பெட் அனிமல்ஸ் வளர்ப்பு தொண்டா? தொல்லையா? வளர்ப்பவர்களுக்கும், அண்டைவீட்டுக் காரர்களுக்கும்!

அந்த அம்மணி தன்னுடன் 14 வளர்ப்பு மிருகங்களையும் ஹோட்டல் நிர்வாகத்துக்கே தெரியாமல் தங்க வைத்துக் கொண்டார். அதில் 6 பூனைகள், 7 நாய்கள் மற்றும் 1 ஆடு அடக்கம்.
பெட் அனிமல்ஸ் வளர்ப்பு தொண்டா? தொல்லையா? வளர்ப்பவர்களுக்கும், அண்டைவீட்டுக் காரர்களுக்கும்!

வீட்டின் அருகில் ஒரு அபார்ட்மெண்ட் இருக்கிறது. நான்கு மாடித் தொகுதி அது. லிஃப்ட் உண்டு. ஒருமுறை சினேகிதியைக் காண அந்த அபார்ட்மெண்டின் மூன்றாம் தளத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. மூன்று மாடி ஏறவேண்டுமா? லிஃப்ட் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று நான் லிஃப்டைத் தேர்ந்தெடுத்து 3 ஆம் மாடிக்கான பட்டனை அழுத்தினேன், கதவு மிக மென்மையாக மூடிக்கொள்ள இருந்த சந்தர்பத்தில் வராண்டாவின் கார்னரில் இருந்து நடுத்தர வயதுள்ள தம்பதியினர் இருவர் மூச்சிறைக்க ஓடி வந்து லிஃப்டுக்குள் நுழைந்தனர். அவர்களோடு தொடர்ந்து ஆளுயர நாய் ஒன்றும் ஓடி வந்து வீட்டுத் தலைவரது மூக்கை உரசி அவரது இடுப்பில் கால் போட்டு அவரது உயரத்துக்கு நிமிர்ந்து நின்றதும் தான் பின்னல் நின்றிருந்த என்னைக் கண்டிருக்கும் போல... உடனே ஏதோ ஜென்ம வைரியைக் கண்டது போல வவ், வவ்வென்று உச்சஸ்தாயியில் குரைக்கத் தொடங்கியது. எனக்கு இதேதடா வம்பாய் போச்சே என்று சர்வாங்கமும் பயத்தில் விதிர்விதிர்க்க என்ன செய்வது என்று புத்தி மரத்துப் போய் அட்ரீனலின் அதி வேகத்தில் சுரக்கத் தொடங்கி புறங்கையில் முடி குத்திட்டு நிற்கத் தொடங்கிய நொடியில் கண்கள் கூட லேசாகக் கலங்கத் தொடங்கி விட்டன.

எனக்குப் பொதுவாக பெட் அனிமல்ஸ் என்று சொல்லப்படக் கூடிய அத்தனை வகைகளையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கொண்டு ரசிக்கப் பிடிக்குமே தவிர, வளர்க்க அல்ல;

எந்தப் பெட் அனிமல்ஸையும் கையில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்ச முடியாது. நடைபாதையில் குறுக்கிடும் கண் திறக்காத குட்டிப் பப்பிகளைக் கண்டால் சிறிது நேரம் நின்று பிஸ்கட் பாக்கெட் வாங்கிச் சிறிது சிறிதாக பிய்த்துப் போட்டு அது உண்பதை ரசிக்கத் தோன்றுமே தவிர பெட் அனிமல்ஸ் வளர்ப்பு என்பது எப்போதுமே அலர்ஜியான விஷயம் தான். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் நாய், பூனை வளர்ப்பு எல்லாம் கொஞ்சம் பயம் தரும் விஷயமும் கூட. அப்படிப் பட்ட மனநிலையில் ஆளுயர நாயொன்று நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு மேலே தாவி விடும் இடைவெளியில் குரைத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

எப்போதடா லிஃப்ட் திறக்கும் என்று காத்திருந்து அவர்கள் இறங்கியதும் சினேகிதியின் வீட்டுக்கு கூடச் செல்லாமல் அப்படியே 0 அழுத்தி கீழிறங்கி என் வீட்டுக்கு ஓடோடிப் போய் கதவைச் சார்த்திக் கொண்டேன். இது என் அந்த நேரத்தைய பதட்டம். அதற்காக காலம் முழுக்க நாய்களுக்கு பயந்து கொண்டிருந்தேன் என்று சொல்ல வரவில்லை.

ஒரு சாரரால் குழந்தை வளர்ப்பைப் போல மிக உணர்வுப் பூர்வமாகவும் கருணையோடும் அணுகப்படக் கூடியதான இந்த பெட் அனிமல்ஸ் வளர்ப்பு என்பது இன்னொரு சாரரால் எப்படி முடியவே முடியாது எனும் அளவுக்கு தள்ளி நின்று அசூயையுடன் வேடிக்கை மட்டும் பார்க்க வைக்கிறதோ அதைப் போலத்தான் வாழ்க்கையில் சர்ச்சைக்குரியதான பிற விஷயங்களும். சிலருக்கு அசைவம் என்றால் உயிர். சிலருக்கு அசைவம் என்றால் ‘உவ்வேக்’. அவரவருக்கு என்ன பிடித்தமோ அதை மற்றவர்களுக்கு தொல்லையின்றி செய்து கொண்டு போனால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், அப்படிப் போய்விட்டால் பிறகு வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது?

இதோ சமீபத்தில் குஜராத் ஹோட்டல் ஒன்றில் நடந்த சம்பவத்தை விவரித்தால் உங்களுக்குப் புரியும். 

குஜராத்துக்கு அமெரிக்கப் பெண்மணி ஒருவர் சமீபத்தில் டூர் வந்தார். வந்தவர் அங்கிருந்த ஹோட்டல் அறையில் மூன்று நாட்கள் தங்குவதற்காக ரூம் புக் செய்தார். ஒருவர் மட்டும் தங்குவதாகத் தான் ஏற்பாடு. ஆனால், அந்த அம்மணி தன்னுடன் 14 வளர்ப்பு மிருகங்களையும் ஹோட்டல் நிர்வாகத்துக்கே தெரியாமல் தங்க வைத்துக் கொண்டார். அதில் 6 பூனைகள், 7 நாய்கள் மற்றும் 1 ஆடு அடக்கம்.

அவர் ஹோட்டலுக்குள் செக் இன் செய்தது அதிகாலை 3 மணி என்பதால் ஹோட்டல் ஊழியர்கள் அவருடன் வந்த விருந்தினர்களைச் சரியாகக் கவனிக்கவில்லை போலும். ரூம் சாவி கொடுத்து பத்திரமாக அறைக்குள் தங்க அனுமதித்து விட்டார்கள். மறுநஅள் காலையில் பார்த்தால் அவரது விருந்தினர்கள் அறை முழுதும் துள்ளித் திரிந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த ஹோட்டல் மேனேஜர் அவரிடம் சென்று; நீங்கள் தங்குவதற்கு மட்டும் தான் அனுமதி, தயவு செய்து நீங்கள் ரூமைக் காலி செய்து தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக் கொள்ளாத அமெரிக்கப் பெண் உடனே ஹோட்டல் நிர்வாகம் குறித்து காவல்துறைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.

ஹோட்டல் நிர்வாகமும் அதைத்தான் செய்ய நினைத்திருக்கிறது. ஆனால், அமெரிக்கப் பெண் முந்திக் கொண்டார். அவர் எம்பஸி வாயிலாகப் புகார் அளித்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் காக்டாபித் ஹோட்டலுக்கு விசாரணைக்காக வந்திருக்கிறார். 

அப்போது அவரிடம் அந்தப் பெண், என்னிடம் இருக்கும் வளர்ப்பு மிருகங்களில் ஒரு நாயையும், ஆட்டையும் உத்தரகாசியில் 2015 ஆம் ஆண்டில் கண்டெடுத்தேன். அபாயத்தில் இருந்த அவற்றை மீட்டு என்னுடன் பாதுகாப்பாக வளர்த்து வந்தேன். இப்போதும் கூட எனது வளர்ப்பு மிருகங்களைப் பொறுப்பாக பார்த்துக் கொள்ளக்கூடிய அவற்றின் நன்மை நாடக்கூடிய ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தேன். என் முயற்சி வெற்றியடைந்து விட்டது. என் வளர்ப்பு மிருகங்களுக்கொரு பாதுகாவலர் கிடைத்துவிட்டார். என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்றால் அவர் இங்கே வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது, அதற்குள் ஹோட்டல் நிர்வாகம் விஷயத்தைப் பெரிதுபடுத்தி என்னையும் என் வளர்ப்பு மிருகங்களையும் அறையைக் காலி செய்து வெளியேறுங்கள் என்று சொல்லும் அளவுக்கு போய் விட்டது என்கிறார்.

உண்மையில் ஹோட்டல் நிர்வாகத்தின் பெயரிலும் தவறேதும் இல்லை. அமெரிக்கப் பெண்ணின் வளர்ப்பு மிருகங்களைக் கண்டு அசூயை கொண்ட பிற விருந்தினர்கள் அதைப் பற்றி ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கவே. அந்தப் புகாரின் மேல் தான் அவர்கள் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்.

இதில் இருவர் மீதும் தவறு இல்லை. ஒன்று பெட் அனிமல்ஸுடன் தங்க வந்த போது அந்தப் பெண் தனது நிலையை ஹோட்டல் நிர்வாகத்திடம் விளக்கி முறையாக அனுமதி பெற்ற பின்பே அவற்றை உள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது தான் அவரது குறை. ஹோட்டலில் தங்கியிருந்த பிற விருந்தினர்களின் ஆட்சேபணை குறித்துக் குறை சொல்ல எதுவுமில்லை. வளர்ப்பு மிருகங்களை துன்புறுத்துவதைத் தான் தவறாகக் கருத முடியுமே தவிர அவற்றின் இருப்பை தங்களுக்கு அசெளகர்யமாகக் கருதும் உரிமை அவர்களுக்கு உண்டு.

இதை பெட் அனிமல்ஸ் வளர்ப்பவர்கள் யோசிப்பார்களா?

நிச்சயமாக இல்லை. அவர்களைப் பொருத்தவரை வளர்ப்பு மிருகங்கள் என்பவை பெற்ற குழந்தைகளைப் போன்றவை.

அவற்றை நிராகரிக்கும் அல்லது அவற்றின் இருப்பை அசூயையாகக் கருதும் எவரொருவரையும் தங்களது எதிரிகளாகக் கருத அவர்கள் மறப்பதில்லை.

இது தான் இன்று பெட் அனிமல்ஸ் வளர்ப்பவர்களுக்கும், வளர்க்க ஆர்வமற்றவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் பனிப்போராக இருக்கிறது.

இதோ இப்போதும் கூட எங்கள் பக்கத்து அபார்ட்மெண்டில் நாய் வளர்க்கும் தம்பதிகளுக்கும் அந்த அபார்ட்மெண்டைச் சார்ந்த பிற குடும்பத்தினருக்கும் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் மூள்வதுண்டு வளர்ப்பு மிருகங்களின் காரணமாக.

இவர்கள் தேமேவென இங்கே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

வளர்ப்பு மிருகங்களோ குழந்தைகளைப் போல விச்ராந்தியாக எம்பிக் குதித்துக் கொண்டும் அங்கிருக்கும் பிறரை அச்சுறுத்தும் வண்ணம் குரைத்துக் கொண்டும் எஜமானரின் கையிலிருக்கும் கழுத்துப் பட்டையில் இருந்து சதா அறுத்துக் கொண்டு ஓடி யார் மீதாவது பாய்ந்து கடித்துக் குதற முயன்று கொண்டும் இருக்கும்.

ஒன்று நாய் வளர்ப்பவர்கள் வீட்டைக் காலி செய்து கொண்டு போவார்கள். அல்லது நாய் வளர்ப்பைச் சகித்துக் கொள்ள முடியாமல் குடியிருப்பவர்கள் தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு எங்கேனும் செல்ல வேண்டும்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக நடக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com