பெற்ற தாயே மகளை விற்கத் துணிந்த கொடுமை! புடம் போட்ட தங்கமாய் மீண்டு சமூகசேவையில் வெற்றி நடைபோடும் மகள்!

தன் அப்பாவைக் காட்டிலும் வயது அதிகம் கொண்டவரான பிரேமனுடன் வாழ சொந்த அம்மாவால் நிர்பந்திக்கப்படுகிறார் உமா. இத்தனைக்கும் ஒரே காரணம் அவளது அம்மா பிரேமனிடம் பெற்ற கடனே!
பெற்ற தாயே மகளை விற்கத் துணிந்த கொடுமை! புடம் போட்ட தங்கமாய் மீண்டு சமூகசேவையில் வெற்றி நடைபோடும் மகள்!

உமா பிரேமனைத் தெரியுமா உங்களுக்கு?

தெரியாதென்றால் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய நபர் இவர்.

பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில் தான். கோவை சிந்தாமணிப்புதூரில் சின்னஞ்சிறுமியாக அப்பா பாலனின் விரல் பிடித்து அலைந்த காலத்தில் உமாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தனது வாழ்க்கையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சூறாவளிகளைத் தான் கடக்க வேண்டியிருக்குமென்று. இவருடையது இயல்பான குழந்தப் பருவமல்ல. எதிர்கால வாழ்வு குறித்த எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி ‘பாதுகாப்பாக வாழ்தல்’ ஒன்றையே தன் வாழ்வின் ஒற்றை எதிர்பார்ப்பாகவும், குறிக்கோளாகவும் கொண்டு வாழ்ந்து முடிக்கப்பட்ட சிறுமிப் பருவம் இவருடையது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குமே பாதுகாப்பு கவசமாக விளங்கக் கூடிய முதல் உறவு பெற்ற அன்னை எனும் பந்தம். ஆனால் உமாவின் வாழ்விலோ அவர் சந்தித்த அத்தனை துயரங்களுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிய கொண்டிருக்கிறார் உமாவின் அம்மா தங்கமணி.

கோவை சிந்தாமணிப்புதூரில் மில் ஊழியராகவும் ஓய்வு நேரத்தில் கம்பவுண்டராகவும் செயல்பட்ட அப்பா பாலன். கொஞ்சம் படிப்பும் நிறைய லாவண்யமும் கொண்ட அம்மா தங்கமணி. இவர்களது மகள் உமா. உமாவை அடுத்து ஒரு தம்பியும் உண்டு. உமா சிறுமியாக இருந்த போதே அவரது அம்மா தங்கமணி அப்பா பாலனுடனான வாழ்க்கையை அறுத்துக் கொண்டு இவர்களது குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த மற்றொரு நபருடன் வேறு வாழ்க்கையை நாடிச் சென்று விடுகிறார்.

பள்ளி செல்லும் சிறுமிப் பருவம்... அவள் படிப்பாளா? வீட்டு வேலைகளைச் செய்வாளா? இரண்டையுமே செய்தாக வேண்டிய நிர்பந்தம். அப்பாவுக்கு மில் வேலை இருக்கிறது. அவரும் கூடமாட உதவினாலும் யோசித்துப் பார்க்கையில் எட்டாம் வகுப்பு கூடத் தாண்டாத ஒரு சிறுமியின் தலையில் சமையல், வீட்டு நிர்வாகம், தம்பியை வளர்க்கும் பொறுப்பு என அத்தனையும் சுமத்தப்படும் போது அவளது மனம் என்ன பாடு படும் என! பாடுகள் பல இருந்தாலும் உமா தன்னைத்தானே நொந்து கொண்டாளே தவிர தம்பியை வளர்ப்பதில் சுணக்கம் காட்டவில்லை. இடையில் அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டாலும் கூட அவர்களுக்கு இந்த பாரத்தைச் சுமக்க மனமற்றுப் போன காரணத்தால் மீண்டும் அப்பாவிடமே வந்து சேர்ந்தார்கள்.

வீட்டில் அம்மா என்றொருத்தி இல்லாத காரணத்தால் தானே இத்தனை அவலமும்? சரி ஒரு சிற்றன்னை வந்தால் எல்லாமும் சரியாகி விடும் என்று அப்பாவுடன் பிறந்த சித்தப்பா மனைவி சொல்ல, அதைக்கேட்டு அப்பாவை நிர்பந்தித்து அவருக்கொரு மறுமணம் ஏற்பாடாகிறது உமாவின் வற்புறுத்தலின் கீழ். சிற்றன்னை வந்தால் அம்மாவாகி விடுவார் என்ற உமாவின் மனக்கோட்டையும் எதிர்பார்ப்பும் அவள் வந்த ஓரிரு வாரங்களுக்குள் தவிடு பொடியாகி விடுகிறது. முன்பாவது தம்பியையும், வீட்டையும் மட்டும் பார்த்துக் கொண்டு கொஞ்சம் படிக்க கிடைத்தது உமாவுக்கு. இப்போதோ... சித்தி வந்த பிறகு அவளது வேலைகளையும் இவளே செய்யும் படியானதில் அந்தச் சின்னப்புறாவின் சிறகுகள் தினந்தோறும் ஒடிக்கப்படும் சித்ரவதைக்கு உள்ளாகின. சித்திக்கு ஒரு குழந்தை பிறந்த போது அவளது புத்தியிலும் தடுமாற்றம் வந்தது,. உமாவின் அத்தை மகன் ஹரியுடன் சித்திக்கு தவறான தொடர்பு ஏற்பட்டு முடிவில் சித்தி அவனுடனே அனுப்பி வைக்கப்படும் துயர முடிவு நேர்ந்தது.

பிறகாவது உமாவின் வாழ்வில் ஒளி பிறந்ததா என்றால்... அது தான் இல்லை.

அம்மா எனும் ரூபத்தில் உமாவின் வாழ்வில் இருளுக்குள் மூழ்க வழி தான் ஏற்பட்டுப் போனது.

மேல்நிலைக் கல்வி பயிலும் போது கல்விச் சுற்றுலாவுக்கு என குருவாயூர் சென்ற இடத்தில்... ஓடிப்போன அம்மாவுடன் தொடர்பு ஏற்பட மீண்டும் ஒரு வாய்ப்பு அமைகிறது உமாவுக்கு. உன்னைப் போலவே ஒரு பெண்மணி இங்கு வசிக்கிறார். நான் அவரைத் தினமும் இந்தப் பக்கம் பார்க்கிறேன் என்று உமா தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சிப்பந்தி சொல்லவே... அறியாச்சிறுமி உமா... தன்னைப் போலவே தோற்றம் கொண்ட அந்தப்பெண்மணி யாராக இருக்கக் கூடும் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவருக்கொரு மடல் எழுதி அனுப்பி விட்டு ஊர் திரும்புகிறாள்.

ஊர் வந்த பின்பு தான் தெரிகிறது. கடிதம் சென்று சேர்ந்தது உமாவின் அம்மா தங்கமணிக்கே தான் என்று.

வளர்ந்து குமரியாகி இருக்கும் மகளைக் கண்ட தங்கமணிக்கு மகளை வைத்து காசு பண்ணும் குரூர புத்தி உள்ளூரத் தோன்றவே... சட்டரீதியாக மகள் உமா, மகன் தம்பிக்குட்டனின் பொறுப்பு தனக்கே என்று நீதிமன்றம் மூலமாக வழக்கிட்டு அவர்களது கஸ்டடியைத் தனதாக்கிக் கொள்கிறாள்.

அங்கிருந்து மீண்டும் துவங்குகிறது சிறுமி உமாவின் கஷ்டகாலம்.... அதை வெறுமே கஷ்டகாலம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு அம்மா, தன் மகளை எப்படியெல்லாம் துன்பத்துக்கு ஆளாக்கக் கூடாதோ அப்படியெல்லாம் துன்பங்களுக்கு ஆளாக்குவதை ஒரு கடமையாகவே செய்து வந்தார் தங்கமணி.

தேவதாசிக் கதைகளில் வரும் அம்மாக்களைப் போல மகளை காசுக்கு விற்கவும் துணிந்தார். ஆம்... வெறும் 25,000 ரூபாய்க்கு மலையாளி ஒருவருக்கு விற்கப்பட்டு மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் உமா. இத்தனைக்கும் தான் விற்கப்பட்டது குறித்து அந்தச் சிறுமிக்கு ஏதும் தெரியாது. மும்பையில் வேலை வாங்கித் தருவார் என்று நம்பிச் சென்ற போது.. அவராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் அபாயம் நேரவிருக்கையில் கடவுள் புண்ணியத்திலும் அங்கிருக்கும் நல்லவர்கள் இருவர் புண்ணியத்திலும் மீண்டும் கேரளா திரும்புகிறார் உமா. 

தப்பி வந்த பின்  மீண்டும் அம்மாவிடம் செல்ல விருப்பமின்றி கோவைக்கு அருகில் ஒரு கிறிஸ்தவ மடத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக முயற்சிக்கையில் அதையும் நாடகமாடி கெடுக்கிறாள் அம்மா தங்கமணி. ஆடாத நாடகமெல்லாம் ஆடி மகளைக் கரைத்து தன்னுடன் அழைத்துச் சென்று உமாவை விட மூன்று மடங்கு வயது அதிகமுள்ள ஒரு ஆளிடம் உமாவை ஒப்படைக்கிறாள் தங்கமணி.

அந்த ஆள் யார்? 

அவருக்கும் தங்கமணிக்கும் என்ன உறவு?

அவருக்கு உமாவின் மேல் என்ன அக்கறை?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்... அந்த மனிதர் கேரளாவில் பிறந்து மும்பையில் டிராவல் ஏஜன்ஸி வைத்து நடத்தி வந்த பெரும்பணக்காரரான பிரேமன்.

தன் அப்பாவைக் காட்டிலும் வயது அதிகம் கொண்டவரான பிரேமனுடன் வாழ சொந்த அம்மாவால் நிர்பந்திக்கப்படுகிறார் உமா.

இத்தனைக்கும் ஒரே காரணம் அவளது அம்மா பிரேமனிடம் பெற்ற கடனே!

கடனுக்கு இப்போது மகளை விற்றார் தங்கமணி.

பிரேமனுடன் மனைவியாக அல்ல... ஒரு செக்ரட்டரி போல அவர் செல்லுமிடமெங்கும் சென்று உடன் தங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார் உமா.

இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் உமாவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய சின்னஞ்சிறு சந்தோஷம் ஒன்று இருந்தது என்றால் அது அவளது சிறுவயது தோழியான தங்கமணியின் நினைவும், சிறு வயதிலிருந்தே சேவையில் ஊறிப்போன மனமும் தான். அந்த எண்ணத்துடன் தான் அவள், பிரேமனுடன்  இணைந்து வாழ்க்கையை கடந்து கொண்டிருந்தாள்.

பிரேமனுடனான உமாவின் வாழ்க்கை ஒவ்வொரு நொடியிலும் நரகமாகத்தான் இருந்திருக்கிறது. அதை வார்த்தைகளால் வர்ணிப்பதைக் காட்டிலும் உமாவின் கதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ என்ற பெயரில் இந்த வருட புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை வாங்கி வாசித்து விடுவது உத்தமம்.

சிலருடைய கஷ்டங்களைப் பார்க்கும் போது, அவர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த கோர முட் செடிகளையும், விஷ ஜந்துக்களையும் பற்றி அறிய நேரும் போது நம்முடைய வாழ்வில் நாம் அன்றாடம் கடக்கும் சிறு சிறு பிரச்னைகளைக் கூட நாம் பூதாகரமாக எண்ணிக் கொள்வது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

மனித வாழ்வில் அதிலும் குறிப்பாக ஒரு பெண் குழந்தையின் வாழ்வில் ஆகச்சிறந்த பிரச்னையாக கருதப்படக் கூடியது அவளது பாதுகாப்பு தான். அதைத் தரவேண்டிய அன்னையே தான் பெற்ற மகளை தனது சுயநலங்களுக்காக வாழ்நாள் முழுதும் பகடைக்காயாகவே பயன்படுத்தி வந்திருப்பதை உமாவின் கதை சொல்கிறது.

இதெல்லாம் பிரமாதமில்லை... இது அத்தனையும் கர்ம வினை. இதைத் தாண்டியும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

’தேடிச் சோறுநிதந் தின்று — பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் 
வாடித் துன்பமிக உழன்று — பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து — நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் 
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல 
வேடிக்கை மனிதரைப் போலே — நான் 
வீழ்வே னன்றுநினைத் தாயோ? 

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை 
நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன் 
முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் 
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி 
என்னைப் புதிய வுயிராக்கி-எனக் 
கேதுங் கவலையறச் செய்து — மதி 
தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும் 
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.’

- எனும் பாரதி வரிகளுக்கு ஏற்ப.. தன் வாழ்வின் நரகவேதனைகளுக்கு நடுவே... ஆம்.. பிறகெப்படியும் அதை விளிக்க இயலாது.

கணவராக ஊர் கூட்டி விருந்து வைத்து உமாவை மனைவியாக ஏற்றவரில்லை பிரேமன். ஆயினும் பிரேமனின் மனைவியாக நான்காவது மனைவியாக உமா ஆன கதையை நீங்கள் ’கதை கேட்கும் சுவர்களில்’ வாசித்துத் தீர்த்தல் நலம். பிரேமனுடனான நாட்கள் கொடுங்காட்டில் புலியிடம் சிக்கிய சிறு மான்குட்டியின் நிலை தான். புலிக்கு ஒரே நாளில் இரையாகி இருந்தால் மானின் வலி தீர்ந்து போயிருக்கக் கூடும். இந்தப் புலி கொடுமைக்காரப் புலியாகவும் சைக்கோத்தனமாக புலியாகவும் இருந்ததால் உமாவுக்கு. பிரேமனின் இறப்பு வரையிலும் விடிவேதும் கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கவில்லை.

பிரேமனின் குடும்பம் கொச்சியில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பம். அவரது மூதாதையர்கள் அங்கு செல்வாக்கானவர்களாக இருந்தனர். ஆயினும் என்ன? டிபி தாக்கி பிரேமன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்ததை எவராலும் தடுத்திருக்க இயலவில்லை. அப்படியொரு ஆக்ருதியாக பிரேமன் அவர்களுக்கு காட்சியளித்தார் என்பதே நிஜம். பணம் தந்த அகங்காரம், தன்னை எமன் என்ன செய்து விடக்கூடும் என்ற எள்ளல், மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்க மறுக்கும் முசுட்டுத்தனம் இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து ஒருநாள் பிரேமனின் வாழ்வில் மரணம் எட்டிப் பார்த்தது. 

கூட வாழ்ந்த நாட்கள் முழுதிலும் உமாவுக்கொரு கொடூர  வில்லனாகக் காட்சி அளித்திருந்த பிரேமன் தான் இறக்கும் தறுவாயில் ஒரு மிகப்பெரிய நன்மையைச் செய்திருந்தார். அது.. தன் சொத்துக்கள் முழுதையும் உமாவின் பெயருக்கு மாற்றி எழுதி பிற மனைவிகள் அனைவருக்கும் அவரையே கார்டியனாக நியமித்தமை. இதை உமாவால் நம்பத்தான் முடியவில்லை. வாழும் போது அவர் எத்தனை தூரம் பிரேமனை வெறுத்தாரோ அது அவருக்கே வெளிச்சம். ஆயினும் இன்று மலையாளிகளின் ஏன் பல தமிழர்களுக்கும் கூட ‘உமா சேச்சியாகி’ மருத்துவ உதவிகள் ஆற்றும் போது நிச்சயம் அவர் பிரேமனை நேசிக்கத்தான் செய்வார்.

உமா.. உமா சேச்சியானது பிரேமன் அளித்த சொத்துக்களால் மட்டுமல்ல... 

இளமை முதலே அவரது அடியாழத்தில் முகில் மறைத்த நிலவாகத் தேங்கிக் கிடந்த சேவை மனப்பான்மையாலும் தான்.

அந்த சேவை மனப்பான்மைக்கு பிரேமனின் மாபெரும் சொத்துக்கள் வலுச் சேர்த்திருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆர்வமிருப்பவர்கள் கூகுளில் உமா பிரேமன் என்றும் சாந்தி மெடிக்கல் மிஷன் என்று தேடிப் பாருங்கள்... உமா சேச்சியின் சேவைகளும் அவருக்கு இதுவரை கிடைத்திருக்கும் விருதுகளும் குறித்து தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவின் சிறந்த 100 பெண்களில் இவரும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய கெளரவத்தை உமா சேச்சியால் எப்போதும் மறக்கவியலாது. அது மட்டுமா... அம்மாவின் நச்சுத்தனங்களுக்குப் பயந்து அன்னை தெரசாவின் ஆசிரத்தில் சேர்ந்து தொண்டு செய்யக்கூட ஒரு முறை முயன்றிருக்கிறார் உமா. கொல்கத்தாவில் அன்னையைச் சந்திக்கச் சென்ற அனுபவமும் உமாவுக்கு உண்டு. 

எல்லாமும் எதற்காக பாதுகாப்புக்காக? ஒரு பெண் தன் பாதுகாப்புக்காக தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் கடைசி வரை முயன்று பார்த்திருக்கிறார். ஆனால் விதி அவரை இட்டுச் சென்றதோ கடைசி வரையிலும் முட்கள் நிறைந்த பாதைகளுக்கே. ஒரு கட்டத்தில் அந்த முட்பாதையையே தனக்கு கிடைத்த பாதுகாப்பாகக் கருதி வாழத்தொடங்கி விட்டிருக்கிறார் உமா. பிரேமனுடனான வாழ்க்கை அப்படித்தான் இருந்திருக்க கூடும்.

இன்று அந்தக் காலங்களை எல்லாம் உமா சேச்சி மறக்க முடிந்திருந்தால் அது அவரது மருத்துவ சேவை அமைப்புப் பணிகளால் மட்டுமே!

இவரது கதை ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய கதை. 

புத்தகம்: கதை கேட்கும் சுவர்கள்
ஆசிரியர்: ஷைலஜா (தமிழில்) மலையாள மூலம்: ஷாபு கிளித்தட்டில்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
விலை: 350
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.