Enable Javscript for better performance
History of tamilnadu boundary reduced gradualy!- Dinamani

சுடச்சுட

  

  தமிழக எல்லை குறுகிய வரலாறு... நடுநிலைத்தன்மை கொண்ட விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன!

  By RKV  |   Published on : 16th February 2019 04:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Tamil_Nadu_district_map

   

  ‘ஒருகாலத்தில், முழுகிப்போன தமிழ்நாடாகிய பழம்பாண்டி நாடும் நாவலந் தீவு என்னும் இந்திய தேசமும், தமிழகமாயிருந்தன. பழம் பாண்டி நாடு மூழ்கியபின், விந்தியமலைக்கு வடக்கிலுள்ள நிலப்பகுதி பிராகிருதம் என்னும் வட திராவிட நாடாகி, ஆரியர் வந்தபின் ஆரியா வர்த்தம் என்னும் ஆரிய நாடாக மாறிற்று.

  அதன்பின், குஜராத்தி, மராட்டியம், ஒட்டரம் (ஒரிசா) ஆகிய நாடுகல், முன்பு திராவிடமாக மாறிப் பின்பு ஆரியமாகத் திரிந்தன.

  அதன்பின், வடுகம் என்னும் தெலுங்க நாடும் பின்னர்க் கன்னட நாடும் திராவிடமாக மாறின. கன்னடநாடு 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடாகக் கருதப்பட்டது. அதனால், வட கன்னடத்திலுள்ள கோகர்ணம் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரின் தேவாரப் பாடல் பெற்றது. அம்மட்டத்திற் கீழ்கரை வரையுள்ள இற்றைத் தெலுங்கு நிலமும், அன்று தமிழ் நிலமாயிருந்தது. 

  கன்னட நாடு தோன்றிய பின், தெலுங்கு நாட்டின் தென்னெல்லை அல்லது தமிழகத்தின் வடவெல்லை, சற்றுத் தெற்கே தள்ளி வந்தது.

  பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின், மூவேந்தர் தமிழ் நாடுகளுள் ஒன்றான சேர நாடு, கேரளநாடு அல்லது மலையாள நாடு என்னும் திரவிட நாடாகப் பிரிந்து விட்டது.

  எஞ்சிய சோழ பாண்டி நாட்டு நிலப்பரப்பே, இன்று தமிழ்நாடும் புதுவை நாடுமாகப் பிரிந்த தமிழகமாக இருந்து வருகின்றது.
  இதிலும் சில வட்டங்களைக் (கூற்றங்களைக்) கன்னடர் சுரண்டப் பார்க்கின்றனர்.

  தமிழ்த் திரிபினாலேயே, தமிழர் பல்வேறு சிற்றினங்களாக மாறினர்; பல்வேறு நாடுகளும் தோன்றின. அதனால் தமிழகமும் வர வரக் குறுகிற்று இனிமேலும் குறுகாவாறு, செந்தமிழ் நடையைப் போற்றிக் காத்தல் வேண்டும்.’

  இப்படி இருக்கிறது தேவநேயப் பாவாணரின் தமிழர் வரலாற்று நூலின் தமிழக எல்லைகளைப் பற்றிய தகவல். இதைப் பற்றிய மேலதிக விவாதம் வரவேற்கப்படுகிறது.

  இது தமிழகத்தில் பிறந்த தமிழறிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரலாற்று விளக்கம். ஆனால் இக்கருத்து மாநிலத்துக்கு மாநிலம் அங்கிருக்கும் அறிஞர்களின் வரலாற்று அறிவுக்கு ஏற்ப மாறுபடும் என்றே கருதுகிறேன். வடக்கிலிருப்பவர்களுக்கு தென்னகம் முழுதுமே திராவிட நாடு தான். அப்படிப் பார்த்தால் ஆந்திரம், கர்நாடகம், ஆந்திர எல்லையை ஒட்டிய ஒரிஸ்ஸா பகுதி, தமிழகம், மலையாள நாடு எல்லாமும் சேர்ந்தது தான் திராவிட நாடு என்று சொல்லப்பட்டு வந்தது. நாடு விடுதலை அடைந்து முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது ‘திராவிடம்’ என்ற பதம் காங்கிரஸ் அல்லாது அரசியல் ஆதிக்கம் பெற்று பதவிக்கு வர நினைத்த பிற கட்சியினருக்கு ஒரு துருப்புச் சீட்டாக உபயோகப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்றும் கூட அப்படித்தான் முதலில் ஆரியம், திராவிடம் என்றார்கள். பிறகு இப்போது திராவிடம் என்ற பதமும் உதறப்பட்டு தமிழ்நாடு தமிழனுக்கே, தெலுங்கு தேசம் தெலுங்கர்களுக்கே, கர்நாடகம் கன்னடனுக்கே, கேரளம் மலையாளிக்கே என்றெல்லாம் முழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். வடக்கிலும் இதே நிலை தான் என்றாலும் அவர்களில் யாராலுமே தங்களது மாநிலத்தைப் பற்றியதான பூர்வீக வரைபடம் மிகச்சரியானதாக நினைவுகூரப்படுமா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. தமிழகத்தில் திராவிடர் கழகம் என்ற பெயரில் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்து ஈ வெ ரா பெரியார் தலைமையில் தனிக்கட்சியே உதயமானது. பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்ற அண்ணா ஆட்சிக்கு வரும் முன் திராவிட நாடு கோரிக்கையைத் தனித்தமிழ்நாடு கோரிக்கையாக மாற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அண்ணாவின் தேர்தல் பிரச்சாரங்கள் அத்தனையும் வரலாறு படைத்தவை. ஆயினும் தமது தனித்தமிழ் நாட்டு கோரிக்கையை இந்தோ சீனப்போரை முன்னிறுத்தி வாபஸ் பெற்றார் அண்ணா என்கிறது மைதிலி ராஜேந்திரன் எழுதிய ‘கலைஞரின் இந்தி எதிர்ப்பு போராட்டம்’ நூல்.

  ஆக அரசியல் காரணங்களுக்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் மாநிலங்களின் எல்லைகளும், அதிகாரங்களும் மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. இதில் எல்லை குறுக்கப்பட்டதா அல்லது தானே குறுகியதா என்பதை அன்றைய காலகட்ட அரசியல் மற்றும் சமூக சூழலை நுணுக்கமாகக் கண்காணித்து நடுநிலைத் தன்மையுடன் ஆராயக் கூடியவர்களால் மட்டுமே தெளிவாகக் கூற இயலும். உண்மையில் இது மிக விரிவாகவும், விளக்கமாகவும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அதாவது தொலைக்காட்சியில் காட்டப்படும் உணர்ச்சிகரமிக்க, சண்டை சச்சரவுகளுடன் கூடிய விவாதமேடை நிகழ்வுகளைப் போல அல்லாமல் இந்திய அரசியல் வரலாற்றையும் , தமிழக அரசியல் வரலாற்றையும் மிகத்தெளிவாகத் அறிந்து கொள்ளும் பொருட்டு முன்வைக்கப்படும் விவாதங்களாக அவை அமைய வேண்டும்.

  வாசகர்களில் ஆர்வமுள்ளவர்கள் இது குறித்து இங்கு விவாதிக்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai