பெண்களுக்கு எட்டாத உயரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி!

தமிழகத்தில் மொத்தமுள்ள 241 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும் அதற்கு ஈடான பிற கட்சிப் பதவிகளுக்கும் கூட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் எனக் கட்சி வேறுபாடு இன்றி ஆண்களே இம்முறையும் செயலாளர்களாகவும்
பெண்களுக்கு எட்டாத உயரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி!

தமிழகத்தின் முதலமைச்சராக ஒரு பெண் கிட்டத்தட்ட 6 முறை இருந்திருக்கிறார். அவர் தலைமையிலான அதிமுகவில் சுலோச்சனா சம்பத், வளர்மதி, கோகுல இந்திரா, எனப் பெயர் சொல்லத்தக்க பெண் மந்திரிகளும், எம் எல் ஏக்களும் இருந்திருக்கிறார்கள். திமுகவின் இன்றைய அரசியல் வாரிசுகளிலும் கூட கனிமொழியோடு இணைந்து  தமிழகத்தில் பெயர் சொன்னாலே தெரிந்து கொள்ளக் கூடிய அளவில் கீதா ஜீவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பூங்கோதை ஆலடி அருணா, சல்மா, போன்றோர் நன்கு பரிச்சயமான அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனாலும் பாருங்கள் இவர்களது எண்ணிக்கை என்னவோ விரல் விட்டு எண்ணத்தக்க அளவில் தான் இருக்கிறது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 241 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும் அதற்கு ஈடான பிற கட்சிப் பதவிகளுக்கும் கூட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் எனக் கட்சி வேறுபாடு இன்றி ஆண்களே இம்முறையும் செயலாளர்களாகவும், பொருளாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 241 கட்சிப் பொறுப்புகளில் வெறும் மூன்று இடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிசயமாக 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் மொத்தம் 51,810 பெண்களுக்கு 6 மேயர் பொறுப்புகள் உட்பட வெவ்வேறு வகையான பதவிகளின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதுவும் கூட அப்போது பெண்கள் போட்டியிடுவதற்கான தொகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிர்பந்தம் காரணமாகப் பெண்கள் அவ்விடங்களில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். 

அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தற்போதுள்ள பிரதான கட்சிகளை எடுத்துக் கொண்டால் மொத்தமுள்ள 241 மாவட்டச் செயலாளர் பொறுப்புகளுக்கும் மற்றுமுள்ள இதர தலைமைப் பொறுப்புகளுக்கும் அவர்கள் தேர்வு செய்திருப்பது முற்றிலுமாக ஆண்களையே... போனால் போகிறதென்று கண் துடைப்பிற்கு மூன்றே மூன்று பெண்களுக்கும் கட்சிப்பதவி வழங்கப்பட்டிருந்த போதும் அங்கும் அவர்களது பெயரில் ஆதிக்கம் செலுத்தவிருப்பது அந்தந்தப் பெண்களின் கணவர்களோ, தகப்பனார்களோ அல்லது சகோதரர்களோ தான். 

கட்சிகளுக்கான தலைமைப் பதவி பெறுவதிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளைப் பெறுவதிலும் பெண்களின் நிலை இன்னும் இப்படித்தான் நீடித்துக் கொண்டிருக்கிறது இங்கே!

திமுகவிலாவது மொத்தமுள்ள 53 மாவட்டங்களுக்கான தலைமப் பதவிகளில் மூன்று பெண்களுக்கு முக்கியமான கட்சிப் பதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதாவின் மரணம் வரையிலும் ஒரு பெண் தலைவியைக் கொண்டிருந்த அதிமுகவிலோ ஒரே ஒரு பெண்ணுக்குக் கூட இதுவரை மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது விந்தையிலும் விந்தை திமுகவிலும் கூட விழுப்புரம் தெற்குக்கு அங்கயற்கண்ணிக்கும், வேலூர் கிழக்குக்கு முத்தமிழ் செல்விக்கும். தூத்துக்குடி வடக்குக்கு கீதா ஜீவனுக்கும் கட்சிப் பதவி வழங்கப்பட்டிருப்பதும் கூட நியாயமான முறையில் அல்ல என்றும் இதுவும் கூட டோக்கன் முறை பதவி வழங்கல் தான் என்ற குற்றச்சாட்டு பெண் அரசியல்வாதிகளிடையே நிலவுகிறது.

பெயர் சொல்ல விரும்பாத திமுக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தது என்னவெனில்; மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருப்பவர்கள் மாவட்ட அளவில் கட்சிச் செயல்பாடுகளில் ஊக்கமுடன் ஈடுபட்டு கட்சிக்காக உழைப்பவர்களின் பெயரை கட்சித் தலைமை வரை எடுத்துச் செல்வதே இல்லை. அவர்கள் சுயநலமாகச் சிந்தித்து தங்களை மட்டுமே அனைத்திலும் பிரதானப்படுத்திக் கொள்கிறார்கள். கட்சியில் யாராவது இதைப் பற்றி எதிர்க்குரல் எழுப்பினால் பிறகு அவர்களின் கதி அதோகதி தான். தொடர்ந்து கட்சியில் அவர்களது செயல்பாடும், உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படும். இதில் பாதிக்கப்படுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். திமுக போன்ற பெரிய கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மாவட்ட தலைமைகளின் பேச்சைக் கேட்டு செயல்படுவதைக் காட்டிலும் கீழ்மட்டத் தலைவர்களின் கருத்தைக் கேட்டு செயல்பட்டால் கட்சியின் செயல்பாடு இன்னமும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதைத்தான் இவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து விடுகிறார்களே... ஆண்களின் நிலமையே இப்படி இருக்கையில் பெண் அரசியல்வாதிகளுக்கு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டதே இங்கே அதிசயம் தான் என்கிறார் அவர். 

அதிமுக மாநில அளவில் மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கீர்த்திகா முனியசாமி என்ன சொல்கிறார் என்றால், மாவட்டச் செயலாளராக இருக்கும் தனது கணவர் முனியசாமியுடன் இணைந்து கட்சிப்பணிகளை கவனிக்கச் செல்கையில் அவரால் ஆற்ற முடிந்த அத்தனை வேலைகளையும் தன்னாலும் ஆற்ற முடியும் என்றும், தன்னால் முடியாதது என்று எதுவுமில்லை ஆனாலும் கட்சியில் பெண்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தரப்படாதது ஏனென்ற கேள்வி தனக்குள்ளும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி என்ன சொல்கிறார் என்றால், ஒவ்வொரு மாதமும் கட்சிப் பணிகளுக்காக மட்டும் நான் எனது சொந்தக் கைக்காசில் இருந்து 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவளிக்க வேண்டியதாயிருக்கிறது. மகளிர் அணியாக இருந்தும் நாங்களும் கட்சியின் பிரதான முதன்மை அமைப்பின் உறுப்பினர்களுக்கு இணையாக கட்சிப்பணிகளுக்காக செலவு செய்து வருகிறோம். கட்சித் தலைமையும், தலைவர்களும் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். ஆண்கள் அளவுக்கு பெண்களால் தன்னிச்சையாக கட்சிப்பணிகளுக்குச் செலவிட முடியுமா என்று? நாங்கள் மிகத்திறமையாகவே எங்களது பணிகளைச் செய்து வருகிறோம். இந்நிலையில் கட்சியின் பிரதான அமைப்புக்கு இணையாக எங்களால் செயல்பட முடியாது என எப்படிச் சொல்ல முடியும். என்று சொல்லும் ஜான்சி ராணி சார்ந்திருக்கும் காங்கிரஸிலும் அதன் 72 மாவட்டப் பொறுப்புகளில் மகளிருக்கு... இதுவரை மாவட்டச் செயலாளர் பதவிக்கு இணையான மாவட்ட அளவிலான தலைமைப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவும் இவ்விஷயத்தில் காங்கிரஸிடம் தோற்றுப்போகவில்லை. அதுவும் கூட தனது 51 மாவட்டப் பொறுப்புகளில் கட்சியின் மகளிர் அமைப்புக்கு எவ்விதப் பொறுப்பும் வழங்காமல் தான் பாரபட்சம் காட்டி வருகிறது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு...

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே மாவட்டப் பொறுப்புகளில் ஆண் உறுப்பினர்களுக்கு இணையாக பெண் உறுப்பினர்களும் பங்கு வகிக்க முடியும். தேர்தல் காலத்தில் கூட்டணி அமைக்கப்படும் போது போட்டியிடும் அத்தனை இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு அனைத்து வேட்பாளர்களுக்கும் கிடைத்து விடாது. எங்கே வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றதோ அங்கு பெண் வேட்பாளர்களை நிறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன பிரதான கட்சிகள். இது நாங்களும் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்ற பெயரில் வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமே செய்யப்படக்கூடிய செயல் என்கீறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான U வாசுகி.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சொல்வதைக் கேளுங்கள்... கட்சியில் மாவட்ட அளவிலான பதவிகள் பெறுவதென்பது பெண்களுக்கு மிகக்கடினமான காரியம். அதற்கு பெண் அரசியல்வாதிகள் திறமையுடன் கட்சிப்பணிகளை ஆற்றினால் மட்டும் போதாது. அவர்களுக்கு கட்சியின் மேல்மட்டத் தலைவர்களின் ஆசியும் இருந்தாக வேண்டும், அத்துடன் மக்களிடமும் நல்ல அறிமுகமும், செல்வாக்கும் இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணால் அரசியலில் சோபிக்க முடியும் என்கிறார்.

குடும்ப ஆதரவு...

அரசியலில் வாரிசுகளுக்குப் பதவி என்பது சொல்லப்படாத ரகசியம், குடும்ப ஆதரவு இன்றி ஒரு பெண் தானே சுயம்புவாக அரசியலில் கோலோச்சுவது இங்கு கடினம். தற்போது மாவட்ட அளவிலான பதவிகளைப் பெற்றுள்ள பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கயற்கண்ணிக்கு அவரது தாத்தா, அப்பா, மாமா, கணவர் என அவரது குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் அனைவருமே திமுக எம் எல் ஏக்களாக இருந்தவர்கள். அதே போல முத்தமிழ் செல்வியின் அப்பா N மணி ஜோலார்பேட்டையில் கடந்த 35 ஆண்டுகளாக நகரச் செயலாளராக இருந்து வருகிறார்.

இத்தனை தடைகளையும் தாண்டி பெண் அரசியல்வாதிகளை அச்சுறுத்தும் மற்றொரு விஷயமும் உண்டு, அது பொதுமக்கள் பார்வையில் அவர்களைச் சுற்றி இரைக்கப்படும் மோசமான விமர்சனங்கள், மற்றும் பொது கேலி, கிண்டல் மற்றும் பகடிகளை அவர்களது குடும்பத்தின் அரசியல் பாரம்பரியங்களால் கூடத் தவிர்க்க முடியாது என்பது தான்.

இப்போது தெரிகிறதா? நம் நாட்டில் பெண் அரசியல்வாதிகள் ஏன் அதிகமில்லை என்பது?!

இந்தியப் பெண்களைப் பொருத்தவரை அரசியல் ஆர்வம் என்பது ஆண்களைப் போல பெண்களுக்கும் இயல்பாக ஈடேறிவிடக்கூடியதொரு விஷயமாக இன்றளவிலும் கருதப்படவில்லை என்பதே!

Concept Courtesy: New Indian Express.Com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com