஃபெர்னாண்டஸ் என்றொரு மகன் இருக்கிறார். 1980 களில் லீலா கபீர், ஃபெர்னாண்டஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்த திருமண பந்தம் பிரிவில் முடிந்தது.

  ஃபெர்னாண்டஸின் பிற்கால வாழ்வில் அவருடைய சிறந்த தோழியாகவும் வாழ்க்கைத்துணையாகவும் உடன் நின்றவர் ஜெயா ஜேட்லி. இவர்கள் இருவரும் இணைந்து தோற்றுவித்தது தான் சமதா கட்சி.

  மறைந்த தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு கொங்கனி, ஆங்கிலம், இந்தி, துளு, கன்னடம், மராத்தி, தமிழ், உருது, மலையாளம், லத்தீன் உட்பட குறைந்த பட்சம் 10 மொழிகள் எழுதவும், பேசவும் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்ல இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இவரது புலமை அபாரமானதாகவும் இருந்தது.

  இறுதி நாட்கள்...

  வயோதிகம் காரணமாக அல்சைமர் மற்றும் பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 2010 ஆம் ஆண்டு முதல் ஹரித்வாரில் இருக்கும் பாபா ராம்தேவ் ஆசிரமத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கே அவரை சிகிச்சைக்காக அட்மிட் செய்தவர் அவருடைய முன்னாள் மனைவி லீலா கபீர். ஆனால், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தங்களுக்கே உள்ளதாக ஃபெர்னாண்டஸின் உடன் பிறந்த சகோதரர்கள் வழக்குத் தொடுக்கவே... அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவரது முன்னாள் மனைவிக்கே உண்டு... சகோதரர்கள் சென்று பார்த்து வர அனுமதி உண்டு என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின் அவ்வழக்கு முடிவுக்கு வந்தது.

  2012 ஆம் ஆண்டு.. ஃபெர்னாண்டஸின் சினேகிதியான ஜெயா ஜேட்லி அவரை ஒருமுறை மருத்துவமனையில் சந்திக்க கோர்ட் அனுமதித்த போதும் ஃபெர்னாண்டஸின் முன்னாள் மனைவி லீலா கபீர் அதை எதிர்த்தார் என்பது பத்திரிகை செய்தி.

  இறுதியாக தீராத உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று (29.01.19) காலை டெல்லியில் காலமானார்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp